Tuesday, September 11, 2007

ரமழான் இரவுத் தொழுகை-அந்நஜாத் செப் 2007

ரமழான் இரவுத் தொழுகை

ஆயிரம் மாதங்களைவிட சிறப்புக்குரிய லைலத்துல் கத்ருடைய நாளையுடைய பெரும் நன்மைகளைப் பெற்றுத்தரும் ரமழான் மாதம் 12-09-2007 புதன் அன்று ஆரம்பமாகிறது. அந்த மாதத்தின் இரவுகளில் நின்று வணங்குவது நபியின் நடைமுறையில் (சுன்னத்) உள்ளதாகும். சுன்னத் என்ற அடிப்படையில் நாம் செயல்படும் போது அதை நபி (ஸல்) கண்டிப்பாக நமக்குக் காட்டித்தந்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்தச் செயலாக இருந்தாலும் அதை சுன்னத் என்று செயல்படுத்த முற்பட்டால் அது பித்அத் என்ற வழிகெட்ட செயலாகவே ஆகும். இதை கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன.

' நற்செயல்களில் (அமல்களில்) எனக்கு மாறு செய்யக் கூடாது' என்று நபி (ஸல்) எங்களிடம் உறுதி மொழி வாங்கினார்கள். அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் (ரழி). ஆதாரம் : புகாரி> முஸ்லிம்> முஅத்தா> திர்மிதி> நஸயீ.

ஒரு காட்டரபி நபி (ஸல்) அவர்களிடம் உளுவின் விவரத்தைக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மும்மூன்று முறைகளாக உளு செய்து காட்டி இவ்விதமாகத்தான் உளு செய்யவேண்டும் என்று கூறிவிட்டு எவர் இதைவிட அதிகப்படுத்துகிறாரோ அவர் நிச்சயமாகத் தீமையைச் செய்தவராகவும் அளவு மீறியவராகவும் அநியாயம் செய்பவராகவும் ஆவார். என்று எச்சரித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ் (ரழி) அபூதாவூது > நஸயீ

எவரும் நம் மார்க்கத்தில்> மார்க்கத்தில் இல்லாதவற்றை புதிதாகப் புகுத்தினால் (அதாவது அதிகப்படுத்தினால்) அவை நிராகரிக்கப்பட வேண்டியவையாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரழி). ஆதாரம் : புகாரி முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு செயலை அது அழகானது> நன்மை தரக்கூடியது என்று ஒருவன் கூறினால் அவன் நபி (ஸல்) அவர்களின் ரிஸாலத்தை – தூதுத்துவப் பணியை மறுத்து வழிகெட்டுச் செல்பவனாகவே இருப்பான் என்று இமாம் மாலிக் (ரஹ்) மிகக் கடுமையான எச்சரித்துள்ளார்கள்.

7:3 33:36,66,67,68 5:3 3:19,85 59:7 இந்த அனைத்து இறைவாக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு மார்க்கத்தில் அனுவளவும் கூட்டவோ> குறைக்கவோ முடியாது முடியாது என உறுதிப்படுத்துகின்றன.

இந்த எச்சரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு ரமழான் இரவுத் தொழுகை பற்றிய ஆதாரப்பூர்வமான செய்திகளையும் > ஷைத்தானின் தூண்டுதலினால் அற்ப உலக ஆதாயம் தேடும் மவ்லவிகளின் முன்னோர்களின் கற்பனை செய்திகளையும் உரிய ஆதாரங்களுடன் பார்ப்போம்.

அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் அபூ சல்மதிப்னு அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ரமழான் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று கேட்டதற்கு 'ரமழானிலும் > ரமழான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 11 ரக்அத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை' என்று கூறினார்கள். இந்த ஆதாரப்பூர்வமான செய்தி பிரபலமான அனைத்து ஹதீஸ் உட்பட 14 நூட்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸை நடுநிலையோடு கவனமாக ஆராயும்போது ஒரு விஷயம் பளிச்சென்று நம் கவனத்திற்கு வருகிறது. ஆயிஷா (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்டது ரமழான் இரவுத் தொழுகை பற்றியே. ஆனால் அவர்களது பதிலில் ரமழானிலும் > ரமழான் அல்லாத காலங்களிலும் என்று அழுத்தமாக ரமழான் அல்லாத மற்ற நாட்களையும் குறிப்பிட்டு பதில் அளிக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிய வருகிறது ? நபி (ஸல்) அவர்கள் ரமழான் இரவுத்தொழுகையின் எண்ணிக்கையை மற்ற நாட்களைவிட அதிகப்படுத்தவில்லை. வழமையாக மற்ற நாட்களில் இரவில் தஹஜ்ஜத் என்று எத்தனை ரக்அத்துகள் தொழுது வந்தார்களோ அதே எண்ணிக்கை அளவுதான் தொழுதார்கள் என்று உறுதிப்படுத்தினார்கள். மேலும் அவர்களின் இந்த பதில் ரமழானிலும் 8+3=11 ரகஅத்துகளுக்குமேல் அதிகப்படுத்தவில்லை என்பதை அழுத்தமாக உறுதிப்படுத்துகிறது.

மக்களை வழிகெடுக்கும் மவ்லவி வர்க்கம் இந்த ஹதீஸ் நபி (ஸல்) நடுநிசியில் தொழுத தஹஜ்ஜத் தொழுகையை குறிக்கிறது. இஷாவிற்குப் பிறகு தொழுத 20+3=23 ரகஅத்தை அது குறிப்பிடவில்லை என்று சுயவிளக்கம் கொடுக்கிறார்கள். ஆயிஷா (ரழி) அவர்களைவிட நாங்கள் தான் நபி (ஸல்) அவர்களின் நடைமுறையை சரியாகவும் தெளிவாகவும் அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொள்கிறார்கள். இவர்கள்தான் நபி (ஸல்) அவர்கள் கூடவே இருந்து நபி (ஸல்) அவர்கள் இஷாவிற்குப் பிறகு 23 ரக்அத்துகளாக தொழுததை தங்கள் கண்களால் கண்டு எடுத்துச் சொல்கின்றனர் போலும். எந்த அளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படியொரு இறையச்சம் இல்லாத வார்த்தைகளை உதிர்க்கமுடியும். நபி (ஸல்) அவர்கள் இஷாவிற்குப் பிறகு இரவுத்தொழுகை என்றோ , தராவீஹ் என்றோ தொழுததற்கு இந்த மவ்லவிகளால் ஒரேயொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் தரமுடியாது. தராவீஹ் என்ற இந்த பெயரே முழுக்க முழுக்க இந்த மவ்லவிகளின் கற்பனையே!

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை ; குப் பிறகு 23 ரக்அத்துகளும் > நடுநிசித் தொழுகையாக 11 ரக்அத்களும் தொழுதிருந்தால் மொத்தம் 23+11=34 ரக்அத்துகள் ஆகின்றன. மேலும் வித்ரு ஒரே இரவில் இரண்டுமுறை தொழுத அபத்தமும் இருக்கிறது. இந்த நிலையில் நபி (ஸல்) அவர்களின் அருமை மனைவியாக சுமார் 9 வருடங்கள் வாழ்ந்து அவர்களின் இரவு பகல் அமல்களை உன்னிப்பாகக் கவனித்து அதை மக்களுக்கு அறிவிக்கும் ஆயிஷா (ரழி) அவர்கள் , நபி (ஸல்) அவர்கள் ரமழானில் 23+11=34 ரக்அத்துகள் தொழுதிருக்க ரமழானிலும் ரமழான் அல்லாத காலத்திலும் 11 ரக்அத்துகளுக்கு அதிகமாக தொழுததில்லை என்று மிக அழுத்தமாகக் கூறி இருக்க முடியுமா? இந்த சாதாரண நடுத்தர அறிவுகூட இல்லாத இந்த மவ்லவிகள் தாங்கள் தான் மெத்தப்படித்த மேதைகள் என்று எப்படி பீற்றிக் கொள்கின்றனர்?

நபி (ஸல்) அவர்கள் ரமழான் நடுநிசியில் தொழுதது 8+3=11 மட்டுமே என்பதை ஜாபிர் (ரழி) அறிவித் ; து இப்னு ஹூஸைமா பாகம் 2 பக்கம் 138 –ல் காணப்படுகிறது. உபையிப்னு கஃப் (ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 8+3=11 தொழ வைத்ததை நபி (ஸல்) அவர்களிடம் அறிவித்தபோது நபி (ஸல்) அதை மௌனமாக அங்கீகரித்தார்கள் . (முஸ்னது அபூயஃலா பக்கம் 155) தப்லீக் புகழ் ஹயாத்துஸ்ஸஹாபா பாகம் 3 பக்கம் 167 லும் இந்த ஹதீஸ் காணப்படுகின்றது.

இப்படி மிக மிக ஆதாரப்பூர்வமாகக் காணப்படும் ஹதீஸ்களுக்கு முரணாக நபி (ஸல்) அவர்களே 20+3=23 தொழுதார்கள் > உமர் (ரழி) அவர்கள் தொழுதார்கள் போன்ற ஹதீஸ்களின் தரங்கெட்ட நிலையை அவற்றை நடுநிலையோடு அல்லாஹ்வின் அச்சத்தோடு ஆராய்கிறவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும். மார்க்கத்தைப் பிழைப்பாக்கிக்கொண்ட மவ்லவிகள் மட்டுமே வரிந்து கட்டிக்கொண்டு இந்த ஹதீஸ்களை தூக்கி நிறுத்தப் பார்ப்பார்கள்.

ரஜபு 27 ல் ஷபே மிஃராஜ்> ஷஃபான் 15 ல் ஷபே பராஅத் > ரமழான் 27ல் மட்டும் லைலத்துல்கத்ர் நாளை தேடுவது இவை அனைத்தும் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளின் கற்பனையில் உதித்தவையே அல்லாமல் ஆதாரப்பூர்வமான செய்திகள் அல்ல. அதிமாகத் தொழுதால் நன்மைதானே > புண்ணியம்தானே என்று கூறி சுய சிந்தனையை இவர்களிடம் அடகு வைத்துள்ள மக்களை மயக்குவார்கள். ஐங்காலத் தொழுகை இல்லாத முஸ்லீம்களிடம் ஜூம்ஆவுடைய ' பித்அத் ' பயானில் இந்த இரவுகளில் நின்று வணங்கி , பகலில் நோன்பு நோற்றால் நேராக சுவர்க்கத்திற்குப் போய்விடலாம் என சில கனவு கற்பனைக் கதைகளைக் கூறி மயக்குவதிலிருந்தே இந்த புரோகித மவ்லவிகளின் சுயநலம் வெளிச்சத்திற்கு வரும். அதாவது நபி (ஸல்) அவர்களைவிட நாங்கள் அதிபுத்திசாலிகள் , மார்க்கத்தை நன்றாகவே அறிந்தவர்கள் என்று அகம்பாவம் கொண்டு> இமாம் மாலிக் (ரஹ்) கூறுவதுபோல் நபி (ஸல்) அவர்களின் ரிஸாலத்தை மறுப்பார்கள்.

எனவே இந்த மவ்லவிகளின் வசீகர வலையில் சிக்காமல் , நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையான சுன்னத்தைப் பின்பற்றி ரமழான் இரவுகளில் 8+3=11 மட்டுமே தொழுவோமாக. அதுவும் பிந்திய இரவில் தனித்து தொழுவதே மிகவும் ஏற்றமாகும் , நபிவழியாகும். ரமழான் மாதம் பஜ்ரில் ஆரம்பிக்கிறது. எனவே முதலில் நோன்பு> பின்னர் இரவுத்தொழுகை. பிந்தைய இரவில் எழுந்து தொழமுடியாத சோம்பேறிகளுக்கு கொடுக்கப்பட்ட சலுகைதான் இஷாவிற்குப் பின்னால் தொழுவதாகும். மேலும் இத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதில் மேலதிக நன்மைகள் இருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லை. இந்த ஏற்பாட்டைச் செய்த உமர் (ரழி) அவர்களே இதைத் தெளிவாகச் சொன்னது புஹாரியில் பதிவாகியுள்ளது. உமர் (ரழி) அவர்கள் தமீமுத்தாரி(ரழி) > உபை இப்னு கஃபு (ரழி) ஆகிய இருவருக்கும் மக்களுக்கு 8+3=11 ரக்அத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்ட ஹதீஸை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தனது முஅத்தாவின் 58 ம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

மார்க்கத்தில் நன்மைதானே , புண்ணியம்தானே என்று சிந்திக்கத்தெரியாத மக்களை ஏமாற்றும் தந்திரம் எதனால் ஏற்படுகின்றது என்று பார்த்தால் மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாக ஆக்கி இருப்பதே காரணம் என்று புரியவரும். ரமழான் இரவுத்தொழுகையை தராவீஹ் என்றும் > 23 ரக்அத்துகள் என்றும் , இவர்கள் ஆக்கிக்கொண்டு 5000 தரவேண்டும் 8000 தரவேண்டும் > 10000 தரவேண்டும் என பேரம் பேசி கையேந்தி ஹராமான கூலி வாங்குவதை அவதானிப்பவர்கள் இந்த உண்மையை உணரத்தான் செய்வார்கள்.

ஆக்கம் : அபூபாத்திமா

நன்றி : அந்நஜாத் செப் 2007

3 comments:

Senthil Alagu Perumal said...

இரமலான் வாழ்த்துக்கள் தோழரே !! ரமதான் முபாரக் !!

இல்யாஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று (12/09/2007) இந்தியாவில் ரமழான் மாதம் தொடங்கிவிட்டதா, சவுதியில் இன்று ஷஃபான் 30 தான். ரமழான் கரீம்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) நல்ல பதிவு, மௌல்விகளை முடிந்த திட்டி எழுதியுள்ளிர்கள். பாராட்டுக்கள். இதை அரபி மொழியாக்கம் செய்து ஏன் சவூதி அரசாங்கத்திற்கு அனுப்பவில்லை. இங்கு இரண்டு ஹரகளிலும் 20 ரக்காத் தொழுகை நடைப் பெறுகிறதே... உங்கள் கருத்துப்படி பல காலமாக மக்காவிலும், மதினாவிலும் சுன்னத்திற்கு முறனான செயல் நடக்கிறதா. அல்லது உங்களுக்கு உள்ள அரபி மொழி புழமைக்கூட இங்கு இருப்பவர்களுக்கு இல்லையா? ஹதீஸ்களை விளக்கி சொல்ல சவூதிக்கு உடனே வரவும்.