Monday, May 05, 2014

சதாவதானி செய்குத்தம்பி பாவலர் - இவரைத் தெறியுமா?



தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷயங்களை ஒரே நேரத்தில் கூர்ந்து கவனித்து, அந்நிகழ்வுகள் தொடர்பான குறுக்குக் கேள்விகளுக்கு சரியான பதிலை அளிப்பதை அவதானக் கலை(கிரகித்துக் கொள்ளுதல்) என்று கூறுவர்.

இவ்வாறு 8 விஷயங்களை ஒரே நேரத்தில் கிரகிக்கும் சக்தி படைத்த அறிஞர்களை ‘அஷ்டாவதானி’ என்றும், 10 விஷயங்களை கிரகிப்பவர்களை ‘தசாவதானி’ என்றும் கூறுவதுண்டு.

முதுகில் விழுந்து கொண்டிருக்கும் மல்லிகைப்பூ, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் மணிநாதம் உள்ளிட்டவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் உள் மனத்தில் எண்ணிக் கொண்டே வருவதிலும், எப்போது நிறுத்தி எந்த எண்ணிக்கை குறித்துக் கேட்டாலும் மிகச் சரியாக பதில் சொல்வதும், யாராவது வெண்பாவிற்கான ஈற்றடியினை தந்தால், அந்த ஈற்றடியைக் கொண்டு தளை தட்டாமல் வெண்பா யாத்துச் சொல்வதும் அவதானக் கலைகளில் ஒன்றாகும்.

இப்படி ஒரே நேரத்தில் 100 விஷயங்களை நுட்பமாக கவனித்து அறிந்து, அவை தொடர்பான ஐயங்களுக்கு தக்க பதில் அளிப்பதில் வல்லவராக திகழ்ந்த செய்குத்தம்பி பாவலர் ‘சதாவதானி’ (சதம் என்ற சமஸ்கிருத சொல்லானது தமிழில் நூறு என்ற எண்ணை குறிக்கும்) என்று போற்றப்பட்டார்.

நாஞ்சில் நாட்டு கோட்டாறு அருகேயுள்ள இடலாக்குடியில் ஆமீனா அம்மையார்-பக்கீர் மீரான் சாகிபு தம்பதியரின் மகனாக 31 -7-1874 அன்று செய்குத்தம்பி பிறந்தார்.

அந்தக் காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாஞ்சில் நாட்டில் மலையாள மொழியினை பாடத்திட்டமாக கொண்ட பள்ளிகளே நடந்து வந்தன. பிற்காலத்தில், மிகச் சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய செய்குத்தம்பி, இவ்வகை மலையாள மொழிப் பள்ளியில் படித்துத் தேர்ந்தது வியப்புக்குரியது.

இவரது சிந்தனை தமிழ் மேலேயே இருந்தது. இடலாக்குடியை அடுத்த பட்டாரியார் வீதியில் சங்கரநாராயண அண்ணாவி என்பவரிடம் முறையாகத் தமிழ் கற்றார். இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சியுற்றார். காளமேகப் புலவர், மாம்பழக்கவிச்சிங்க நாவலர் போல அந்தாதியாகவும் சிலேடையாகவும், யமகம், திரிபுகளாகவும் கவிபுனையும் கலை கைவரப் பெற்றார்.

ஞானியார் அப்பாவின் 'மெய்ஞ்ஞானத் திருப்பாடல் திரட்டு' என்னும் நூலை அச்சிட சென்னை 'இட்டா பார்த்தசாரதி நாயுடுவுக்கு' தமிழறிந்த இஸ்லாமியர் ஒருவர் தேவைப்பட்டார். சென்னை சென்று அந்நூலைச் சிறப்புடன் பதிப்பித்த செய்குதம்பிக்கு அப்போது வயது 21.

அவரது அறிவாற்றலைக் கண்டு ஸ்ரீபத்மவிலாசப் பதிப்பகத்திலேயே பிழை திருத்தும் புலவராக அவரை அமர்த்திக் கொண்டனர். மாதம் ரூ.60/- ஊதியமும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர்.  

இந்த காலகட்டத்தில்தான், சிந்தையை அள்ளும் சிறந்த காப்பியமாகிய சீறாப்புராணத்துக்கு சீரிய உரையெழுதிப் இவர் பதிப்பித்தார். இதனால் இவரது புகழ் நாடெங்கும் பரவியது. உரை எழுதுதல், பாட்டெழுதுதல், பதிப்பித்தல் மட்டுமின்றி, பல இடங்களில் திருக்குறள், கம்பராமாயணம், சீறாப்புராணம் பற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தினார்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற செய்குத்தம்பி பாவலர் 1907-ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி சென்னையில் தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் ‘சதாவதான’ நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டி, பலரது பாராட்டுகளைப் பெற்று, இன்று முதல் ‘சதாவதானி செய்குத்தம்பி பாவலர்’ என போற்றப்பட்டார்.

சிறந்த தமிழறிஞராகிய பாவலர், நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி, திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப் பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை, நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை நூல்களையும், வசன நடை காவியங்களையும் எழுதியவர்.

ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் இவர் தீவிரமாக பங்கேற்றார். நாஞ்சில் நாட்டில் 1920-ம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தொடங்கப்பட்ட போது இவர் கதர் ஆடைக்கு மாறினார். அந்நாட்களில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையில் நடந்தன.

தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பாவலர் மீது சிலர் வெறுப்பும் கொண்டனர். நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில், எங்கும், எப்பொழுதும் இலவசமாக ஏறிச் செல்லும் உரிமையுடன் பாவலர் சிறப்பிக்கப்பட்டிருந்தார். பின்னாளில், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக, தமது பேருந்துகளில் பயணிக்க கூடாது என்று அந்த அதிபர் பாவலருக்கு தடை விதித்து குறிப்பிடத்தக்கது.

ஒருமுறை அவர் சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்த போது, பாவலரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஓர் அன்பர், விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார். ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்பதுதான் அந்த ஈற்றடி. செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் துருக்கியர். முகம்மதிய மதத்தைச் சார்ந்த அவர், இந்த ஈற்றடிக்கு எப்படித்தான் பாடல் எழுதப் போகிறார் என்று சபையினர் திகைப்புடன் காத்திருந்தனர்.

இறுதி அடிக்கு முந்தைய அடியில் ராமபிரானது தம்பிகளான 'பரத, லட்சுமண, சத்' என்று வருமாறு பாவலர் அமைத்தார். இந்த அமைப்பின் மூலம் 'துருக்கனுக்கு ராமன் துணை' என்ற கடைசி அடி 'சத்துருக்கனுக்கு ராமன் துணை' என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. சபையினருடன் சேர்ந்து அவரிடம் குறும்பு செய்ய நினைத்தவரும் மனமகிழ்ச்சியுடன் பாவலரைப் பாராட்டினார்.

இவருக்குப் பின்னர் அதிகாரபூர்வமான முறையில் இதுவரை யாருமே ‘சதாவதானம்’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதில்லை என்று கூறப்படுகிறது. தமிழ், தமிழன் என்ற சொற்களின் மெய்ப்பொருளினை, தனது தனித்திறனின் மூலம் உலகுக்கு உணர்த்திய செய்குத்தம்பி பாவலர் 13-2-1950 அன்று காலமானார்.

அறிஞர் பெருமக்கள் பலரும் கலந்து கொண்ட அவரது இறுதி அஞ்சலி கூட்டத்துக்கு கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தலைமை தாங்கி, "ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப் பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய செந்தமிழ்ச் செல்வனைச் செய்குத்தம்பி பாவலனை எந்நாள் காண்போம் இனி" என்ற இரங்கற்பாவினைப் பாடினார்.

பாவலர் பிறந்து வாழ்ந்த தெரு இன்றளவும் 'பாவலர் தெரு' என்றே அழைக்கப்படுகிறது. இடலாக்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 'சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி' என்ற பெயரும் சூட்டப்பட்டுள்ளது. அங்கு பாவலர் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

செய்குத்தம்பி பாவலர் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் அருகே உள்ள இடலாக்குடியில் சதாவதானி செய்குத்தம்பி பாவலர் நினைவு மண்டபத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இங்கு 900 சதுர அடி பரப்பளவில் 125 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. நூல் நிலையமும், படிப்பகமும் செயல்பட்டு வருகின்றன. 31-12-2008 அன்று அவரது நினைவாகச் சிறப்புத் தபால் தலையை வெளியிட்டு இந்திய அரசும் கவுரவித்துள்ளது.  

நன்றி - மாலைமலா்

No comments: