Sunday, August 20, 2006

வழிகேடர்கள் மூதறிஞர்களா? ரசிகர் மன்றத்தினரா?

வழிகெட்ட கூட்டங்கள் - ஒரு ஆய்வு
நெல்லை இப்னு கலாம்ரசூல்
தன்னை நபி என்று வாதிட்ட எலிஜா முஹம்மது என்பவர்தான், புகழ்பெற்ற பேச்சளாராகிய "மால்கம் எக்ஸ்" அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்காக தஃவா செய்தார் என்பதும், தன்னை நபி என்று பிரகடனப்படுத்திய குலாம் அஹ்மத் காதியானி, அதற்கு முன்னால் இஸ்லாத்தைப் பற்றி தவறான பிரச்சாரத்திற்கு பதில் கொடுத்தவர்தான் என்பதும் நம்மில் எத்தனைப் அறிந்து வைத்திருக்கிறார்கள்? இதுவெல்லாம் பழைய கதை என்று நினைக்கின்றவர்களுக்கு சமீபத்திய உதாரணங்களையே தரலாம்.

இலங்கையில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற அமைப்பை ஏற்படுத்தி தன்னிடம் பையத் செய்யாதவர் காஃபிர் என்று, ஃபத்வா வெளியிட்ட "உமர் அலி ரியாதி" என்பவர், அதற்கு முன்னால், சவுதியின் தலைநகர் ரியாத்தில் இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபடுத்திக்கொண்ட ஒரு அழைப்பாளர் என்பதும், குர்ஆன் மட்டுமே போதும் என்று சொல்லி வருகின்ற தமிழ்நாட்டு "அஹ்லுல் குர்ஆன்" நபர்களில் பலபேர் முன்னால் தவ்ஹீத் பிரச்சாரகர்கள் என்பதாவது நமக்குத் தெரியுமா?

தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியதும், தரிகெட்டுப்போன எத்தனையோ முன்னால் மார்க்க அறிஞர்கள் வரலாற்றில் பல உண்டு. அவர்களை மக்கள் அடையாளம் கண்டு தூக்கி
எறிந்தாலும் கூட, அத்தகைய வழிகெட்ட அறிஞர்களைச் சுற்றி கடலில் குதிக்கச் சொன்னாலும் அதை அப்படியே செயல்படுத்தக்கூடிய ஒரு கூட்டத்தினர் சூழ்ந்துதான்
இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள். அத்தகைய சிந்திக்கும் திறனற்றவர்கள் சுற்றி இருந்ததால்தான் அறிஞர்கள் கெட்டார்களா? அல்லது இந்த அறிஞர்கள்தான் அவர்களின் மூளையை மழுங்கச் செய்தார்களா? என்பது "கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?" போன்ற சிக்கலான விஷயமாகும்.



சுவர்க்கம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும், "ஷைத்தான்" நமது உள்ளம் கவர்ந்த அறிஞர்களை அவனுக்கு அடிமையாக்கி அதன் மூலம் நம்மை வழிகெடுக்கவும் தயங்கமாட்டான் என்பதும் இத்தகைய வழிகெட்ட அறிஞர்களை சந்திக்கும் நமது சமீபத்திய நிலை உணர்த்துகின்றது.


மார்க்க அடிப்படையில் விளக்கம் சொல்கிறேன் என்ற எண்ணத்தில் தங்கள் அறிவுக்கு என்னவெல்லாம் புலப்படுகிறதோ அதையெல்லாம் மனோ இச்சைக்குத் தக்கவாறு சுய விளக்கங்களைக் கொடுத்து தானும் வழிகெட்டு தன்னைப் பின்பற்றும் கூட்டத்தாரையும் வழிகெடுத்த பல்வேறு கூட்டத்தார்களை வரலாற்று ஒளியில் நம்மால் இனங்கண்டு கொள்ளமுடியும். அவ்வாறு வழி கெட்ட கூட்டத்தவர்கள் எப்படி எங்கு எதனடிப்படையில் தோன்றினார்கள் என்பதைப் பார்ப்போம்.

பொதுவான சில அடிப்படைகள்:-

வழிகெட்ட கூட்டங்கள் 5 வகையினர் ஆவர்.

1. அல் கவாரிஜ்கள் எனப்படும் காரிஜியாக்கள்.
2. ஷியா கூட்டத்தினர்
3. அல் கத்ரிய்யா (விதியை மறுப்போர்)
4. அல் முர்ஜிய்யா
5. அல் ஜஹ்மிய்யா.

இந்த ஐந்து கூட்டத்தார்களிடமும் சில பொதுவான அடிப்படைகள் இருந்தன. அவையாவன

அ) அல்லாஹ்வின் பெயர் தன்மைகளில் வித்தியாசமான சிந்தனைகள் இவர்களிடம் காணப்பட்டன.

ஆ) அல்லாஹ்வுக்குறிய மறைவான ஞானத்தை அவனக்கு மட்டுமே அறியக் கூடிய விஷயங்களில் தலையிட்டு புதிய சர்ச்சைகளைக் கிளப்புதல்.(சுவனம் நரகம் பற்றி மண்ணறை வாழ்க்கை பற்றி விதி போன்ற ஈமானியத் தொடர்புடைய விஷயங்களில் புதிய செய்திகளைத் தந்தனர்.

இ) குர்ஆன் படைக்கப் பட்ட பொருளா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தைகளா? என்று கடுமையாக விவாதித்தனர்.

ஈ) நபித்தோழர்களில் சிலரை ஏற்றுக்கொண்டு பலரைப் புறக்கணித்ததுடன் அவர்களைத் திட்டி விமர்சித்தனர்.

உ) நபிமொழிகளில் ஒரேயொரு அறிவிப்பாளரால் ரிவாயத் செய்யப்படும் "ஆகாத்" என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ்களை முற்றிலும் நிராகரித்து பல்வேறு அறிவிப்பாளர்களைக் கொண்டு ரிவாயத் செய்யப்பட்ட முத்தவாத்திர் என்ற தரத்தில் அமைந்த ஸஹீஹான ஹதீஸ்களையும் தமது நிலைபாட்டுக்கு சாதகமான ஹதீஸ்களை ஏற்பதும் மற்ற ஹதீஸ்களை மறுக்கவும் செய்தனர்.

ஊ) அறிவுக்கு முக்கியத்துவமளித்தல் போன்ற மேற்கூறிய சித்தாந்தங்கள் இவர்களிடம் காணப்பட்டன. குர்ஆனிய வசனங்களுக்கு தாங்கள் அளிக்கக்கூடிய விளக்கங்களே சரியானவை என்பதில் ஒவ்வொரு கூட்டத்தாரும் மிக உறுதியாகயிருந்தனர். மேலும் அறிவுக்கு அதிக முக்கியத்துவமளிப்பது தங்கள் கூட்டத்தைச் சார்ந்த தலைவர்களை அதிகம் நேசித்ததுடன் அவர்களின் தீர்ப்புகள் மார்க்க அங்கீகாரம் பெற்றன. தனிமனித வழிபாடு கொடிகட்டிப் பறந்தது.

வழிகேடர்களின் துவக்கம்:-

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு முக்கிய காரணிகளில் ஒருவன் அப்துல்லாஹ் பின் ஸபா என்பவனாவான். இவன் எமன் தேசத்தைச் சார்ந்த யூதர்களில் ஒருவன். இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வால் குழப்பத்தை உருவாக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் இஸ்லாத்துக்குள் நுழைந்தான். தன்னை அலி(ரலி) அவர்களின் மீது அதிக நேசம் கொண்டது போல் காட்டிக் கொண்டான். நபி மூஸா (அலை) யூஸா பின் நூன் (அலை) அவர்களுக்கு வசிய்யத் செய்தது போல நபி(ஸல்) அவர்கள் அலி(ரலி) அவர்களுக்கு வசிய்யத் செய்தார்கள் எனப் புகழாரம் சூட்டி தன் பிரச்சாரத்தைத் துவங்கினான்.


கூபா பஸ்ரா எகிப்து என இவனின் பிரச்சாரங்கள் பல்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. நபித் தோழர்களும் குலஃபாயே ராஸிதீன்களாகிய கலீஃபாக்கள் அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான்(ரலி) ஆகியோருக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப் பட்டன. எகிப்தில் நடந்த தீவிர பிரச்சாரம் அப்துல்லாஹ் பின் ஸபாவுக்கு அநேக ஆதரவாளர்களைத் திரட்ட உதவியது. இஸ்லாமிய சித்தாந்தங்களை சிதைக்கும் வகையில் இவனின் பிரச்சாரத்தின் நோக்கம் அடிப்படையாய் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். அலி(ரலி) அவர்கள் கடவுளின் அவதாரம். அவர் வானத்தில் இருக்கிறார் எனத் தன் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டான். முஸ்லிம்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி அதன் மோசமான விளைவுகளில் குளிர் காயும் இந்த சதி வழிகேடர்களின் தோற்றத்துக்கு துவக்கமாயிற்று. இனி வழி கெட்ட கூட்டத்தினர் ஒவ்வொருவரைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. கவாரிஜ்கள்

பெரும் பாவம் செய்தவர்கள் காஃபிராகி விட்டார்கள் என இக் கூட்டத்தார் கூறினர். அக்காஃபிர்களுடன் போராடுவதை அவர்களைக் கொல்வதை நியாயப்படுத்தினர். இதற்காக இஸ்லாமிய அரசிலிருந்து வெளியேறினர். ஸஹீஹ் புஹாரியில் இக்கூட்டத்தார் பற்றிய நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இங்கே தருகிறேன்.

நாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, "இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுண்டாகட்டும்! நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்" என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள். இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்... அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்... அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று கூறினார்கள். நான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி - ஸல் - அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.
புஹாரி :3610 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).

கவாரிஜ்கள் குறித்து நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பை கண்டு கொண்ட பின் நபிகளார் கவாரிஜ்களைக் கொல்ல உத்தரவிட்ட செய்தியை கீழ்காணும் நபிமொழி உறுதி செய்வதைப் பாருங்கள்.

கவாரிஜ்களை கொல்ல அனுமதி..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்." என்று கூறினார்கள். புஹாரி :3611 அலி(ரலி).

காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர். எந்த ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றுகிறதோ அந்த ஹதீஸை நிராகரிப்பார்கள். உதாரணமாகக் குறிப்பிடுவதாக இருந்தால் விபச்சாரத்துக்குறிய தண்டனையை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் அருள்மறையில் விபச்சாரியும், விபச்சாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.(24:2)

ஸஹீஹ் புஹாரியில் இடம்பெறும் ஹதீஸ் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

(ஒருமுறை) கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்" என்று கேட்டார். அவரின் எதிரி எழுந்து நின்று, 'உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்ப்பளியுங்கள்" என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக்காட்டி), 'என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரின் மனைவியுடன் விபச்சாரம் செய்துவிட்டான். மக்கள் என்னிடம், 'உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படவேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்ப்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்படவேண்டும்" என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து, 'உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக" என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்கள். (புஹாரி :2696 அபூஹூரைரா (ரலி).


விபச்சாரம் புரிந்தவர் மணமுடிக்காதவராகயிருந்தால் 100 கசையடிகளும் நாடு கடத்தலும் மணமுடித்தவராகயிருந்தால் கல்லெறி (ரஜ்ம்) தண்டனையையும் வழங்கியதை மேற்கூறிய நபி மொழி நமக்குணர்த்துகிறது. இதுபோன்றே திருட்டுக் குற்றத்துக்கு அருள்மறை கூறும் தீர்வைப் பாருங்கள்.

திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டணையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்.(5:38).


ஆனால் நபி மொழி ஒளியில் திருட்டுக் குற்றத்துக்கு தீர்வை நோக்கினால் கால் தீனார் பெறுமதியுள்ள அல்லது அதற்கு அதிகமான அளவுள்ள பொருட்களைத் திருடினால்தான் கையை வெட்ட கட்டளையிடப் பட்டுள்ளது. ஆக திருடப்படும் பொருட்களின் பெறுமதி வரையறை செய்யப் படுகிறது. குர்ஆனைப் பின்பற்றுகிறோம் என்று ஒரு ருபாய் திருடினாலும் கையை வெட்ட வேண்டும் என்பது விபரீத முடிவாகும்.

மேலும் காரிஜியாக்கள் முத்தஸாபிஹாத்தான வசனங்களுக்கு விளக்கங்களை தாம் அறிந்திருப்பதாகப் பிரகடனப் படுத்தினர். சில நபித்தோழர்களை காஃபிர்கள் என ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுத்தனர். அவர்களைக் கொல்வது மார்க்கத்தில் ஆகுமானது எனக் கூறினர். நபித்தோழர்கள் ஷிர்க் வைத்துவிட்டனர் (குர்ஆனுக்கு மாற்றமாக நபிமொழியை நடப்பாக்குவதை ஷிர்க் எனக் கருதினர்.)ஆகவே அவர்களின் நம்பகத் தன்மையும் நீதியடன் நடப்பதும் அவர்களை விட்டு நீங்கி விட்டது என்று கூறி அவர்களால் ரிவாயத் செய்யப்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று வாதிட்டனர். தமது கூட்டத்தார் கூறும் ஏகோபித்த முடிவை (இஜ்மாவு) ஏற்றும்கொண்டனர். தாங்களின் இந்த முடிவுகளுக்கு மார்க்க ஆதாரமாக கீழ் கண்ட அருள் மறை வசனங்களைக் கூறினர்.



எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம். (5:44)



எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே! (5:45)


அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (5:47).


2.ஷியா

இக்கூட்டத்தார் அலி(ரலி) அவர்களின் தலைமைத்துவம் பற்றி குர் ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதாக கூறினர். அலி (ரலி) அவர்களும் அவரைச் சார்ந்த கூட்டத்தினரும் தவறே செய்யாத மாசற்றவர்கள் (மாஸூம்கள்) என்றும் அவர்கள் தவறிழைப்பதில் இருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் என்றும் பிரகடனப் படுத்தினர். அலி (ரலி) அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்று கூறினர். அலி(ரலி) அவர்களுக்கு கடவுள் தன்மையிருப்பதாக கூறினர். மேலும் நபித்தோழர்களைத் திட்டுவது இவர்களின் பழக்கமாகயிருந்தது.

குர்ஆன் பற்றி இவர்களின் நிலை:-

ஷியா கூட்டத்தார் குர்ஆனில் கூடுதல் குறைவு செய்யப் பட்டுள்ளது என நம்பினர். பாத்திமா (ரலி) அவர்களிடமிருந்து வந்த குர்ஆனாகிய "முஸ்அப் பாத்திமா" நம்மிடம் இருக்கும் குர்ஆனைப் போன்று மும்மடங்காகும் எனக் கூறினார்கள். மேலும் குர்ஆன் எப்படி இறங்கியதோ அப்படியே தொகுக்கப்பட்டது எனக் கூறுபவர் பொய்யர் எனப் பிரகடனப் படுத்தினர். குர்ஆனைத் தொகுத்தவர்கள் அலி(ரலி) அவர்களும் தங்கள் கூட்டத்தின் இமாம்களும் ஆவர் எனக் கூறினார்கள்.

ஹதீஸ்களைப் பற்றி ஷியாக்களின் நிலை: -

நபித்தோழர்கள் எப்பொழுது அலி(ரலி) அவர்களை விட்டு, அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாக ஏற்று பைஅத் செய்தனரோ அப்பொழுதே அவர்களின் நம்பகத் தன்மை அவர்களை விட்டும் நீங்கிவிட்டது என்று கூறி அத்தகையவர்கள் அறிவிக்கும் செய்திகளை நம்பக்கூடாது என்றனர். ஓருசில குறிப்பிட்ட நபித்தோழர்கள் மாத்திரம் நம்பகமானவர்கள் என்றனர்.

இஜ்மாவு:-

தங்கள் கூட்டத்தாரின் இமாம்கள் கருத்துக்கு முரண்படாதிருந்தால் மட்டுமே பிற கருத்துக்களை ஏற்பர். ஏனென்றால் அவர்களின் இமாம்கள் தவறிழைப்பதிலிருந்தும் பாதுகாக்கப் பட்டவர்கள் எனக்கூறினர்.

3.கத்ரிய்யாக்கள் (முஹ்த்தஸிலாக்கள்):-

எந்த ஒரு செயலையும் மனிதனே செய்கிறான். ஆகவே அவன் செய்யும் செயல்களில் அல்லாஹ்வுக்கு எந்த தொடர்புமில்லை. மேலும் மனிதனின் வாழ்வில் இனி வரப்போகும் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அல்லாஹ் அறியமாட்டான் என்ற சித்ததாந்தம் இக்கூட்டத்தாரின் அடிப்படைக் கொள்கை. அல்லாஹ் மட்டுமே அறியக் கூடிய மறைவான ஞானத்தில் இக்கூட்டத்தினர் மூக்கை நுழைத்து விதியை மறுத்து ஈமானிய அம்சங்களில் மாற்றுக் கருத்துக்கொண்டனர். குர்ஆன்தான் எங்களின் அடிப்படை ஆதாரம் என்று முழங்கிய இவர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் யார் சொன்னாலும் அதனை முதலில் அறிவு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர். அறிவு மட்டும்தான் சத்தியத்தை அசத்தியத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படை. ஒன்றை அறிவு சரி எனச் சொல்லும் போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் கருத்துக்கள் முரணாகயிருந்தால் அறிவு கூறும் தீர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸின் கருத்துக்கள் மாறுதல் (நாஸிக்) அடைந்துவிடும் என்பது இக்கூட்டத்தாரின் நிலைபாடு.

இவர்கள் பின்பற்றி வந்த ஆதாரங்கள் நான்கு ஆகும். அவை

1.அறிவு

2.குர்ஆன்

3.ஹதீஸ்

4.இஜ்மாவு.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது அல்லது புறக்கணிப்பது எனத் தீர்மானிப்பது அறிவின் அடிப்படையிலேயே என உறுதியாக இருந்தனர். மொத்தத்தில் அறிவே முலதனம் என்றனர். ஹதீஸ்களில் தம் அறிவுக்குச் சரி எனப்படுவதை ஸஹீஹ் என்றும் தம் அறிவுக்கு ஒத்துவராததை லயீஃப் என்றும் கூறும் அளவுகோலைப் பயன்படுத்தினர். சில நபித்தோழர்கள் பாவிகள். வரம்புமீறியவர்கள் தவறிழைத்தவர்கள் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர். பல நபித் தோழர்களால் அறிவிக்கப்படும் முத்தவாத்திரான ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தங்களின் அறிவு ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிராகரித்து விடுவர். அறிவுக்கு ஒத்து வந்தால்தான் ஏற்றுக் கொள்வர். ஓரேயொரு நபித்தோழரைக் கொண்டு அறிவிக்கப்படும் ஆகாது என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ்களை முற்றிலும் நிராகரிக்கும் பழக்கத்தில் இருந்தனர். ஆக அறிவின் அடிப்படையிலேயே ஹதீஸ்களைத் தீர்மானித்தார்கள்.

இஜ்மாவு விஷயத்தில் இக்கூட்டத்தார் ஷியாக்களைப் போலவே தங்களின் இமாம்களின் தீர்வை ஏற்றனர். இமாம்கள் தவறிழைப்பதிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் என நம்பினர். இக்கூட்டத்தாரின் இமாம் "நள்ளாம்" மிகப் பிரசித்திபெற்றவர்.

4. முர்ஜிய்யா

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் இக்கூட்டத்தாரின் நிலை முஹ்த்தஸிலாக்களைப் போன்றிருந்தது. முர்ஜிய்யா என்றால் தாமதப் படுத்துதல் எனப் பொருள். ஒருவர் தவறிழைத்தாலும் ஈமான் அவரை விட்டு நீங்காதிருக்கும் என்று கூறிய இக்கூட்டத்தார் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். அறிவுக்கு முரண்படாதிருந்தால் மட்டுமே குர்ஆன் ஹதீஸ் இஜ்மாவு கியாஸ் ஆகியவற்றை ஏற்பர். அல்லாஹ் மீது ஈமான் கொண்டு விட்டால் போதும் வாயால் கூறி உறுதிப் படுத்த அவசியமில்லை எனக்கூறினர். ஒருவர் ஈமான் கொண்ட பின் எதுசெய்தாலும் அது ஈமானைப் பாதிக்காது. ஏனெனில் காஃபிர் செய்த நல்லறங்களுக்கு எந்தப் பயனுமில்லை. காரணம் ஈமான் கொள்ளாமல் இருந்ததுதான். ஆகவே எவரேனும் ஈமான் கொண்டு விட்டால் தீமை அவரைத் தாக்காது. இக்கூட்டத்தார் அல்லாஹ்வின் பெயர் தன்மைகளில் (அஸ்மாவு வ ஸிஃபாத்)தலையிட்டு சுய விளக்கமளித்தனர். பெரும்பாலான அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களை மறுத்தனர். அவைகளை ஏற்றுவிட்டால் அல்லாஹ்வுக்கு உருவம் வந்து விடும் எனக்கூறினர். சுவனம் நரகம் நாம் அதில் நுழைந்ததும் அழிந்து விடும் என்றனர். குர்ஆன் படைக்கப் பட்டது என்று உறுதியாக நம்பினர்.

5.ஜஹ்மிய்யா

ஜஹ்ம் என்பவரின் கூட்டம். முஹ்த்தஸிலாக்கள் போன்று அறிவை முற்படுத்துவது இவர்களின் அடிப்படை. அறிவுக்கு வரையறை உள்ளது. அவ்வரையறைக்குள் குர்ஆனும் ஹதீஸூம் வரவேண்டும். அவ்வாறு வந்தால்தான் குர்ஆன் ஹதீஸை ஏற்போம். இல்லை என்றால் மறுப்போம் என்றனர். இஜ்மாவு கியாஸை இவர்கள் ஏற்பதில்லை. அஹ்லுல் சுன்னத்தை இவர்கள் காஃபிர்கள் எனக்கூறினர். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களை மறுப்பது குர்ஆன் படைக்கப் பட்டது என வாதிடுதல் மனிதன் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் நிர்ப்பந்திக்கப் பட்டே செய்கிறான். ஆகவே அவனைக் குற்றம் பிடிக்கலாகாது போன்ற விசித்திரமான கொள்கைகளைப் பிரகடனப் படுத்தினர். குஃப்ர் ஈமானுக்கு வித்தியாசம் அல்லாஹ்வை அறிவதுதான். எவர் அல்லாஹ்வை அறிந்தாரோ அவர் ஈமான் கொண்டவர். அல்லாஹ்வை அறியாதவர் குஃப்ரில் இருக்கிறார் என்று கூறினர். சுவனம் நரகம் அழியக்கூடியது என்று நம்பினர். மொத்தத்தில் முர்ஜியாக்கள் கொள்கைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றினர். மேலும் அல்லாஹ்வுக்கு எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அது நடந்து முடிந்தபின்னர்தான் அவனுக்குத் தெரியும் எனக்கூறினர்.

எங்கிருந்து இக்கூட்டங்கள் தோன்றின? பின்னணி யார்?

அப்துல்லாஹ் பின் ஸபா என்ற எமன் நாட்டு யூதன் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வந்தான் என்ற செய்தியை முன்பே கண்டோம். காரிஜிய்யா ஷியா சிந்தனைக்கு அடிப்படை எண்ணத்தை விதைத்தவன் இவன்தான். யூத சதி திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தில் திணிக்க முழு முயற்சியும் செய்தவன். மதினா கூபா சிரியா எகிப்து போன்ற இடங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்தான். எகிப்தில் இவனுக்கு சிறந்த ஆதரவு கிட்டியது. காரிஜிய்யா ஷியா கூட்டத்தாரின் பிள்ளணி யூதர்கள்.

கத்ரிய்யாக் கூட்டத்தை உருவாக்கியவன் மஹ்பத் அல் ஜூஹ்னி என்பவனாவான். ஈராக்கில் ஸூஸன் என்ற கிறிஸ்தவன் இஸ்லாத்தை தழுவி பின்னர் இஸ்லாத்தை விட்டு முர்த்தத் ஆகிச் சென்றான். இவனின் போதனைகளைத்தான் மஹ்பத் கத்ரிய்யாக்களின் சித்தாந்தமாகப் போதித்தான். விதி பற்றிய சர்ச்சையை முதலில் கிளப்பியது மஹ்பத் அல் ஜூஹ்னிதான். மார்க்க மேதை ஹஸன் பஸ்ரி (ரஹ்)அவர்கள் மஹ்பத்தின் சபைக்குச் செல்ல மக்களுக்குத் தடைவிதித்திருந்தார்கள். இறுதியில் மஹ்பத் கொலை செய்யப்பட்டு மடிந்தான். கத்ரிய்யாக் கூட்டத்தின் பின்னணி கிறிஸ்தவர்கள்.

முஹ்த்தஸிலாக் கூட்டத்தை உருவாக்கியவன் கீலான் பின் முஸ்லிம் என்பவனாவான். இவன் மஹ்பத்திடமிருந்து செய்திகளைப் பெற்றான். முதலில் மதினாவில் தீவிரப் பிரச்சாரம் செய்தான். அங்கு எதிர்ப்பு வலுக்கவே அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். இவன் போதனைகளில் 5 அடிப்படைத் திட்டங்கள் இடம்பெற்றன. அவையாவன:

தவ்ஹீத் நீதம் இருநிலைகளுக்கு இடைப்பட்ட மத்திய நிலை எச்சரிக்கையாய் இருத்தலும் வாக்குறுதி மீறாமையும் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல். கலீஃபா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்)அவர்கள் கீலானைத் திருந்துமாறு அழைப்பு விடுத்தார்கள். இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் இவனுக்கு சிரச்சேதம் செய்யும் தண்டனையை (மார்க்க தீர்ப்பு) வழங்கினார்கள். முஹ்த்தஸிலாக் கூட்டத்தாரின் மிகச் சிறந்த இமாமாக இருந்தவர் நள்ளாம் என்பவராவார். இவர் இளமையிலேயே இணைவைப்போருடன் இணைந்து வாழ்ந்தவர். அறிவுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை எனத் தீவிரப் பிரச்சாரம் செய்தவர். இந்துமதத்தைச் சார்ந்த சமண சித்தாந்தத்தைப் பின்பற்றியவர். இருளும் ஒளியும் அழியாது. நமக்கு இரு கடவுள்கள் தேவை என்னும் நூதன கருத்தைக் கூறி இஸ்லாத்தின் ஏகத்துவ சித்தாந்தத்துக்கு வேட்டு வைத்தவர். இக்கூட்டத்தாரின் பின்னணி கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தவர்களாகயிருந்தது.

முர்ஜிய்யாக்கூட்டத்தை உருவாக்கியவன் அப்துல்லாஹ் பின் கிலாஃப் என்வனாவான். இவன் கீலான் பின் முஸ்லிமின் மாணவன். பஸ்ராவில் வாழ்ந்துவந்தான். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். பின்னர் தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறினான். பிஷர் அல் முர்ஜஸியா என்ற மற்றொரு தலைவன் இருந்தான். இவனை இக்கூட்டத்தார் அறிவின் தந்தை எனப் போற்றினர். குர்ஆன் படைக்கப் பட்டதா? என்ற சர்ச்சையை முதலில் துவக்கியவன் இவன்தான். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களில் (தன்மைகளில்) தன் இஷ்டத்துக்கு விளக்கங்களைக் கூறினான். இவனின் தந்தை கூபாவில் வாழ்ந்த ஒரு பெயிண்டர். யூத மதத்தைச் சார்ந்தவர். எனவே முர்ஜியாக்கூட்டத்தின் பின்னணி யூத கிறிஸ்தவர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்தது.

ஜஹ்மியாக் கூட்டத்தை உருவாக்கிய ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் மிகச் சிறந்த நாவலர். சிறந்த பேச்சுத் திறமையுடன் விவாதம் புரிவதில் வல்லமை பெற்றருந்தார். ஸிந்திக்கள் - என்ற பிரிவு இவர்களிடம் இருந்தது. இவர்கள் சில ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி அதில் குளிர் காய்ந்தனர். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தின் போது பிலால் (ரலி) அவர்களை சுப்ஹூ தொழுகையில் எழுப்புமாறு கூறிவிட்டு உறங்கியது. பிலால்(ரலி) அவர்களும் உறங்கிப் போனதால் அன்றைய சுப்ஹூத் தொழுகையை சூரிய உதயத்துக்குப் பின் தொழுதது. இதனை ஆதாரமாகக் காட்டி சுப்ஹூத் தொழுகையை பிந்தித் தொழுவதில் குற்றமில்லை என வாதிட்டனர். மேலும் அல்லாஹ்தான் நம்மை உறங்க வைத்தான். எனவே குற்றம் பிடிக்க மாட்டான் என்றனர். ஸலம் இப்னு அஹ்வஸ் என்பவர் ஜஹ்ம் இப்னு ஸஃப்வானைக் கொன்று விட்டார்.

இவரின் மறைவுக்குப் பின்னர் ஹிஜ்ரி 128ல் மற்றொரு தலைவர் தோன்றினார். அவர் ஜஹத் பின் திர்ஹம் ஆவார். குராஸானில் வாழ்ந்து வந்தார். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் பற்றி நூதன ஆராய்ச்சிகள் செய்து மிகுந்த வர்ணனைகளுடன் நூதனமான கருத்துக்களைக் கூறினார். அருள்மறையில் அல்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களை தோழராக்கிக் கொண்டான் எனக் கூறுவதை அல்லாஹ்வுக்கு மனிதன் போல் நண்பனா? என்ற கேள்வியைத் தொடுத்தார்.


ஜஹ்மியாக் கூட்டத்தலைவர்களின் வருகை கீழ் கண்டவாறு உள்ளது.

ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் -ஜஹ்த் பின் திர்ஹம் - பயான் பின் ஸம்ஆன் - தாலூத் (லபீத் பின் ஆஸமின் சகோதரி மகன். லபீத் - நபி(ஸல்) அவர்களுக்கு சூன்யம் செய்த யூத கொடியவன்.) லபீத் பின் ஆஸம் - எமன் தேசத்து யூதர்களிடமிருந்து திட்டங்களைப் பெற்றவன். ஜஹ்மிய்யாக்களின் பின்னணி யூதர்களின் தொடர்புடையதாக இருந்தது.

நாம் இதுவரை பார்த்தது குறிப்பிட்ட 5 கூட்டத்தாரை பற்றிய செய்திகளைத்தான். ஆனால் வரலாற்று ஒளியில் இஸ்லாத்தைத் தகர்க்கும் எண்ணத்துடன் தோன்றிய இன்னும் சில கூட்டங்களும் கால வெள்ளோட்டத்தில் அவை காணாமல் கரைந்து போன கூட்டங்களும் உள்ளன. குர்ஆன் ஹதீஸைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை இக்கூட்டத்தார் பரப்பி வந்தனர். இவர்களின் பின்னணி யூத கிறிஸ்தவ இணைவைக்கும் இந்துக்களின் சதியாக இருந்ததை மேலே பார்த்தோம். இக்கூட்டத்தாரின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் குர்ஆனிய வசனங்களுக்கு தங்கள் கூட்டத்தார் தரும் விளக்கங்கள்தான் சரியானவை என்று உறுதியாக நம்பினர். உதாரணமாக அருள்மறையில் இடம்பெறும் 55:19 22 (ஸூரா அர்ரஹ்மான் வசன எண் 19 மற்றும் 22) வசனங்களுக்கு அறிவியல் உண்மைகள் பொதிந்த உண்மையான விளக்கத்தை விட்டுத் தள்ளி தம் கூட்டத்தைச் சார்ந்தோரின் விளக்கங்களைப் பின்பற்றும் ஷியா கூட்டத்தாரைக் குறிப்பிடலாம்.

55:19 மற்றும் 55:22 வசனங்களின் நேரடிப் பொருள் இதோ:

55:19 அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.

55:22 அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.

ஷியாக்களின் விளக்கமாவது:

அலி(ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகியோர் இரு கடல்கள்.(55:19)

அவர்களிலிருந்து ஹஸனும் ஹூஸைனும் தோன்றினர்.(55:22).

இவ்வாறு தங்கள் சுய விளக்கங்களை மார்க்கத்தின் பெயரால் அருள்மறைக்கு விளக்கம் என்று ஒவ்வொரு கூட்டத்தாரும் சரி கண்டார்கள். மக்களை நேர்வழியிலிருந்து பிறழச்செய்து வழிகேட்டின்பால் கொண்டு செல்லக்கூடிய கொடூரமான கோரச் சிந்தனைகளை மார்க்கத்தில் குர்ஆன் ஹதீஸ் என்ற போர்வையிலேயே புகுத்தினர். இக்கூட்டத்தாரின் வருகையை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்யாமல் இருக்கவில்லை. கீழ் காணும் நபி மொழி நம்மை எச்சரிப்பதை சற்று கவனியுங்கள்.

இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகும், காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமைநாள் வராது. மேலும், உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமைநாள் வராது. அப்போது செல்வந்தன் தன்னுடைய தர்மத்தை ஏற்பவர் யாரேனும் கிடைக்கமாட்டாரா? என்று கவலைப்படுவான். அவன் அதை எடுத்து ஒருவருக்குக் கொடுக்கமுனையும்போது, இது தமக்குத் தேவையில்லை என்று அவர் சொல்லி விடுவார். மேலும், மக்கள் கட்டடங்களை (போட்டி போட்டுக்கொண்டு) உயரமாகக் கட்டாத வரை மறுமை நாள் வராது. மேலும், ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் மண்ணறையைக் கடந்துசெல்லும்போது, 'அந்தோ! நான் இவனுடைய இடத்தில் (மண்ணறைக்குள்) இருக்கக் கூடாதா?' என்று (ஏக்கத்துடன்) கூறாத வரை மறுமை நாள் வராது. சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமைநாள் வராது. அவ்வாறு உதயமாகும்போது அதைக்காணும் மக்கள் அனைவரும் இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், அதற்கு முன்பே இறைநம்பிக்கை கொள்ளாத, அல்லது இறை நம்பிக்கை கொண்டும் (அதை மெய்ப்பிக்கும் வகையில்) நற்செயல் எதுவும் புரியாத எந்த மனிதனும் அப்போது நம்பிக்கை கொள்வது அவனுக்குப் பயனளிக்காத நேரமாக அது இருக்கும். இரண்டு பேர் தங்களுக்கு முன்னே தங்கள் துணிகளை (வியாபாரத்திற்காக) விரித்து வைப்பார்கள்.

அந்தத் துணியை வியாபாரம் செய்திருக்கவும் மாட்டார்கள். அதைச் சுருட்டி வைத்திருக்கவும் மாட்டார்கள். அதற்குள் மறுமை நாள் வந்து விடும். ஒருவர் தம் ஒட்டகத்தின் பாலைக் (கறந்து எடுத்துக்) கொண்டு அப்போதுதான் திரும்பியிருப்பார்; அதை அவர் அருந்தியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஒருவர் தம் தடாகத்தை அப்போதுதான் செப்பனிட்டிருப்பார்; அதிலிருந்து அவர் (தம் கால்நடைகளுக்கு) நீர் புகட்டியிருக்கவுமாட்டார். அதற்குள் மறுமை நாள் வந்துவிடும். ஓருவர் தமது உணவைத் தம் வாயருகே கொண்டு சென்றிருப்பார்; ஆனால், இன்னும் அதைச் சாப்பிட்டிருக்கமாட்டார்; அதற்குள் மறுமைநாள் வந்துவிடும். (அந்த அளவுக்குத் திடீரென உலக அழிவுநாள் ஏற்படும்) என்று நபி(ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் புஹாரியில் 7121 வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கல்வி உயர்த்தப்பட்டு அறியாமை தலைவிரித்தாடுவது தானும் வழிகெட்டுத் தன்னைப் பின்பற்றுவோரையும் வழிகெடுப்பது அறியாமையில் உழலும் மார்க்க அறிவு இல்லாதவர்கள் மக்களிடையே மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றவர்களாகுதல் ஆகியவையும் மறுமை நாளின் அடையாளங்களே. ஓவ்வொரு கால கட்டத்திலும் இஸ்லாம் இது போன்ற இடுக்கண்களைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே தன்னை நபி எனப் பிரகடனப்படுத்திய முஸைலிமாவிலிருந்து காதியானிகள் வரை ஏகப்பட்ட பொய்யர்களின் சூழ்ச்சி வலை இஸ்லாத்துக்கு எதிராகப் பின்னப்பட்டது. இஸ்லாத்தைக் குறை கூறும் குறைமதியாளர்களாகிய ஸல்மான் ருஸ்தி, தஸ்லீமா நஸ்ரீன் போன்ற புல்லுருவிகளும் புனித இஸ்லாத்தைக் களங்கப் படுத்த எடுக்காத முயற்சிகள் இல்லை. இப்படி எல்லா கால கட்டத்திலும் இஸ்லாம் மீது வீசப் பட்ட அவதூறு ஏவகணைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முறியடித்து சத்தியத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதை வரலாறு நமக்குணர்த்துகின்றது.

வழிகெட்ட கூட்டங்களின் நிலை முற்றுப் பெறாது தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அவர்களின் கூற்றுகளில் வேண்டுமானால் சற்று மாறுதல் இருக்கலாம்.
ஆனால் குறிக்கோள் இஸ்லாத்தை தகர்க்க வேண்டும் என்பதுதான். இது போன்ற முயற்சிகளை முஸ்லிம் பெயர் தாங்கிய எவர் செய்தாலும் அவரை அறிவுஜீவி சிறந்த சிந்தனையாளர் எழுத்தாளர் நாவலர் நாணயமிக்கவர் பொதுநலசமூகச் சீர்திருத்த வாதி நல்லவர் வல்லவர்
என்றெல்லாம் புகழாரம் சூட்டி ஆலவட்டம் சுழற்ற யூத கிறிஸ்தவ இந்துத்வா சக்திகள் தயாராகிவிடுகின்றன.


முப்ததியாக்கள் என்றால் யார்?

மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நன்மை பயக்கும் என்றெண்ணி அல்லாஹ்வும் அவன் திருத் தூதரும் காட்டித்தராத அங்கீகரிக்காத ஒரு செயலைப் புதிதாகப் புகுத்துவதை பித்அத் - நூதன அனுஷ்டானம் எனக்கூறுவர். இவ்வாறு மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்படும் பித்அத்துகள் பற்றி குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பார்ப்போம்.

(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.(3:31)

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (6:153)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (4:59)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எவரொருவர் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றைப் புதிதாகப் புகுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதாகும். (புஹாரி முஸ்லிம் : ஆயிஷா(ரலி) ) முஸ்லிமில் இடம்பெறும் மற்றொரு அறிவிப்பில் எந்தக் காரியத்தை நான் உத்தரவிடாது செய்யப்பட்டாலும் அதை யார் செய்தாலும் நிராகரிக்கப் பட வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். பாதைகளில்மிகச் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். நிச்சயமாக மார்க்கத்தில் மிகக் கெட்டது பித்அத் எனும் நூதன அனுஷ்டானமாகும் (மார்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டது). எல்லா பித்அத்துகளும் வழகேடாகும்.வழிகேடுகள் நரகுக்கு இட்டுச் செல்லும். நூல்: முஸ்லிம் - ஜாபிர்(ரலி)

"யார் புதிதாக (மார்க்கத்தில் இல்லாத செயல்) ஒன்றை உருவாக்குகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்கள் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ்(ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றோர் அறிவிப்பில், 'அல்லது புதியவற்றைப் புகுத்துபவனுக்குப் புகலிடம் அளிக்கிறவன் மீது" என்று வந்துள்ளது. (புஹாரி:7306)

மார்க்கத்தில் வணக்க வழிபாடுகளில் நூதன அனுஷ்டானங்கள் புகுத்தப்பட்டிருப்பதை நாம் நன்கறிவோம். நபிகளாரைப் புகழும் மௌலூதுகளில் இருந்து அவ்லியாக்கள் அருள்நாடி பாடப் படும் புகழ்மாலைகள் மீலாது விழாக்கள் ஊர்வல கோஷங்கள் கத்தம்
ஃபாத்திஹா கந்தூரி உருஸ் தர்கா தரீக்கா தாயத்து போன்ற தகிடுதத்தங்கள் போன்ற பித்அத்துகள் ஏராளம் ஏராளம். வணக்க வழிபாட்டில் புகுத்தப் பட்ட இவ்வகை பித்அத்துக்களை மட்டும்தான் நாம் அடையாளம் கண்டு வைத்திருக்கிறோம். இதனை பித் அத்துல் இபாதா எனக்கூறுவர். இதைவிட மிகக் கொடூரமான இன்னொரு பித்அத் இருக்கிறது. அதனை மக்கள் மிக இலேசாக எடுத்துக்கொள்கிறார்கள். அதுதான் கொள்கை அடிப்படையில் செய்யப்படுகிற பித்அத்.

ஈமானிய உறுதியை வேரறுக்க கூடிய இந்த வகை பித்அத் பற்றி நாம் குறைவாகவே அறிந்திருப்போம். இவ்வகை பித்அத்துகளை பித்அத்துல் யஹ்திகாத் என்றழைப்பார்கள். மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸின் பிரகாரம் எல்லா பித்அத்துகளும் வழிகேடாகும். வழிகேடுகள் நரகில் கொண்டு சேர்க்கும். மேலும் பித்அத்துக்களைப் புகுத்துவோர் மற்றும் அவ்வாறு புகுத்துவோர்க்கு புகலிடம் அளிப்போர் ஆகியோர் மீது அல்லாஹ்வின் சாபம் மலக்குகளின் சாபம் மற்றும் மனிதர்களின் சாபம் நிச்சயமாக உள்ளது என்பதனை ஸஹீஹான ஹதீஸ்களின் ஒளியில் கண்டோம். ஆக வணக்க வழிபாடுகள் அல்லது கொள்கையடிப்படையில் செய்யப்படும் இது போன்ற பித்அத்துக்களை செய்யும் கூட்டத்தாரை முப்ததியாக்கள் (பித்அத்வாதிகள்) என்றழைப்பர்.


இபாதத் விஷயத்தில் செய்யப்படும் பித்அத்களை கண்டிக்கும் பலர், இதுபோன்ற கொள்கை பித்அத்களில் விழுந்துக் கிடக்கிறார்கள். வழிகெட்ட கூட்டத்தினரைப் பற்றிய ஞானம் இல்லாததும் இதற்கு மற்றொரு காரணமாகும். ஆகவே போலிகளை இனம் கண்டு நாமும் திருந்தி சமுதாயத்திற்கும் எச்சரிப்போமாக!. அத்தகையவர் எப்பேர்ப்பட்ட சேவைகள் செய்தவராக இருந்தாலும், அதன் மூலம் நமது இதயத்தை கொள்ளை கொண்டவராக இருந்தாலும்கூட..



உங்களில் ஒருவர் - நான் அவர்பால் அவருடைய பிள்ளை, அவருடைய பெற்றோர் மற்றும் மனிதர்கள் அனைவரையும் விடவும் பிரியமானவராக ஆகாத வரை, ஈமான் கொண்டவராக ஆகமாட்டார் என் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லிம்)


இன்று நமது தலைவரின் சொல்லும் செயலும் வேறொன்றாக இருந்தாலும், பிரிவினைகளை தோற்றுவித்தாலும், பிரச்னைகளுக்கு மூலகாரணமாக இருந்தாலும், இஸ்லாத்தின் அடிப்படையான ஜகாத்தில் உலகத்தில் யாருமே சொல்லாத கருத்தை நுழைத்தாலும், நபித்தோழர்களை கேவலமாக விமர்சித்தாலும் - குறிப்பிட்ட மார்க்க அறிஞரின் அழகான பேச்சு, சேவைகள் போன்றவற்றை ஒப்பிடும்போது "இதுவெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று நமது உள்ளம் சொல்கிறதென்றால் நமது ஈமானின் நிலையை எண்ணி வெட்கப்படாமல் இருக்க முடியாது.

அல்லாஹ் இறக்கி வைத்த வேதத்தையும், தூதர் காட்டி தந்ததையும் நேசம் கொள்வதைக் காட்டிலும், மார்க்க அறிஞர்களை நேசிக்கிறோம் என்றால், நாம் அந்த மார்க்க அறிஞரை தெய்வமாக எடுத்துக்கொண்டதாகத்தான் ஆகும் என்பதை பின்வரும் நபிமொழி விளக்குகிறது.

அதிய்யி பின் ஹாதிம் - ரலி அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள் (நான் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் அது சமயம், வேதக்காரர்களான) 'அவர்கள் அல்லாஹ்வையன்றி தங்களுடைய பாதிரிமார்களையும், தங்களுடைய சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனார் மஸீஹையும் (தங்கள்) தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர்' (9:31) என்ற பொருளுடைய வசனத்தை நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக் கேட்டு, 'நிச்சயமாக நாங்கள் அவர்களை வணங்குபவர்களாக இருந்ததில்லையே! எனக் கூறினேன் அதற்கு நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் 'அ(ந்தக் குருமார்களான)வர்கள் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒன்றை அவர்கள் ஹராமாக்கி, அதனால் நீங்கள் அதை ஹராமாக்கவில்லையா? மேலும், அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றை அவர்கள் ஹலாலாக்கி, அதனால் நீங்கள் அதை ஹலாலாக்கவில்லையா?' எனக் கேட்டார்கள். ஆம்! என நான் கூறினேன். (ஹலாலாக்குவது மற்றும் ஹராமாக்குவதின் விஷயத்தில் அவர்களை பின்பற்றி நடப்பதான) இதுவே அவர்களை நீங்கள் வணங்குவதாகும் என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மது


நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும்
அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள்.
"எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்" என்றும்
அவர்கள் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக் அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக"(என்பர்).(அல்குர்ஆன்33:66 68)



இது குறித்து மேலும் ஆய்வுக்கட்டுரைகள் படிக்க : www.islamkalvi.com

No comments: