எல்லா நாட்களையும் போலவேதான் இந்த நாளும்
விடியும் என்ற நம்பிகையில் உறங்கச் சென்ற போதிலும் இன்றைய நாள் எனது பல
நம்பிக்கைகளைத் தகர்த்த நாள்.
காலையிலேயே தமிழகத்தின் முக்கிய அமைப்பின்
தலைவர் ஒருவர் போன் செய்து, 'தம்பி! கசாப் தூக்கிலிடப்பட்டார் என்று
செய்திகள் வருகிறது. நான் வெளியில் இருக்கிறேன். உறுதிபடுத்திச் சொல்'
என்றார். அதிர்ச்சிகரமான செய்தி. சனியன் கரண்டு வேற இல்லை. தோழர்
சதீஸ்க்குப் போன் செய்து செய்தியைக் கூற, 'இருங்கள் அண்ணா! இணையத்தில்
பார்த்து சொல்கிறேன்' என்று கூறிவிட்டு செய்தியை உறுதிப்படுத்தினார்.
எரவாட சிறையில் அஜ்மல் கசாப் காலையில் தூக்கிலிடப்பட்டார்.
அவசர கோலத்தில் நடை பெற்ற இந்த
சட்டப்பூர்வமான கொலை, அதற்குப் பின் இருக்கும் அரசியல், தமிழக உணர்வாளர்களை
அச்சுறுத்தும் அரசியல் இப்படி பல வெங்காயங்களை யோசித்துக்கொண்டு அலுவலகம்
சென்றேன்.
காலை முதல் ஊடகங்கள் இந்தியாவுக்கு
விடுதலை கெடச்சிருச்சு என்ற ரேஞ்சில் அலறிக்கொண்டிருந்தன. தேசபக்தியின்
அளவுகோலே அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதை வரவேற்பதில்தான் இருக்கிறது என்ற
ரீதியில் அரசின் திரைக்கதைக்கு கனகச்சிதமாக நடித்துக் கொண்டிருந்தார்கள்
ஊடக பயங்கரவாதிகள்.
ஒரு திரைப்படம் என்றால் காமெடியன்களும் பபூன்களும் இல்லாமலா?
தமிழகத்தின் முன்னாள், இன்னாள் அரசியல்
காமெடியன்கள், காவி காமெடி, காங்கிரசு காமெடி, பச்சை காமெடி, மஞ்ச காமெடி
என விதவிதமாக பர்பாமன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்க…
தன் கட்சிக்காரன் கொலை வழக்கில்
குண்டாசில் உள்ளிருக்க, அம்மாவின் மனம் நோகாமல் நோம்பி கும்பிடும் தப்புத்
தாளம் தா.பாண்டியன், மாஸ்கோவில் மழை பெய்தால் மதுரையில் குடை பிடிக்க
பழக்கப்படுத்திகொண்ட ஜி.ராமகிருஷ்ணன்கள் என வரிசை கட்டி நிற்க ஒரே
அதிர்ச்சிதான் போங்க... 'நல்லவியங்களுக்கு இங்கே என்னடா வேலை' என மனித
உரிமை பேசியே வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்களை அதிர்ச்சியாய்ப்
பார்க்க வைச்சாங்க பாருங்க...
அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையை வரவேத்தாங்க.. சரி அது ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட கதை வசனம்.. அத உட்டுருவோம்.
அதுக்கு மேலதான் தா.பாண்டியன் பேசிக்
கொண்டிருக்கும்போது நான் உத்து உத்து டிவியின் கீழ் வரும் எழுத்தைப்
பார்த்தேன். ஆர்.எஸ்.எஸ்.ல் தா.பாண்டியன் சேர்ந்து விட்டாரோ என்று.. ஆனால்
மாநிலச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சின்னுதான் வந்தது.
முஸ்லீம்கள் வழிபாட்டுத் தளங்களில்
குண்டுவைத்தவர்கள்; தீவிரவாதிகள். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க
வேண்டும் என பேசிக்கொண்டே போனார். அப்படியே அவர் உருவில் நரேந்திர
மோடிகளும், எச்சி ராஜாக்களும், ராமகோபாலன்களும் வந்து போனார்கள்.
தா.பாண்டியன் அவர்களே!
இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த பல
குண்டுவெடிப்புகளுக்கு காரணம் யார் என்று தெரிந்தும் முஸ்லீம்கள் மேல் பலி
போடும் துணிச்சல் உங்களுக்கு எப்படி வந்தது?
அஜ்மீர் குண்டுவெடிப்பு, ஜம்தாவி ரயில்
குண்டுவெடிப்பு, மலேகான் குண்டுவெடிப்பு என இன்னும் பல குண்டுவெடிப்புகள்
இந்துத்துவ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக
நிரூபிக்கப்பட்டு அந்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும்
வேளையில் அந்த நிகழ்வுகளுக்கு முஸ்லீம்கள் மீது பழி சுமத்தும் உங்களை
இந்துத்துவத்தின் மறுஉருவமாகவே நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நாட்டில் எங்கு எது நடந்தாலும்
உடனடியாக முஸ்லீம்களின் மீது பலி சுமத்துவதும், இந்திய முஸ்லீம்களை
பாகிஸ்தானியர்களுக்கு சேவகம் செய்பவர்களாக சித்திரிப்பதும், ஒரு சமுகத்தையே
குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதும் இந்திய உளவுத் துறை மற்றும் இந்துத்துவ
பாசிச பயங்கரவாதிகளின் செயல்திட்டங்களில் ஒன்று. அவர்களின்
செயல்திட்டங்களுக்கு அவர்களின் திரைக்கதைக்கு நடிக்கும் புதிய காமெடியனாக
இப்போது நீங்கள்.
சிறுபான்மை மக்களை முரண் சக்திகளாக
முன்னிலைப்படுத்துவதில் அனைவரும் ஓர் அணியில். இதில் காவி என்ன...
போலிகம்யூனிஸ்ட் என்ன..? எல்லா அப்பன்களும் ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள்.... என்று இன்றைய தினம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை சமுகம் பல விடயங்களில் மார்க்க
ரீதியாக கம்யூனிஸ்டுகளிடம் முரண்பட்டாலும் சனநாயக உரிமைகளுக்காக, மனித
உரிமைகள் போற்றுவதில் தங்களின் அரசியல் பாதுகாவலர்களாக கம்யூனிஸ்டுகளைப்
பார்க்கும் வேளையில் உங்கள் அரசியல், இந்துத்துவ அரசியலை நோக்கி
போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து முஸ்லிம்கள் இன்றைய தினம் பெரும்
அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியா சனநாயக நாடு என்று உலக அரங்கில்
போலியாக நம்ப வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் கோர முகம் இன்றைக்கு
அம்மணமாக இளித்துக் கொண்டிருக்கிறது. சனநாயகத்திற்கும் மனித
உரிமைகளுக்கும் சவால்விடுவதாக அதன் செயல்கள் இன்றைக்கு அமைந்திருக்கின்றன.
உலக நாடுகள் சபையில் நேற்றைய தினம் மரண தண்டனைகளுக்கு எதிரான தீர்மானம்
கொண்டுவரப்பட்டபோது அதை மூர்க்கமாக எதிர்த்த நாடுகளில் ஒன்றாக இந்தியா
மாறியபின்னர், அது மனித உரிமைப் போராளிகளை, மரண தண்டனைக்கு எதிராக
போராடுபவர்களை நோக்கி சவால்களும், எச்சரிக்கையும் விடும் நோக்கில்
இன்றைக்கு அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
உலக அளவில் மரண தண்டனைக்கு எதிராக
நிற்கும் நாடுகளின் முன் திமிராக 'நேற்று அந்த வரைவுத் தீர்மானம் வெற்றி
பெற்றிருக்கலாம். ஆனால் மரணத்தையும், மரண தண்டனைகளையும் நாங்கள் முடிவு
செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்?' என்ற இந்தியாவின் கொக்கரிப்பைப்
பார்க்க முடிந்தது.
இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசின்
ஒரு பிரிவாக இருந்த வரலாறும், அதிலும் நீங்கள் மஞ்சள் கம்யூனிஸ்டாக
காங்கிரசின் சிறுபான்மைப் பிரிவு கம்யூனிஸ்டாக இருந்ததை நாங்கள்
மறக்கவில்லை. உங்கள் நிறம்தான் தற்போது சிவப்பு என்றாலும் அதில் ஊடுறுவிப்
பார்த்தால் அது காவியாக வெளுத்துள்ளதையும் இனிவரும் காலங்களில் நாங்கள்
உணர்ந்திருப்போம்.
உங்கள் காவி சிந்தனையை இனியும் தொடர்ந்து காட்டினால் வரலாற்றில் மிகக் கேவலமான பக்கங்களில் உங்கள் பெயர் எழுதப்படும்.
- உமர்கயான், முதன்மை ஒருங்கினைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம், தமிழ்நாடு
No comments:
Post a Comment