Tuesday, September 26, 2006

கடமை உள்ளோர்களின் கவனத்திற்கு...

இறைவனின் திருப்பெயரால்

கடமை உள்ளோர்களின் கவனத்திற்கு...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தமிழக சிறைச்சாலைகளில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இருந்து வருகிறார்கள். சிறைபட்டோரின் துயரை துடைத்திடவும் அவர்தம் நலன்களில் அக்கறை கொண்டிடவும் வேண்டுமென சர்வதேச சமுதாயமான 'முஸ்லிம்உம்மா' விடம் சிறுபான்மை உதவி அறக்கட்டளை, ஓர் வேண்டுகோள் மடலை சமர்ப்பிக்கின்றது.

புனிதமிகு ரமலான் மாதத்திஜல் நாம் இருக்கின்றோம். படைத்த இரப்புல் ஆலமீன் திருப்பொருத்தத்தை மட்டுமே வாழ்வியல் குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய பயிற்சியைத்தான் இந்த ரமலான் மாத நோன்புகள் நமக்கு படிப்பினையை தருகின்றன.. இப்புனித ரமலானில் வசதிவாய்ப்பற்றோர்களுக்கும் வறியவர்களுக்கும் தங்கள் செல்வங்களை வாரி வழங்கி தங்கள் 'ஆன்மாவை' தூய்மைப்படுத்திட தலைப்படுவார்கள் செல்வச் சீமான்கள்.

அங்ஙனம் இவ்வருடத்து ஜக்காத்துகளை யாருக்கு வழங்கிடவேண்டும். தற்போதைய சூழலில் உதவிப்பெறக்கூடிய தகுதிவாய்ந்தவர்கள் யார்? என இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடித்து வாழும் உண்மை முஸ்லிம்கள் உண்மையாக சிந்திப்பார்கள். அத்தகைய தூய உள்ளம் கொண்ட செல்வச் சீமான்களுக்கு மத்தியல் சிறுபான்மை உதவி அறக்கட்டளை - கோவை இக்கருத்தை முன் வைத்துள்ளது. இதை படித்து நல்லதோர் முடிவிற்கு வந்திடவேண்டும் என கோரிய வண்ணம் துவங்குகிறோம்.

உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்பிரயாணிகள், யாசிக்கிறவர்கள், அடிமைகளை விடுவிக்க என ஆறு வகையினருக்கு மட்டுமே! தங்கள் செல்வத்திற்குரிய ஜக்காத்தினை கொடுத்து உதவிட வேண்டுமென அல்லாஹ் சுபஹானுத்தஆலா தன் திருமறைக்குர்ஆனில் 2-177 வசனத்தில் கூறியுள்ளான். அல்லாஹ் (ஜல்) கூறிய இந்த ஆறு வகையினரில் அடிமைகளை விடுவிப்பது தவிர மற்றமுள்ள ஐந்து வகையினருக்கு முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து உதவிகள் தாராளமாக சென்றடைகின்றன. ஆனால் அடிமைகளை விடுவிப்பது என்ற தகுதியிலுள்ளவர்களுக்கு முஸ்லிம் சமுதாயத்திடமிருந்து உரிய உதவிகள் சென்றடைவதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவிக்கிறோம். அதிமுக்கியமாக செயலாற்றிடவேண்டிய இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் கவனக்குறைவாக இருப்பது ஏனோ! என புரியவில்லை விலங்குகள் பூட்டப்பட்டு விலங்கினங்களைப் போல் நடத்தபடுபவர்களையும், போர்காலங்களில் சிக்குண்ட கைதிகள் மட்டுமே! அடிமைகள் தரத்தில் உள்ளவர்களாக கருதுவதாலும், அத்தகைய நிலை தற்போது இல்லை என்பதாலும், அடிமைகள் யாரும் இல்லை என இந்த சிறந்த சமுதாயம் முடிவு செய்துவிட்டதோ?

இஸ்லாமிய சமுதாயத்தின் உயர்வுக்கும், அதன் மேலாண்மைக்கும் அதன் கண்ணியத்திற்காகவும், வேண்டி தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி சிறையினுள் சிக்கியவர்களையும், அநீதியாக கைது செய்யபட்;டவர்களும் - அடிமைத்தரத்தில் வரக்கூடியவர்களே! இத்தகையவர்களை அடிமை சிறைவாழ்விலிருந்து மீட்டிட வேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் சமுதாயத்தின் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். (பர்ளு ஐன்) இப்பணியை ஒவ்வொருவரும் செய்திடவேண்டும் என்பதற்காகத்தான் சிற்சில குற்றங்களுக்கு பரிகாரமாக அடிமைகளை பொருள் கொடுத்து வாங்கி விடுதலை செய்ய வேண்டுமென்ற சட்டம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் சிறைப்பட்ட ஒவ்வொருவரையும் அடிமைதளையிலிருந்து விடுதலையளிக்கும் நோக்குடன் பொருள் உதவிசெய்வது சிறந்ததொரு நன்மையாகும்.

எவரேனும் முஸ்லிமான ஓர் அடிமையை விடுதலை செய்யின் - அவனுடைய ஒவ்வோர் உறுப்பையும் இவருடைய ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றி விடச்செய்வான் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். அறி: அபூஹுரைரா (ரலி) ஆதாரம் புகாரி முஸ்லிம் திர்மிதி'

இத்தகையவர்களுக்கு நிச்சயம் உதவிகள் செய்திட வேண்டும் என அல்லாஹ் ஜல்லஷனுஹுத் தஆலா தன் திருமறைக் குர்ஆனில் குறிப்பிட்டு கூறியுள்ளான்.

பூமியில் நடமாடித் (தம் வாழ்க்கை தேவைகளை நிறைவேற்ற)எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்து கொண்டவர்களுக்குத்தான் உங்களுடைய தான தர்மங்கள் உரியவையாகும். அல் பகரா :273'


மேலும் அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் சிறைபட்டோருக்கும் உணவளிப்பார்கள் (அத்தஹ்ர் -76.8 )

இத்தகைய நன்மையான அதே நேரத்தில் மிகவும் சிரமமான பணியை இவ்வல்லான் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுபான்மை உதவி அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் செய்திட்ட உதவிகளைக் கொண்டு பல வழக்குகளிலிருந்து இவ்வாறாண்டு காலத்தில் 25-க்கும் மேற்பட்டவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்துள்ளது. தற்போது நமது பணிகள் விரிவடைந்துள்ளன தமிழகமெங்கும் நம் அப்பாவி முஸ்லிம் சகோதரர்கள் மீது பல புதிய பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பல சிறைகளில் வாடி வரும் பல சகோதரர்களின் வழக்குகளையும் நாம் கவணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். இப்பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்வதற்கு பொருளாதாரத்தின் அவசியம் மிக மிக இன்றியமையாததாக உள்ளன. இஸ்லாத்தின் பல பணிகளுக்கு உதவிகள் பல தந்துதவுவது போல இப்பணிக்கும் உதவிகள் தந்துதவிட வேண்டும்.

இன்னும் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டுள்ள முஸ்லிம்கள் தமிழக சிறைகளில் அடிமைதளைகளில் கட்டுண்டு கிடக்கிறார்கள். நீண்ட நெடிய சிறைவாழ்வினால் இவர்தம் குடும்பங்கள் முறையாக மூன்று வேளை உணவு உண்பதற்கே திண்டாட்டம் என்கின்ற போது இவர்களால் இவர்களின் குழந்தைகளை எங்ஙனம் படிக்க வைக்க இயலும்! குடும்பங்களை கட்டிக் காக்கவேண்டிய பொறுப்புமிக்க ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் முதிர்கன்னிகளாகிவிட்ட இவர்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள். மூன்றுவேளை உணவிற்கும், படிப்பிற்கும் திண்டாட்டம் என்கிறபோது இவர்களின் வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால் என்னாவது? இங்ஙனம் குடும்ப நிலைகள் ஒரு பக்கம் இப்படியிருக்க அதன் மறுபக்கமோ ஒவ்வொருவரின் மீதும் அடுக்கடுக்காக சுமத்தப்பட்ட வழக்கின் சுமைகள். இவ்வழக்குகளை எதிர்கொள்ள போதிய பொருளாதாரமின்மையால் உரிய முயற்சியினை செய்திட முடியாமல் முடங்கிக் கிடக்கும் அவல நிலை. இவ்வடிமைதளையிலிருந்து இவர்களை விடுத்து இவர்களும் சுதந்திரகாற்றை சுவாசித்திட தங்களின் மகத்தான பங்களிப்பை இப்புனிதமிகு ரமலானில் தந்துதவிடவேண்டும் என மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எத்தனையோ ரமலான்கள் சிறைப்பட்ட நம் சகோதரர்களை கடந்து விட்டன. இந்த வருடத்து ரமலானையும் நமது சகோதரர்கள் சிறையிலேயே சந்தித்துள்ளார்கள். இந்த
ரமலானே இவர்கள் சிறையில் கொண்டாடும் இறுதி ரமலானாக இருக்க நாமனைவரும் துஆ செய்வோமாக.

நாமெல்லாம் நம் முஹல்லாக்களில் ஜமாத்தாக ஒன்றுகூடி நோன்பு பிடிப்பதும், நோன்பு திறப்பதும், குதூகலத்துடன் இரவுத் தொழுகைக்கு கலந்து கொள்வதும் என எத்தனை பூரிப்புடன் ரமலான் நம்மை கடக்கின்றன. பூட்டிய கொட்டறையில் தன்னந்தனியாக நோன்புபிடிப்பதும், திறப்பதும், தனிமையில் இரவு தொழுகை என எட்டாண்டுகளாக சிறைபட்ட சகோதரர்களை விட்டு கடந்துவிட்டன.

காலங்களை நாம் அவ்விடத்தில் இருந்து நாம் அனுபவிக்கும் வேதனையாக உணர்ந்து ஒரு கணம் சிந்தித்தால் அதன் வலியை நாம் உணர முடியும் அப்போதுதான் நம் பிரார்த்தனையும் உண்மையாக இருக்கும் உண்மையாளர்களாவும் இருப்போம். இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நம்மோடு நம் முஹல்லாக்களில் ஒன்று கூடி நோன்பு நோற்று நின்று தொழுது ரமலானை நம்மைப்போல் பூரிப்புடன் கொண்டாடக்கூடிய பராக்கிரமத்தை வல்லான் அல்லாஹ் அருளிடுவானாக என நாமெல்லாம் 'துஆ' அங்கீகரிக்கப்படும் நோன்பு திறக்கும் சற்றுநேரத்திற்கு முன்பு உருக்கமாக 'துஆ' செய்வோமாக!

நம் முஸ்லிம் சமுதாயம் இயக்கங்கள் ரீதியாக அமைப்புகள் ரீதியாக பலவாறு பிரிந்து கிடப்பது போல சிந்தனைகளும், செயல்களும் பிரிந்தே இருக்கின்றன. இத்துரதிர்ஷ்ட நிலையிலிருந்து நம் சமுதாயம் என்று மீளுமோ? அன்றே நமக்கு விடிவுகாலமாகும். இந்த மின்னஞ்சல் மற்றும் பிரசுரத்தை படிக்கக்கூடிய சகோதரர்கள் எந்த இயக்கத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் இயக்க ரீதியாக இச்சிறைப்பட்ட சகோதரர்களை பிரித்து பார்த்திட வேண்டாம். துன்பத்தில் ஆட்பட்ட ஒரு முஸ்லிமிற்கு தேவை உதவிகளே! அவ்வுதவியை நீங்கள் தாராளமாக தந்துதவிடவேண்டும். ஒருமுஸ்லிமை ஆதரவற்றவராக விட்டுவிடுவது நல்ல ஒரு முஸ்லிமின் பண்பல்ல. இத்தகையதொரு சுயநலப்போக்கு சமுதாயத்தில் தோன்றிவிட்டால் அது சமுதாயத்தின் அழிவிற்கு வழிவகுத்திடும். அநீதிக்கெதிராக குரல்கொடுப்பதும், போராடுவதும், உதவிகள் செய்வதும் ஒவ்வோர் முஸ்லிமின் மீதுள்ள தார்மீகப்பொறுப்பாகும்.

நபிமொழி ஒன்றில் இஃது இவ்வாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அநீதிகளுக்கு ஆட்படுகின்ற ஒருவனுடன் அவன் அந்த அநீதியிலிருந்து விடுபடும்வரை துணை நிற்பவரின் பாதங்கள் சிராத் பாலத்தில் அவன் நடக்கும் போது அல்லாஹ் பலப்படுத்தி வைக்கிறான். (அஸ்பஹானி)


வஸ்ஸலாம்
இப்படிக்கு
சிறுபான்மை உதவி அறக்கட்டளை
தங்கள் சதக்காக்களை அல்லது ஃபித்ராக்களை அல்லது ஜக்காத்துகளை அவை சிறிய தொகையாக இருந்தாலும் தயவு செய்து சிரமம் பாராமல் அனுப்ப வேண்டிய முகவரி :

CHARITABLE TRUST FOR MINORITIES என்ற பெயரில் M.O அல்லது DD அல்லது செக்காகவோ எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.

CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU, KARUMBUKKADAI
COIMBATORE - 641 008
TAMILNADU, INDIA


அத்துடன் தங்களுக்கு இது குறித்து ஏதேனும் தகவல்களோ அல்லது விபரங்களோ தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி :

சகோ. கோவை தங்கப்பா : +91-9443654473
இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

No comments: