Sunday, September 24, 2006

இடஓதுக்கீடு: சமுதாயமே...! தயாராக இரு...!!

கலைஞர் அரசு தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையத்தை ஈராண்டுகள் கால நீட்டிப்பு செய்ததைக் கண்டித்தும், அதில் முஸ்லிம் உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்றும் கூறி சிலர் சலசலப்பை ஏற்படுத்த முயன்று அது தோல்வியில் முடிந்து விட்டது.

இதன்மூலம் சமுதாயம் ஏமாறவில்லை என்பதையும், 'கமிஷன்' பிரமுகரின் துர்பிரச்சாரத்தை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதையும் தமிழ்நாடு புரிந்து கொண்டு விட்டது. தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், ஆணையம் அமைப்பது தேவையில்லை என்றும், அப்படியே அமைத்தாலும் அதில் பெரிய முக்கியத்துவம் இல்லை என்பதையும், ஆணையம் அமைத்திருப்பது கூட ஒரு சம்பிரதாய நடவடிக்கை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

ஆனால் சிலர் திட்டமிட்டே மீண்டும் மீண்டும் குழப்பினார்கள். ஆணையம் அமைத்து அது ஊர், ஊராக ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க ஒரு வருடம் தேவைப்படும் என்றும், அதுவும் ஒரு வருடம் என்பதுகூட குறைந்த கால அளவு என்பதும், இதை ஜெயலலிதா கூறியதாகவும் 'கமிஷன்' பிரமுகர் கூறி வந்தார்.

ஜெயலலிதா அந்த ஆணையத்திற்கு ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் நீதிபதி குமார ராஜரத்தினத்தை தலைவராகப் போட்டிருந்தார். திமுக அரசு வந்ததும் சமூக நீதி சிந்தனையுள்ள நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனனை தலைவராக நியமித்தார். இதற்கான கால அளவை ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடங்களாகவும் நீடித்தார்.

இதையெல்லாம் 'கமிஷன்' பிரமுகர் விமர்சித்தார். நாமோ, இதில் ஒன்றும் பிரச்சி னை இல்லை. இது ஒரு சம்பிரதாய நடவடிக்கை என்றோம்.

இதோ கடந்த 12.09.06 அன்று திமுக அரசு நியமித்த ஆணையம் இரண்டே மாதத்தில் தனது அறிக்கையை சமர்பித்தது. இடஒதுக்கீடு குறித்து ஆணையம் ஆய்வு செய்வதற்கு ஒரு வருடம் ஆகும் என்றும் ஜெயலலிதா கூறியதாக 'கமிஷன்' பிரமுகர் கூறிவந்தார். திமுக அரசு இரண்டு ஆண்டுகளாக நீட்டித் ததையும் கடிந்து கொண்டார்.

ஆணையத்திற்கு ஒரு வருடமும் தேவையில்லை, இரண்டு வருடங்களும் தேவையில்லை! இதோ இரண்டு மாதம் போதும் என ஆணையம் அறிவித்து விட்டது.

இந்த ஆணையம் ஊர் ஊராக அலைந்ததா? புள்ளி விவரங்களை சேகரித்ததா? என்பது தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. அது என்னவெனில், 'தமுமுக கூறி வந்தபடி இது ஒரு சம்பிரதாய நடவடிக்கை' என்பதே!

இந்த சம்பிரதாய நடவடிக்கை இல்லாமலேயே கலைஞர் கருணாநிதி இடஒதுக்கீடு அறிவிக்கும் நிலையில் இருந்தார். அதுவும் அக்டோபர் மாதத்திற்குள் இடஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என சட்ட அமைச்சர் பெரியசாமிக்கு ஆணையிட்டிருந்தார். இந்தக் கால அளவு என்பது தமுமுக கேட்டிருந்த ஆறு மாதங்கள் என்பதையும் இங்கே மறந்துவிடக் கூடாது.

ஆனால் அவர் அறிவித்த பின்னால் காவி வெறியர்கள் யாராவது கோர்ட்டுக்குச் சென்று தடை வாங்கி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்போதும் சிலர் 'கலைஞர் கருணாநிதியின் அஜாக்கிரதையும் கவனக் குறைவும்தான் இதற்குக் காரணம்' என பழிபோடும் வாய்ப்பு உண்டு.

எதற்கு வம்பு என்றுதான் கலைஞர் கருணாநிதி சம்பிரதாய நடவடிக்கையைக் கூட ஒரு ஆதரவாக இருக்கட்டுமே என்று பயன்படுத்தியுள்ளார். இது அவரது ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டு!

அடுத்து 'தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையம்' குறித்து தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டன. நாம் அப்போதே விளக்கினோம். என்னவெனில் 'இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான சிறப்பு ஆணையம் இல்லை! 1993லிருந்து வரும் ஆணையம். அரசுகள் மாற மாற தொடர்ந்து புதுப்பிக்கப்படும்' என்று!

மேலும் இது பல்வேறு பிற்பட்ட மக்களின் பணிகளைக் கவனிக்கும் என்றும் கூறியிருந்தோம். இதையும் சில கிண்டலடித்தார்கள். இப்போது நடந்திருப்பது என்ன?

அந்த ஆணையம் சம்பிரதாய நடவடிக்கை செய்துவிட்டது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மட்டுமே போடப்பட்ட ஆணையமாக இது இருந்திருந்தால், இது அறிக்கையை சமர்பித்து விட்டதும் உடனே கலைக்கப்பட்டிருக்கும்.

உதாரணமாக மும்பையில் பாபர் மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்து போடப்பட்ட நீதிபதி கிருஷ்ணா ஆணையம். அந்த அறிக் கையை சமர்பித்ததும் கலைக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்போது தமிழ்நாடு பிற்பட்டோர் ஆணையம் கலைக்கப்படவில்லையே!

இதிலிருந்தாவது தமுமுக சொன்னதுதான் சரி என்பதை வேறு அமைப்பிலிருக்கும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், ஆணையத்தில் ஒரு முஸ்லிமை போட வேண்டும் என்றார்கள். நாமோ, ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்து முஸ்லிம்கள் நீக்கப்பட்ட பின்னரும் அவரை தூக்கிப் பிடித்துவிட்டு இப்போது சம்பிரதாய நடவடிக்கையாக இருக்கும் ஒரு ஆணையத்தில் ஒரு முஸ்லிமை போட வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களே, ஏன் குழப்பம் செய்கிறீர்கள்? என்றோம்.

இப்போது என்ன குடிமூழ்கிப் போய்விட்டதா? ஒரு முஸ்லிம் இல்லாமலே அறிக்கை, அதுவும் இரண்டே மாதத்தில் தமுமுக கேட்டுக் கொண்டபடி எல்லாம் எளிதாக நடந்து முடிந்து விட்டதே!

எது எப்படியோ! நடந்து முடிந்த நிகழ்வுகள் பொய்களையும், பழி பிரச்சாரங்களையும் தோலுரித்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்துவிட்டது.

எல்லோரும் கேட்டார்கள் 'எப்போது இடஒதுக்கீடு' என்று? நாம் சொன்னோம்: ஒரு ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று!

திண்டுக்கல் திமுக மாநாட்டில் தமுமுக தலைவர் வைத்த கோரிக்கையும் ஆறு மாதம் என்பதுதான்! இதோ... கலைஞர் கருணாநிதியுடன் தமுமுக தலைவர்கள் கடந்த 16.09.2006 அன்று மூன்றாவது சந்திப்பை நடத்தியுள்ளார்கள். பல நல்ல விஷயங்கள் பேசப்பட்டன.

இன்ஷாஅல்லாஹ் சமுதாய மக்களே... நமது இலட்சிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற உள்ளன!


தயாராக இருங்கள்! வெற்றி முழக்கமிட!!

No comments: