சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனம் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடைபிடிக்ககோரி வழக்கு ஐகோர்ட்டு தள்ளுபடி
சென்னை, பிப்.28.-
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடை பிடிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
ஆசிரியர்கள் நியமனம்
தமிழ்நாடு தவுகித் ஜமாத் மாநில செயலாளர் சையது இக்பால், வக்கீல் ஏ.சிராஜுதீன் மூலம் பொதுநலன் கருதி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலா 3Ñ சதவீத இடஒதுக்கீட்டை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 35 காலி இடங்களில் ஆசிரியர்களை நிரப்ப விளம்பரம் செய்யப்பட்டது.
இதில், ஒரு இடம் முஸ்லிம¢களுக்கும், இன்னொரு இடம் கிறிஸ்தவர்களுக்கும் தரவேண்டும். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் மாதம் 9-ந் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி ஆகும்.
சிறுபான்மையினருக்குரிய சட்டத்தை பின்பற்ற, சென்னை பல்கலைக்கழகம் தவறிவிட்டது. முஸ்லிம்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கவில்லை.
இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் 35 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 10, 11-ந் தேதிகளில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு பட்டியல் சிண்டிகேட்டில் உள்ளது. சிறுபான்மையினருக்குரிய இடஒதுக்கீட்டை பின்பற்றாதது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் முடிவடையாததால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிண்டிகேட் கூட்டம் எப்போது வேண்டுமானாலும் நடத்தி பணி நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கலாம். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றாமல், ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் காலி இடங்களை நிரப்பக்கூடாது என்று சென்னை பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு தள்ளுபடி
இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, எம்.வேணுகோபால் ஆகியோர் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டை கடைபிடித்து பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. பணியிடங்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடியாது என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், இந்த வழக்கு விளம்பரத்துக்காக போடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் சையது இக்பால் வழக்கு செலவாக ரூ.10 ஆயிரத்தை வழங்க வேண்டும். இந்த பணத்தை தமிழ்நாடு சட்டப்பணி ஆணையத்தில் செலுத்த வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினத்தந்தி
1 comment:
********** UP
Post a Comment