Sunday, January 14, 2007

முஸ்லிம் நர்சுகளுக்கு மெக்காவில் வேலை

முஸ்லிம் பெண் நர்சுகளுக்கு மெக்காவில் வேலை

சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர்.மெக்காவில் அமைந்துள்ள சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பெருமளவில் முஸ்லிம் பெண் நர்சுகள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 23ம் தேதி அன்று கொச்சியில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் காலை 8 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்கள் பி.எஸ்.சி., மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு வருட முன் அனுபவம் மற்றும் 40 வயதிற்கு மிகாமல் உள்ள முஸ்லிம் பெண் நர்சுகளாக இருக்க வேண்டும். தங்களின் விண்ணப்ப படிவத்தை தட்டச்சு செய்து, கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களுடன் சேர்த்து சென்னை சேத்துப்பட்டு, எண்.41, மெக்னிக்கல்ஸ் சாலையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 2836 5099 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அயல்நாடு வேலை வாய்ப்பு நிறுவன செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

*****************************************************************************
கிராமத்து இளம்பெண்களுக்கு வலை வீச்சு * விபசார கும்பல் குறித்து "பகீர்' தகவல்கள்

சென்னை: வறுமையில் சிக்கித் தவிக்கும் கிராமத்து இளம்பெண்களை வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் ஒன்று, தற்போது நகரில் உலா வந்து கொண்டிருக்கிறது.

சென்னை நகரில் கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள லாட்ஜ்களிலும், மசாஜ் சென்டர்களிலும் விபசார தொழில் கொடிகட்டி பறந்தது. போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஒடுக்கப்பட்டது. சென்னை நகரில் லாட்ஜ்களில் வைத்து நடத்தப்படும் விபசார தொழில் மீது நாளுக்கு நாள் போலீஸ் கெடுபிடி அதிகரிக்கவே, மொபைல் போன் மூலம் "கஸ்டமர்களை' அழைத்து கார்களில் விபசாரம் செய்யும் முறை பின்பற்றப்பட்டது. பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் இந்த விபசார கும்பலின் கார்கள் அழகிகளுடன் வலம் வந்து கொண்டிருந்தன. நாளடைவில், சென்னை நகருக்குள்ளும் கார் விபசாரம் தலை காட்ட தொடங்கியது. இதையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதன் காரணமாக விபசார கும்பல்கள், தற்போது புது வியூகத்தை வகுத்து தங்களின் தொழிலை தொடர்ந்து நடத்துகின்றனர். அமைதியான புறநகர் பகுதிகளில் வீடுகளைத் தேர்ந்தெடுத்து குடும்ப சகிதமாக காட்சியளிக்கும் இந்த கும்பல், விபசார தொழில்களை போலீஸ் தொந்தரவின்றி நடத்துகின்றனர். ஒரு வேளை போலீசார் பார்வை தம் மீது பட்டுவிட்டாலும், அதை பணம் கொடுத்து சரி செய்து கொள்கின்றனர். பிரச்னை இல்லை என்பதால், போலீசாரும் மாதாமாதம் ஒரு தொகையை மாமூலாக வாங்கிக் கொண்டு, வீடுகளில் நடக்கும் விபசாரத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இந்த வகையில் வளசரவாக்கம், போரூர், மவுலிவாக்கம், முகலிவாக்கம் ஆகிய பகுதிகளில் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரையிலான வாடகைக்கு தனி வீட்டை இந்த கும்பல் தேர்வு செய்துள்ளது.
அக்கம் பக்கத்தில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தங்களின் "ரெகுலர் கஸ்டமர்'களை மட்டுமே வைத்து விபசாரம் நடத்தப்படுவதால், தற்போது புறநகரில் விபசார தொழில் கொடிகட்டி பறக்கிறது. பொதுவாக சென்னைவாசிகள் கிராமத்து மக்களை போல் அக்கம் பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது, விபசார கும்பல்களுக்கு வசதியாக போய்விட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய போது, திடுக்கிடும் தகவலும் கிடைத்தது. சென்னையில் இருந்து கிராமங்களுக்கு கிளம்பும் சிலர், அங்குள்ள இளம்பெண்களை சென்னையில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து வருகின்றனர். இவ்வாறு அழைத்து வரப்படும் பெண்களை, விபசார புரோக்கர்களுக்கு நல்ல தொகைக்கு விற்று விடுகின்றனர். இதன் மூலம், அவர்களுக்கு கணிசமான பணம் கிடைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து, கிராமத்து இளம்பெண்கள் வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் இளம்பெண்களும் இத்தொழிலை ஏற்றுக் கொள்கின்றனர். குடும்ப சகிதமாக நடைபெறும் விபசார கும்பலிடம் சிக்கி சீரழிந்த இளம்பெண் ஒருவரை, சமீபத்தில் பல்லாவரம் போலீசார் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்களே உஷார்...!

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் விபசார கும்பல், அந்த பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ள கிராமங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. பின்னர், அந்த குடும்பத்திடம் இளம்பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பினால் நல்ல பணம் கிடைக்கும் என்று கூறி அழைத்து வந்து, விபசாரத்தில் தள்ளிவிடுகின்றனர். இந்த பேரத்தில் இளம்பெண்களின் பெற்றோருக்கு பெரும் தொகை கிடைப்பதால், அவர்களும் இளம்பெண்களை முகம் தெரியாதவர்களுடன் அனுப்ப சம்மதிக்கின்றனர். இது போன்ற கும்பல் தற்போது அதிகளவில் உலா வந்து கொண்டிருப்பதால், இளம்பெண்களை வீட்டு வேலைக்கு அனுப்பும் பெற்றோர் உஷாராக இருந்து கொள்வது நல்லது.
நன்றி : தினமலர்

1 comment:

நெல்லைநல்லூரான் said...

அன்புள்ள சகோதரரே!....அஸ்ஸலாமு அலைக்கும்....

தாங்கள் பதிந்துள்ள தகவல் முஸ்லிம் சமுதாயதிற்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இன்ஷ்அ அல்லாஹ். முஸ்லிம் சமுதாயதிற்க்கு தேவையான இது போன்ற செய்திகள் மற்றும் விழிப்புணர்வுகளை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்போழது தான் சமுதாயம் நலம் பெரும். அல்லாஹ் தங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நல் அருள் புரிவானாக! ஆமீன். வஸ்ஸலாம்.