Wednesday, June 28, 2006

அரசியல் சார்பற்ற சமுதாய அமைப்புகளே!!

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

அரசியல் சார்பற்ற சமுதாய அமைப்புகளே!!
உங்களை அன்புடன் அழைக்கிறது
இந்திய மக்கள் பேரவை

இறைவனின் சாந்தியும் சமாதானமும் மனிதகுலம் மீது நிலவட்டுமாக!சமுதாய நலப் பணிகளில் அங்கம் வகிக்கும் நண்பர்களே!எதிர் கால சமூக கட்டமைப்பிற்கு நம்பிக்கை கருவூலங்களாக விளங்கும் தடந்தோள் இளைஞர்களே!அறியாமையை விரட்டி அறிவைப் புகட்டும் ஆலிம் பெருமக்களே! தாய்மார்களே!

உங்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள் : அறிவை அளக்க புறப்பட்ட மார்க்கத்தின் சொந்தங்களே, அறியாமையே வாழ்க்கையின் நெறியாக கொண்டவர்கள் எல்லாம் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அரசியல் ஆதிக்கம் பெற்று சமூக, கல்வி, பொருளாதார இட ஒதுக்கீட்டை கேட்டுப் பெறாமல் எடுத்துக் கொள்கின்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறார்கள். ஆனால், நாமோ அந்த வாய்ப்பைத் தவற விட்டு விட்டு தோல்வியை வெற்றி என்று பிதற்றிக் கொள்கிறோம். இந்தியாவில் ஆட்சியாளர்களை ஆண்டிகளே தேர்ந்து எடுக்கும் அரிய வாய்ப்பை ஜனநாயகம், இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கி இருக்கிறது. அந்த வாய்ப்பை ஒரு முறை அல்ல, இரு முறை அல்ல, பல முறை தவற விட்டு விட்டு சோகங்களை கணக்குப் பார்க்கும் சமூகமாக பிணங்களையும், உயிர் உடமை இழப்புகளையும் எண்ணுகின்ற சமூகமாக, கண்ணீரை கணக்கு பார்க்கும் சமூகமாக எத்தனை நாட்கள் காலம் தள்ளுவது?

சகோதரனே, விதை கூட விருட்சமாய் மாறி இருக்கிறது. ஏரிகள் கூட ஆறுகளாய் மாறி இருக்கிறது. மணல் மேடுகள் கூட மாமலையாக உருமாறி நிற்கிறது. என் அருமை சகோதரனே, என் உதிரத்தின் தோழனே நீ ஏன் சிந்திக்க மறுக்கிறாய்? உன் சமுதாயப் பணிகளை துறந்து விட்டு சமுதாய அமைப்புகளைக் கலைத்து விட்டு வா என்று உன்னை நாங்கள் அழைக்கவில்லை. உன் தலையில் ஏறி அமர்ந்து கொள்ள அழைக்கவில்லை. அரசியல் ரீதியாக வலிமை பெற வா என்று அழைக்கிறோம்.

எந்த சமுதாயம் தன் சொந்த வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லையோ, அந்த சமுதாயம் அழிவின் விளிம்பில் நின்று கொண்டு இருக்கிறது என்றான் ஒரு அறிஞன்.

நம்முடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்), நற்பண்புகளின் தாயகம் நவின்றார்கள், ஒரு மூமின் ஒரே பொந்தில் இரு முறை கையை விட மாட்டான்.

போதும் நண்பர்களே, போதும். சிந்தியுங்கள். சிந்திக்கிறேன் என்று காலத்தை, நேரத்தை வீணாக்காதீர்கள். கடமை அழைக்கிறது காரியம் ஆற்ற. சமுதாயம் கன்னல் வாழ்வை கேட்கிறது. இந்திய மக்கள் பேரவையில் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்த நம்மை காலம் காலமாக ஏமாற்றும் அரசியல் எத்தர்களின் முகத்திரையை கிழித்திட, நம்மை நாமே உணர்ந்து உயர்ந்திட, உரிமைகளை கெஞ்சி கேட்டிட அல்ல நாமே எடுத்துக் கொள்ள, அரசியல் விழிப்புணர்வு பெற்றிட இந்திய மக்கள் பேரவையில் ஆம், இந்திய மக்கள் கட்சியில் இணைந்திட அழைக்கிறோம்.

இந்த அமைப்பையும், இதன் தூர நோக்கு செயல் திட்டத்தையும் பிறரிடம் எடுத்துச் சொல்லுங்கள். பிறரை சிந்திக்க தூண்டுபவனே உண்மையான சமுதாய நலன் நாடுபவராக இருக்க முடியும். தொடரட்டும் உங்கள் பணி, திக்கெல்லாம் பரவட்டும் இந்திய மக்கள் பேரவையின் வெற்றிக்கான செயல்பாடுகள்.

இவண்,
அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

No comments: