காவல் துறையில் கருப்பு ஆடுகள்!
தமிழக அரசை கலங்கப் படுத்த சதி!!
வாய்மையே வெல்லட்டும்??
இந்திய தேசத்தின் அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம் தமிழகம். அண்டை மாநிலத்தாரைக் கூட கரம் நீட்டி வரவேற்கும் மாண்பு உடையவர்கள் தமிழர்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சங்க நாதம் உரக்க முழங்கும் பூமி. அண்ணன், தம்பி, மாமன், மச்சான் உறவு பாராட்டி திசை இல்லை, தேசம் இல்லை, எல்லை இல்லை, உறவு எல்லாம் உயிர், மதம், ஜாதி இனம் கடந்து மானுடத்தை நேசித்த மக்கள் வாழும் நாடு தமிழ்நாடு.
சமீபகாலமாக சமூக பொருளாதார அரசியல் பிராந்திய நெருக்கடிகளின் காரணமாக சில நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை முடிச்சுப் போட்டு தமிழக முஸ்லிம்களின் மேல் தீக்குச்சி கொளுத்திப் போடும் சங்பரிவாரத்தின் ஆர்.எஸ்.எஸ் வேலையை காவல்துறையே முன் நின்று கோவையில் அரங்கேற்றி இருக்கிறது. இந்திய மக்கள் பேரவை வண்மையாக கண்டிக்கிறது.
தமிழகம் பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா பிறந்த மண். நெற்றிக் கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என சாற்றிய புலவர்கள் உலவிய மண். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறை அப்பாவி இளைஞர்கள் மீது பழி சுமத்தி முஸ்லிம்களின் மேல் தவறான சித்திரத்தை வரையத் தொடங்கியது வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? சங்பரிவாரத்தின் சர்வாதிகார ஆட்சியா? என்று கேட்கும் நிலை.
சமூக நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்திற்கும், தமிழ் பண்பாட்டிற்கும், திராவிட இன உணர்விற்கும், அரசியல் சட்டத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும், எதிரானவர்கள் சங்பரிவாரத்தினர் என்பது நாடறிந்த அறிவு ஜீவிகளின் ஒருமித்த கருத்து. தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் பொறுப்பேற்றவுடன் நல்ல முற்போக்கு திட்டங்களை அறிவித்தவுடன் (குறிப்பாக எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம், நீண்ட நாட்கள் சிறையில் வாடும் முஸ்லிம்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு, கோவை வழக்கை விசாரிக்க துரிதமாக்கியது) பொறுத்துக் கொள்ள முடியாமல் கவனத்தை திசை திருப்ப சங்பரிவாரத்தினர் துணையுடன் காவல் துறையின் கருப்பு ஆடுகள் தமிழக அரசை கலங்கப்படுத்த செய்யப்பட்ட நாடகம்தான் கோவையில் மீண்டும் வெடிபொருட்கள் என்ற கூப்பாடு. பன்மைச் சமுதாய மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்டு குற்றங்களை கண்டு பிடிக்க வேண்டிய காவல்துறை குற்றங்களை உற்பத்தி செய்யும் துறையாக மாறி இருக்கிறது.
கவிஞர் கண்ணதாசனின் காவல் துறை பற்றிய கருத்தை புறம் தள்ளி விட முடியாது. என் வீட்டு சைக்கிளைக் காணவில்லை, திருடனிடம் இருக்கிறதா? அல்லது போலீஸ்காரனிடம் இருக்கிறதா? என்று தெரியவில்லை என்று நொந்து கேட்டார். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் காவல்துறையின் கருப்பு ஆடுகளாக இருந்தாலும் சரி, அல்லது குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன் நிறுத்தப் பட வேண்டும். உண்மைகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும். தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு இட வேண்டும். காவல்துறையின் கருப்பு ஆடுகள் களையப்பட வேண்டும். பேரறிஞர் அண்ணா பதித்த தமிழக அரசின் வாய்மை நிலைநாட்டப் பட வேண்டும் என இந்திய மக்கள் பேரவை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.
இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்
No comments:
Post a Comment