Sunday, April 23, 2006

முஸ்லிம்களுக்குள் இல்லாத பிரிவு!!

முஸ்லிம்களுக்குள் இல்லாத பிரிவை இருப்பதாக காட்டிய ஜெயலலிதா!!

தமிழகத்தில் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்து சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் களத்தில் முஸ்லிம்கள் அதிகமாகவே அரசியல் கட்சிகளால் கவனிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களும் இரு பிரிவுகளாக ஒரு பிரிவு அ.தி.மு.க.வையும், மற்றொரு பிரிவு தி.மு.க.வையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் ஆதரிக்கும் இந்த இரு திராவிட கட்சிகளும் முஸ்லிம்களுடைய சமூக மேம்பாட்டில் உண்மையாகவே அக்கறை கொண்டவர்கள்தானா என்பதை கடந்த கால வரலாறுகளை அசை போட்டு முடிவு எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இதை பதிவு செய்கிறேன்.

ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் கடந்த காலங்களில் என்றுமே முஸ்லிம்களுடனான இணக்கத்தை விரும்பியது இல்லை. அவர் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு ஃ கரசேவைக்கு அயோத்திக்கு ஆள் அனுப்பியவர். பாபர் மஸ்ஜிதை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரித்தவர். ராமருக்கு இந்தியாவில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று கேள்வியும் எழுப்பியவர். நான் ஒரு தவறு செய்து விட்டேன் இனி ஒரு போதும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பி.ஜே.பி.யுடனான கூட்டணி குறித்து முஸ்லிம்களின் மத்தியில் சொன்னவர். அதே பி.ஜே.பி.யோடு அரசியல் ஆதாயங்களுக்காக மீண்டும் கூட்டணி அமைத்தவர். குஜராத்தில் முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்த நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு சென்று மலர் கொத்து கொடுத்தவர். அதன் மூலம் முஸ்லிம்களின் மனதில் வெளிப்படையாகவே குத்தியவர். கடந்த சட்ட மன்ற தேர்தலில் தலித் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று முஸ்லிம்களுக்குள் இல்லாத பிரிவை இருப்பதாக காட்டியவர். பிறகு அதை எழுத்துப் பிழை என்று கூறி சமாளித்தவர். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதை விமர்சித்தவர். பெண்களுக்கே உரித்தான அச்ச உணர்வை கலைந்து தாம் நினைப்பது, தாம் சொல்வதுதான் சரி என்று வெளிப்படையாக சொல்லக்கூடியவர்.

இப்படி வெளிப்படையாகவே முஸ்லிம்களுடைய மனதில் ரணங்களை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியை அதற்கு முந்திய கருணாநிதியின் ஐந்து ஆண்டு கால ஆட்சியோடு ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயமாக அது சிறப்பான ஆட்சியாகவே கருத முடிகிறது. கருணாநிதி ஆட்சியில் ஏவப்பட்ட அடக்குமுறைகள் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இல்லாமல் போனதும் உண்மையே. பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ல் முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் காட்டிடக் கூட முடியாமல் முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கும் கொடுமை ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நடைபெறவில்லை. எதிரணியில் இருந்தாலும் சங்க்பரிவார கூட்டத்தினருடன் அன்பு பாராட்டும் ஜெயலலிதா அப்பேர்பட்ட சங்க்பரிவார தலைவர்கள் தமிழகத்திற்கு வரும் போது முன்னெச்சரிக்கை கைது என்று சொல்லி முஸ்லிம்களை சிறை பிடிக்கவில்லை. கருணாநிதி ஆட்சியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதங்கலவரங்கள், ஜாதிக்கலவரங்கள் தாரளமாகவே ஒடுக்கப்பட்டுள்ளது. ஜாதி இல்லை, மதம் இல்லை, கடவுளும் இல்லை என்று சொல்லும் கருணாநிதி ஜாதி சார்பு அரசியலை தனது குடும்ப நலனுக்காக தன்னையும் அறியாமல் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதுபோன்ற ஒரு செயலை ஜெயலலிதா செய்ய வில்லை. ஜெயலலிதாவின் இதற்கு முந்திய ஐந்து ஆண்டு கால ஆட்சி போல் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்களும் அதிகமாக இல்லை. கருணாநிதி கூட செய்யத் துணியாத செயலான காஞ்சி சங்கராச்சாரியார் கைது என்பது ஜெயலலிதா மீதான சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை துளிரச் செய்தது.

இதற்கெல்லாம் மேலாக முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்புக்களின் மேம்பாட்டிற்காக ஆணையம் அமைத்திருக்கிறார் என்பது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகத்தான் கருத முடிகிறது. ஆனால் அதை முழுமையாக முஸ்லிம்கள் நம்பாமல் இருப்பதுதான் சிறந்தது. ஏனெனில் ஒரு காலத்திலும் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பிறகு பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்ததை நாம் மறந்து விட முடியாது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்யப்போவதில்லை. அரசியல் அரங்கில் நிகழும் சதிராட்டங்களால் அவ்வப்போது சில நன்மைகள் ஆட்சியாளர்கள் விரும்பியோ, விரும்பாமலோ தானாகவே நிகழ்ந்து விடுகிறது. அதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் காட்சி தருகிறார்கள். ஒரு காலம் வரும் போது ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும், கருணாநிதியின் தி.மு.கவும் கூட கூட்டணி அமைத்து முஸ்லிம்களுக்கு துரோகம் செய்தாலும் அதில் முஸ்லிம்கள் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் முஸ்லிம்கள் பா.ம.க. ராமதாஸிடமும், ம.தி.மு.க வை.கோபால்சாமியிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது சாளச் சிறந்தது. ஏனெனில், முஸ்லிம்கள் இன்னும் ஓட்டு வங்கியாகவே அவர்களுடைய பார்வையில் காட்சி தருகிறார்கள் என்பதை அவர்களுடைய அரசியல் அசைவுகள் உணர்த்துகிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவின் ஆட்சி தேவையா? அல்லது கருணாநிதியின் ஆட்சி தேவையா என்ற ஒரு கேள்வி எழுந்திருப்பதால் ஜெயலலிதாவிற்கே மறுபடியும் வாய்ப்பளித்து அவர் வாக்குறுதி அளித்தபடி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க முஸ்லிம்கள் அனைவரும் நிர்பந்திக்க வேண்டும். கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தாதிருப்பதன் மூலம் குறைந்த பட்சம் இன்னுமொரு 19 முஸ்லிம்களின் உயிர் பலியையும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களின் பல ஆண்டு கால சிறை வாழ்க்கையையும் தடுத்திட முடியும்.

முஸ்லிம்களுக்காக தி.மு.க. தனது ஆட்சியில் செய்த சேவைகளை அறிந்தவர்கள் அதை இங்கு பட்டியலிடவும். மறக்காமல் அது செய்த அநீதிகளையும் பட்டியலிடவும். "கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இன்சா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இங்கு நான் பதிவு செய்கிறேன்.

இது தொடர்பான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

நன்றியுடன்
அறிவழகன்

1 comment:

அபூ முஹம்மத் said...

நன்றி அறிவழகன்! நல்ல பதிவொன்றை தந்துள்ளீர்கள்.

19 முஸ்லிம்கள் சுட்டுக்கொள்ளப்பட்ட கோயமுத்தூர் விஷயத்தில் கருணாநிதி செய்த அநீதியை மறக்கவே முடியாது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை கருணாநிதி போய் பார்க்கக்கூட இல்லையே என்ற கேள்வி எழுந்தபோது, அதற்கு லீக்-கின் தலைவர் ஒருவர் நான் சென்று பார்த்தாலும் கருணாநிதி பார்த்தாலும் எல்லாம் ஒன்றுதான் என்றார். இன்று நீதி கிடைக்காத கோவை கைதிகளுக்கு முதற்காரணம் கருணாநிதி.

எப்படியோ முஸ்லிம்கள் அழிந்தால் சரி என்று ஜெயலலிதா இரண்டாவது காரணமாக இருக்கிறார். காரணம், 5 ஆண்டுகால ஆட்சியில் நடக்காத ஒன்று இனி நடக்குமா என்ற கேள்வியை நாமே கேட்டுக்கொள்ளலாம்.

ஜெயலலிதா முஸ்லிம்களுக்கு சலுகைகள் கிடைப்பதை கனவில்கூட நினைக்க மாட்டார். ஆணையம் ஒரு கண் தொடைப்பு என்பதாகவே நான் உணர்கிறேன்.

கருணாநிதி வழக்கம்போல் இதயத்தில் மட்டும் இடம்கொடுப்பார் என்று நம்பலாம். மத்தியில் சோனியாவின் முயற்சியினால், காங்கிரஸ் ஏதாவது துரும்பை நகர்த்துவார்களா? எல்லாம் படைத்த இறைவனுக்கே வெளிச்சம்.

இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளை நம்புவதைவிட நாமே தனித்து தேர்தலில் நிற்பதுதான் நல்லது என்று படுகிறது. இதற்கு மற்றவர்களைப் பார்த்துக்கூட நம்மவர்கள் பாடம் படித்திடுவது இல்லை. அதற்கு உதவக்கூடிய ஒற்றுமையும் நம்மிடம் இல்லை. காரணம், எதிரிகள் நம்
தலைவர்களின் ஈகோ-வை சரியான இடத்தில் தட்டி கத்தியின்றி இரத்தமின்றி வெற்றி பெற்றுவிடுகிறார்கள். அதற்குப் பிறகு உள்ள விஷயங்களை தலைவர்களை கண்மூடிப் பின்பற்றும் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

இறைவன் நாடினால் நல்லது நடக்கும்.

அன்புடன்
அபூ முஹம்மத்