Saturday, January 24, 2009

பள்ளிவாசல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு

ஜனவரி 23,2009,00:00

திட்டக்குடி:"பள்ளிவாசல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலர் கூறினார்.கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூத்தப்பன் குடிகாடு பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிகே ரஹமத் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகள் நேற்று மதியம் மர்ம நபர்களால் கற்கள் வீசி உடைக்கப்பட்டன.


இது குறித்து பள்ளிவாசல் தலைவர் பஷீர்கான், திட்டக்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இச் சம்பவம் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு மாவட்ட செயலர் சக்கூர் நிருபர்களிடம் கூறியதாவது : சில ஆண்டுகளுக்கு முன், இதே போல், மர்ம நபர்கள் இங்கு தாக்குதல் நடத்தினர். போலீசாரிடம் புகார் அளித்தும் பயனில்லை. தற்போது ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து டி.எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்துள்ளோம்.


அருகிலுள்ள ஆண்கள் மேல் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், விளையாடிய மாணவர்கள் மீது பழி போட, போலீசார் முயற்சிக் கின்றனர். கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறினால், விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். போலீசார் அலட்சியம் காட்டினால், தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு சக்கூர் கூறினார்.

லால்பேட்டை இணையதளம்

No comments: