Wednesday, July 26, 2006

பத்திரிகை துறையில் நாம்.....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கோவையில் சில முஸ்லிம் சகோதரர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் வெடிகுண்டு சம்பவங்கள் ஏற்பட்ட காலத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதால் ஒட்டு மொத்த மீடியா மற்றும் மக்கள் அனைவரும் இதில் அதிக கவனம் செலுத்தி கண்காணித்து வருகின்றது அனைவரும் அறிந்ததே. எந்த அளவிற்கு என்றால் என்.டி.டிவி நேரிடையாகவே வந்து தனிப்பட்ட நேர்காணலை நடத்தி சென்றிருக்கின்றனர். உண்மையை தெளிவாக வெளியிட்டதாகவும் பலர் வாயிலாக அறிய முடிந்தது.

இந்த நேரத்தில் ஒரு புலனாய்வு இதழுக்குரிய சுறுசுறுப்போடு செயல்பட்ட சகோ. ரைசுத்தீன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முஸ்லிம் இயக்கங்களும், 'பயில்வான்' தலைவர்களும் எங்கே அடுத்த இலக்கு நாங்கள் தானோ என பயந்து ஒரு அறிக்கை கூட வெளியிட முன்வராத நிலையில் இந்த வெளியீடு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியது. எந்த அளவிற்கு என்றால், மனித நீதி பாசைறையின் சகோதரர்களே முழு விபரங்களுக்கு சகோ. ரைசுத்தீன் வெளியீட்டை பாருங்கள் என கூறியதிலிருந்து நம்மால் அறிய முடிந்தது.

காவல்துறையின் கருப்பு ஆடுகள் சில புல்லுருவிகள் துணையோடு அவ்வபோது சில சம்பங்களை நடத்துவது வழக்கம். ஆனால் இன்றோ, ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக ஆக்க முன்வந்துள்ளனர். சிலர் கேட்கலாம், விடியல் காரர்களை தீவிரவாதிகளாக்குவது முழு சமுதாயத்தையும் எப்படி குறிக்கும் என்று? எல்லா இயக்கங்களும், அதன் தலைவர்களும் பயந்து கருத்துக்கள் கூற முன்வராத நிலை நமக்கு குறிப்பால் உணர்த்துவது என்னவென்றால், குறிப்பிட்ட இயக்கத்தவர்கள் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம்களையும் சேர்த்துதான் தீவிரவாதிகள் பட்டம் சூட்டப்படுகிறது என்பது.

கலைஞர் கருணாநிதியைப்பற்றி ஒரு கருத்து உண்டு. அவர் சிறுபான்மைக் காவலன் என்று பெரும்பாலோர் குறிப்பிடுவர். இப்போது அவர் ஆட்சியில் ஏறியதும் செய்த சில செயல்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவானது போன்ற நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதில் குறிப்பாக, இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள், மதானிக்கு மருத்துவ உதவிகள், கோவை வழக்குகளை விரைவு படுத்தியது மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் போன்ற செயல்களை குறிப்பிடலாம். இதை பொறுக்காத காலிகளும் போலி காவிகளும் சேர்ந்து கருணாநிதி அவர்களுக்கு முஸ்லிம்கள் மேல் ஒரு வெறுப்பை உண்டாக்க வேண்டியே இந்த செயல் புனையப்பட்டது என்பது எல்லாருக்கும் புரிகிறது. ஆனால், தமிழ்நாட்டு பத்திரிகைகளுக்கு ஏனோ புரியவில்லை.

ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், கேரள நியூஸ், என்.டி.டிவி நியுஸ் போன்ற மீடியாக்களெல்லாம் தெளிவாக விஷயங்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டு பத்திரிகைகள் குறிப்பாக தினமலர், தினகரன், தமிழ்முரசு, மாலைமலர், தினமணி போன்ற பத்திரிகைகள் செய்திகளை திரித்து வெளியிடுகிறது. மற்ற பத்திரிகைகளை விட தகவல்களை அதிகமாக எடுக்கும் வாய்ப்பும் வசதியும் இவர்களுக்கு இலகுவாக இருந்தாலும் கூட உளவுத்துறையின் கைப்பாவைகளாக மாறி ஒரு சமுதாயத்தையே குற்றவாளிகளாக சித்திரிக்கிறது. இதனால் அவசியமற்ற அச்சம், கலவர அபாயம் மற்ற சகோதர சமுதயாத்தினருக்கு ஏற்பட்டு அதனால் சட்டம் ஒழுங்கு கெடக்கூடிய மோசமான சூழ்நிலையை மறந்தவர்களாக கூலிக்கு மாரடிக்கின்றனர் இந்த தமிழ் பத்திரிகைகள்.

எந்த அளவிற்கு என்றால், தினகரன் எழுதும்போது நெல்லிக்குப்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த குண்டு வெடிப்பிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று. நெல்லிக்குப்பத்தில் நடந்தது ஒரு சிறிய கோஷ்டிமோதல். ஆனால், அங்கேயும் தீவிரவாதிகள் என்று சிலரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சில கத்திகளும், பல சிடிக்களும் பயங்கர ஆயுதங்களாக கைப்பற்றினார்கள், வெடிகுண்டுகள் எதையும் கைப்பற்றவில்லை. அங்கு குண்டு வெடிக்கவும் இல்லை. இது சகோதர சமுதாய மக்களுக்கு தெரியுமா? நிச்சயமாக பெரும்பாலோருக்குத் தெரியாது. இதை சாதகமாக்கி ஆதாயம் தேடுகின்றனர் தினகரன் மற்றும் தமிழ்முரசு. சன் குழுமத்தில் இருந்தா இப்படி என்ற ஒரு ஆச்சரியம் பெரும்பாலோக்கு இருக்கத்தான் செய்கிறது.

தினமலரைப்பற்றி கேட்கவே வேண்டாம். ஏதோ ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இவர்கள் தகர்க்க தயாராகிவிட்டது போன்றும், அன்று இரவே கைது செய்யாவிட்டால் எப்படி உலக வர்த்தக மையம் இடிக்கப்பட்டதோ அதுபோன்ற பெரிய தாக்குதலுக்கு தமிழ்நாடு உள்ளாகியிருக்கும் என்றும் தனது புழுகு வேலையை செய்ய ஆரம்பித்தது. பிடிபட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையே கதை கட்டுவது கொஞ்சம் போல பொட்டாஷ் பவுடர், முக்கால் மீட்டர் ஒயர் மற்றும் 4 எவரெடி பேட்டரி. இதைவைத்து ஒட்டு மொத்த தமிழ்நாட்டை அழிக்க முடியும் என்றால் அந்த வித்தையை அவர்கள்தான் விளக்க வேண்டும். இந்த சிறிய பொருட்களை வைத்து இப்படிப்பட்ட அபாயகரமான செயல்களை செய்ய அறிந்த இவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்து தமிழ்நாட்டை பெரும் அபாயத்திலிருந்து மீட்கவேண்டும். இந்த பயிற்சியை தினமலர் யாருக்கெல்லாம் கொடுத்துள்ளது என்று தனது 'முறைப்படி' விசாரிப்பில் தினமலர் கூட்டத்தை விசாரிக்க வேண்டும். இதற்காக முதல்வர், கவர்னர் மற்றும் அதிகார வர்க்கத்திற்கு கண்டிப்பாக அனைவரும் தெரியப்படுத்த வேண்டும்.

மாலைமலர், தினமுரசு போன்றவைகள் எல்லாம் தினமலர், தினகரன் போன்றவைகள் வாந்தி எடுத்ததை தின்று கொண்டு மீண்டும் வாந்தி எடுக்கிறது. காலை பத்திரிகையின் செய்திகளை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அப்படியே ஈயடிச்சான் காப்பியாக வெளியிடுகிறது. இதற்கு 2ரூபாய் விலைவேறு. கேவலம். இதற்கு பதிலாக மஞ்சள் பத்திரிகைகளாக தன்னை நிறம் மாற்றிக்கொள்ளலாம்.

இப்படி தமிழ்நாட்டின் வெகுஜன நாழிதழ்கள் இப்படி ஒரு இஸ்லாமிய விரோத போக்கை கைப்பிடிப்பது பற்றி இந்நேரத்தில் நாமெல்லாம் கவனமாக கண்காணிக்க வேண்டும். ஒரு சோவோ அல்லது ஒரு குருமூர்த்தியோ எழுதினால் அதன் போக்கு வேறு. இந்துத்துவ சிந்தாந்தத்தில் ஊறிய வெறியர்களை மேலும் வெறியேற்ற மட்டுமே அவர்கள் எழுதுகிறார்கள். இது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், இந்த வெகுஜனப் பத்திரிகைகள் நடுநிலை சமுதாயத்தைதான் அதிகமாக சென்றடைகிறது. இவர்களது இந்த எழுத்துக்கள் நடுநிலை மக்களை இஸ்லாமிய விரோதப் போக்குள்ளவர்களாக மாற்றும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த பத்திரிகளுக்கு ஒவ்வொரு முஸ்லிமும் உடனடியாக தனது கண்டனங்களை தெரியப்படுத்த வேண்டும்.

லட்சகணக்கில் கூடினதை டிவியில் காணிக்கவில்லை, எனவே எல்லாரும் டிவிக்கு போன் பண்ணி திட்டுங்கள் என்ற அறிவுரை வந்தவுடன் வளைகுடா சகோதரர்கள் 300, 400 ரியால் வாங்குபவர்கள் உட்பட சேனல்களுக்கு ஐ.எஸ்.டி போட்டு பேசினதை ஞாபகப்படுத்தி பாருங்கள். இன்று ஒட்டுமொத்த சமுதாயமும் தீவிரவாதி பட்டியலில். இயக்கங்களும், தலைவர்களும் ச்ச்ச்சும்ம்ம்மாhமாhh இருக்கிறார்கள், குற்றஞ்சாட்டப்பட்ட இயக்கத்தவர்களைத் தவிர. இந்நேரத்தில் எல்லாப் பத்திரிகைகள் மற்றும் டிவி சேனல்களுக்கும் நாம் ஒரு கண்டன கடிதம் எழுத வேண்டியது கண்டிப்பானதாகும்.

இல்லையென்றால் வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். காரணம், காவல்துறையில் நுழைந்துள்ள காவி காலிகள் எப்பபாடுபட்டாவது முஸ்லிம் சிறைவாசிகளை வெளியில் விடக்கூடாது என்பதற்காக திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். வழக்கு வேகம் பிடிக்கவும் எங்கே அவர்கள் வெளிவந்து விடுவார்களோ என பயந்து இப்போது ஒட்டு மொத்த சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக்கி பார்க்கின்றனர். இதனால் அந்த வழக்கு பின்தங்கும் நிலை ஏற்படலாம் என நினைக்கின்றனர்.

ரத்தின சபாபதி போன்ற காவி சிந்தனை கொண்டவர்கள்தான் கோவைப்பகுதியில் காவல்துறையிலும், சிறையிலும் அதிகமாக இருக்கின்றனர். இன்னும் கடந்த ஆட்சியில் அங்குள்ள கோர்ட்டுகளில் அரசு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருந்தவர்களும் இப்படிப்பட்டவர்களே. இப்போது ஆட்சி மாறியதும் சூழ்ச்சி செய்கிறார்கள். இவர்கள் வரும் காலங்களில் இன்னும் அதிகமாக செய்வார்களோ என்ற அச்சம் சமுதாய ஆர்வலர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம், சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என ஜெயலலிதா கூறியுள்ளார். எனவே ஜெயலலிதாவிற்கு ஓட்டு போடுவது நம் மீது கடமை என தவ்ஹீத் ஜமாஅத் கூறியது. (இது அவர்களை இழிவு படுத்த இங்கே எழுதவில்லை... எங்கே தவறு நடந்தது என சிந்திக்க வேண்டியது தவ்ஹீது சகோதர்கள், தலைமை, மற்றுள்ளவர்கள் சிந்திக்க வேண்டியே) ஆனால், இன்று மதானிக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளித்தவுடன் ஜெயலலிதா அதை கண்டிக்கிறார். அவரை தீவிரவாதி என்றும் குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளி என்றும் வாய்க்கூசாமல் பொய்ச்சொல்கிறார். தவ்ஹீது ஜமாஅத் சகோதரர்களே சிந்தியுங்கள். இந்த இந்துத்துவ வெறி கொண்ட பெண்மணிக்கா நீங்கள் வாக்கு கேட்டீர்கள், போட்டீர்கள். தவறிழைத்தது யார்? பொய் வாக்கு கொடுத்தது யார்? தவ்ஹீது ஜமாஅத்தா அல்லது ஜெயலலிதாவா?

முதல்வர் கருணாநிதி அரசில் நடக்கும் எல்லா ஆக்கபூர்வமான மற்றும் அல்லாத செயல்கள் அனைத்தையும் ஜெயலலிதாவும், ஜால்ரா எம்.எல்.ஏக்களும் கண்டித்து வருகின்றனர். சிக்குன் குனியா கூட கருணாநிதியால்தான் என்று சொல்லாத குறை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்பாவி இளைஞர்கள் காவல்துறையினரின் சதியால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பி விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று தீவிரவாதிகளாக்கிவிட்டனர். ஜெயலலிதா என்ன செய்திருக்க வேண்டும். காவல்துறையினர் அத்துமீறுகின்றனர். எனது ஆட்சியில் காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டது என குற்றஞ்சாட்டியவர் ஆட்சியில் இன்றைய நிலை என்ன? ஒன்றுமறியா அப்பாவி இளைஞர்கள் தீவிரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டு எதிர்காலம் கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சிறுபான்மை சமுதாயமும் இன்றைய ஆட்சியில் அச்சத்தோடு வாழும் சூழ்நிலை என்று சொல்லியிருந்தால் அது சரியானதாக இருக்கும். ஆளுங்கட்சியை கேள்வி கேட்கும் உருப்படியான எதிர்கட்சி என்று நாமும் நம்பலாம். தவ்ஹீது ஜமாஅத் சகோதரர்கள் சொன்னது போல அம்மாவும் நமக்கு கொஞ்சம் ஆதரவுதான் என நம்பியிருக்கலாம்.

ஆனால், நடந்தது என்ன? கோவையில் ஆர்.டி.எக்ஸ் உடன் தீவிரவாதிகள் கைது? தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. கருணாநிதி அரசு கண்காணிக்க தவறி விட்டது என ஜெயா டிவியில் செய்தி. எங்கே ஆர்.டி.எக்ஸ் பிடிபட்டது. இந்துத்துவ வெறி கொண்ட பத்திரிகைகளே ஆர்.டி.எக்ஸ் பிடிபடாததால் கேஸ் பலக்க வழியில்லை. சின்ன கேஸில் வெளிவந்துவிடுவார்கள் என கூறிக்கொண்டிருக்க, ஜெயா டி.வியோ ஆர்.டி.எக்ஸ் பிடிபட்டது என கூறுகிறது. முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாதிகளாக்குகிறது. தஹ்வீது ஜமாஅத் சகோதரர்களே! உங்கள் தலைமையோடு இதுபற்றி விசாரிப்பீர்களா? நீங்கள் இதுபற்றி விளக்கம் அளிக்க வில்லையென்றால், சகோ.பழைய மாருதம் சொன்னது போல இதில் உங்கள் தலைமைக்கு பங்கு இருப்பது ஊர்ஜிதமாகிவிடும். இதுபற்றிய மேலதிக விபரங்களை பழைய மாருதத்திடமே கேட்போம்.

இந்த நிகழ்வில் இருந்து நமக்கு தெரியவருவது, இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு பத்திரிகைத் துறையில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடமேயாகும். இதை களைய நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

புதிது புதிதாக இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கு பதிலாக, பத்திரிகைத் துறையில் புது மாற்றங்களை ஏற்படுத்திட முன்வர வேண்டும். அதற்கான ஆயத்தங்களுக்கான சரியான தருணமிது. இப்போதே இதற்கு நாம் முன்வரவேண்டும். இல்லாவிட்டால் நமது சமுதாயம் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும்.

சிந்தியுங்கள் சகோதரர்களே...... இது செயல்படுவதற்கான நேரம்.

அன்புடன்
அபு பாத்திமா
(இப்னு பாத்திமா என ஒரு சகோதரர் எழுதுகிறார். அவரை என்னோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்)

No comments: