Monday, June 19, 2006

இந்திய மக்கள் பேரவை - அருளடியானுக்கு பதில்

சகோதரர் அருளடியான் அவர்களே,

இந்திய மக்கள் பேரவை அமைப்பு தொடங்கப் போவதைப்பற்றி மின் அஞ்சல் வந்தது அதைப்பற்றி நோக்கம் அமைப்பு சட்டம் எதுவும் தெரியாமல் விமர்சிப்பது சரியில்லை என்று காத்திருந்தேன் -- இந்த முதல் கேள்வியிலேயே உங்களுடைய அறியாமை வெளிப்படுகிறது. ஒன்றைத் தெளிவாக அறிந்து ஆய்வு செய்த பிறகு விமர்சிப்பதுதான் அறிவுடமை. ஆனால் பெயரைக் கேட்டவுடனே விமர்சிப்பதற்காக காத்திருந்தேன் என்று சொல்வதில் இருந்து நீங்கள் யார்? உங்கள் முகவரி என்ன என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளீர்கள். உண்மையான நடுநிலை விமர்சகன் இயக்கவாதியாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இயக்க வரையரைக்குள் மட்டுமே நின்று பேசுவார்கள். நாமோ மக்கள் மன்றத்தில் இருந்து பேசுகிறோம், என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

தாங்கள் கேள்விகளுக்கு இதோ எமது பதில்கள்:

1. இந்த அமைப்பு ஏன் உருவாக்கப்பட்டது என்பதை தாங்கள் அறிந்திருக்கக்கூடும். சமுதாயத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், தேர்தல் முடிவுகள், சமுதாயத்தின் ஏமாற்றங்கள், இவற்றையெல்லாம் கண்டு மனம் புழுங்கி சமுதாய ஆர்வலர்கள் தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்கள் பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகித்து விரக்தியின் விளிம்புக்கு சென்றவர்கள், வளைகுடா பகுதியில் இருக்கக்கூடிய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சமுதாயத்தின் எதிர்கால நலனுக்காக தூரநோக்கு பார்வையோடு உருவாக்கப்பட்டதுதான் இந்திய மக்கள் பேரவை. கூடிய விரைவில் வளைகுடாவினுடைய இந்திய மக்கள் பேரவையினுடைய அறிவுஜீவிகள் குழு (Brain Trust Committee) கூடி ஆய்வு செய்து கடந்த கால இயக்கங்கள் செய்த தவறுகள் நிகழ்ந்து விடாத வண்ணம் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும். அப்பொழுது தாங்கள் அறிந்து கொள்ளலாம்.

2. இந்த அமைப்பு மனித குலத்தின் நன்மையை முன்னிருத்தி உருவாக்கப்பட்ட பேரியக்கம். இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்திய இறையாண்மையைக் காக்க எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க மனித நேயம், சமூக நல்லிணக்கம் விரும்பும் அனைத்து தரப்பு இந்தியர்களும் இதில் உறுப்பினர்களாக ஆகலாம்.

3. இரட்டை உறுப்பினர் பதவியால் கட்சிகள், அமைப்புகள் உடைந்ததாக தாங்கள் கூறுகிறீர். இலட்சியவாதிகள், கொள்கைவாதிகள், சுயநலமற்றவர்கள் விற்பனையாக மாட்டார்கள். எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் கொண்ட கொள்கையில் இருந்து மாறிவிட மாட்டார்கள். இறைவன் நாடினால் இந்திய மக்கள் பேரவை சர்ச்சைக்கோ, சந்தர்ப்ப வாதத்திற்கோ இடம் தராது. இந்திய மக்கள் பேரவையினுடைய அறிவு ஜீவிகள் (Brain Trust ) கொள்கைக்காக தங்களையே தானம் தருபவர்கள்.

4. தாங்களின் நினைப்புக்கும், குறுகிய சிந்தனைக்கும், நாம் விளக்கம் கொடுக்க முடியாது. பழனிபாபாவாக இருந்தாலும் சரி, காயிதே மில்லத் ஆக இருந்தாலும் சரி, அவர்கள் இருவரும் மதிப்பிற்குரியவர்கள் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. தன்னைத் திட்டுபவர்களைக் கூட விமர்சனம் செய்ய வேண்டும் என்று நண்பர்கள் காயிதே மில்லத் இடம் கூறினால் - நன்மை செய்பவர்களாக நாம் இருப்போம், தீமை செய்பவர்களாக அவர்கள் இருக்கட்டும என்று பதிலளிப்பார்கள். இந்த நாகரீகம் தான் இந்திய அரசியல்வாதிகளுக்கு கிடைக்காத கண்ணியத்திற்குரிய என்ற பெயர் காயிதே மில்லத் அவர்களுக்கு கிடைத்தது. கண்ணியம் என்ற வார்த்தை அகராதியில் இருக்கும் வரை அவர் புகழ் இருக்கும். பழனி பாபா அவர்கள் எதையும் வேகமாக தன் உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். இருவரும் சமுதாயத்தினுடைய நலன்களுக்காக வேறுபட்ட பரிணாமங்களி;ல் உழைத்தார்கள். கோழியைக் கேட்டு விட்டு மிளகாய் அரைக்க முடியாது. இந்திய அரசியலிலே சூரர்கள் முதல் சூனியம் ஆனவர்கள் வரை நாங்கள் தெளிவாக அறிந்திருக்கிறோம். தங்களுக்கு எதைப் பற்றியும் சந்தேகம் ஏற்பட்டால் இந்திய மக்கள் பேரவையின் மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும். உங்கள் அறியாமைக்கு விடை கிடைக்கும்.

5. இந்திய மக்கள் பேரவை இந்திய மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்படுகிறது. நீதி, நேர்மை, வாய்மைக்காக உழைக்கிறது. சிறைவாசிகள் மட்டுமல்ல பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க பாடுபடுகிறது.

6. முதலில் விமர்சிப்பவர்கள் தவற்றை தவறு என்று சொல்ல வேண்டும். சத்தியத்தை சத்தியம் என்று சொல்ல வேண்டும். இதில் அச்சமோ துச்சமோ அடையத் தேவையில்லை. விறுப்பு, வெறுப்புக்களை தள்ளி வைத்து விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனம் என்ற பெயரில் அறிவைத் தொலைத்து விட்டு குறுகிய எல்லைக்குள் நின்று விமர்சனம் செய்பவர்கள் உண்மையான விமர்சகர்கள் ஆக மாட்டார்கள். கடந்த கால அமைப்புகளின் விமர்சனங்களை நாங்கள் அறியவில்லை. அதனால் எங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. பிரச்சினைகளைக் கையாளுவதைப் பற்றி நண்பர் எழுதி உள்ளார். பிறக்கும் போதே எல்லோரும் அறிவாளிகளாக பிறப்பதில்லை. பிரச்சினைகள் வரும்போது தான் தீர்வை மனிதன் கண்டு கொள்ள முடியும். சமுதாய அமைப்புகளின் தோல்விகள், குளறுபடிகள், எங்களுக்கு ஒரு பெறும் பாடத்தை தந்திருக்கிறது. இந்திய மக்கள் பேரவையின் steps are measured.

7. தாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. சமுதாய அமைப்புகள், அரசியல் அல்லாத செயல்பாடுகளை முன்னிருத்தி செயல்படுகிறது. இந்திய மக்கள் பேரவையோ, அரசியல் விழிப்புணர்வை சமுதாயம் பெற பல சமூக நல அமைப்புகளில் அங்கம் வகித்தாலும் அரசியல் ரீதியாக வலிமையை காட்ட உழைக்கிறது. இதில் பிளவுக்கே வேலை இல்லை.


வாருங்கள் ஒன்று படுவோம்! சிந்திப்போம்!! கடினமாக உழைப்போம்!!! வெற்றி பெறுவோம்!!!



அன்புடன்,
இந்திய மக்கள் பேரவை

2 comments:

அபூ முஹம்மத் said...

மேற்கண்ட பதிவிற்கு
அபூ ஃபாத்திமா
அருமையான பதிலை தனிப்பதிவாக இட்டுள்ளார்.

எனது சார்பாக ஒரு சில விஷயங்கள்:

//தங்களுக்கு எதைப் பற்றியும் சந்தேகம் ஏற்பட்டால் இந்திய மக்கள் பேரவையின் மின் அஞ்சலை தொடர்பு கொள்ளவும். உங்கள் அறியாமைக்கு விடை கிடைக்கும்.//

உங்களைப்பற்றி விளக்கம் கேட்டு நின்றால் அறியாமையா? உங்களைப்பற்றி அறியாதவர்களெல்லாம் அறியாமைவாதிகளா? நல்ல நிதானம். வாழ்க உங்கள் இயக்கம்.


//நாமோ மக்கள் மன்றத்தில் இருந்து பேசுகிறோம், என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.//

உங்களின் நிதானமானமற்ற பதிலில் இருந்து நீங்கள் மக்கள் மன்றத்தில் நின்று பேசவில்லை என்பதை மக்கள் அறிந்துக்கொள்வார்கள்.


//(இயக்கவாதிகள்) இயக்க வரையரைக்குள் மட்டுமே நின்று பேசுவார்கள்.//

நீங்கள் ஆரம்பித்தது இயக்கமென்றால் உங்களுக்கும் இது பொருந்தும்.

அருளடியான் said...

இந்திய மக்கள் பேரவைக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் எந்த முஸ்லிம் அமைப்பிலும், முஸ்லிமல்லாத அமைப்பிலும் உறுப்பினராய் இருந்தது இல்லை. அது போல, தற்போதும், எந்த முஸ்லிம் அமைப்பிலும், முஸ்லிமல்லாத அமைப்பிலும் உறுப்பினராய் இல்லை. நாம் வாழும் பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாஅத்தில் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், ஓரிறைக் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளத் தேவையில்லை என்ற நிலைப்பாடு உடையவன். அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் நான் ஆக்கபூர்வமாக விமர்சித்துள்ளேன். இவற்றை தமிழ் முஸ்லிம் கூட்டுவலைப்பதிவில் படித்துப் பாருங்கள். எந்த முஸ்லிம் அமைப்பின் மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எனக்கு இல்லை. சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையினாலேயே அவற்றை விமர்சித்தேன்.

இந்திய மக்கள் பேரவையின் தொடக்க விழாவுக்குப் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தால், அதில் செய்தியாளர்கள் என்னென்ன கேள்விகள் கேட்பார்களோ அவற்றைத் தான் நான் கேட்டேன். விமர்சனங்களை ஏற்பதாகவும், கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பதாகவும் நீங்கள் எழுதியுள்ளதற்கும், எனக்கு நீங்கள் கொடுத்துள்ள பதிலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்பதை அன்புடன் சுட்டிக் காட்டுகிறேன். என் கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் அளித்தமைக்கு நன்றி

வஸ்ஸலாம்
அருளடியான்
aruladiyan@yahoo.co.in