Friday, June 16, 2006

வெற்றிக்கான செயல் திட்டங்கள்

இந்திய மக்கள் பேரவையின் வெற்றிக்கான செயல் திட்டங்கள்;

1. பல்வேறு சமூக அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் இந்திய மக்கள் பேரவையிலும் உறுப்பினர் ஆகலாம்.

2. சமூக அமைப்புகளில் ஏற்படும் மார்க்க கருத்து வேறுபாடுகளில் இந்திய மக்கள் பேரவை தலையிடாது.

3. நம்மைச் சுற்றியுள்ள எதிர்ப்பு சூழலை அறியச் செய்து அதை மாற்றிட அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

4. சமூகத்தின் ஒட்டு மொத்த உணர்வுகளை புறந்தள்ளி எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் பிறரின் நிர்ப்பந்தம் கைப்பாவையாக இந்திய மக்கள் பேரவை செயல்படாது.

5. தன்மானம், சுயமரியாதை இன்றி பார்வைக் குருவிகளாக பிறரின் ஆதாயத்திற்கு செயல்படாமல் ஒரு சின்னத்தை உருவாக்கி
அதன் கீழ் தேர்தல்களைச் சந்திக்க ஆவன செய்யும்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட அவை இன்ஷா அல்லாஹ் சாத்தியமாகலாம்.

6. முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகளையும், தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய தொகுதிகளையும் கண்டறிந்து தூர நோக்கு சர்வே கணக்கின் அடிப்படையில் தகுதி வாய்ந்த பல்வேறு அமைப்பினராக இருந்தாலும் அவர்களை தேர்தலில் நிற்க வைத்து அவரின் திறமையையும் ஆற்றலையும் இந்திய மக்கள் பேரவை பயன்படுத்திக் கொள்ளும்.

7. தமிழகத்தின் அனைத்து ஜமாத்துகள், வளைகுடா நாடுகள், சங்கங்கள், மதரஸாக்கள், அமைப்புகள் முதலியவற்றுக்கு சமூக ஒற்றுமையின் அவசியம், அரசியல் விழிப்புணர்வு சமூக நல்லிணக்க உறவு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

8. அனைத்து சமூக அமைப்பினரிடமும் கலந்து ஆலோசித்து சமூக நலனை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட ஏற்பாடு செய்யும்.

9. தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகவும், வஞ்சிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சியாகவும் செயல்பட ஏற்பாடு செய்யும்.

10. பாபர் பள்ளி, பொது சிவில் சட்டம் போன்ற பிரச்சனைகளில் மதசார்பற்ற சக்திகளை ஒன்று திரட்டி சுமுகமான உறவை ஏற்படுத்தி தேச ஒருமைப்பாட்டிற்கு எதிரான விஷயங்களை, மசோதாக்களை முறியடிக்க முயற்சி செய்யும்.

11. சமூக ஐக்கியத்தை குழைக்கும் விதத்தில் வன்முறையைத் தூண்டும் பேச்சாளர்களை இனம் கண்டு மதசார்பற்ற சக்திகளை திரட்டி அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களை ரத்து செய்ய முயல்வது, தேவைப்படின் சட்ட ரீதியாக பி.ஐ.எல். வழக்கு தொடர்வது.

12. தாயகத்தில் குடும்பத்தினரை விட்டு குறைந்த
சம்பளத்தில் வெளிநாடு சென்று குறைந்த வருமானத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களிடையே வசூல் வேட்டையில் இறங்காது அரசியல் சமூக மேம்பாட்டிற்கு அவர்கள் ஒத்துழைப்பு, ஆலோசனை, வாக்கு வங்கி ஆகியவற்றை ஒருமுகப்படுத்த பேரவை கேட்கும். இறையருள் வேண்டி பேரவையின் ஆக்ககரமான பணிக்கு உதவுபவர்களை தடுக்காது.


13. அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் அவர் அவர் தனி நபர் அமைப்பு ரீதியான விமர்சனத்தை சந்திக்கு கொண்டு வருவதை தடுத்து நிறுத்தி அரசியல் ரீதியாக ஒன்று கூட்ட முயற்சி செய்வது. இறைவன் நாடினால் அம்முயற்சி வெற்றி பெறக் கூடும்.

14. மாதம் ஒரு முறை சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளை முன் வைத்து தீர்வைத் தேடி கலந்துரையாடல் ஏற்பாடு செய்வது. தேவைப்படின் சமூக விழிப்புணர்வுக்கு ஜூம்மா மேடை ஊர் சங்கம் அமைப்புகிளடம் அனுமதி பெற்று பயான் செய்வது.

15. பத்திரிக்கைகளில் வரும் தவறான தீய பிரச்சாரங்களுக்கு எதிராக நீதி மன்ற வழக்கு தொடுத்து வெற்றி பெறுவது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகுப்புவாத சக்திகளின் வன்முறையைத் தூண்டும் ஆபாசமான மேடைப் பேச்சுக்கள் வீடியோவில் பதிவு செய்து நீதிமன்றம் மூலம் தடை வாங்கப்படும்.

16. எல்லா சமூக மக்களையும் சென்று அடையும்
விதத்தில் இன்றைய சமூகம் சார்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நாளிதழ் உன்றை உருவாக்க முயல்வது மற்றும் இணையத்திலும் அந்த நாளிதழை நிலை நிறுத்த முயல்வது. அந்த குறிக்கோளை அடையும் வரை மாஸ்டர் ரிப்போர்ட் போன்ற பத்திரிகைகளையும் சமூக அக்கறையுள்ள இணையத்தளங்களையும் பயன்படுத்திக் கொள்ள முனைவது.


17. வளைகுடா நாடுகளில் நம் இளைஞர்களிடம் இந்திய மக்கள் பேரவை பற்றிய நிலைப்பாடு, நோக்கம், செயல் திட்டம், தேவையின் அவசியம், சமூகத்தின் வருந்தத்தக்க சூழ்நிலை, அரசியல் ஐக்கியம் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வு செய்தல்.

18. தனிநபர் சர்வாதிகாரம், தனி நபர் முடிவு, தனி நபர் தீர்மானம், சாகும் வரை தலைமை போன்ற கடந்த கால சமூக அமைப்புகளின் தவறுகளுக்கு இடம் தராமல் BRAIN TRUST (அறிவு ஜீவிகள்) போன்ற பொலிட் பீரோ போன்ற நிர்வாகக்குழுவால் இந்திய மக்கள் பேரவை இயக்கப்படும்.

19. பொலிட் பீரோ – 20 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும். தலைவர், பொதுச்செயலாளர் போன்றவர்களின் பதவியை எந்த நேரத்திலும் பறிக்கும் அதிகாரம் கொண்டதாக செயல்படும்.

20. பொலிட் பீரோ உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 வருடம். அவர்களை செயற்குழு உறுப்பினர்கள் 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்து எடுப்பர்.

21. வஞ்சிக்கப்பட்ட பல சமய சமுதாய அமைப்புகளை அரவணைத்து சமூக, பொருளாதார அரசியல் மாற்றத்திற்கும், தமிழக பாரம்பரிய பண்பாடு காக்க பாடுபடும்.

22. அடிப்படைவாத கட்சிகளின் மக்கள் விரோத போக்கையும்,அரசியல் சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும், தமிழ் பண்பாட்டை சிதைக்கும் திட்டத்தையும், அம்பலப்படுத்தும். தேவைப்படின் தேச இறையாண்மை காக்க சமூக நல்லிணக்கம் மேலோங்க வேன்டியும் காங்கிரஸ், சமாஜ்வாதி, மாயாவதி பி.எஸ்.பி., திமுக, மதிமுக, பா.ம.க, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளிடையேயும் மற்றும் பிற்பட்டோர் நலனில் அக்கறையுள்ள திராவிட இயக்கங்களுடனும் நல்லெண்ண உறவு வைத்து செயல்படும்.

23. சமூக நல்லிணக்கம், மனித நேயம், தமிழன் மதம் கடந்து மானுடத்தை பார்த்த பார்வை பற்றிய சிந்தனை நிலை, பல்வேறு தரப்பு மக்களிடம் நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் காக்க கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வெளியிடும்.

24. கல்விமான்கள், புரவலர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், முற்போக்கு சிந்தனையாளர்களிடம் இந்திய மக்கள் பேரவையின் தேவை பற்றிய அவசியத்தை உணர்த்தி அவர்களின் கவனத்தை ஈர்த்தல்.

25. இந்திய மண்ணின் மைந்தர்கள், ஆதி தமிழர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தவர்கள், மலைவாழ் மக்கள், சிறுபான்மை மக்கள், சமூக பொருளாதார அரசியல் மேம்பாட்டிற்கு இப் பேரவை குரல் கொடுக்கும்.

முயற்சி மட்டுமே நம் செயல். கூலி இறைவனிடம். தனி நபர் முயற்சி மட்டுமே வெற்றிக்கு வழி கோலாது.


உங்கள் பங்களிப்பு, ஆலோசனைகள், செயல்பாடுகள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

வாருங்கள் ஒன்று படுவோம்! சிந்திப்போம்!!
கடினமாக உழைப்போம்!!! வெற்றி பெறுவோம்!!!

3 comments:

ஏ.எம்.ரஹ்மான் said...

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது போல நம் முஸ்லிம் சமுதாயத்தினர் ஒன்றுபடுவோம் கண்டிப்பாக வெற்றியும் பெறுவோம். அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாக ஆமீன்.

அருளடியான் said...

இந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள், சில ஆலோசனைகள்

சில நாட்களுக்கு முன் 'இந்திய மக்கள் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப் படுவது பற்றி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. இதன் அமைப்புச் சட்டம், நோக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இதைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என காத்திருந்தேன். இன்று இந்த அமைப்பின் செயல் திட்டங்களை 'முகவைத் தமிழன்' என்கிற 'ரைசுதீன்' மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகளையும் ஆலோசனைகளையும் இந்த அமைப்பினரிடம் கேட்க விரும்புகிறேன்.


1. இந்த அமைப்பின் நிறுவனர் யார்? இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார்? தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொர்றுப்புகளை யார் ஏற்றுள்ளனர்?

2. 'இந்திய மக்கள் பேரவை' என பொதுவான பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர் ஆகலாமா? அல்லது இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான அமைப்பா?

3. இரட்டை உறுப்பினர் சர்ச்சையால் முன்னர் ஜனதா கட்சி உடைந்ததும், த.மு.மு.க பிளவுபடாத போது த.மு.மு.கவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இரட்டை உறுப்பினர் நிலையால் சர்ச்சைகள் ஏற்பட்டதும் நாம் அறிந்தது தானே? அதுவுமின்றி, எத்தனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியிலும் உறுப்பினராய் இருந்து கொண்டு இந்திய மக்கள் பேரவையிலும் இடம் பெற அனுமதிக்கும்? இது பற்றியெல்லாம் செயல் திட்டம் வகுக்கும் போது கவனித்தீர்களா?

4. பழனி பாபாவை தங்கள் வழிகாட்டியாக இந்த அமைப்பை நிறுவியவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமக்கு என்றென்றைக்கும் வழிகாட்டி நமது இறுதித் தூதர் முஹமது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே. தமிழகச் சூழலில் காயிதே மில்லத் (ரஹ்) போன்ற தலைவர்களின் சிந்தனைகளையும், பெரியார், அ.மார்க்ஸ் போன்றவர்களின் சிந்தனைகளையும் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியலை ஆராயும் 'முஸ்லிம் அரசியல் பரினாம வளர்ச்சி' என்ற நூலை 'அடையாளம்' வெளியிட்டுள்ளது. அதனை வாங்கிப் படியுங்கள்.

5. சிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா?

6. த.மு.மு.க தோன்றிய போது, முஸ்லிம் லீக்கை கடுமையாக விமர்சித்தது. இன்றளவும் நிறுத்தவில்லை. இப்போது 'இந்திய மக்கள் பேரவை' பிற முஸ்லிம் அமைப்புகளை விமர்சிக்கிறது. இது எந்த வகையில் முஸ்லிம்களுக்குப் பயன்படும்? விமர்சிப்பது எளிது. ஆனால் பிரச்சினைகளைக் கையாளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்துள்ளீர்களா? (எனக்கும் முஸ்லிம் லீக், தேசிய லீக், த.மு.மு.க, தவ்ஹீத ஜமாஅத் போன்ற அமைப்புகளின் மீது கருத்து வேறுபாடுள்ளது. அவற்றை ஏற்கனவே இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். அவை அப்படியே உள்ளன. அதனால் திரும்ப எழுதவில்லை). இந்திய மக்கள் பேரவையில் அரசியல் அனுபவம் உள்ளவர் யார்?

7. புதிய அமைப்பு முஸ்லிம்களை மேலும் பிளவு படுத்தாமல் எவ்வாறு ஒன்றுபடுத்தும்?

Abu Fathima said...

என்னத்தச் சொல்ல...

எல்லோருக்கும் தலைவர் ஆகணும்னு ஆசை.. இருக்கின்ற இயக்கங்களும் அதற்குள் நடக்கின்ற சண்டைகளுக்கும் நடுவே புதுசா இப்போ இன்னொண்ணு.. என்னத்தச் சொல்ல

சுயநலத்திற்கு சமுதாய அக்கரை முலாம் பூசி சும்மா நேரம் போகாத வேளைகளில் புதிய சட்ட திட்டங்கள் இயற்றி அலுவலக இண்டர்நெட்டில் அப்லோட் செய்யும் புதிய தலைவர்களையும், இயக்கங்களையும் என்னத்தச் சொல்ல...

ஏற்கனவே தமிழ் முஸ்லிம் சமுதாயம் துண்டு துண்டுகளாக்கப்பட்டு ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லக்கூட முன்வராத மனநிலையில் இன்னொரு துண்டு போட தயாராகிவிட்ட விஞ்ஞான தலைவரை என்னத்தச் சொல்ல...

(கடையநல்லூர் பள்ளிவாசல் சம்மந்தமாக நான்குநேரி சிறையில் அடைக்கபட்ட இருபெரும் அமைப்புகளின் 'ஊழியர்கள்' தனித்தனி ஜமாஅத்தாக தொழுதார்கள்... இதுதான் நவீன தௌஹீத் - 2006)
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கின்ற மக்களை ஒன்றுபடுத்துவதை விட்டுவிட்டு புதிய அமைப்பு தான் தீர்வு என முடிவுசெய்தவர்களை..... என்னத்தச் சொல்ல...

----2. சமூக அமைப்புகளில் ஏற்படும் மார்க்க கருத்து வேறுபாடுகளில் இந்திய மக்கள் பேரவை தலையிடாது.---

இதுசம்பந்தமாக முன்பு எழுந்த விஷயங்கள் புதிய தலைவருக்கு தெரியாதா? அப்படியானால் தலைவர் 'ரொம்ப' புதுசு போல இருக்கே...

இறுதியாக, தேர்தலில் நின்று ஓட்டு வாங்கணும்னா சொல்லுங்கோ... எனக்கு ஒரு வோட்டும் வீட்டுல 4 ஓட்டும் இருக்கு. உங்களுக்கே போட்டுற்றோம். அதைவிட்டுவிட்டு புதிய இயக்கமெல்லாம் வேண்டாம் தலைவா...

இதைத்தவிர வேற என்னத்தச் சொல்ல....


இப்படிக்கு
அபு பாத்திமா