Friday, July 21, 2006

வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்களே! பொங்கி எழு!!

வஞ்சிக்கப்பட்ட சமுதாயங்களே! பொங்கி எழு!!
புது அரசியல் விடியலை நோக்கி வருக!!


உலகத்தில் தொன்மையும், சிறப்பும், உயர்வும், வீரமும், ஈரமும் கலந்த இனம் தமிழ் இனம்.

சீறி வரும் ஈட்டியைக் கண்டு இமை கொட்டினால் வீரத்திற்கு இழுக்கு என்று பாசுரம் பாடிய திருவிடத்து தீந்தமிழ் வர்க்கமே! ஜா என்ற அட்சரம் கூட தமிழில் இல்லை. எப்படி ஜாதி வந்தது?


சூழ்ச்சியின் சூட்சமத்தை புரியாத காரணத்தினால் வீரம் விளையும் மண்ணின் மைந்தர்கள் பிரிக்கப்பட்டார்கள். ஆம், பள்ளன் என்றும், பறையன் என்றும், சக்கிலியன் என்றும் சாணான் என்றும் ஆதித் தமிழர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். கரங்களை அம்புகளாக்கியும், தோள் புஜத்தை வில்லாகவும் கொண்ட செவ்விந்தியர்கள் எப்படி அழிக்கப்பட்டார்களோ அதைவிட கொடூரமான முறையில் தமிழகத்தில் திராவிடர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

இன்று கூட தலித் கிராமங்கள் சேரிகள் அந்நிய தேசத்தின் அகதிகள் முகாம்களாக இருக்கின்றன. புலி போல வாழ வேண்டிய தமிழர்கள் எலிபோல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

உலகில் எந்த சமுதாயமும் செய்யத் தயங்கும் மனித நேயமற்ற மலம் அள்ளும் வேலையைச் செய்ய பணிக்கப்பட்டார்கள். மனுவும், ஸ்மிருதிகளும், வேதங்களும், புராணங்களும், கட்டுக் கதைகளும் நிரந்தர அடிமையாக்க புனையப்பட்டன. அதில் வெற்றியும் பெற்றனர் சூது மதியினர்.

சிலரோ, சீர்தூக்கி சிந்தித்தார்கள். ஆம், ஆதித் தமிழர்கள் கல்தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய மூத்த குடியின் முற்போக்கு சிந்தனையாளர்கள் தம்மை அடிமைப்படுத்த புனையப்பட்ட பிற்போக்கு கொள்கைகளை காரி உமிழ்ந்து விட்டு சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை வேண்டி கிறித்துவம், சீக்கியம், பௌத்தம், ஜைனம், இஸ்லாம், நாத்திகம் என்று சென்றார்கள். கால ஓட்டம் சில இடைவெளியைத் தந்ததால் தங்கள் முகவரியை மறந்து விட்டு மாற்றுக் கூடாரங்களில் மண்டியிட்டு மந்தைகளாய் நின்று கொண்டிருக்கிறார்கள். சிலரோ, அறியாமை, அறிவுத் தடுமாற்றம் காரணமாக வீரியம் இன்றி விலைபோய்க் கொண்டிருக்கிறார்கள்.

போதும் எங்கள் தோழர்களே! ஆம் எங்கள் முன்னோர்களின் வழித்தோன்றல்களே! புழுதியின் புத்திரர்களே! உழுது உண்ணும் உழைப்பாளிகளே! கடல் கடந்து வியர்வையை விற்று வயிற்று பாட்டிற்கு உழைக்கும் அன்பர்களே! இருட்டுக்கும், திருட்டுக்கும் தலைமை தாங்கும் சந்தர்ப்பவாத அயோக்கியர்களைப் புறம் தள்ளி புது அரசியல் விடியலை பெற இந்திய அரசியல் சட்டத்திற்குட்பட்டு செயல்பட மதம், மொழி, ஜாதிகளை கடந்து தமிழனின் தடந்தோளை தூக்கி நிறுத்திட தமிழர்களை இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) அழைக்கிறது.


இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

No comments: