Thursday, May 18, 2006

மார்க்க அரசியல் தலைவர்களை இனம் காண்போம்

மார்க்கத்தின் பெயரால் அரசியல் நடத்தும் தலைவர்களை இனம் காண்போம்.


நடந்து முடிந்த தேர்தலில் ஒட்டுக்களைப் பொறுக்க அரசியல் வாதிகள் என்ன கூத்தாடினார்களோ ஆனால் அதனை விட முஸ்லிம் சமுதாய பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் நடத்திய கூத்து தான் இந்த சமுதாயத்தைப் பிறருக்கு மத்தியில் தலை குனிய வைத்துள்ளது.

இதில் தவ்ஹீதைக் காரணம் காட்டி தமுமுகவை விட்டும் பிரிந்து சென்ற தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத்தாரின் நிலைதான் மிக மோசமாக இருக்கின்றது. தமுமுக வினர் கூட கருணாதிக்கு ஓட்டு போடுவது சமுதாயத்தினர் மீதுள்ள கட்டாயக் கடமை என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யவில்லை.


ஆனால் த.த.ஜ வினர் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடுவது என்னவோ முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளை என்ற ரீதியில் பிரச்சாரம் செய்து வந்தனர். இதற்கு அவர்களது வலைதளத்தில் இடம் பெற்ற கட்டுரையே சான்றாகும். ஆம் ஜெயலலிதா இடஒதுக்கீடு தருவதாக வாக்களித்தாராம். எனவே அவருக்கு ஆதரவு என்று முஸ்லிம்களும் ஒப்பந்தம் செய்து கொண்டார்களாம். எனவே வாக்குறுதியை மீறக்கூடாது என்று அல்லாஹ் கூறியுள்ளயான். அவ்வாறு மீறுபவன் நயவஞ்சகன் என்று அல்லாஹ்வின் தூதரும் கூறியுள்ளனர். எனவே முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் ஜெயலலிதாவிற்குத்தான் ஓட்டு போட வேண்டுமாம். (பார்க்க www.tntj.net)

பெண்ணிடத்தில் தங்கள் காரியத்தை ஒப்படைக்கும் சமூகம் வெற்றி
பெறாது என்ற நபிமொழி சாதாரண மக்களுக்கு விளங்கியதைப்போன்று விளங்கியவர் அல்ல
மூதறிஞர் பி.ஜெ. அவரிடத்தில் அதற்கு அற்புதமான மறுப்பு இருக்கும். (நபித்தோழர்கள்
மார்க்கத்தை விளங்கியதை விடவும் சிறந்த முறையில் விளங்கியவர்கள் தானே தமிழ்நாட்டு
தவ்ஹீதார்கள்)

ஆனால் இப்போது இவர்களது பிரச்சாரம் முஸ்லிம்களிடம் எடுபடாமல் ஜெயலலிதா தோற்கடிக்கப்பட்ட பின்னர் புதிய கதையுடன் டி.வி யில் தோன்றுகின்றனர். எல்லாம் விழுந்து விட்ட இயக்கத்தை தூக்கி நிறுத்துவதற்காகத் தான் என்பதை பார்ப்பவர்கள் புரிந்து கொள்வர். ஜெயலலிதா தோற்றாலும் வாக்கு சதவீதம் அதிகமாக உள்ளதாம்! அதற்கு இவர்களின் பிரச்சாரத்தின் காரணமாக ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஜெயலலிதாவுக்குத் தான் வாக்களித்தார்களாம்! அப்பப்பா பிரமாதம்! அரசியல்வாதிகள் தோற்றார்கள் போங்கள்! விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.

சகோதரர்களே மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் இத்தகைய புதிய கொள்கைவாதிகளை இனம் காணுங்கள். தவ்ஹீத் என்ற புனிதமான பெயரைப் பயன்படுத்தி மார்க்கத்தில் புதிய கருத்துக்களைக் கூறி மக்களைக் குழப்பி வரும் இவர்களை இப்போது உலகளாவிய அறிஞர்கள் இனம் கண்டு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகின்றனர். ஆம் இவர்கள் உருவாக்கிய புதிய கருத்துக்களில் சில இதோ:

  • நபித்தோழர்கள் மார்க்கத்தை மாற்றிவிட்டார்கள் என்று கூறியது
  • அல்லாஹ் முதல்வானத்தில் இறங்குகின்றான் என்ற ஹதீஸைப் பொருள் மாற்றிக் கூறியது
  • சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்து புதிய விளக்கம் அளித்தது.
  • திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் புதிய கருத்துக்களைக் கூறியது. பொருளை மாற்றியது.
  • ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தாலும் அறிவுக்குப் பொருந்தவில்லையெனில் புறம் தள்ளவேண்டும் என்றது
  • செல்வங்களுக்கான ஸக்காத் ஒருமுறை மட்டும் கொடுத்தால் போதும் என்று வாதிட்டது.
  • ஆண்கள் அரைக்கால் டிரவ்ஸரில் தொழலாம் என்று பத்வா வழங்கியது.


இவை சில உதாரணங்களே. மார்க்கத்தை நல்லறிஞர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம். போலிகளை மக்களுக்கு இனம் காட்டுவோம்! விழிப்படைவோம்! வெற்றிபெறுவோம.! அல்லாஹ் உதவி செய்வானாக! ஆமீன்.அன்புடன் உங்கள் சகோதரன்

மு. அப்துல் காதிர் தஸ்தகீர்
பஹ்ரைன்.

thasthahir_ma@hotmail.com

No comments: