வக்பு போர்டு சேர்மன் மீது நடவடிக்கை கோரி வக்பு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை வக்போர்டு கல்லூரி மாணவர்கள் நேற்று கல்லூரி முதல்வரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மதுரை கே.கே.நகரில் உள்ள வக்புவாரிய கல்லூரி முதல்வராக ஐ.இஸ்மாயில் இருந்து வருகிறார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து கல்லூரியை சிறந்த முறையில் நிர்வகித்து மாணவர்களிடையே பாராட்டை பெற்றார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் முதல்வர் இஸ்மாயில் மீது பல்வேறு புகார்களை தெரிவித்தது. அவரை விருப்ப ஓய்வில் செல்லுமாறு வற்புறுத்தி வந்தது.
இருந்தபோதிலும் இஸ்மாயில் முதல்வர் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையில் முதல்வர் இஸ்மாயில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். அவரது விருப்ப ஓய்வை ஏற்றுக்கொள்வதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் இஸ்மாயிலை பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்று வற்புறுத்தி வக்போர்டு கல்லூரி மாணவ_மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்றுமுன்தினம் நூற்றுக்கணக்கான மாணவ_மாணவிகள் கே.கே.நகர் பகுதியில் நடுரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்போர்டு கல்லூரி மாணவ_மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். கல்லூரிக்கு உள்ளேயே வகுப்புகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் தமிழக அரசுக்கு போலியான முகவரியை கொடுத்து செயலாளராக செயல்பட்டு வரும் அசனை உடனடியாக நீக்க வேண்டும். வக்போர்டு சேர்மன் ஹைதர் அலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்லூரி முதல்வராக இஸ்மாயில் தொடர்ந்து நீடிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து மாணவ மாணவிகளும் நிறைவேற்றக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கைவிடுமாறு கல்லூரி நிர்வாகம் செய்த சமரச முயற்சியை மாணவ_மாணவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து வக்போர்டு கல்லூரி காலவரையின்றி விடுமுறை விடப்பட்டது.
செய்திகள் : முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment