Saturday, July 01, 2006

ஆத்திரம் அறிவுக்கு பகை !

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்


குண்டடிபட்ட சமுதாயம் குற்றுயிராய் கூவும்போது குண்டு வந்த திசை எது என்று தேடுவது அறிவுடமை அன்று

அன்பார்ந்த இஸ்லாமிய நண்பர்களே! இறைவனையும் மறுமையையும் நம்பும் சகோதரர்களே! பல்வேறு தளங்களில் சமூக மறுமலர்ச்சிக்கு ஓய்வு நேரங்களில் உளப்பூர்வமாய் உழைக்கும் இளைஞர்களே!

பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், நளினம், இவை எல்லாம் நபிகள் (ஸல்) அவர்களின் வெற்றிக்கு அணிகலனாய் மிளிர்ந்தன அன்று. பல்கலைக் கழகங்கள் எல்லாம் படிக்க வேண்டிய பாடமாய் மாநபிகள் (ஸல்) மிளிர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும், ஆஹா இப்படியும் மனிதப் புனிதரா? ஆச்சரியக் குறிகள் விழிப் புருவங்களை கூட வில்லாக வளைக்கின்றன.

அந்த தூதரைப் பின்பற்றும் பாக்கியத்தை பெற்ற நாமோ இங்கிதத்தை இகத்திற்கு கற்றுத் தந்த இறுதி தூதரைப் பின்பற்றக் கூடிய நம்மவர் இங்கிதம் இன்றி கருத்தை கருத்தால் சந்திப்பதை விட்டு விட்டு காரி உமிழ்வது அறிவுடையோர் செய்யும் செயல் அல்ல.

கருத்தை கருத்தால் சந்திக்க துணிவு அற்றவர்கள் கருத்து தோல்வி அடையும் போது வசைமொழியை ஆரம்பிப்பர் என்பது மூத்தோர் முதுமொழி.


சகோதரனே! முட்டாள்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. காரணம் இறை உவப்புக்கு எற்ற செயல் எது என்று சிந்தித்து தரம் பிரித்து செயல்படுபவன் தான் முஸ்லிம்.

பொறுப்பான சமுதாயத்தின் பொறுப்பாளர்களே! எம் சமுதாயத்தின் அங்கமே! பொறுப்பை உணர்ந்து பொறுத்தமான வார்த்தைகளில் விமர்சனம் செய்யுங்கள்.


விமர்சனம் வெற்றிடத்தை ஏற்படுத்துவதில்லை. அதே நேரத்தில் விமர்சனத்தை தாங்குகிற சக்தியையும், தவற்றை ஒப்புக் கொள்கிற உணர்வையும் நாம் பெற்று இருக்க வேண்டும்.


உங்கள் இயக்கம், அமைப்புகள் வெற்றி பெற்றதா? என்று இறைவன் கேட்க மாட்டான். நீங்கள் வெற்றி பெற்றீர்களா? என்றுதான் கேட்பான். ரோம பேரரசு பற்றி எரிகிறபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தானாம். அது போன்று சமுதாயம் குண்டடிபட்டு குற்றுயிராய் கூவும் போது குண்டு வந்த திசை எது என்று ஆராய்வது அறிவுடமை அன்று.

சகோதரர்களே! ஆத்திரம் அறிவுக்கு பகை. சிந்தியுங்கள்! சீர்பெற, அரசியல் விழிப்புணர்வு பெற்று விடியல் புரட்சிக்கு அழைக்கிறது இந்திய மக்கள் பேரவை.


அன்புடன்,
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்.

No comments: