Wednesday, September 05, 2007

மலேசியாவில் பீ.ஜே. கைதுக்கு யார் காரணம்?

மலேசியாவில் பீ.ஜே. கைதுக்கு யார் காரணம்?
உண்மை ஆம்பலமாகிறது!!

அன்பார்ந்த சகோதரர்களுக்கு,
எம். தமிமுன் அன்சாரியின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)


பிரபல தொலைக்காட்சி பேச்சாளர் சகோ. பீ.ஜே. அவர்கள் என் மீது சுமத்தியுள்ள பொய் குற்றச்சாட்டுகள் குறித்து சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன். இதனால் 'மக்கள் உரிமை'யின் பக்கங்கள் வீணடிக்கப் படுகிறதே என்ற வருத்தத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். விளக்கம் தரப்படாவிட்டால் அத்தகவல்கள் உண்மையென சில அப்பாவிகள் நம்பிவிடக் கூடாதே என்பதற்காகவே இந்த விளக்கம்.


சிங்கப்பூரும், மலேசியாவும் எனக்குப் புதிதல்ல. இயக்க ரீதியாக மட்டுமின்றி எனது குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக நான் போய் வரும் நாடுகள் அவை!

கடந்த 2004ஆம் ஆண்டில் கூட 'மக்கள் உரிமை'யின் அறிமுக நிகழ்ச்சிக்காக சென்று வந்திருக்கிறேன்.

திட்டமிட்ட பயணம்
கடந்த மே மாதம் தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், கேப்டன் அமீருத்தீன் ஆகியோர் சிங்கப்பூர் மலேசியாவில் எழுச்சிகரமான சமுதாயப் பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள இயக்க சகோதரர்கள் ஆகஸ்ட் மாதம் தமிமுன் அன்சாரி மலேசிய சிங்கப்பூருக்கு வரவேண்டும் என்று நிர்வாக ரீதியாக முடிவெடுத்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் எனது மலேசிய பயணம் அமைந்ததே தவிர, ஏட்டிக்குப் போட்டி என்ற அடிப்படையில் அல்ல. யார் போட்டியாக வந்தது என்பது ஊரறிந்த உண்மை!

நானும் சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவரும் இந்நாள் மாநிலச் செயலாளருமான மௌலா நாஸர் அவர்களும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று சேருகிறோம்.

அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு
பினாங்கில் ஆகஸ்ட் 4 அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் அமைப்பான 'ஈமான்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அதனைத் தொடர்ந்து கோலாலம்பூரில் ஆகஸ்ட் 12 அன்று அரங்க நிகழ்ச்சியில் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ் (கிம்மா) என்ற கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேச ஏற்பாடாகிறது. இந்த 'கிம்மா' கட்சி என்பது சையத் இப்ராகிம் தலைமையில் வலிமை மிக்க பிரிவாக இயங்கும் நிலையில், இதிலிருந்து பிரிந்த ஒரு குழு அமீர் ஹம்ஸா என்பவர் தலைûயில் போட்டி கிம்மா என்றும் தனியாக செயல்படுகிறது.

எங்களுக்கும் எதிர்ப்பு
போட்டி கிம்மா (அமீர் ஹம்சா பிரிவு) சார்பில் எங்களது நிகழ்ச்சிக்கு பெரும் இடையூறு தரப்படுகிறது. மௌலா நாசர் மற்றும் வேங்கை இப்ராஹிம் ஆகியோரின் செல்பேசிகளுக்கு மிரட்டல் விடப்பட்டது. என்னை தீவிரவாதியாகவும், தமுமுகவை கிளர்ச்சி அமைப்பு என்றும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 12 அன்றைய நிகழ்ச்சி நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது.

மலேசிய இந்திய முஸ்லிம் காங்ரஸ் தலைவர் சையத் இப்ராஹிமிடம் மலேசிய காவல்துறை எங்களைப் பற்றி விசாரிக்கிறது. அவர் உத்தரவாதம் கொடுத்ததாலும், எங்களைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கொடுத்ததாலும், இந் நிகழ்ச்சி ஏற்கனவே முறைப்படி அனுமதி பெற்று சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாலும் கடைசி நேரத்தில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்! இதையெல்லாம் பரபரப்பு தேவையில்லை என்ற காரணத்தினால் நாங்கள் வெளியே சொல்லவில்லை.

நிகழ்ச்சி முடிந்த பிறகு நானும் மௌலா நாசரும் ஆகஸ்ட் 13ஆம் தேதியே மலேசியாவை விட்டு வெளி யேறி சிங்கப்பூருக்கு வந்துவிட்டோம். சிங்கப்பூரிலும் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி நான் சென்னை வந்துவிட்டேன்.

பொய்ப்பழிகள்
இந்நிலையில்தான் ஆகஸ்ட் 18ஆம் தேதி சகோ. பீ.ஜே. தலைமையிலான குழு மலேசியா புறப்படுகிறது.

அவர்கள் 19ஆம் தேதி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ள நிலையில் அந்த நிகழ்ச்சி காவல்துறையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக மலேசியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டதையும், அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டதும் எனது சொந்த ஊரில் இருந்தபோது கேள்விப்படுகிறேன். இதுவே உண்மை!

ஆனால், இதற்கெல்லாம் நான்தான் காரணமென்றும், நான்தான் பீ.ஜே.வுக்கு எதிராக அந்நாட்டு சமய இலாகாவில் புகார் கொடுத்ததாகவும் பீ.ஜே. டி.வி.யிலும், பொதுக்கூட்டத்திலும் பேசியது மட்டுமின்றி, களவாடப்பட்ட பத்திரிகையிலும் எழுதியுள்ளார்.

அந்தப் பத்திரிகையை படித்தபோது சிரிப்பாக இருந்தது. அதில் எவ்வளவு மிகைப்படுத்தலும், பொய்யும் இருக்கிறது என்று ரசித்துப் படிக்க வேண்டியிருந்தது.
அவரது மண்ணடி கூட்டப்பேச்சு கூட பொய்களை அழகாக ஜோடித்துப் பேசியதாகவும் பார்த்தவர்கள் கூறினார்கள்.

ஒரு கோடி!
இவரது கைதுக்காக மலேசிய போலீசுக்கு ஒரு கோடி வரை லஞ்சமாக செலவு செய்யப்பட்டதாக சகோ. பீ.ஜே. பேசியுள்ளார்! எழுதியுள்ளார். கஞ்சா வழக்கில் கைது செய்ய முயற்சி என்று கற்பனை செய்து தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டிருக்கிறார். மலேசியா என்ன பிச்சைக்கார நாடா என்று தெரியவில்லை?
ஒருவேளை மலேசியாவில் இவருக்கு எதிராக தமுமுக செயல்பட முனைந்திருக்குமேயானால் வெறும் 1000 ரூபாய் செலவு செய்திருந்தாலே போதும் என்பது விபரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்!

மிகைப்படுத்தி
''அரை மணிநேரம் கூட உங்களை இங்கு வைக்க முடியாத அளவுக்கு, உங்கள் நாட்டில் உங்கள் மக்கள் நெருக்கடி தந்ததால்தான் நீங்கள் தாயகம் அனுப்பப்படுகிறீர்கள் என்று அவரிடம் மலேசிய காவலர்கள் கூறியதாக உணர்வு பத்திரிக்கையில் எழுதப்பட்டுள்ளது. அப்படி என்ன கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்பட்டது என்பது தெரியவில்லை!

இவர் டி.வி.யில் பேசிய பிறகுதான் இவர் கைது செய்யப்பட்டதே பரவலாக தமிழகத்திற்குத் தெரியும்!

மேலும், இவருக்காக மத்திய மாநில அரசுகள் தலையிட்டதால் தான் இவர் விடுவிக்கப்பட்டதாக கூறுகிறார். உண்மையில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டிருந்தால் அது செய்தித் தாள்களில் மிகப்பெரும் செய்தியாக வந்திருக்கும்!

உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில் டாக்டர் ஹனீப் கைது செய்யப்பட்டபோது மத்திய அரசு குரல் கொடுத்தது. கர்நாடக அரசு மத்திய அரசை நிர்பந்தித்தது. இந்தியாவே பரபரப்பாக இருந்தது. செய்தி ஊடகங்கள் அலறின. நாடு பரபரப்பாக எதிர்பார்த்தது. இதற்கெல்லாம் காரணம் மத்திய மாநில அரசுகளின் தலையீடுகள் என்பது பாமரனுக்கும் தெரியும்.

இதுபோன்ற ஏதாவது நிகழ்வுகள் சகோ. பீ.ஜே. அவர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டதா? என்பதை மக்கள் விவாதத் திற்கு விட்டுவிடுகிறோம். அவர் அங்குள்ள சமய இலாகாவிடம் பேசியதைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' வசனங்கள் தான் ஞாபகம் வருகிறது.

27 ஆண்டுகள் சிறையில் வாடிய நெல்சன் மண்டேலாவும், 9 ஆண்டுகாலம் தமிழக சிறையில் வாடிய அப்துல் நாசர் மதானியும் கூட இப்படியெல்லாம் அலட்டிக் கொள்ளவில்லை.

இதுவெல்லாம் உங்களுக்கு எதற்கு? என்று வாசகர்கள் கேட்கலாம்.

மேற்கண்ட அவரது பேச்சுக்களும், எழுத்துக்களும் எப்படி சிரிப்பாக அல்லது பொய்யாக இருக்கிறதோ அதைவிட மோசமான பொய்ப் பழிதான் என் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டவே அவற்றை பணிவன்போடு குறிப்பிட வேண்டியதாகிவிட்டது!

உண்மைதான் என்ன?


சகோ. பீ.ஜே. அவர்களுக்கு எதிராக நான் மலேசிய அரசிடமோ காவல் துறையிடமோ சமய இலாகாவிடமோ எந்த ஒரு அறிக்கையையோ, தகவல்களையோ அளிக்கவில்லை என்பதே வலிமையான உண்மையாகும். நேரில் மட்டுமின்றி தபால் வழியிலோ, மின்னஞ்சல் வழியிலோ, செல்போன் வழியாகவோ கூட அவருக்கு எதிராக மேற்கண்டவர்களிடம் நான் எதையும் அளிக்கவில்லை என்பதே உண்மை! அப்படிப்பட்ட யாரையும் நான் சந்திக்க வில்லை! அதற்கெல்லாம் நேரமும் இருக்கவில்லை!

அவர் கைது செய்யப்பட்டது வருந்தத்தக்கது. அதற்கு என் மீது 'அணுகுண்டு' பொய்களை வீசியது கண்டிக்கத்தக்கது.

நடந்தது என்ன?
ஆகஸ்ட் 12 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற எங்களது நிகழ்ச்சியை எதிர்த்த போட்டி கிம்மா கட்சியின் அமீர் ஹம்ஸா பிரிவுதான் சகோ. பீ.ஜே. அவர்களின் நிகழ்ச்சியையும் எதிர்த்தது. இது மலேசிய டி.என்.டி.ஜே. அமைப்பின் தலைவர் பஷீர் உள்ளிட்டோர் அறிந்த உண்மையாகும். எங்களுக்கு நேர்ந்த எதிர்ப்புகளை நாங்கள் அரசியலாக்க வில்லை.

நாங்கள் மலேசியா போவதற்கு (ஆகஸ்ட் 2, 2007) முன்பிருந்தே பீ.ஜே. மலேசியாவுக்கு வரக்கூடாது என்று அங்கு ஏராளமான முயற்சிகள் நடந்துள்ளன. அதை பீ.ஜே. அவர்களே உணர்வு பத்திரிகையில் அவரையும் அறியாமல் ஒப்புக் கொண்டுள்ளார்.

''நாங்கள் அங்கே செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, எங்களுக்கு எதிராக பொய்ப் பிரச்சாரமும் அறிக்கைகளும் அடிக்கடி நாளிதழ்களில் வர ஆரம்பித்தன. எங்களுக்கு எதிராக மலேசிய அரசிடமும் எதிரிகள் புகார் கொடுத்திருந்தனர்.''

'மலேசியாவில் நடந்தது என்ன?' (உணர்வு முதல் பக்கம் உரிமை 11 குரல் 52) வெளிவந்த செய்தி.

இப்படி பி.ஜே. அவர்களே ஒத்துக் கொள்வது ஒருபுறமிருக்க, பீ.ஜே. கைதுக்கும், நமக்கும் சம்பந்தமில்லை என்பதை மேலும் நிரூபிக்கும் வகையில் மலேசிய மக்கள் ஓசை (22-8-2007) நாளிதழில் போட்டி கிம்மா (அமீர் ஹம்ஸா பிரிவு) அமைப்பு பேட்டியளித்துள்ளது. அதில்,

''சுற்றுலா விசாவில் இந்த சொற்பொழிவாளர்கள் (அதாவது பீ.ஜே. மற்றும் பாக்கர்) கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஜாலான் பத்துகேவ்ஸில் போலீஸ் அனுமதியின்றி சொற் பொழிவை நடத்த முயன்றனர். இதுதொடர்பாக நாங்கள் போலீஸில் புகார் செய்தோம். அதன்பின்னர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ரிஸ்டா கட்டடத்திலும் ஒரு கூட்டத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியது.

மேலும் இவர்கள் அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக அனுமதியையோ, ஜாக்கிம் என்ற இஸ்லாமிய இலாகாவின் அனுமதியையோ பெறவில்லை என்பதுடன், நமது நாட்டின் வழிமுறைகளையும் பின்பற்ற வில்லை.

அவர்கள் தொடர்ந்து இந்த நாட்டில் இருக்கவோ, சொற்பொழிவு நடத்தவோ அனுமதிக்கக்கூடாது என்று உள்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டும் மகஜரை துணை அமைச்சரின் பார்வைக்கு சமர்ப்பித் திருக்கிறோம்''

மக்கள் ஓசை (மலேசியா) 22.8.2007
இன்னும் தெளிவாகக் கூறுவதெனில், நாங்கள்தான் பீ.ஜே. அவர்களுக்கு இடையூறுகள் கொடுத்தோம் என்பதை போட்டி கிம்மா (அமீர் ஹம்சா) பிரிவின் பொதுச் செயலாளர் கமால் பாட்ஷா அவர்கள் மிகத்தெளிவாக மலேசிய நண்பன் நாளிதழில் 19.8.2007ஆம் தேதி பேட்டியளித்துள்ளார்.

''இருவரும் (பீ.ஜே. மற்றும் பாக்கர்) 19.8.2007ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அம்பாங் ரிஸ்டாவில் பேசுவதற்கு எங்கள் முயற்சியால் தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து ஜாலான் ஈப்போ முத்தியாரா காம்பளக்ஸில் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பத்துகேவ்ஸ் ஆசிரமத்தில் பேசுவதாக தகவல் அறிந்ததும் கோம்பாக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். நேற்று அதையும் தடுத்து நிறுத்தினோம்''

மேற்கண்டவாறு போட்டி கிம்மா கட்சி (ஹமீர் அம்ஸா பிரிவு) தாங்கள்தான் பீ.ஜே.க்கு எதிராக செயல்பட்டவர்கள் என்பதை பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.


எங்கள் நிகழ்ச்சிக்கு த.த.ஜ. நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர். அதுபோல் பி.ஜே. அவர்களின் நிகழ்ச்சிக்கு ஏராளமான தமுமுக சகோதரர்களும் எங்கள் அனுமதியுடனே சென்றார்கள். அந்நிகழ்ச்சியின் போது லுஹர் தொழுகை நடைபெற்றது. அந்த தொழுகைக்கு இமாமத் செய்தவர் மலேசிய தமுமுகவின் அமைப்புக்குழு உறுப்பினர் பொதக்குடி தாஜுத்தீன் ஆவார். இது சகோ. பாக்கருக்கும் தெரியும். இந்த அளவுக்கு நாம் நாகரீகமாக நடந்து கொண்டோம்.

துளி அளவும் தொடர்பில்லை!
* சுற்றுலா விசாவில் சமயப் பிரச்சாரம் செய்தது
* சமய இலாகாவில் அனுமதி பெறாதது
* போலீஸார் தடுத்த பிறகும் மீண்டும் வேறொரு இடத்தில் கூடியது
ஆகிய காரணங்களுக்காக சகோ. பீ.ஜே. கைது செய்யப்பட்டதாக மலேசிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் முன்பு நான் பேசவிருந்த (தமுமுக ஆதரவு) நிகழ்ச் சிக்கு யார் இடையூறு செய்தார்களோ அதே குழுதான் பீ.ஜே.வுக்கு எதிராகவும் செயல்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து சென்று அங்கு பணிபுரியும் முஸ்லிம் தமிழ் உலமாக்களும் செயல்பட்டுள்ளனர்.

இதில் தமுமுகவுக்கோ, எனக்கோ துளி அளவும் தொடர்பில்லை.
ஏன் வீண் பழி விழுகிறது?

தனது அறியாமையில் அல்லது ஆத்திரத்தில் சகோ. பீ.ஜே. மலேசியாவில் சிக்கிக் கொண்டுவிட்டார். பொதுவாழ்வில் சில நேரம் எதிர்பாராமல் இப்படி நடப்பது இயல்பு. ஆனால் இதை அனுதாப அலையாக மாற்றவும், அரசியல் ஆதாயம் அடைவதற்காகவும் உண்மையான எதிரிகளை விட்டுவிட்டு என் மீதும், தமுமுக மீதும் பழிபோட்டுள்ளார்.

மலேசியாவில் செயல்படும் கிம்மா (அமீர் ஹம்ஸா பிரிவு) அமைப்பை எதிர்ப்பதால், அல்லது குற்றம் சுமத்து வதால் அவருக்கு அரசியல் லாபம் கிடைக்கப் போவதில்லை.

பழியை தமுமுக பக்கம் திருப்பும் போது அது தனக்கு அரசியல் லாபமாகவும், சோர்ந்துபோன அவரது கட்சித் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்பதாலேயே அநியாயமாக என் மீதும் தமுமுக மீதும் பழிசுமத்துகிறார்.

மலேசியாவில் விசாரணை
பீ.ஜே.யை விசாரித்த மலேசிய சமய இலாகாவின் தமிழ் பிரிவு பொறுப்பாளர் லத்தீப் என்பவரிடம் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் பெரோஸ்கான் அவர்கள் ''பீ.ஜே. கூறிய குற்றச்சாட்டுகளைக் கூறி உங்களிடம் தமுமுகவைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவர் பீ.ஜே.வுக்கு எதிராக புகார் அளித்திருந்ததாகவும் அதை உங்கள் விசாரணைக்குழு பீ.ஜே.யிடம் கூறியதாகவும் பீ.ஜே. கூறியுள்ளாரே என்று கேட்டுள்ளார். அவரோ, ''அப்படி யாரும் எங்களிடம் எந்தப் புகாரும் தரவில்லை'' என்று கூறியுள்ளார். அல்லாஹ் உண்மையை அம்பலப்படுத்தி விட்டான்.

யார் இந்த பெரோஸ்கான்? இவர் சிங்கப்பூரில் வசிக்கும் இளையான்குடிக்காரர். தாஃவா பணி செய்பவர்! பீ.ஜே.யை விசாரிக்கும் முன்பாக மலேசிய சமய இலாகாவின் தமிழ் பிரிவு பொறுப்பாளர் லத்தீப் அவர்கள், ஆடிட்டர் பெரோஸ் கானிடம், பீ.ஜே.யைப்பற்றி விசாரித்திருக்கிறார். அவர்களுக்குள் தாஃவா பணி நிமித்தமாக பழக்கமுண்டு! அப்போது பீ.ஜே.யைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களைக் கூறியவர்தான் பெரோஸ்கான். மேலும் பெரோஸ்கான், ததஜ து.பொ.செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீனுக்கும் பழக்கமானவர்.

உங்கள் கருத்து என்ன?
என் மீது சுமத்தியுள்ள சகோ. பீ.ஜே. அவர்களின் பொய்யுக்கு நான் கடைசியாக சொல்லும் பதில் என்னவெனில் ''நான் இதுகுறித்து மேலும் உண்மை அறிய பீ.ஜே. அவர்களுடன் மலேசிய செல்லத் தயாராக உள்ளேன். அங்குள்ள உலமாக்கள் 'தமிமுன் அன்சாரிதான் இந்தக் குற்றச்சாட்டுக்களை தந்ததாகக் கூறினர்' என்று பீ.ஜே. கூறியுள்ளார். இது உண்மையா? பொய்யா? என்பதைக் கண்டறிய நான் தயார்! சகோ. பீ.ஜே. தயாரா? அதே மலேசிய சமய விவகார சபை முன்பு நான் விசாரணைக்குத் தயார்! பீ.ஜே. வருவதற்கு தடை இருந்தால் எஸ்.எம்.பாக்கர் மலேசியா வரட்டும்! இருவருக்கும் பொதுவான இரண்டு சாட்சிகளையும் கூட வைத்துக் கொள்வோம்.

வேண்டுகோள்
சகோ. பீ.ஜே. அவர்கள் என்னை விட சுமார் 25 வயது மூத்தவர். அவரை விட அனுபவத்திலும் திறமையிலும் நான் இளையவன்! சின்னப்பையன்!!

அவருக்கு எனது அன்பான வேண்டுகோள் என்னவெனில், 'அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்' என்பதே!

தமுமுகவிலிருந்து பிரிந்த தருணத்தில், ''கர்பலா யுத்தம் நடக்கும்'' என தமுமுக மாணவரணியிடம் சகோ. பி.ஜே. கூறியதாக சொன்னார்கள். தயவு செய்து அவர் அதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.


தமுமுக மற்றும் ததஜ சகோதரர் களுக்கு மத்தியில் நிலவும் உறவை கெடுக்க வேண்டாம். அவரவர் சேவை களை செய்து சமுதாயத்திற்கு நன்மைகளை செய்வோம். தொண்டர்களை சீண்டிவிடும் வேலையை நிறுத்துங்கள். நீங்கள் அவதூறு கிளப்புவதையும், அதற்கு நாங்கள் பதில் சொல்வதையும் சமுதாயம் விரும்பவில்லை. சமுதாயம் அமைதியையும் ஒற்றுமையையும் மட்டுமே விரும்புகிறது.

இந்த வேண்டுகோளை அல்லாஹ்வுக்காக ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நன்மைகளைத் தருவானாக!

அன்புடன்
எம். தமிமுன் அன்சாரி

நன்றி: தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம்

2 comments:

அருளடியான் said...

த.மு.மு.க நேரடியாக தேர்தலில் போட்டியிட வேண்டும். தமீமுன் அன்சாரி போன்றவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக வேண்டும். இவ்வாறு நாகை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இவரைப் போன்றவர்கள் நம் சமுதாயத்துக்காக குரல் கொடுப்பார்கள். திருமாவளவன், கிருஷ்ணசாமி போன்ற இளம் தலைவர்கள் தலித்களுக்கு இருப்பது போல், முஸ்லிம்களுக்கும் எம்.ஜி.கே. நிஜாமுதீன், தமீமுன் அன்சாரி போன்றவர்கள் தலைமேயேற்க வர வேண்டும்.

Unknown said...

emba pj nee thirunthaveee mattiyaa koomuttai koomuttai