Thursday, October 09, 2008

பொடாச் சட்டமும் பொதுத்தேர்தல் அணி சேர்க்கையும்!


ஜம்முவும் காஷ்மீரும் தீப்பற்றி எரியக் காண்கிறோம். பல்லாயிரக் கணக்கான ஜம்மு மக்கள் இந்துத்துவ அடையாளத்தை உயர்த்திப்பிடித்து விதீக்கு வந்து போராடுகிறார்கள். பொருளாதாரத் தடைவித்து சரக்குகளின் இயக்கத்தைத் தடுத்து காஷ்மீர் மக்களைத் தவிக்கச் செய்கிறார்கள். சாலைகள் மறியல், ரயில் பாதை மறியல், சட்ட மறுப்பு இயக்கம், வரிகொடா இயக்கம்- ஐந்து வயது குழந்தை கூடக் காவிக்கொடியேற்றி ஊர்வலத்தில் முழக்கமிடுவதை தொலைக்காட்சிகள் காட்டுகின்றன.
சுருங்கச்சொன்னால் காஷ்மீரை ஐம்மு பகைநாடாகப் பார்க்கிறது. ஐம்முவின் மக்கள் மதவெறி அரசியலுக்குத் தம்மை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டார்கள். இதன் எதிரொலி காஷ்மீர்த் தீவிரவாதிகளிடம் வெளிப்படுகிறது.இந்தக் கொதி நிலையை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் (குறிப்பாக விசுவ இந்து பரிசத்) பெரும்பங் காற்றியுள்ளன.
பாரதிய ஜனதாக் கட்சி இந்தச் சூழலில் தந்திரமான முறையில் சற்று விலகியே நின்றுகொண்டிருக்கிறது. உண்மையில் அது மிகப்பெரிய அரசியல் ஆதாயத்தை ஈட்டியுள்ளது.பா.ஜ.க.வின் குறிக்கோள்கள் இரண்டு:முதலாவது, ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற இந்தியர் எனும் அடையாளத்தை அழித்து இந்துத்துவ இந்தியர் என்ற மனப்பாங்கை உருவாக்கி வலுப்பெறச் செய்வது.இண்டாவதாக,மத்திய அரசின் வசம் அதி காரத்தை மேன்மெலும் குவித்துக் கொள்வது.இந்த இரண்டு குறிக்கோள் களையும் இணைத்து இந்துத்துவ பாசிசக் கொள்கை என்று கூறலாம்.முதலாவது குறிக்கோளான இந்துத்துவ அடையாளத்தை வலுப் படுத்தும் பணியை ஜம்முவில் விசுவ இந்துபரிசத் செய்து வருகிறது.
இது அமர் நாத் செல்லும் இந்து பக்தர்களின் பிரச்சினை என்ற வகையில் இன்று இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.இரண்டாவது குறிக்கோளான அதிகாரக் குவிப்பை நிறைவேற்றிக் கொள்ள வருகிற நாடாளுமன்றத் தேர்தலை பா.ஜ.க. பயன்படுத்திக் கொள்ள விருக்கிறது. தனக்கு வாக்களித்தால் மட்டுமே இந்தியாவின் இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிட்டும் என்ற செய்தியை அக்கட்சி பலவகைகளிலும் பரப்பி வருகிறது.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டமாகிய பொடா எனும் கொடிய அடக்குமுறைச் சட்டத்தின் மூலம்தான் முஸ்லிம்களையும், பிறவகை உரிமை கோரும் சக்திகளையும் நசுக்கி ஒடுக்க முடியும் என்று அது பிரச்சாரம் செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவுக் கட்சிகளும் பொடாச் சட்டத்தை விலக்கியதன் மூலம் நாட்டை மிகவும் பலவீனப்படுத்திவிட்டன என்பது அதன் வாதம். இந்தப் பலவீனத்தின் விளைவாகவே அண்மையில் நாடு முழுவதிலும் வெடிகுண்டுகள் வெடித்தன என்றும், காஷ்மீர் முஸ்லிம்கள் அமர்நாத் யாத்திரைக்குத் தடை போடுகிறார்கள் என்றும் அக்கட்சி பேசி வருகிறது.மோடியின் ஆட்சியில் உள்ள குசராத் மாநிலத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாகக் காட்டி வந்தார்கள் பா.ஜ.க.வினர். இப்போது அங்கும் ஏராள மான குண்டுகள் வெடித்திருக்கின்றன. இதற்கு பா.ஜ.க.வினர் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?
மத்தியில் பொடாச் சட்டம் தேவையில்லை என ஒதுக்கிவிட்ட காங்கிரஸ் கூட்டணியரசு குசராத் மாநில சட்டமன்றம் நிறைவேற்றி யுள்ள பொடா போன்ற ஒரு சட்டத்துக் கும் இதுவரை ஒப்புதல் தர மறுக்கிறதாம். இதனால்தான் பயங்கரவாதிகளை மோடியால் முற்றாக ஒடுக்க முடிய வில்லையாம்.ஆக மதவெறியை வளர்த்துப் பெரிய நெருப்பாக எரியச் செய்வதும் இவர்களே. பிறகு அதையே காரணமாகக் காட்டி அடக்குமுறை செய்ய அதிகாரம் கேட்பவர்களும் இவர்களே.காங்கிரஸ் கட்சிக்கும், அதன் தமிழகக் கூட்டாளியான தி.மு.க.வுக்கும் இதற்கு மாற்றான ஜனநாயக, மதச்சார்பற்ற திட்டம் ஏதுமில்லை. எந்த நல்ல கொள்கையிலும் ஊன்றி நிற்காமல் இவர்கள் தவறு மேல் தவறிழைத்துத் தனிமைப்பட்டுக் கிடக்கிறார்கள்.பொதுவுடைமைக் கட்சிகள் இந்தக் கொள்கையற்ற மக்கள் விரோத காங்கிரஸ் கூட்டணியை எதிர்ப்பது என்ற சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். பா.ம.க.வினர் தி.மு.க.வை எதிர்ப்பது என்ற அளவில் நிற்கிறார்கள். ஆனால் தவிர்க்கவியலாதவாறு இவர்களும் காலப் போக்கில் காங்கிரசுக்கு எதிர்நிலையெடுக்க வேண்டிவரும்.இக்கட்சிகளெல்லாம் அடுத்து செய்யவேண்டிய முக்கியமான பணிகள் உண்டு.
அவை, அ.தி.மு.க. குறித்து உடனடியாக ஒரு தெளிவான நிலையெடுப்பதும், குறைந்தபட்ச பொதுத்திட்ட அடிப்படையில் ஒரு கூட்டணியைத் தமிழக அளவில் தொடங்கி வளர்த்தெடுப்பதுமாகும்.அனைத்திந்திய அளவில் காங்கிரசையும், பா.ஜ.க.வையும் மக்கள் விரோத கட்சிகளாகப் பார்க்கும் இடதுசாரியினர் தமிழக அளவில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டையும் அவ் வாறே ஒதுக்கித்தள்ளத் தயங்கலாகாது. தமிழக மக்கள் மத்தியிலேயே அப்படி ஒதுக்கிவிடும் மனநிலை உருவாகி யிருக்கும் நிலையில் இடதுசாரிகளும், பா.ம.க. போன்ற சமூக நீதிக் கட்சிகளும் முடிவெடுப்பதில் காலந்தாழ்த்தலாகாது.
காங்கிரசும், தி.மு.க.வும் மக்களிடம் அம்பலப்பட்டு பலவீனமடைந்திருப்பது போலவே ஜெயலலிதாவும் பெருமள வுக்குப் பலவீனப்பட்டு தனிமைப் பட்டுள்ளார். அவர் மீண்டும் மக்கள் மத்தியில் நல்லபெயர் எடுப்பதற்காகவும், ஒரு பெரிய சக்தி என்று தன்னை மீண்டும் நிறுவிக்கொள்வதற்காகவும் முயன்று வருகிறார். இதன்பொருட்டு இடதுசாரிகளோடும், பா.ம.க.வோடும் உறவாடத் தயார் என்று அறிவிக்கிறார். அவர் அரசியல் மறுவாழ்வு பெற இக் கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்கலாகாது.
அவரால் இவர்களுக்கு மதிப்பில்லை. இவர்களால்தான் அவருக்குப் பெருமை சேரும். அனைத்திலும் மேலாக எந்தக் காரணத்திற்காக இடதுசாரிகளும், ஜனநாயகவாதிகளும் பா.ஜ.க.வை எதிர்க்கிறார்களோ அக்காரணம் ஜெயலலிதாவுக்கும் பொருந்துவதாகும். அது எவ்வாறெனப் பார்ப்போம்.முதலாவது, பொதுவாழ்வில் இந்துத்துவ மனப்பான்மையை நுழைத்து வளர்ப்பது. இது பா.ஜ.க. என்கிற ஒரு கட்சிக்கு மட்டுமே உரிய தன்மையன்று.
மராத்திய மாநிலத்தின் சிவசேனைக் கட்சிக்கும் இதே தன்மை உள்ளது. ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும் இந்த சிவசேனை போன்றதே.அடுத்ததாக அதிகாரக் குவிப்பு நோக்கம். இதன் வெளிப்பாடாக அமைவது பொடாச் சட்டம் குறித்த நிலைப்பாடு. இதில் அத்வானியும், ஜெயலலிதாவும் நூற்றுக்கு நூறு ஒத்த கருத்துடையவர்கள் என்பதில் எந்த ஐயமுமில்லை. அத்வானி போலவே இவரும் வெளிப்படையான பொடாச் சட்ட ஆதரவாளர்.
காங்கிரஸ் கட்சி ஒளிவுமறைவாக செய்யப் பார்க்கும் அடக்குமுறையை அத்வானி, ஜெயலலிதா, மோடி போன்றோர் நேரடியாகவும் ஆணவமாகவும் செய்யக்கூடியவர்கள்.உரிமை கோரும் அனைத்துப் பிரிவினரையும் கடுமையாகப் பாதிக்கக்கூடியது என்பதனால் இந்தப் பொடா குறித்து இன்னும் சற்று விளக்கமாகப் பார்க்க வேண்டும்.பொடாச் சட்டத்தை விலக்கிவிடுவதாக வாக்குறுதியளித்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தது.
பிறகு அதன்படியே விலக்கிக்கொள்ளவும் செய்தது. பொடாச் சட்டததின் சில கொடிய பிரிவுகள் குற்றப்பிரிவுச் சட்டத்தில் சேர்க்கப்பட்டன என்பது அதிர்ச்சி தரும் உண்மையாகும். ஆனால் அதுபோன்ற ஒரு கொடுஞ்சட்டம் வேறுபெயரில் மராட்டிய மாநிலத்திலும், கர்நாடகத்திலும் இன்றுவரை நடைமுறையில் இருந்துவருகிறது. அதனை நீக்க காங்கிரஸ் கூட்டணி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, அதே போன்ற அடக்குமுறைச் சட்டம் ஒன்று தங்களுக்கும் தேவை யென்று வேறு பல மாநிலங்களும் முடிவு செய்து மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முயற்சி செய்து வருகின்றன. குசராத், இராசஸ் தான், ஆந்திரம், உத்தரப்பிரதேசம், ஆகிய மாநிலங்கள்தான் இவை.
இவற்றுள் இராசஸ்தானிலும், ஆந்திரத் திலும் இச்சட்ட முன்வடிவு சட்டமன்றத் தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக மத்திய அரசின் ஒப்புதல் கோரி அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்திலும், குசராத்திலும் இச்சட்டங் கள் சட்டமன்றங்களில் வாக்களிப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.கட்டமைப்பு மூலம் நிகழ்த்தப்படும் குற்றங்களைத் தடுக்கும் சட்டம்
என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாநிலச் சட்டங்கள் அனைத்தும் பொடாச் சட்டத்தின் கொடிய தன்மைகள் வாய்க்கப்பெற்றமையே. அக்கொடிய அம்சங்கள் வருமாறு:1. கவால்துறை அதிகாரி (சித்திரவதை மூலம்) பெற்றுத்தரும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்கப்படும்.2. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் குற்றம் செய்தவராகவே நடத்தப்படுவார். குற்றம் செய்தார் என்று நிரூபிப்பது அரசு வக்கீலின் கடமையல்ல.3. பிணையில் வெளிவருவதற்குப் பெரிய தடைகள் உண்டு. விளைவாக விசாரணையின் போது நீண்ட காலம் சிறையில் கழிக்க வேண்டிவரும்.இந்தக் கொடிய தன்மைகள் கொண்ட பொடாச் சட்டத்தைக் காங்கிரஸ் கூட்டணி அரசு அனைத்திந்திய அளவில் ஒழிப்பதுபோல் காட்டிவிட்டு மாநில அளவில் வேறுபெயரில் மெல்ல மெல்ல உள்ளே நுழைய வழிசெய்து கொண்டு வருகிறது.
இந்த மோசடியை சட்டத்துறை வல்லுநர் ஏ.ஜி.நூரனி ஒரு கட்டுரை மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். (ஃபிரண்ட்லைன், 29-08-08). கட்டு ரையின் தலைப்பு: "மாறுவேடமணிந்த பொடா".இந்நிலையில், "மாறுவேட மெல்லாம் தேவையில்லை. நான் நேரடியாகவே சொல்கிறேன். பொடா நாட்டுக்குத் தேவை." என்று எக்காளமிடும் ஜெயலலிதா குறித்து நாமும் நேரடியாகவே இப்படிச் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்:
"இவர் இந்துத்துவ மனப்பான் மையில் ஊறியவர். அடக்குமுறைக் கொள்கையை ஆணவத்தோடு அறிவித்துக் கடைப்பிடிப்பவர். எனவே இவரோடு கூட்டணி என்பதும் பா.ஜ.க.வோடு கூட்டணி என்பதும் ஒன்றுதான்."- மருதமுத்து

No comments: