Friday, October 17, 2008

தனி இட ஒதுக்கீடு வாபஸ் - தவிட்டை தங்கம் என்றவர்கள் தலைமறைவு

இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களை மட்டுமே ஏமாற்றமுடியும். சிந்திப்பீர் - செயல்முடிக்க அரசியல் அதிகாரத்தை நோக்கி வாரீர்.

தமிழக அரசு முஸ்லீம்களுக்கும் கிருஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதில் போட்டி போட்டுக்கொண்டு யார் பெற்றுத்தந்தது. என்று “தாம்“ “தூம்“ என்று குதித்தனர். துரோகத்திற்கு துணிந்து நின்று நன்றி அறிவிப்பும், கோடிகளை செலவு செய்து பாராட்டு விழாவும் நடத்தினர். பாராம்பரிய நூற்றாண்டு பம்மாத்து பாடுபவர்களோ! இட ஒதுக்கீடு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தார்கள். இன்று என்ன பதில் சொல்லப்போகிறார்கள். சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையை பாதிக்கும் இட ஒதுக்கீட்டு பித்தலாட்ட சூழ்ச்சியை கிருஸ்துவ பெருமக்கள் புரிந்து கொண்டு போஸ்டர் அடித்து பாராட்டவில்லை. மாறாக புத்தியை தீட்டினார்கள். உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும், சுழற்சி முறையில் கிருஸ்தவர்கள் முன்பு இருந்ததை விட, அதிகமாக புறக்கணிக்கபடுவதை கண்டு தெளிந்து சூழ்ச்சியின் சூட்சமத்தை புரிந்து முன்பு இருந்த இடஒதுக்கீட்டை தருமாறு தமிழக அரசை வற்புறுத்தினார்கள். தமிழக அரசு கிருஸ்தவர்கள் கோரிக்கையை ஏற்று கொண்டது.

கிருஸ்தவர்கள் தமிழக அரசின் நயவஞ்சக இட ஒதுக்கீட்டை ஏற்று கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். ஆம் வேகாத பொருளை வெள்ளி தட்டில் வைத்துக்கொடுத்தால் வாங்குவதற்கு நாங்கள் மதி கெட்டவர்கள் அல்ல என்பதை காட்டியிருக்கிறார்கள். கிருஸ்தவர்களின் இந்த இட ஒதுக்கீட்டு புரிதலை ஏற்றுக்கொண்ட முதல்வர் முஸ்லீம்களுக்கு மட்டும் அறிவித்தபடியே தொடரும் என்று அறிவித்துள்ளார். முஸ்லீம் களை தவிர வேறு யாரையும் முட்டாளாக்க முடியாது என்பதை வெளிப்படுத்திருக்கிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இடஒதுக்கீடு குளறுபடிகள் சரிசெய்யப்படும் என்றார். இன்றோ! சரிசெய்யப்படாமல் முஸ்லீம்கள் வரவேற்பதாக கூறுகிறார். இரட்டை நாக்கை சுழற்றுவதில் அரசியல் வாதிகள் கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

பகுத்து பார்க்க கட்டளை பிறப்பித்த திருக்குர்ஆனை பின்பற்றும் முஸ்லீம்களில் சிலர் வாரியத்தை வாங்கியதால் வாய்மூடி இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பித்தாலாட்டத்தை “ஆம்“ தவிட்டை தங்கம் என்று சொல்லி ஜோடிக்கிறார்கள் சர்வாதிகாரத்தில் மன்னர்களுக்கு ஜால்ரா போடுவதை போன்று ஜனநாயகத்தில் ஜால்ரா போடுகிறார்கள். முட்டாள்கள் முஸ்லீம்களாக இருக்க முடியாது. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பவர் மட்டுமே முஸ்லீம்களாக இருக்க முடியும். இளைஞர்களே, ஜமாத்தார்களே, அரசியல் சார்பற்ற அமைப்புகளே, போலிகளின் பொய் வேஷத்தை புரட்டி போட்டிட சமுதாயத்தை இட ஒதுக்கீட்டில் தலைகுனிய வைத்திருக்கும் தற்குறிகளை புறம் தள்ளி புதிய அரசியல் அத்தியாயம் படைக்க இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க துவண்ட சமுதாயத்தை தூக்கி நிறுத்திட முஸ்லீம்களின் முதல் பொது அரசியல் கட்சி (IDMK) ஆர்பரித்து வாரீர் வாரீர்.

இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி
தொடர்புக்கு : 9344510369 9443021050 9790318182

கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வாபஸ்! : பிஷப்புகள் கோரிக்கையை ஏற்றது அரசு

சென்னை: கிறிஸ்தவர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை வாபஸ் பெறுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு மட்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், வேலைவாய்ப்பில் குறிப்பாக ஆசிரியர் நியமனத்தில் கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு அதிகளவு இடம் கிடைக்காமல் போனதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.இது தொடர்பாக முதல்வரிடம் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் முறையிட்டனர்.

மயிலை பேராயர் சின்னப்பா: இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான கமிட்டிக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார். சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுடன் முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.முதல்வர் கருணாநிதியை நேற்று தலைமைச் செயலகத்தில் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, சி.எஸ்.ஐ., பேராயர் தேவகடாட்சம், காங்கிரஸ் சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும், வேலைவாய்ப்பிலும் கிறிஸ்தவர்கள் முன் பெற்ற வாய்ப்புகளை விட மிகக் குறைவாகவே பெற முடிந்துள்ளது. எனவே, கிறிஸ்தவர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று, முன்பிருந்தபடியே இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையைப் பரிசீலித்த பின் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:

பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க நல்லெண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தனி இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கொண்டு வந்தது.இதில், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் உரிய இடம் கிடைக்காமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பழைய படியே இட ஒதுக்கீடு : கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்னடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கிற ஆதாயத்தை அவர்கள் வரவேற்கின்றனர்.ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு முன்பிருந்த வாய்ப்புகளைக் குறைத்துள்ளது. எனவே, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழைய படியே இட ஒதுக்கீடு தொடர, அவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது என்றும், சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையைக் கருதி, அவர்களுக்கு மட்டும் இந்த தனி இட ஒதுக்கீடு ஆணையை நடமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

No comments: