Sunday, January 13, 2008

நாளை தடையை மீறி முற்றுகை-பாசிச எதிர்ப்பு முன்னணி (A.F.F) அறிவிப்பு

முற்றுகைப் போராட்டத்திற்கு தடை தடையை மீறி முற்றுகை நடைபெறும் பாசிச எதிர்ப்பு முன்னணி அறிவிப்பு



பாசிச எதிர்ப்பு முன்னணியின் மூன்றாவது ஆலோசணைக்கூட்டம் 13.01.2008 அன்று பிரஸிடென்ட் ஹோட்லில் நடைபெற்றது. அதில் 14.01.2008 அன்று மாலை 5 மணியளவில் கறுப்பு கொடியுடன் பெரும் திரளான மக்களோடு நரேந்திர மோடி உரையாற்றும் காமராஜர் அரங்கை முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், தொல்.திருமாவளவன், விடுதலை ராஜேந்திரன், பேரா.அ.மார்க்ஸ், பேராயர்.எஸ்ரா.சற்குணம், முஹம்மது ஹனீபா, மற்றும் பாசிச எதிர்ப்பு முன்னணியில் இடம் பெற்றிருக்கும் அமைப்புகளின் தலைவர்கள் தலைமையேற்க உள்ளார்கள். இது தவிர தமிழ்நாட்டின் முன்னணி சிந்தனையாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானங்கள்

பாசிச எதிர்ப்பு முன்னணி மற்றும் பல்வேறு, ஜனநாயக சக்திகளின் சார்பிலும், மோடி வருகையை எதிர்த்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை தமிழகம் முழுக்க போலீஸார் முன்னின்று கிழித்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மோடி வருகையை எதிர்த்து ஜனநாயக வழியில் தமுமுக, பெரியார் தி.க, சார்பில் போடப்பட்ட பொதுக்கூட்டங்களுக்கும், மனித நீதிப் பாசறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும், காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இது ஜனநாயக விரோத செயல் என இக்கூட்டம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கிறது. இந்த கருத்துரிமை பறிப்பை கண்டித்து வெகு விரைவில் பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்றவர்களின் அரசியல் வாரிசான நரேந்திர மோடிக்கு, காமராஜர் அரங்கில் உரையாற்ற அனுமதி வழங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

மோடி வருகைக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய, பாசிச எதிர்ப்பு முன்னணியினரை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசை வற்புறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments: