Friday, April 28, 2006

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு:
'கருணாநிதி மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்...'
ஜெயினுலாப்தீன் கூறுகிறார்


தமுமுகவின் கூட்டுத் தலைமைத் துவம் பிடிக்காமல், 'ஈகோ'வின் காரணமாக வெளியேறிய ஜெய்னுலாபுதீனின் சாயம் தொடர்ந்து வெளுத்து வருகிறது.

ஆறு மாதத்தில் த.மு.மு.க.வை ஒழித்துக் காட்டுவேன் என்று அல்லாஹ்வை மறந்துவிட்டு சபதம் போட்ட ஜெய்னுலாபுதீன், இன்று எல்லா சமரசங்களுக்கும் உட்பட்டு முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.

வாழ்வுரிமை மாநாட்டின்போது ஜெயலலிதா இருக்கும் மேடையில் கூட உட்கார மாட்டேன் என்று பேசியவர், இப்போது ஜெயலலிதாவுக்கு முன்பாக அடக்கத் தோடு உட்கார வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார்.

தைரியமாகப் பொய் பேசுவது, தீப்பொறி ஆறுமுகம் போல் வெறித்தனமாக ஒருமையில் விமர்சிப்பது, தனது தவறுகளை மறைக்க அடுத்தவர்களின் மீது பழியைப் போடுவது, தனது வாதத்திறமைகளைப் பயன்படுத்தி 'பொய்யை' உண்மையைப் போலப் பேசிக் குழப்புவது என அரசியல்வாதிகளுக்கெல்லாம் 'குரு' ஆகிவிட்டார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான பழைய ஆணையைப் புனரமைத்த ஜெயலலிதாவின் செயலை, முஸ்லிம்களுக்கு ஆணையம் அமைத்துவிட்டது போலவும், அதனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து விட்டது போலவும் பேசுகிறார் ஜெய்னுலாபுதீன்.

''ஒரு பிரச்சினையைத் தூக்கி ஓரமாக வைப்பதும், கமிஷன் அமைப்பதும் ஒன்று'' என்று முழங்கியவர், ''ஒரு பாறாங்கல்லைத் தூக்கி குளத்தில் போடுவதும் கமிஷன் போடுவதும் ஒன்று'' என்று சொன்னவர் இன்று நேர்முரணாகப் பேசுகிறார்.

இக்கமிஷனை த.மு.மு.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்புகளும், முஸ்லிம் சமுதாயமும் நிராகரித்து விட்டன. இது தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் என சமுதாய அறிவு ஜீவிகள் ஏற்க மறுத்துவிட்டனர். கிறித்தவ சமுதாயம் இக்கமிஷனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன...

இது புதிதாகப் போடப்பட்ட பிற்பட்டோர் கமிஷன் அல்ல.

1993லிருந்து இருந்துவரும் செல்லாக்காசு ஆணையம்

அதுவும் டிசம்பர் 1, 2005 தேதியுடன் காலாவதியான ஆணையம்

ஏற்கனவே 13 வருடங்களாக எந்த நன்மையும் தராத ஆணையத்தை புதுப்பித்ததால் புதிதாக எந்த நன்மையும் கிடைக்கப் போவ தில்லை.

மார்ச் 1 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரசாணை வெளியிடப்பட்டதால் இதை தேர்தல் கமிஷன் செல்லாது என்று அறிவித்து விட்டதால் இந்த ஆணையமே ஏமாற்று வேலை என்பது தெளிவாகி விட்டது.

மேற்கண்ட காரணங்களால்தான் த.மு.மு.க.வும், முஸ்லிம் சமுதாயமும் ஜெ. போட்டதாகக் கூறப்படும் ஆணையத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம் த.மு.மு.க. இன்னொரு யோசனையையும் ஜெயலலிதாவுக்குச் சொன்னது.

ஆந்திரா வேறு! தமிழ்நாடு வேறு! ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் இல்லை. அதனால் அங்கு சட்டசிக்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். எனவே, அவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் (ஙஇஈ) சேர்ப்பதற்கு சட்டசிக்கல் எதுவும் வராது. அதை மிக எளிதாக செய்ய முடியும்.

''தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் 30 சதவிகிதம் மற்றும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் 20 சதவிதம் ஆகியவற்றிலிருந்து தனியாக முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீட்டை பிரித்து வழங்குங்கள்'' என்றோம். இப்படி கேரளாவில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற ஆதாரத்தையும் தமுமுக கொடுத்தது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்கான எளிமையான பிரச்சினை இல்லாத ஒரு வழி இருப்பதை நாம் சுட்டிக்காட்டியதை ஜெயலலிதா நிராகரித்தார்.

இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய வாய்ப்பை ஒதுக்கித் தள்ளிய ஜெயலலிதா, கொடுப்பது போல் கொடுக்க வேண்டும். அது பயனற்றதாகவும் இருக்க வேண்டும் என்ற பார்ப்பனீய சிந்தனையோடு, பயனற்ற அரசாணையை புதுப்பித்து நாடகமாடி இருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவெனில், த.மு.மு.க. கேட்டதுபோல ஜெய்னுலாபிதீனும் முஸ்லிம்களை ஙஇஈ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டு வந்தார்.

இப்போது ஜெயலலிதா 13 வருடங்களாக இருந்துவரும் ஒரு பயனற்ற கமிஷனை ஆணையை புதுப்பித்ததை முஸ்லிம்களுக்குக் காட்டி 'இதுதான் இடஒதுக்கீடு' என்று முஸ்லிம்களின் காதுகளில் பூச்சுற்றப் பார்க்கிறார்.

களவாடப்பட்ட உணர்வு பத்திரிகையில் அவரே நிறை வேற்றியுள்ள தீர்மானங்கள், த.மு.மு.க.வின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன. ஆனால் ஜெய்னுலாபுதீன், தான் நிறைவேற்றிய தீர்மானத் திற்கு எதிராகவே இன்று நிலைப்பாடு எடுக்கிறார். அதனால்தான் மனசாட்சியோடு பேச முடியாமல் மேடையில் திணறுகிறார். இடஒ துக்கீடு குறித்து தமுமுக கேட்டபடி மட்டுமல்ல... ஜைனுலாபிதீன் கேட்டபடியும் கூட ஜெயலலிதா எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா போட்டிருக்கும் ஆணை பயனற்ற ஒன்று என்று ஜெய்னுலாபுதீனின் மனசாட்சி உறுத்துவதால்தான் புத்திசாலித்தனமாக அவர் களவாடியுள்ள உணர்வு பத்திரிகையில் தப்பிக்கும் விதமாக எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவை சந்தித்த பிறகு, 'வேஸ்ட் பேப்பர்' எனப்படும் அரசாணை வெளியிடப்பட்ட பிறகு உணர்வில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

''முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே ஜெயலலிதாவுக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததையே கண்டித்தவர். கமிஷன் அறிக்கையை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இருப்பது போல, காரியம் முடிந்ததும் நம்மை (முஸ்லிம்களை) கைகழுவவும் வாய்ப்பு உள்ளது. (உணர்வு (மார்ச் 10-16, 2006)

என்ன சகோதரர்களே...! ஜெய்னுலாபுதீன் உணர்வு பத்திரிக்கையில் எழுதியுள் ளதைப் படித்து அதிர்ச்சி அடைகிறீர்களா?

அவர் தன்னைத்தானே புத்திசாலியாக(?) நினைக்கிறார். ஒருவேளை மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டால் அவர் முஸ்லிம்களைக் கைகழுவுவார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்.

1999 ஜூலை 4ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக் கான மக்கள் மத்தியில் ''நான் பிஜேபியோடு இனி கூட்டு சேரவே மாட்டேன்'' என்று வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, அந்த வாக்குறுதிகளைத் தூக்கி வீசிவிட்டு 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு வெட்கமின்றி கூட்டு சேர்ந்தார். அந்த அனுபவத்தை புரிந்து கொண்டுள்ள ஜெய்னுலாபுதீன், ஒருவேளை ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர் இந்த ஆணையத்தை குப்பையில் போடுவார் என்பதை உணர்ந்து விட்டார்.

அப்போது சமுதாய மக்கள் கேள்வி எழுப்பினால், 'நான்தான் அன்றே பத்திரிக் கையில் எழுதி விட்டேனே... ஜெயலலிதா இடஒதுக்கீட்டை வழங்குவார் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்க மாட்டோம் என்று'' என பதில் கூறுவார். அதற்குத் தான் இப்போதே உண்மையை எழுதிவிட்டார்.

எனவே, ஜெய்னுலாபுதீனின் நாடகத்தையும், வார்த்தை ஜாலத்தையும் சமுதாய மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் உணர்வு (அக்.28-நவ.03, 2005)ல் தலையங்கம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி ஜெய்னுலாபுதீன் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

''முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பிரச்சினையில் கருணாநிதி கடந்த காலங்களில் அசட்டையாக நடந்து கொண்டார். அதுபோல் இனியும் நடந்து கொள்வார் என்று முஸ்லிம்கள் அவநம்பிக்கைக் கொள்ள வேண்டியதில்லை.''


சமீபத்தில் 6 மாதத்திற்கு முன்புதான் களவாடப்பட்ட உணர்வில் இப்படி தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். அதற்குள் என்ன பேரம் நடந்ததோ தெரியவில்லை. திடீரென கிடைக்காத இடஒதுக்கீட்டிற்காக ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்.

இக்கட்டுரையைப் படிக்கும் ததஜ சகோதரர்கள் சமுதாய மக்களின் உணர்வு களுக்கு மரியாதை கொடுத்து, ஜெய்னுலாபுதீனின் நாடகத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.

No comments: