Friday, January 19, 2007

புனித ஹஜ்-ல் வழிகாட்டியாக நயவஞ்சகர்கள் (Hajj Culprits)

இந்த கட்டுரை மூலம் தனிப்பட்ட மனிதரையோ, குழுக்களையோ, அமைப்பையோ சாட வேண்டுமென்பது நோக்கமல்ல. அற்ப லாபத்திற்காக ஹாஜிகளை வஞ்சிக்கும் நயவஞ்சகர்களை கண்டித்தும், போதிய அறிவு நிர்வாகத்திறமையின்மையை உணர்ந்து விலகியிருக்க அறிவுறுத்துவதே நோக்கம். இந்நயவஞ்சகர்களின் வாக்கை நம்பி உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஹஜ் செய்ய வந்து நிர்கதியாக்கப்பட்டவர்களின் மன வேதனையே இது.



புனித ஹஜ்-ல் வழிகாட்டியாக நயவஞ்சகர்கள்


நயவஞ்சகனின் அடையாளம் மூன்று:

1. பேசினால் பொய்யுரைப்பான்.
2. வாக்களித்தால் மாறு செய்வான்.
3. நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

முஸ்லிம்கள் (வசதி, உடல் தகுதி படைத்தவர்கள்) தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்கள் மீது இறைவன் கடமையாக்கிய கடமைகளில் ஒன்றாக இருக்கின்றது.

அல்லாஹ் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது கடமையாக்கிய ஐந்து கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றி, வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வேண்டி, பல்வேறு நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மக்காவை நோக்கி வருகின்றார்கள்.


மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது) தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்;. எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (2:197)
முஸ்லிம்கள் தங்களது வாழ்நாள் கடமையான புனித ஹஜ்ஜை நபி வழியில் நிறைவேற்றுதவற்காக (தனித்து செல்ல இயலாத சூழ்நிலையால்) சிறந்த வழிகாட்டிகள் மற்றும் குழுக்களை நாடி தன் வாழ்நாள் சாதனையை நேரிய முறையுடனும், தக்வா-உடனும் செய்ய முற்படும் வேளையில் 'ஹஜ் வழிகாட்டிகள்' என்ற போர்வையில் சில நயவஞ்சக கூட்டங்கள் செய்யும் (சைத்தானினிய) சூழ்ச்சியினால் இவர்களை உண்மையாளர்கள் என நம்பி ஏமாந்த ஹாஜிகள் அலைகழிக்கப்பட்டு, நிம்மதியிழந்து, ஈமானிய சிந்தனை குன்றி தங்கள் வாழ்நாள் கனவான புனித ஹஜ்ஜை தக்வாவுடனும், முழுமையாகவும் (மினா, அரஃபா, முஸ்தலிஃபா-வில் குறித்த காலத்தில் தங்குவது, தொழுவது) நிறைவேற்ற இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு நிலைகுலைந்து வெறுத்து மனசஞ்சலத்துடன் குறைகளுடன் ஹஜ்ஜை மனம் வெதும்பி நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள். காரணம் இந்த நயவஞ்சக வழிகாட்டிகள் தனிமையில் சைத்தானுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை நிறைவேற்றும் பொருட்டு.

இன்னும் மனிதர்களில் ''நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்'' என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்)
அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. ''பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்'' என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் ''நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்'' என்று அவர்கள் சொல்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை)உணர்கிறார்களில்லை. (மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம்
சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, ''நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்'' என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, ''நிச்சயமாக நாங்கள்
உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். அல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான். இவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்களும் அல்லர். (அல் குர்ஆன் 2:8-16)


ஆனால் அல்லாஹ்! இந்நயவஞ்சகர்கள் சைத்தானுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை முறியடிக்கும் பொருட்டு, ஹாஜிகளுக்கு நல்ல உடல்நிலை, மன நிலை, தன்னம்பிக்கை, ஒவ்வொரு இடத்திலும் தனது அடியார்களின் மூலம் உதவி செய்து ஹஜ்ஜை நிறைவேற்றச் செய்குகிறான். 'அல்லாஹ்! தனது அடியானின் எண்ணத்தையும், முயற்சியையும் பார்க்கிறான்' என்ற அல்லாஹ்வின் வாக்கை ஹாஜிகள் நினைவில் வைத்துக்கொண்டே அல்லாஹ்வின் உதவியுடன் தன்னம்பிக்கையுடன் சைத்தானின் சதியை முறியடிக்கிறார்கள். புகழனைத்தும் இறைவனுக்கே.

இந்நயவஞ்சகர்கள், மார்க்க அறிஞர்கள் என்ற போலி முகவரியில் உதட்டளவிலும், நடிப்பிலும் மக்களை நம்ப வைத்து ஏமாற்றி தனது ஏமாற்று வேலைக்கு (மறைத்து) தகுந்தவாறு நேரத்திற்கு நேரம் மார்க்கத்தை திரித்து லோக்கல் பத்வாக்களை வெளியிட்டு முஸ்லீம்களை மூடர்களாக்கி தனது வாதத்திறமையின் மூலம் நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள். இவர்கள் மக்களை ஏமாற்றியே பழகியதால், இறையச்சம் துளியுமின்றி ஹஜ்ஜை பொடுபோக்காக எண்ணி தன் தவறை திருத்திக்கொள்ளும் திராணியற்று, கல் நெஞ்சத்துடன் கடைசிவரை விழிக்காமல் உணர்ச்சியற்றவர்களாக நடித்து மொத்தப்பணத்தையும் தனது இலாபமாக எடுத்துக்கொள்வதில் குறியாக இருக்கிறார்கள். ஹாஜிகள் கோபப்பட்டு திட்டினால் சமாதானத்திற்காக சிறிது செலவு செய்து அரசியல்வாதியை மிஞ்சி காட்டுகிறார்கள்.

சவுதிக்காரரிடம் அல்லது வேறு ஏஜண்ட்டிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று இந்நயவஞ்சகர்கள் கூறுவதை உண்மை என நம்புவதற்கு நீங்கள் சவுதிக்காரரிடம்
கொடுத்த பணத்திற்கு ரசீது எங்கே! காவல் துறை புகார் எங்கே! மீதி பணத்தில் மீதி ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை! என கேட்டால் உணர்ச்சியற்ற மழுப்பலே வருகிறது.


குறிப்பிட்ட காலத்தில் ஹஜ்ஜின் ஒவ்வொரு கடமையையும் கட்டாய சூழ்நிலையால் ஹாஜிகள் தன்னம்பிக்கையுடன் சென்று செய்ய கிளம்புவதால் இந்நயவஞ்சகர்கள் ஹஜ் காலம் வரை குருடர்களாகவும், செவிடர்களாகவும் நடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்ற இறுமாப்பு. முதன்முதலாக ஹஜ் செய்ய வருபவர்களுக்கு இருக்கிற முன் யோசனை கூட இன்றி சிந்திக்கும் திராணியற்றவர்கள் போல் நடிக்கிறார்கள்.

நீங்கள் அளித்த வாக்கை நிறைவேற்றுவீர்கள் என நம்பி தானே பணத்தை உங்களிடம் கட்டினோம் என உரிமைக்குரல் கொடுத்தால் நான் வெறும் எடுபிடி, எங்கள் (கொள்ளைக்) கூட்டத்தலைவரை கேளுங்கள் எனக் கை காட்டுவது உங்களின் மடத்தனத்திற்கும், கையாலாகததிற்கும் ஒரு எடுத்துக்காட்டு. உங்களின் எந்த மாதிரியான 10 (அ) 15 வருட ஹஜ் சர்வீஸ் அனுபவம் (டிரைவர், எடுபிடி, கமிஷன் ஏஜண்ட், கொள்ளை கூட்டத்திற்கு ஏமாறுபவர்களை ஆள் பிடித்து கொடுப்பது) என்பதை விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கலாம். இவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பெருமைபட பட கூறும் விஷயம் யாதெனில் மற்ற (இவர்களை விட) மோசமான ஹஜ் சர்வீஸின் குறைகளை கேட்டறிந்து அதை விட நாங்கள் நல்லவர்தானே என்பது.

இந்நயவஞ்சகர்களால் கை விடப்பட்டு புதிய இடத்தில், புதிய சூழலில் மினா, அரபா, முஸ்தலிபாவில் தங்குமிடம், உணவு, போக்குவரத்தின்றி வெயிலிலும், குளிரிலும் அல்லல்பட்டு உடல்நிலை மோசப்பட்டு பலகீனப்பட்டவர்கள் பலர். அமானிதத்தின் பொறுப்பை பற்றியே அறியாத இச்செவிடர்களுக்கு உயிரின் மதிப்பா தெரியப்போகின்றது?.


நயவஞ்சகர்களே!
... யார் வரம்பு மீறுவதுடன் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை
நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான். (40:28)


மாபெரும் சதியாதெனில் மற்றவன் உண்மையென நம்பக்கூடியவாறு பொய் பேசுவதாகும் என நபி அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)


உங்களின் வாதத்திறமையான ஏமாற்று பதிலுக்கு ஹாஜிகள் மறு பேச்சு பேசவில்லையெனில் ஹாஜிகள் நம்பி விட்டதாக நினைக்காதீர்கள். உங்களின் தாடி, தொப்பி, மார்க்க அறிவுக்கு மதிப்பு கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து குறைந்தபட்சம் முஸ்லீமாகவாவது கடைபிடிக்க முயற்ச்சி செய்யவும். உங்களை போன்ற சொல்லும், செயலும் ஒன்றாக இருக்காத போலிகளால் உண்மையான தாஃவா பணியில் ஈடுபடுபவர்களுக்கு அவப்பெயரே.


மறுமையில் மூவருடன் தான் வழக்காடுவதாக அல்லாஹ் கூறுகிறான். எனக்காக (உடன்படிக்கை) கொடுத்து அதை மீறுபவன், ஒரு சுதந்திரமானவனை விற்று அப்பணத்தால் பசி தீர்த்தவன், ஒருவனை வேலைக்கு அமர்த்தி வேலை முடிந்தவுடன் கூலி கொடுக்காது இருந்தவன் என நபி அவர்கள் கூறினார்கள். (புகாரி, இப்னுமாஜா)


அடியார்களே! எனக்கு நானே அநீதத்தை ஹராமாக்கியுள்ளேன். அதை உங்களுக்கிடையிலும் ஹராமாக்கியுள்ளேன். ஒருவருக்கொருவர் அநீதமிழைத்துக் கொள்ளாதீர்கள்! என அல்லாஹ் கூறுகிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதீ)


இவ்உலகில் பிழைக்க எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது. அல்ப இலாபத்திற்காக புனித ஹஜ் கடமையை அல்லாஹ்க்காக தக்வாவுடன் செய்ய, நிறைந்த எதிர்பார்ப்புடன், சிறுக சிறுக சேமித்த சேமிப்பை செலவு செய்து, உடலை வருத்தி, குடும்பத்தினர், வயதானவர்கள், குழந்தைகள், புதிதாக இஸ்லாத்தை கவர்ந்து வந்தவர்கள் என்று பலதரப்பட்டவர் இஸ்லாத்தை முழுமையாக அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற பரவசத்துடன் உங்களின் வாக்குகளை உண்மையென நம்பி வரும் ஹாஜிகளுக்கு நீங்கள் ஏமாற்றத்தையே பரிசாக அளிக்கிறீர்கள். உங்களை உண்மையாளர் என நம்பி நீங்கள் வாக்களித்த வசதிகளுக்கு ஈடாக முன்பணமாக நீங்கள் கேட்ட முழுதொகையையும், முழு ஒத்துழைப்பையும் கொடுத்ததற்கு செய்யும் சேவை ஹாஜிகளை ஏமாற்றுவதா?

இப்படி ஈனப்பிழைப்பு நடத்தி வயிறு புடைப்பதை விட மற்றவர்களிடம் கையேந்தி ஸதகா, ஜகாத் வாங்கி பிழைத்துக் கொள்ளுங்கள். இனிமேலாவது, உங்களுக்கு நேர்வழி காட்டி முஸ்லீமாக வாழ வழி செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இறைவன் எப்பொழுதும் எல்லா இடத்திலும் மனிதனைப் பார்க்கக் கூடியவனாக இருக்கின்றான். உலகத்தாரின் பார்வையை மனிதன் ஏமாற்றலாம். ஆனால் இறைவனை ஏமாற்ற இயலாது. உலகத்தாரின் - அரசின் தண்டனையிலிருந்து தப்பலாம். ஆனால் இறைவனின் பிடியிலிருந்து தப்ப முடியாது. இறை திருப்தியை - இறை மகிழ்ச்சியைப் பெறுவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகின்றது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

இக்கட்டுரையை வாசிப்பவர்கள், தயவு செய்து வாக்கை நிறைவேற்ற தவறிய ஹஜ் சர்வீஸ்க்கு ஆள் சேர்ப்பவர்களிடம் கொடுத்து அநியாயத்திற்கு துணை போக வேண்டாம் என எச்சரிக்கவும்.


இப்படிக்கு,

இந்நயவஞ்சகர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள்.


இக்கட்டுரையில் நாங்கள் பாதிக்கப்பட்ட ஹஜ் சர்வீஸ், மௌலவியின் பெயரை சுட்டிக்காட்டி கேவலப்படுத்த மனம் விரும்பாததால் எங்களின் அனுபவத்தையும் மற்றும் எங்களைப் போல் உள் நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்வேறு ஹஜ் சர்வீஸ் வழியாக வந்து ஏமாற்றப்பட்ட மக்களின் பாதிப்பை அறிந்து, அனுபவித்து மேலோட்டமாக எழுதப்பட்டது.

நன்றி : தமிழ் முஸ்லிம் யாஹீ மின்னஞ்சல் குழுமம்
http://groups.yahoo.com/group/tamil-muslim/message/2678

No comments: