தமிழக முஸ்லிம்களே!!வெட்கப்படுங்கள்,
வேதனைப்படுங்கள், ஒன்றுபடுங்கள்
அஸ்ஸாம் முஸ்லிம்களின் அரசியல் வெற்றியைப் பாருங்கள் !!
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மிக மிக குறைந்த எண்ணிக்கை உடைய சிறுபாண்மையினர். அங்கு சமூக பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பல தீவிரவாத குழுக்கள், நக்ஸல்பாரிகள், உல்பாக்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றன. எங்கே, எது, எப்படி நடந்தாலும் துப்பு அறியும் முன்பு சமூக, பொருளாதார கல்வி இட ஒதுக்கீடு முதலியவற்றில் புறக்கணிக்கப்பட்டு மிகவும் பின் தங்கி அன்றாட வாழ்க்கைத் தேவைக்கே அல்லாடும் முஸ்லிம்கள் மேலே பழி போடப்படும் அதை ஒட்டி கைதுப் படலம் தொடரும் அல்லது பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் தீக்குச்சிகள் கொளுத்திப் போடப்படும். முஸ்லிம் உயிர் உடமைகள் பற்றி எரியும். அஸ்ஸாம் அப்பாவி மக்கள் மண்ணின் மைந்தர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக பங்களாதேஷ் ஊடுருவல்காரர்கள் இங்கு இருந்து விரட்டப்பட வேண்டியவர்கள் என்ற விஷக் கருத்துக்கள் எழுதப்படாத பத்திரிக்கைகளே இல்லை என்று சொல்லலாம். கடந்த பல ஆண்டுகளில் குறிப்பாக மத்தியில் பி.ஜே.பி ஆளும் போது சொந்தம் பந்தம் தாய் தந்தை மகன் மகள் என்று இரத்த உறவுகள் மனித நேயமற்ற முறையில் போலி குற்றச்சாட்டின் பேரில் திட்டமிட்டு பிரிக்கப்பட்டார்கள். ஆம், இந்திய மண்ணின் மைந்தர்கள் பங்களாதேசத்திற்கு அனுப்பப்பட்டார்கள். தந்தை, மனைவி மக்களை பிரிந்து கூடு பிய்த்து எறியப்பட்ட குருவிகளாய் சொந்த பூமியில் இருந்து விரட்டப்பட்டு அந்நிய பூமியில் அகதிகளாக இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கிறார்கள். உறவுகளைத் தேடி அஸ்ஸாம் காட்டுப் பகுதிகளுக்கு வந்தவர்களைக் கூட ஊடுருவல்காரர்கள் என்று துப்பாக்கி குண்டுகளினால் இந்திய ராணுவம் உயிர் பறித்தது.
என் அருமைச் சகோதரர்களே! ஒரு கணம் அந்த நிலையை கொஞ்சம் மணக் கண்ணால் நிறுத்தி நமக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சுதந்திர இந்தியாவில் எதிர்கால கனவுகளுக்கு வடிவம் கொடுக்க தியாக தழும்புகளை சுமந்தவர்கள் நாளும் பொழுதும் குற்ற உணர்ச்சியோடு முஸ்லிம்கள் என்ற காரணத்திற்காக இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் அவல நிலை தொடர்கிறது. தேர்தல் திருவிழாவில் காலம் காலமாக மாறி மாறி ஓட்டளித்து காணாமல் போவார்கள் முஸ்லிம்கள். ஆனால் அஸ்ஸாம் முஸ்லிம்கள் கவிழ்ந்துவிட்ட சமுதாயத்தின் கேடு நீக்க கனன்று கொண்டிருந்த தங்கள் இதயப் பொறுமல்களுக்கு எரிமலை குமுறல்களுக்கு வடிவம் கொடுக்க தூர நோக்கோடும் கடமை உணர்வோடும் முஸ்லிம்கள் தேர்தல் நேரத்தில் விற்பனைக்கு அல்ல என்ற உறுதியோடும் ஒரு சீட்டுக்கும் நோட்டுக்கும் தன்மானத்தை இழக்காமல் அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரான்ட்(Assam United Democratic Front - AUDF) என்ற புதிய அரசியல் கட்சியை 3 மாதத்தில் உருவாக்கி வீடு வீடாக, ஜமாத் ஜமாத்தாக, ஊர் ஊராக ஜூம்மா மேடைகளிலும், பயான்களிலும், அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி 45 நாட்களுக்குள் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தைப் பெற்று, புதிய சின்னத்தையும் பெற்று ஒட்டு மொத்த அரசியல் சார்பற்ற சமூக அமைப்புகளை அரவணைத்து மிக குறுகிய காலத்தில் 10 இடங்களை, எம்.எல்.ஏக்களை பெற்று இந்திய முஸ்லிம் அரசியல் வரலாற்றில் பெரும் சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
முஸ்லிம்களே! வெட்கப்படுங்கள்! வேதனைப்படுங்கள்!! தமிழகத்தில் 60 தொகுதிகளில் வெற்றி பெரும் வாய்ப்பும், 100 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியும் இருந்தும் அரசியலில் இறப்பு வருவதற்கு முன்பே இறந்து விடுகிறீர்கள். ஆம் தேர்தல் அறிவித்துவிட்டால் நீங்கள் தோற்று விடுகிறீர்கள் என்ற வாசகம் எவ்வளவு பெரிய உண்மை. அஸ்ஸாம் முஸ்லிம்கள் பேசுகிறார்கள் - இன்னும் அதிகமான இடங்களைப் பெற்று இருப்போம் கால அவகாசம் மிக மிக குறைவு, அரசியல் விழிப்புணர்வு முழுமையாக செய்ய முடியவில்லை, சில இடங்களில் குறைந்த ஓட்டுகளில் எங்கள் கட்சியினர் தோற்றாலும் வலிமையான பல தேசியக் கட்சிகளின் அரசியல் ஜாம்புவான்களை மண்னைக் கவ்வ வைத்து இருக்கிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் கட்சி அஸ்ஸாம் மட்டுமல்ல இந்திய அரசியலில் ஒரு பெரும் மாற்றத்ததைக் கொண்டு வரும் சக்தியாக விளங்கும் என்கின்றனர். தேசிய அளவில் உள்ள பெரியக் கட்சிகளைக் கூட நாங்கள் இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளோம் என்று பெருமிதம் அடைகின்றனர்.
நாமோ அரசியல் கோழைகளாக பிற கட்சிகளில் சீட்டுக்கு பிச்சை கேட்கிறோம். ஆம், நம் நிலையை உணராததால் அங்குசத்திற்கு அடங்கிப் போகும் யானையைப் போன்ற பரிதாபமான நிலை தொடர்கிறது. ஆகையால் தான் சறுகுகள் காற்றை மிரட்டுகின்றன ஆம், சமுதாயத்தை மிரட்டுகின்றன, சோகங்களையே சமுதாயம் சுமக்கிறது.
அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே! ஒரு சமூகத்தின் நாடித் துடிப்பாக விளங்கும் இளைஞர் கூட்டமே! சமூகத்திற்கு எதிரான நெருக்கடிகள், உயிர், உடமை, பாதுகாப்பற்ற சூழல்கள், சூழ்ச்சிகள், ஆதிக்க சக்திகளின் அத்து மீறல்கள், அநீதிகளை அரங்கேற்றும் அரசு அதிகாரிகளின் ஆணவ போக்குகள், முஸ்லிம்களை குற்றப் பரம்பரையாக்க முயற்சி செய்யும் அவலங்களுக்கு இறுதி விடை கொடுக்க இந்திய மக்கள் பேரவை, இந்திய தேசிய மக்கள் கட்சியாக தாயகத்தில் செயல்பட இருக்கிறது, விருப்பு வெறுப்புக்களை தூரமாக்கி அரசியல் விடியல் பெற தமிழக முஸ்லிம்களை அழைக்கிறது.
அஸ்ஸாம் முஸ்லிம்கள் உங்களுக்கு ஒரு முன்மாதிரி. தமிழக முஸ்லிம்களே! முடிந்தால் முடியாதது ஒன்றும் இல்லை. இரவல் வெளிச்சத்தில் இளைப்பாறுவதைவிட, ஆம் இரவை சபிப்பதை விட இறைவனின் பெயரால் அரசியல் விளக்கேற்றுவோம். வாருங்கள், ஒன்று படுவோம், கடினமாக உழைப்போம், வெற்றி பெறுவோம் என்று இந்திய மக்கள் பேரவை இருகரம் நீட்டி வரவேற்கிறது.
இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்
1 comment:
Post a Comment