Saturday, June 30, 2007

பர்தா சர்ச்சை - கருத்துக்களை வாபஸ் பெற்றார் பிரதிபா பட்டில்

பிரதிபா பட்டில்

பெண்களுக்கு முகலாயர் அளித்த மரியாதை பர்தா : முஸ்லிம் தலைவர்களிடம் பிரதீபா விளக்கம் புதுடில்லி : "பர்தா அணிவதிலிருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும்' என்று பேசி சர்ச்சையில் சிக்கிய பிரதீபா பாட்டீல், தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார். தன்னை சந்திக்க வந்த முஸ்லிம் தலைவர்களிடம், "பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை' என்று தெரிவித்துள்ளார்.

முகலாய படையெடுப்பின் போது, பெண்களை பாதுகாக்க அவர்கள் பர்தா அணிய வைக்கப்பட்டதாகவும், தற்போது அது போன்ற நிலை இல்லாததால், பர்தா பழக்கத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதி தேர்தல் காங்., கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளார் பிரதீபா பாட்டீல்.சமீபத்தில் ஜமாயத் உலேமாஇஹிந்த மவுலானா அர்ஷத் தானி, காங்., மூத்த தலைவர் ஹசன் அலி, டில்லி மேயர் தலத் சுல்தான் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள், பிரதீபா பாட்டீலை சந்தித்து பேசினர்.

அப்போது, இந்தியாவின் மேம்பாட்டில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பை திரும்பத் திரும்ப வெகுவாக பாராட்டினார் பிரதீபா. முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் விஷயத்தில், தான் கூறிய கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டு விட்டது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, "முகலாயர்கள் பெண்களுக்கு பெரிதும் மதிப்பும் மரியாதையும் அளித்தனர். பர்தா என்பது பெண்களுக்கு முகலாயர்கள் அளித்த மரியாதை தான்' என்று கூறினார் பிரதீபா.

பிரதீபாவின் விளக்கமும், மறுப்பும் தங்களை பெரிதும் திருப்தியடைய வைத்ததாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.ஜமாயத் அமைப்பு, அசாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இந்த அணியில் 10 எம்.எல்.ஏ.,க்களும், ஒரு எம்.பி.,யும் உள்ளனர். அவர்களின் ஓட்டுகளை பெறும் முயற்சியாகவே, முஸ்லிம் தலைவர்களை பிரதீபா சந்தித்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

நன்றி : தினமலர்

No comments: