Wednesday, June 14, 2006

புதிய அமைப்பு தேவை இல்லை


ஒவ்வொரு இயக்கமும் நல்ல நோக்கத்திற்காக தான் உருவாக்கப்பட்டன. இயக்கம் வளர்ந்தவுடன் இயக்கமா? நோக்கமா? என்னும்போது இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இது அனைத்துக்கட்சி, மத, இன அமைப்புகளுக்கும் பொருந்தும்.

ஆனால் முஸ்லிம் அமைப்புகள் தனிநபரா? இயக்கமா? என்னும்போது இயக்கத்திற்கும். இயக்கமா? சமுதாயமா? என்னும்போது சமுதாயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

ஆனால் தமிழகத்தில் புதிய முஸ்லிம் அமைப்புக்கான தேவை அறவே இல்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சமுதாய விழிப்புணர்வு அதிகம். அதற்குக்காரணம் தமுமுகவும், தவ்ஹீத் ஜமாத்தும் தான். தமுமுகவிற்கும், தவ்ஹீத் ஜமாத்திற்கும் மத்தியில் கடும் போட்டி நிலவினாலும், மற்ற முஸ்லிம் அமைப்புகளை விட இதன் தலைவர்கள் சமுதாய சிந்தனையும், தியாகமனப்பான்மையும் நிறைந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் காங்கிரஸ்பிரதமர் நரசிம்மராவ் "மீண்டும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் கட்டித்தரப்படும்" என உறுதிமொழி அளித்தார். அப்போது கேரளாவில் காங்கிரஸ்- முஸ்லிம்லீக் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள் "காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் கொடுத்த உறுதிமொழியை உடனே நிறைவேற்ற கோரி கேரளாவில் முஸ்லிம்லீக் காங்கிரஸ்கூட்டணியிலிருந்து விலக வேண்டும் "என்றார். உடனே கேரளா முஸ்லிம்லீக்கினரின் பதவி சுகம் அகில இந்திய முஸ்லிம்லீக் தலைவர் பதவியிலிருந்து இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்களை நீக்கியது. அப்போது உதித்தது தான் இந்திய தேசிய லீக். இது போன்ற அவலநிலையைக்கண்டு மாற்றுவழி தேடி உருவானது தான்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

வெளிநாட்டில் இருந்துக்கொண்டு, வியர்வை சிந்தாமல், தமிழக முஸ்லிம் சமுதாய வரலாறு ஏதும் அறியாமல், உளவுத்துறை, காவல்துறை நடைமுறை ஏதும் அறியாமல், தமிழகத்தில் மக்கள்பலம் ஏதும் இல்லாமல், தினமும் நூறு மின்னஞ்சல் அனுப்புவதால், வலைதளத்தில் நான்கு அமைப்பினரை ஒரே தளத்தில் எழுத வைத்ததற்காக பந்தல்மேடைகாரர், மைக்செட்காரர்கள் கட்சி ஆரம்பிப்பதைப்போல் அமைப்பு ஆரம்பிப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

தமுமுக-தவ்ஹீத் ஜமாத் தலைவர்களின் வளர்ச்சி நேற்று விதை தூவி இன்று அறுவடை செய்வது போல் அல்ல. எவ்வளவு இழப்புகள், எவ்வளவு மனஉளைச்சல்கள் அத்தனையும் தாண்டித்தான் சமுதாயத்தை அவர்கள் ஒருங்கிணைத்தார்கள். இன்று அவர்களில் சிலரிடம் தான் என்ற அகந்தை மேலோங்கியிருக்கலாம். ஆனால் பத்தாண்டுகள் அவர்கள் ஆற்றிய பணி கள்ளம் கபடமில்லாத தூய்மையானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதனால்தான் இன்று இடஒதுக்கீடு, பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டத்திற்கு இந்தியாவிலேயே இவர்கள் மட்டுமே களத்தில் உள்ளார்கள். மத்திய அரசே இவர்களின் குரலுக்குத்தான் செவி சாய்க்கிறது.

No comments: