Monday, August 06, 2007
கைவிடப்பட்ட முஸ்லிம்கள்....
1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து போலீஸ்ரவுடிகளும் இந்துத்துவ வெறியர்களும் கோவை வீதிகளெங்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை முன்னின்று ஏவினர். இக்கலவரத்தில் பத்தொன்பது முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லீம்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. ஷோபா என்னும் முஸ்லீம் ஒருவரால் நடத்தப்பட்ட ஜவுளிக்கடை அழிக்கப்படுகிறது.
'தான் தேர்தலில் ஜெயித்தால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளைப் போல கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்' என்று உறுதியளித்து அதை நிறைவேற்றவும் செய்த அப்போதைய கோவைச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ வேட்டி உரியப்பட்டு உள்ளாடையோடு இந்துத்துவ மற்றும் போலீசுக் குண்டர்களால் சாலையில் விரட்டப்படுகிறார்.
அதைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளையட்டி அப்போதைய கருணாநிதி அரசு பொடா சட்டத்தைக் கொண்டுவந்து அல் உம்மாவைத் தடை செய்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களைச் சிறையிலடைத்தது. தன் கட்சியைச் சேர்ந்த தண்டபாணி எம்.எல்.ஏ இறந்தபோதுகூட அவரைப் போய்ப்பார்க்காத கருணாநிதி அப்போதைய பிஜேபி எம்.எல்.ஏ வேலாயுதம் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சென்று உடல்நலம் விசாரித்தார். இதில் கருணாநிதியின் துரோகம் இத்தன்மையெனில் தமிழ்த்தேசிய அமைப்புகளின் துரோகம் வேறுமாதிரியானது.
ராஜிவ் கொலையையட்டி 24 அப்பாவித்தமிழர்கள் சிறையிலடைக்கப்பட்டு அவர்களில் ஆறுபேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு என்னும் அமைப்பு அவர்களின் விடுதலைக்கான இயக்கம் ஒன்றை அமைத்தது.
இது வெறுமனே அவர்களது வழக்கு நிதிக்கான நிதி சேகரிப்பு இயக்கமாக மட்டும் அமையவில்லை. மரணதண்டணை ஒழிப்பு இயக்கமாக மாறியது. முதன்முதலாக மரணதண்டனை ஒழிப்பு என்னும் கருத்தாக்கம் மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் மூலம் முன்வைக்கப்பட்டது. இறுதியில் கருணாநிதியிலிருந்து சோனியா வரை அதை ஏற்குமளவிற்கு அவ்வியக்கம் வெற்றிகண்டது.
ஆனால் இந்த தமிழ்த்தேசியர்கள், முஸ்லீம் இளைஞர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது அவர்களுக்காய் இயக்கம் நடத்தவோ நிதி திரட்டித்தரவோ முன்வரவில்லை. பின்னால் கொண்டுவரப்பட்ட பொடாவை எதிர்த்த வீச்சும் வீரியமும் கருணாநிதியால் முஸ்லீம்களை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட மூத்த பொடாவை எதிர்ப்பதில் இல்லை.
தமிழர்கள் என்பவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதாகவே இன்றுவரை தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காகக் குரல்கொடுத்தவர்கள் அப்சலின் மரணதண்டனைக்கு எதிராய்ப் பேரளவு எதிர்வினை எதுவும் நிகழ்த்தவில்லை. இப்போது கோவைகுண்டுவெடிப்பு தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பாட்சா, அன்சாரி உட்படப் பலரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் மரணதண்டனை விதிக்கப்படலாம். நாளை அவர்களுக்காக மரணதண்டணை ஒழிப்பு இயக்கத்தை நடத்த தமிழ்த்தேசிய அமைப்புகள் முன்வருமா?
கேரளாவில் இயங்கிவரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி. மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் நம்பிக்கையுள்ள ஒரு அரசியல்கட்சி. முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் கணிசமான தலித்துகளும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வியக்கத்தின் தலைவர் மதானியைக் கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று காவல்துறை கைதுசெய்து ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.
சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மதானியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரை குறைந்தபட்சம் மருத்துவசிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த ஆறுமாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். இவ்வறிக்கையில் அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர்.வீராசாமி, கவிஞர்.சுகிர்தராணி, வழக்கறிஞர்.ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார்தி.க, ஆதித்தமிழர்பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மதானி பிணையில் விடுவிக்கப்படவில்லை.
ஆனால் இப்போது மதானி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும் அவரை விடுதலை செய்துவிடவில்லை. பெரியமனதோடு அவரைப் பிணையில் விடுவிக்க சம்மதித்திருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்த குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மதானியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீசு எப்படி ஈடுகட்டும்? இது மதானிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வியே.
நன்றி : சுகுணா திவாகர்
குறிச்சொற்கள்
கைவிடப்பட்ட முஸ்லிம்கள்,
கோவை குண்டுவெடிப்பு தீர்ப்பு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சுகுணா திவாகரின் கட்டுரை பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம்களின் கண்ணீரைத் துடைப்பதாய் அமைந்துள்ளது. அ. மார்க்ஸின் எழுத்துக்களைப் போன்று சுகுணா திவாகரின் எழுத்துக்களும் பரவலான தமிழ் முஸ்லிம் இதழ்களிலும், வெகுஜன இதழ்களிலும் இடம்பிடிக்க வேண்டும். அவரது கட்டுரைத் தொகுப்பும் நூலுருவில் விரைவில் வரவேண்டும்.
Post a Comment