Sunday, June 07, 2009

நான் ராஜினாமா செய்யவில்லை, என்னை ஏமாற்றி விட்டனர் - தலைமை காஜி

முன்னால் அமைச்சர்கள் மதுசூதனன் மற்றும் ஓ.பி. பண்ணீர் செல்வத்துடன் தலைமை காஜி


சென்னை : "என்னை ஏமாற்றி, என்னிடம் ராஜினாமா கடிதத்தை அரசு அதிகாரிகள் பெற்றுள்ளனர். அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அரசின் தலைமை காஜி, சலாஹுதின் முகமது அயூப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை: கடந்த மே மாதம் 31ம் தேதி எனது அலுவலகத்துக்கு, தமிழக வக்பு வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எம்.ஜமாலுதீன் மற்றும் தாழ்த்தப்பட்டோர் துறை துணைச் செயலர் எஸ்.எஸ்.முகமது மசூத் இருவரும் வந்தனர். அவர்கள் இருவரும், "தமிழக வக்பு வாரியத்தை முழுமையாக மாற்றியமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். வாரியத்தை மாற்றியமைக்க ஏதுவாக, உங்கள் ராஜினாமா கடிதம் வேண்டும்' எனக் கோரினர். அதிர்ச்சி அடைந்த நான் ஜமாலுதீனிடம், மற்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதங்களைக் காண்பிக்கும்படிக் கேட்டேன். அதற்கு அவர், அந்தக் கடிதங்கள், அலுவலகத்தில் உள்ளதாகத் தெரிவித்தார். பிறகு அவர், ஏற்கனவே கையால் எழுதப்பட்ட ராஜினாமா கடிதம் ஒன்றைக் காட்டி, அதில் என்னைக் கையெழுத்து இடுமாறு கேட்டார்.

நான், "இத்தகைய பெரிய அரசுப் பணியில் இருப்பவர்கள், பொய் சொல்லமாட்டர்' என்று நினைத்து, அவர்கள் கேட்டபடி அந்த ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து இட்டுக் கோடுத்தேன். நான் ராஜினாமா செய்த 24 மணி நேரத்திற்குள், புதிய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். பின் தான் தெரிந்தது, தமிழக வக்பு வாரியத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் ராஜினாமா செய்யவில்லை என்று. எனக்குத் தவறான தகவல்களைத் தெரிவித்து, என்னை ஏமாற்றி, என்னிடம் கையெழுத்து வாங்கி உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் தக்க விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அரசுக்கு அளித்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

No comments: