Monday, June 19, 2006

IPF க்கு அருளடியான் சார்பில் பதில்

இந்திய மக்கள் பேரவைக்கு - அருளடியான் சார்பில் பதில்
அன்புள்ள இந்திய மக்கள் பேரவையினருக்கு,

சகோ. அருளடியான் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதில் என்ற தலைப்பிலான உங்களது பதிவைப் பார்த்தேன். வேகம் இருக்கின்ற அளவிற்கு விவேகம் இல்லை என்ற ஒரு வார்த்தையோடு முடித்துக்கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அதை நீங்கள் புரிந்து கொள்வீர்களா எனத் தெரியாததால் கொஞ்சம் கூட விளக்க முயற்சி செய்கிறேன்.

முதலாவதாக, ஏன் அருளடியானுக்கு அனுப்பிய பதிலிற்கு நான் மறுபடி தருகிறேன் என்றால் அவர் வைத்த வாதங்கள் அனைவருக்கும் பொதுவானது. அதே கேள்விகள் எனக்குள்ளும் எழுந்தது உண்மையே. எனவே அவர் சார்பாக நான் பதில் எழுத விழைகிறேன்.

1. இந்திய மக்கள் பேரவை என்னும் புதிய அமைப்பு தொடங்கப்படுவது பற்றி தகவல் வந்தவுடன் அதைப்பற்றி சகோ. அருளடியான் விமர்சிக்க வில்லை. உங்களது வெற்றிக்கான(!!!???) செயல் திட்டங்கள் வந்த பிறகுதான் அதைப்பற்றி விமர்சிக்கிறார் இல்லை இல்லை ஒரு சில கேள்விகளை எழுப்புகிறார். அந்த கேள்விகளைக்கூட கேள்விகள் என புரிந்து கொள்ள முடியாமல் அது விமர்சனம்(?) என நினைத்துக் கொண்டு ஓஓஓஓ என சப்தமிடும் நீங்களோ அல்லது உங்கள் Brain Trust Team(????) எப்படி இந்திய மக்களை வழிநடத்தப்போகிறீர்கள்?

2. இப்படி ஒரு புதிய அமைப்பு வெளியே வருகிறது என்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அபிப்பிராயங்களும், கேள்விகளும், சந்தேகங்களும் எழுவது இயற்கை. அதற்கு உரியவர்கள் பொறுமையுடன் நிதானமாக பதில் சொல்வது அவர்களது கடமை. ஒரு வேளை உங்களது பதில்கள் அல்லது விளக்கங்கள் கேள்விகேட்பவருக்கு சரிவர புரியாமல் போனால் கூட நீங்கள் நிதானமிழக்காமல் மீண்டும் மீண்டும் பதில் அளிக்க வேண்டுமே அல்லாது ஒருநேரமும் நிதானமிழந்துவிடக்கூடாது. காரணம், பொதுவாழ்க்கைக்கு ஒருவர் வர விரும்பினால் அவர் பலவித தியாகங்களுக்கு தன்னை தயார் செய்து கொள்ளவேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எந்த வித விமர்சனங்கள் கேள்விகளையும் எதிர்கொள்ளும் பொறுமையை பெற்றிருக்க வேண்டும். பொதுவாழ்க்கை என்பது ஏஸி ரூமில் இருந்துகொண்டு கீபோர்டில் சட்டதிட்டங்கள் இயற்றுவது போல எளிதானதல்ல.

3. நமது ஊர்களில் திடீரென்று பெட்டிக்கடைகள் ஆங்காங்கே முளைப்பது போல இன்றைக்கு புதிது புதிதாக இஸ்லாமிய இயக்கங்களும் அதைவிட அதிகமாக தலைவர்களும் தோன்றுகின்றனர். எப்படி மழைக்கால காளான்கள் திடீரென்று மறைந்துவிடுமோ அதுபோல இவை - இவர்களும் மறைந்துவிடுகிறார்கள் - கிடைத்த சந்தரப்பத்தில் தேறியதைச் சுருட்டிக்கொண்டு. இப்படியுள்ள சூழ்நிலையில் புதிதாக அதுவும் தமிழக அளவிலான இயக்கங்களே துண்டைக்காணோம் துணியைக்காணோம் என கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கின்ற நேரத்திலே இந்திய அளவில் புதிதாக இயக்கம் தொடங்கும் போது, சமுதாயத்தின் மேல் அக்கரைக் கொண்டவர்கள் ஏன் கேள்விகளை எழுப்ப மாட்டார்கள்?

4. உங்களது சமுதாய முன்னேற்றதிற்காக ஆர்வமும் அதற்கான சிந்தனைகளும் பாராட்டிற்குரியது. அதே நேரத்தில் நீங்கள் எந்த அளவிற்கு இந்த விஷயங்களில் புதியவர்கள் எனத் தெரியவில்லை. காரணம், தமுமுக போன்ற இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் வைத்த சட்டதிட்டங்கள் உங்களது வெற்றிக்கான (!!!???) செயல்திட்டங்களை விட அழகானது, அறிவுபூர்வமானது, ஆரோக்கியமானதும் கூட. (இங்கே தமுமுகவை விமர்சிக்க பெயரை பயன்படுத்தவில்லை. இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே என்பதை தமுமுக-வினர் உணர்வீர்களாக!!!). மட்டுமல்லாமல், அவர்களது சட்டதிட்டங்கள் வெளியிட்டபோது அவர்களது நிர்வாகம் வெளிப்படையானது. அதில் உள்ளவர்களால் அவற்றை செயல்படுத்த முடியும் என மக்கள் நம்பினார்கள். ஆனாலும் இப்போதைய அவர்களது நிலை? ஆனால், நீங்களோ அல்லது உங்களது மூளை இருப்பதாக நம்பும் குழுவினரோ (Brain Trust Team) யார் என்று தெரியாத சூழ்நிலையில் உங்களது சட்டதிட்டங்கள் மட்டும் உங்களது செயல்பாடுகளுக்கான நம்பிக்கை ஆதாரமாகி விடாது. ஏனென்றால் 'சொல்வது யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்'.

5. இலவச இமெயில் அக்கவுண்டும், ஓசி பிளாக்கும் கிடைத்தவுடன் யாருக்கும் வேண்டுமானாலும் கட்டுரைகள் எழுதலாம், கடிதங்கள் அனுப்பலாம், ஏன் புதிதாக இரண்டு அமைப்புகள் கூட ஆரம்பிக்கலாம் - சிட்டிபேங்க், ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்றது மாதிரி. ஆனால், மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கான விளக்கங்களை தெளிவாக கொடுக்க வேண்டும். ஆனால், ஒருவர் கேள்வி கேட்டுவிட்டார் என்பதற்காக அவரை அறியாமையில் இருக்கிறார், இயக்கவாதி என்றெல்லாம் கூறுவது அழகல்ல. ஒரு சிறிய மறுப்பை கூட எதிர்கொள்ள துணிவில்லாத ஒரு கூட்டத்தினர் புதிதாக இயக்கம் ஆரம்பிக்கின்றனர் என்றால் அதைவிட மோசமான சூழ்நிலை நம் சமுதாயத்திற்கு வேறென்னவாக இருக்கும்.

6. உங்களை நீங்கள் வெளிக்காட்ட வேண்டும் என்றோ அல்லது உங்களது பயோ(ய)டேட்டா வேண்டும் என்றெல்லாம் கேள்விகளை நான் கேட்கப்போவது இல்லை. காரணம், கலங்கிய குட்டையில் மீன்பிடிக்க நினைப்பது போல இப்போதைக்கு முஸ்லிம் சமுதாயம் பிளவுபட்டு கிடக்கின்றது என்ற காரணத்தால் தலைமைத்துவத்துக்கு குறிவைத்து நீங்கள் வேட்டையாட நினைப்பது நன்றாகவே தெரிகிறது.

7. தெளிவில்லாத தன்மை, விவேகமில்லா செயல்பாடுகள், குறுகிய சிந்தனை, விமர்சனங்களை எதிர்கொள்ள இயலாத முதிர்ச்சியின்மை இவைஅனைத்திற்கும் ஒட்டுமொத்த சொந்தக்காரர்களான உங்களது பின்னால் சமுதாயம் செல்லக்கூடிய அளவிற்கு இன்னும் கேவலப்பட்டுவிடவில்லை என்றே ஒரு சமுதாய ஆர்வலன் என்ற நிலையில் நான் எண்ணுகிறேன். அப்படிப்பட்ட ஒரு நிலை வந்துவிடக்கூடாது எனவும் பிரார்த்திக்கிறேன்.

8. சமுதாயத்தின் மேல் உண்மையில் அக்கரையிருக்குமேயானால், ஆக்கபூர்வமான நல்ல வழிமுறைகளை சிந்தியுங்கள், செயல்படுத்துங்கள். எரிகிற வீட்டில் பிடுங்கிறது லாபம் என்பது போல சமுதாய மக்களின் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம். அது நல்ல ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.

9. கொஞ்ச நாளேனும் பொதுவாழ்வில் ஒரு கடைநிலை ஊழியனாக நின்று பணிசெய்யும் வாய்ப்பை ஏற்படுத்திகொள்ளுங்கள். பிறகு தெரியும் பொதுவாழ்க்கை என்றால் என்ன என்று. அலுவலகத்தில் கணிணியும், பியூனும் வைத்து வேலை செய்வது போல தலைமைத்துவம் என்பது அவ்வளவு எளிதல்ல.

10. இறுதியாக, யார் தலைமைப் பதவியை விரும்புகிறானோ, அவனுக்கு அதை கொடுக்காதீர்கள் என்பது நபி(ஸல்) அவர்களின் கூற்று. நீங்களோ நேரிடையாக தலைமையில் (தலைமை மற்றும் மூளை மீது நம்பிக்கை உள்ள குழு ஏற்கனவே இருக்கிறது என்பது உங்கள் பதிவில் இருக்கிறது) இருந்து கொண்டு தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி தலைமை..........?

அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக!

இப்படிக்கு
அபு பாத்திமா

1 comment:

அருளடியான் said...

என் சார்பாக பதிலளித்த சகோதரர். அபூ ஃபாத்திமாவிற்கு நன்றி!