Thursday, September 13, 2007

துபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது

துபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது

துபாயில் ரமலான் மாத நோன்பு வியாழக்கிழமை முதல் துவங்கியது. திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்ற புனித மாதம் ரமலான் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் இம்மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் நோன்பு பிடித்து வருகின்றனர். ரமலான் மாதம் துவங்கப்பட்டதையடுத்து துபாயிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும் இரவு நேரங்களில் தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகை பள்ளிகளில் தொழவைக்கப்பட்டது.

ரமலான் மாதத்தையட்டி வேலை நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாக அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துபாயில் தமிழக சமுதாய அமைப்பான இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் தமிழத்து நோன்புக்கஞ்சி தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஏற்பாடுகள் அதன் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலியின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதத்தில் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப்போட்டிகளில் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக அளிக்கப்படுகிறது. ரமலான் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரமலான் மாதம் துபாயில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாகும். பகல் நேரங்களில் பொது இடங்களில் உணவருந்த அனுமதியில்லை. எனினும் பார்சல் எடுத்துச் சென்று வீட்டுக்கு சென்று சாப்பிடலாம்.

கடந்த வருடம் துபாய் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். காதர் மொகிதீன் நோன்புக்காலம் முழுவதையும் துபாயிலேயே இருக்க விரும்புவதையே குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

தகவல் : முதுவை ஹிதாயத்

No comments: