Sunday, September 10, 2006

இலங்கை முஸ்லிம்களுக்காக குரல்கொடுங்கள்(LANKA)



வடகிழக்கு முஸ்லிம்களின் நலன் பேண தமிழக முஸ்லிம்களின் குரலும் அழுத்தமும் அவசியம்!!கிழக்கு மாகாண உலமா சபைத் தலைவர் வேண்டுகோள் 9/9/2006


இலங்கை தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தமது அக்கறையை வெளிப்படுத்துவதுபோல் தமிழ் நாட்டில் வாழும் இலட்சோப லட்சம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்படும் பயங்கரவாதச் செயல்களையிட்டும் தமது அக்கறையை வெளிப்படுத்தவேண்டும். இனப்பிரச்சினைத்தீர்வில் இந்திய அரசு கவனம் செலுத்த முன்வரும்போது வடகிழக்கில் முஸ்லிம்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள இந்திய அரசுக்கு அவர்கள் உரிய அழுத்தத்தைக் கொடுக்கவும் வேண்டும்.

இவ்வாறு கிழக்கு மாகாண ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்க விரும்புகிறது.

அண்மைக்காலமாக இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் தமது அக்கறையை பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி இந்திய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில் சுமார் நாற்பது இலட்சத்துக்கு மேல் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழ்கின்றபோதும் இலங்கையில் முஸ்லிம்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கு ஆளாகின்றபோதும் அகதிகளாக வெளியேறுகின்ற போதும். கொலை செய்யப்படுகின்ற போதும் இச்சகோதரர்களையிட்டு ஒரு வார்த்தை தானும் கூறாமல் மௌனம் காப்பதையிட்டு எமது கவலையைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.


1987ல் இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோது வடகிழக்கில் வாழும் முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டனர். கிழக்கில் முஸ்லிம்கள் தமிழ் மக்களைப் போல் சமமான தொகையில் வாழ்ந்தபோதும் இந்திய அரசு இலங்கை முஸ்லிம்களை கவனத்திற்கொள்வதைத் தவிர்த்தனர்.

அக்கால எல்லையில் முஸ்லிம் கிராமங்கள் பல்வேறு வகைகளில் தாக்குதல்களுக்குள்ளாகின. முஸ்லிம் புத்தி ஜீவிகள் கொல்லப்பட்டனர். பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் கூட ஷஹீதாக்கப்பட்டனர்.

வடக்கு மாகாணத்தில் தொன்று தொட்டு வாழ்ந்த முஸ்லிம்கள் உடுத்த உடுப்போடு வெளியேற்றப்பட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் பல்வேறு துன்ப, துயரங்களுக்குள்ளான போதும் ''இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி'' என்று சூளுரைக்கும் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் ஒரேமொழியை ஒரே வழியைக்கொண்டுள்ள இலங்கை முஸ்லிம்கள் விடயங்களில் தங்கள் கவலையைவெளிப்படுத்தியதாக நாம் அறியவில்லை

இன்று திருகோணமலை மாவட்டம் போர்க்களமாக மாறியுள்ளது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட இம்மாவட்டத்தின் மூதூர், தோப்பூர் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக ஆகியுள்ளனர். மறைவாக வாழ்ந்த பெண்கள் பாடசாலைகளிலும், கொட்டில்களிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. புனித றமழானும் மழைக்காலமும் முன்னோக்கி வந்து கொண்டிருக்கின்றன.


கடந்த மாத ஆரம்பத்தில் மூதூரை விட்டு வெளியேற முஸ்லிம்கள் எடுத்த தீர்மானம்தாங்கள் தமது சொந்தமண்ணில் கவனிப்பாரற்ற அநாதை நிலைக்குள்ளாகிவிட்டோம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும்.

விடுதலைப்புலிகள் மூதூரைக் கைப்பற்றி பொதுமக்கள் வாழும் பிரதேசத்தை யுத்தப் பிராந்தியமாக மாற்றியபோது இராணுவத்தின் தாக்குதல்களைத் தொடர்ந்து அம்மக்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

மூதூர் நத்வதுல் உலமா அரபுக்கல்லூரியில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் ஷெல் தாக்குதல்களினால் உயிரிழந்தனர். இராணுவம் ஷெல் அடிப்பதை நிறுத்தவேண்டுமென பொதுமக்களும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் விடுத்த கோரிக்கைகள் பயனற்றுப்போயின.


இவ்வாறு நிர்க்கதியான நிலையில் வெளியேறிய முஸ்லிம்களை கியூவில் நிறுத்தி சோதனை நடத்தி இளைஞர்களைக் கைதுசெய்து கைகளைக் கட்டி வைத்து பல்வேறு துன்பங்களுக்கு விடுதலைப்புலிகள் ஆளாக்கியதாக அங்கிருந்து வெளியேறிய மக்கள் கதை, கதையாகக்கூறினர்.

எனவே கிழக்கிலே முஸ்லிம்கள் துன்ப நிலைக்குத் தள்ளப்பட்டுவரும் இவ்வேளையில் தமது உடன் பிறப்புக்களான தமிழ் பேசும் முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம்களும் அமைப்புக்களும் அரசியல் தலைமைகளும் தங்களது கரிசனையை வெளிப்படுத்தவேண்டும்.

இனப்பிரச்சினைத்தீர்வில் இந்திய அரசு கவனம் செலுத்த முனைந்துள்ள இவ்வேளை வட, கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தங்களது உரிமைகளைக் குறைவின்றிப் பெற்றுக்கொள்ள இந்திய முஸ்லிம்கள் இந்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்..

http://www.srilankanmuslims.net/Lankadetails.asp?Key=90

No comments: