முஸ்லிம்கள் மீது தொடரும் தடியடி மனித நீதிப் பாசறை கண்டனம்
முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் வழியாகவும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் கலவர நோக்கில் வந்த சங்பரிவார சக்திகளுக்கு ஜனநாயக அடிப்படையில் எதிர்ப்பு தெரிவித்த ஒரே காரணத்திற்காக, புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
மத வழிபாட்டுத் தலங்களுக்கு கொடுக்க வேண்டிய கண்ணியத்தைக் கூட கொடுக்காமல் காவல்துறையினர் காட்டுமிராண்டித் தனமாக பள்ளிவாசலுக்குள் "பூட்ஸ்' கால்களுடன் நுழைந்து ரத்தம் வழிந்தோட மயங்கி விழும் அளவிற்கு நோன்பு வைத்திருந்த முஸ்லிம்களைத் தாக்கி பள்ளிவாசல் ஜன்னல் களையும் உடைத்து நொறுக்கியிருக்கின்றனர். தொழுவதற்காக பள்ளிவாசலுக்கு வந்த அப்பாவி முஸ்லிம்களை கைது செய்திருக்கின்றனர். காவல்துறையின் இந்த காட்டுமிராண்டித் தனமான கொடூரச் செயலை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது.
தடியடியில் காயம்பட்ட முஸ்லிம்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவிடாமல் இரத்தம் வழிந்தோடும் நிலையில் பள்ளிவாசலுக்குள்ளே தடுத்து வைத்து மனிதாபிமானமற்ற கொடூர செயலை அரங்கேற்றியிருக்கின்றது காவல்துறை. இதை மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கிறது. இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் பள்ளிவாசல் வழியாஉகவும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் தெருக்கள் வழியாகவும் சென்று மததுவேஷமாக பேசி முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களை அதில் பலிகடாக்களாக ஆக்க திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்று கூறிக் கொண்டு கடையநல்லூர், பேர்ணாம் பட்டு, வேலூர், வேடசந்தூர், திண்டுக்கல், முத்துப் பேட்டை என முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தடியடித் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை முஸ்லிம்களிடையே ஆழ்ந்த அதிர்ச்சியையும் பெரும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாகவும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி வழியாகவும் கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்தான் சமூக அமைதி கெடுவதற்கும், மதக் கலவரத்திற்கும் காரணம் என பல வருடங்களாக பல உண்மையறிவும் குழுக்கள் அறிக்கை சமர்ப்பித்தும் இந்துக்களும், முஸ்லிம்களும் பல்வேறு சமயங்களில் கருத்து தெரிவித்தும் கூட இதில் அரசு எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்? மக்கள் ரத்தம் தானே சிந்துகிறது என்ற அலட்சியமா? எனும் கேள்வி மக்கள் மனதில் எழும்பியுள்ளது.
ஆகவே தடியடி நடத்தி முஸ்லிம்களின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையின் மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. இந்த கொலைவெறியாட்டத்தை முன்னின்று நடத்தி சிறுபான்மை விரோதப் போக்குடனும் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி. அமீத் குமார் சிங், திருச்சி மாவட்ட எஸ்.பி. கலிய மூர்த்தி, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஆபாத் குமார், எஸ்.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சந்திர மோகன், எஸ்.பி. இன்ஸ்பெக்டர் சிவ பாஸ்கரன், மன்னார்குடி டி.எஸ்.பி. மாணிக்க வாசகம் ஆகியோரை உடனே இடமாற்றம் செய்து, துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது. முத்துப்பேட்டையில் பள்ளிவாசல் வழியாக கலவர நோக்கில் சங்பரிவார சக்திகள் நடத்தும் ஊர்வலத்தை ஒருபோதும் அரசு அனுமதிக்கக் கூடாது. சதுர்த்தி ஊர்வலத்திற்கு முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி அல்லாத மாற்றுப் பாதை அமைத்து நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையை மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது.
மேலும் வருங்காலங்களில் முத்துப்பேட்டை மட்டுமன்றி தமிழகம் முழுவதும் அமைதிக்கான இந்த செயல்திட்டத்தை அமுல்படுத்தி மாநிலம் முழுவதும் நிரந்தர அமைதிக்கு வழிகாண வேண்டும் என்ற கோரிக்கையும் மனித நீதிப் பாசறை முன் வைக்கின்றது. முத்துப்பேட்டையில் தனது காட்டுமிராண்டித் தனத்தை மறைப்பதற்காக காவல்துறையினர் பல அப்பாவி முஸ்லிம்களைகைது செய்துள்ளனர். காவல்துறையால் திட்டமிட்டு பலிகடாக்களாக ஆக்கப்பட்ட இந்த அப்பாவி முஸ்லிம்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என மனித நீதிப் பாசறை தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது. தடியடியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
அ. ஃபக்ருதீன்,
மாநிலச் செயலாளர்,
மனித நீதிப் பாசறை.
No comments:
Post a Comment