Thursday, February 08, 2007

வந்தே மாதரம் பாடலும் பின்னணியும்

வந்தே மாதரம் பாடலும் பின்னணியும்

தேசம் என்னும் கருத்தியல் உருவாகும் போது வலுவான அடையாளங்களும், அடையாளங்கள் வழியான கூட்டு நினைவுகளும், கூட்டு உணர்ச்சிகளும் வழிவழியாகப் பராமரிக்கப்படுவது அவசியமாகிறது. இதிகாசங்கள், புராணங்கள், பகவத் கீதை ஆகியவை பொது நினைவாய் இந்தியப் பொது மன அமைப்பில் ஆட்சி செலுத்துவது போலவே சென்ற நூற்றாண்டில் எழுச்சி பெற்ற தேசியம் என்று புதிதாக உருவான கருத்தாக்கத்திற்குப் புதிய கதைகளும் புதிய பாடல்களும் அடையாளங்களாய்த் தேவைப்பட்டன. சமூகக் குழு, சாதி, மதம், இனம் எல்லாவற்றிற்கும் தங்கள் கலாச்சாரம், வரலாறு குறித்த பெருமிதத்திற்கும் கூட்டுணர்வுக்கும் இந்த அடையாளங்கள் பொதுச் சரடாய் திகழ்கிறது.

இந்தியாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது தான் தேசம் சார்ந்த கருத்தாக்கம் இந்தியாவில் வலுப்படத் தொடங்குகிறது. இந்திய தேசம், தேச பக்தி என்ற உணர்வுகள் இக்காலகட்டத்தில் கலாச்சார வெளிகளிலும் அப்போது தீவிரமாய் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. அப்போது தேசம் முழுவதும் பல கலைஞர்கள் அவர்கள் சார்ந்த துறைகளில் தேச உணர்வைப் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளிப்படுத்துகின்றார். தமிழ்நாட்டிலிருந்து பாரதியார், வங்கத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி போன்றவர்கள் கவிதைகள், புனைக் கதைகள் வழி தேச உணர்வை எழுப்பியதில் முக்கியமானவர்கள்.

தேசபக்தி சார்ந்து வெளிப்பட்ட அனைவர் உணர்ச்சிக்கும் பின்னர் ஒரே நோக்கம் என்பது இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தைக்கூட ஒற்றை நோக்கம் சார்ந்த பொது அபிலாசை கொண்ட இயக்கம் என்று சொல்ல இயலாது. வர்க்க நலம், மத நலம், சாதி நலம், சுய நலம் சார்ந்த ஆசைகளும், எண்ணங்களும், திட்டங்களும் கலந்து உருவான எழுச்சியாகவே அந்த இயக்கம் இருந்தது.

சுயச்சார்வு அற்ற மெய்மை உணர்நிலையை மதநலனோ, துவேஷமோ பாராட்டாத பொது லட்சிய வெளிப்பாட்டைப் பாரதியார் போன்ற வெகுசிலரிடமே காணமுடிகிறது. பாரதியிடம் கூட மதச்சாய்வை வாசிக்கும் அணுகுமுறை இப்போது தொடங்கியுள்ளது கவனிக்கத் தக்கது.

இந்து தேசியவாதத்தின் மிக முக்கியப் பிரதிநிதியாக கருதப்படும் பங்கிம் சந்தர் எழுதிய வந்தே மாதரம் மேற்கொண்ட பின்னணியில் தான் தேச விடுதலையின் மந்திர வாக்கியமாகவும் போராட்ட அடையாளமுமாகவும் ஆனது. வந்தே மாதரம் எழுதியவர் யாரென்றோ, அவரின் பின்னணி என்னவென்றோ முழுவதும் அறியாத பொது மக்களுக்கு இவ்வார்த்தைகள் சுதந்திர அறைகூவல் விடுக்கும் கருவிகள் ஆயின.

மக்களின் நனவிலியில் அடிப்படை அங்கங்களாய் உறைந்திருக்கும் மத, கலாச்சார நினைவு அடையாளங்களை வைத்து அரசியல் நடத்துவதில் கைதேர்ந்த பி.ஜே.பி யினர் வந்தே மாதரம் பாடலையும் அரசியல் செய்வதற்குக் கையிலெடுத்துள்ளனர். இத்தரப்பினர் ஒரு பிரச்சனையை கையிலெடுக்கும் போதே அந்த அடையாளத்தின் பின்னணியையும் தர்க்கத்தையும் ஆராய வேண்டியது முக்கியமாகியுள்ளது.

வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிறது. அந்த நாள் செப்டம்பர்-7ஆம் தேதி. அதையொட்டி இப்பாடலை இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பாடலாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இந்தியாவைத் தாயென வணங்குவோம் என அர்த்தம் வருவதால், அல்லாஹ்வைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காத இஸ்லாமிய சமுதாயத்தினர் இப்பாடலைப் பாடக் கட்டாயப்படுத்தக் கூடாது என அரசைக் கேட்டுக் கொண்டனர். இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது. பாரதீய ஜனதா கட்சியினர் விவாதிப்பதற்கு முக்கியப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் கூச்சல் இட்டனர்.

அதோடு பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள மதராஸக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் செப்-7ல் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டுமென அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கான அடிப்படை உரிமையை, சுதந்திரத்தைப் பாரதிய ஜனதா மறுத்துள்ளது. அதோடு தேசபக்தி புனித அடையாளத்துக்குள் இப்பிரச்சனையை மாற்றி இஸ்லாமியர்களை தார்மீக நெருக்கடிக்குள்ளும் தள்ளியுள்ளது. தேச மக்களிடையே சகல பகுதிகளிலும் தன் செல்வாக்கை இழந்திருக்கும் பாஜகாவின் எண்ணற்ற தகிடுதத்த அரசியல்களில் இதுவும் ஒன்று. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு கோடிக்கணக்கான மக்களும், மாணவர்களும் ஜனகனமண, வந்தே மாதரம், சாரே ஜகாங்கே அச்சா போன்றவற்றே பெரும்பாலும் முழு அர்த்தம் தெரியாமலேயே சடங்குப் பூர்வமாய் படித்து வந்துள்ளார்கள். ஆனால், வந்தே மாதரம் பாடல் பாடக் கட்டாயப்படுத்தும் போது தான் வற்புறுத்தலுக்கான பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

வந்தே மாதரம் பாடல் ஆனந்த மடம் என்னும் பக்கிம் சந்திரரின் நாவலில் வருவது. ஆனந்த மடம், இஸ்லாமியரை கலாச்சாரத்திலிருந்தே அப்புறப்படுத்தும் செயல் திட்டத்தை உள்ளடக்கிய பொருள் கொண்ட நாவலாகும்.

1930களின் மத்தியிலே வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்கும் முயற்சி நடந்தபோது பாடலின் அர்த்தத்திற்கு அப்பாற்பட்டு பாடல் இடம்பெற்ற பின்னணியின் காரணமாக இஸ்லாமிய இளைஞர்களிடேயே பதற்றம் எழுந்தது. அப்பின்னணியைச் சற்று சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஆனந்த மடம் நாவலில் தாயின் குழந்தைகள் அல்லது சாத்தான் என அழைக்கப்படும் துறவிகள் குழுவால் இசைக்கப்படுவதே வந்தே மாதரம். அதில் ஞானானந்தா என்னும் கதாபாத்திரம் தன் குழுவிடம் உற்சாகமூட்டிப் பேசும் உரையாடல் இது. இந்த கெடுதல் விளைவிக்கும் பறவைகள் கூட்டை நொறுக்கவும், இந்த முஸல்மான் நகரத்தை முற்றிலும் அழித்து அவர்களை ஆற்றிலிடவும் நீண்ட காலம் திட்டமாகி விட்டது. முஸல்மான் வாழும் நகரத்தை வெறும் தூசியாக்கக் கிளம்புவோம். வாருங்கள், அந்தப் பன்றிக் கூடங்களை நெருப்பால் தூய்மை செய்து அவற்றை நதியில் எறிவோம். ஆனந்த மடம் நாவலில் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை பேச்சாகவும் செயலாகவும் பல இடங்களில் வருகிறது. நாவலின் நோக்கம் இதிலிருந்து வேறுபட்டது எனக் கருத இடமில்லை. சாத்தான்களின் புரட்சி வெற்றியடைவதோடு நாவல் முடிவடைகிறது. ஆனால், ஞானந்தாவோ விரக்தி அடைந்து சாத்தான் ஆசிரமத்துக்கு வந்து ஆன்மீகக் குருவிடம் தனது ஆதங்கத்தை சொல்கிறார்.

'முஸல்மான்கள் ஆதிக்கம் முடிந்து விட்டது. ஆனால் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க இன்னும் முடியவில்லை' என்று சொல்லி 'ஐயோ தாயே! உன்னைக் காப்பாற்றுவதில் நான் தோல்வியடைந்து விட்டேன். நீ திரும்ப மிலேச்சர்களின் விலங்குகளுக்குள் சிறைப்பட்டு விட்டாய்' எனக் கரைந்துருகிறான். அதற்கு அந்த ஆன்மீகக் குரு பதிலளிக்கிறார். 'ஆங்கிலேயர் இந்த நிலத்தை ஆளவில்லையெனில் புராதன மதங்கள் மறுமலர்ச்சியடைய வாய்ப்பே இல்லை. அறிவு இரு கிளைகளாக பிரிகிறது. ஒன்று பொருளியலானது, மற்றொன்று ஆன்மீகமானது. இந்து மனம் என்பது பின்னதில் அதிக ஒட்டுதலும், பழக்கமும் கொண்டது. முன்னதில் அதற்கு பழக்கம் குறைவு. இந்த முறை வேறு ஏதாவது நாட்டிலிருந்தே நமக்கு அறிமுகப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் தான் பொருளாதாய உலகுக்கு வழிவகுக்கும் முந்தைய குருக்கள். எனவே அவர்கள் தான் அதைக் கற்றுத்தரும் கலையில் வல்லவர்கள். அதனால் நாம் பிரிட்டிசாரை நமது ஆட்சியாளர்களாக்க வேண்டும்' என்கிறார்.

ஆனந்தமடம் நாவலின் நோக்கமும், வந்தே மாதரம் பாடலின் பின்னணியும் ஓரளவு நமக்குப் புரிந்திருக்கும். 'நாம்''நமக்கு' என ஆன்மிகக் குருவால் சொல்லப்படுபவர் யாரென்றும் செயல்திட்டம் என்னவென்றும் இப்போது தெரிந்திருக்கும்.

இப்பின்னணியைக் கொண்ட வந்தே மாதரம் பாடல் தான் சுதேசி இயக்கத்தின் உணர்ச்சியைத் தூண்டும் மந்திரமாய் ஆனது. ஆனாலும் வௌ;வேறு காலங்களில் இஸ்லாமியரைத் தாக்கும் இந்துத்துவ ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் மறைப்பக்கத்தையும் இப்பிரதி கொண்டுள்ளது.

இந்தியா 51வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது கேரள மாநில அரசு தங்கள் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலைப் பாட அறிவிப்பை அனுப்பியது. கேரளத்திலுள்ள வடக்கு மாவட்டங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. நிறைய முஸ்லிம் அமைப்புகள், வந்தே மாதரம் மதத்துவேஷத்தை வெளிப்படுத்துவதாய்க் கருதி அப்பாடல் பாட பத்வா விதித்தன. வந்தே மாதரம் பாடுவது உருவ வணக்கத்திற்கு ஆதரவாகவும் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாய் இருப்பதாகவும் கருதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மலப்புரம் மாவட்டத்தில் பதற்றம் எழுந்தது. இஸ்லாமிய, இந்துத்துவ செயலாளிகள் பள்ளிகளைச் சுற்றி தங்கள் நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்க கேரளக் கல்வித் துறை வந்தே மாதரம் பாடுவது கட்டாயமென ஜூலை 27ல் உத்தரவு ஒன்றை அனுப்பியது. ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ நிறுவனங்கள் வந்தே மாதரம் பாடல் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி உத்தரவைத் திருப்பியனுப்பினர்.

வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு தினத்தினை ஒட்டி மீண்டும் பிரச்சனை தீப்பிடித்துள்ளது. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பள்ளிகளில் கட்டாயமாய்ப் பாட சுற்றறிக்கைகளை விட்டு கட்டாயப்படுத்தியுள்ளது. குஜராத் மாநில அரசு சுற்றறிக்கை விட்டதோடு அல்லாமல் மாநில இளைஞர் மற்றும் கலாச்சாரத்துறை ஒரு ஏஜென்ஸியை நியமித்து வந்தே மாதரப் பாடல் ஒலிக்கும் ஒலித் தகடுகளையும் விநியோகித்து வருகிறது. தமிழக அரசும் பள்ளிகளுக்கு வந்தே மாதரம் பாடுவதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள பள்ளி முதல்வர் இராபென் தேசாய் இப்பிரச்சனை குறித்து பேசும் போது 'அரசியல் கட்சிகள் இது போன்ற சுற்றறிக்கைகள் விட்டு வீணான பிரச்சனைகளைக் கிளப்புகின்றன. எங்கள் பள்ளியில் எல்லா முஸ்லிம் மாணவர்களும் நவராத்திரி, ரக்ஷாபந்தனிலிந்து பக்ரித் விழாக்கள் வரை சேர்ந்து பங்கேற்கின்றனர். செப்டம்பர் 7ல் மட்டும் வந்தே மாதரம் பாட அரசு ஏன் தேர்ந்தெடுத்ததென்று தெரியவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் நடத்தும் பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடுவதில் ஒரு தடையும் இல்லை. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை தான், எனக்கு அது கட்டாயப்படுத்துவதாய் இருக்கக் கூடாது' என்கிறார்.

இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குகூட இந்தியக் குடிமகன் மறுப்பதற்கான உரிமைகள் அரசியலைமைப்புச் சட்டத்தில் உண்டு. இதற்கு உதாரணமானது தான் கேரளத்தில் நடந்த பிஜோ இம்மானுவேல் வழக்கு.

கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் தேசிய கீதம் பாடும் வேளையில் எல்லாரையும் போல் எழுந்து நின்று பாடாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாய் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவ மதப்பிரிவான 'ஜெவோகா விட்னஸ்' பிரிவைச் சேர்ந்தார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் ஸ்லோகங்களைத் தவிர வேறெதையும் பாடக்கூடாது. ஆனால், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 25வது ஷரத்தின்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். 19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

ஆனால் அரசியலைமைப்புச் சட்டத்தின் விதிகளை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பா.ஜ.க போன்ற கட்சிகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. எளிய மக்களின் சிறுவர், சிறுமியரின் அன்றாடத்தில் தேவையற்ற நெருக்கடியை உருவாக்கித் துவேஷத்தை தூண்டி இழந்த செல்வாக்கை மீட்டு மையத்துக்கு வர விரும்பும் இக்கட்சியின் செயல்திட்டங்கள் இந்தியாவுக்கு இன்னும் என்னென்ன விநோதமான நெருக்கடிகள் தரக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.

வரலாற்றின் வேறு வேறு காலக்கட்டங்களில் சில குழுக்கள் தங்களின் லட்சியங்களுக்காகவும், நலன்களுக்காகவும் மதம், தேசம், சாதி போன்றவற்றின் பின்னணியில் மக்களின் பொது உணர்ச்சியை தூண்டிச் சமுகத்தின் பொது அமைதிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. சாதாரண மக்களின் பொது உணர்ச்சி என்பது எல்லாவிதமான நெருக்கடிகளையும், செரித்து தன்னை மீண்டும், மீண்டும் நிரூபனமாகியுள்ளது. வந்தே மாதரம் குறித்தும் பொது உணர்ச்சி செயல்பட்ட விதத்தை இக்கடைசி செய்தியிலிருந்து தெரிந்துகொண்டு கடைசி செய்தியுடன் பொது நினைவிலிருந்து வந்தே மாதரம் ஏற்படுத்திய நெருக்கடியை இத்துடன் துண்டித்து விடலாம். 'பலத்த சர்ச்சைக்கிடையே நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. தேசபக்தி பாடல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்துடன் முடிவுக்கு வர வேண்டும்' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான 'வந்தே மாதரம்' பாடலை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி பிறந்த ஊரில் யாருமே பாடவில்லை. இது தான் பொது உணர்ச்சி தெரிவிக்கும் முரண்நகை.

நன்றி : ஏ1ரியலீஸம்.காம் (தமிழ் இஸ்லாம்)

காரைக்குடி, முஸ்லிம், இஸ்லாம், முகவை

No comments: