Saturday, July 12, 2008

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்ல 3,181 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!


ஹஜ் புனித பயணம் செல்ல 3 ஆயிரத்து 181 பேர் குலுக்கல் முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி சார்பில் தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் முஸ்லிம்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி சென்னை எஸ்.ஐ.இ.டி. கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த குலுக்கலை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, ஹஜ் பயணம் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பம் கடந்த ஆண்டை விடவும், இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது என்றார்.

அதிகரிக்க கோரிக்கை:

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் ஆருண் எம்.பி. கூறும்போது, கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஹஜ் பயணம் செய்ய 3 ஆயிரத்து 850 பேருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இந்த ஆண்டு 3 ஆயிரத்து 181 பேருக்குத்தான் வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இந்த முறை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். எனவே மேலும், 500 முதல் ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

3 ஆயிரத்து 181 பேர் தேர்வு:
தமிழ்நாடு முழுவதும் இருந்து விண்ணப்பிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 181 பேர் ஆண்லைன் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் வாசுதேவன், தமிழ்நாடு ஹஜ்கமிட்டி உறுப்பினர் செயலர் அலாவுதீன், அசன்அலி எம்.எல்.ஏ., மத்திய சென்னை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரெசிடெண்ட் அபுபக்கர் எஸ்.கே.அகமதுஅலி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


நன்றி தினத் தந்தி

No comments: