Tuesday, June 24, 2008

தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வாதாடிய கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் பெயரிலும் விருது வழங்க வேண்டும்

தமிழக அரசு பல்வேறு தலைவர்கள் அறிஞர்கள் பெயரில் விருதுகள் வழங்குவது போல, கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்கள் பெயரிலும் விருது வழங்க தமிழக முதல்வர் கலைஞர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாட்டில் வாழ்த்துரை வழங்கி அவர் பேசியதாவது- கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக இயங்கி, இன்று அறுபதாம் ஆண்டு விழாவை மணிவிழா மாநாடு என பிரம்மாண்டமாகக் கொண்டாடுவதோடு, அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை எனக்கு வழங்கிய முஸ்லிம் லீகின் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அவர்ளுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் முதலில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயிதெமில்லத் அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்கு மட்டும் தலைவராக இருக்கவில்லை.

ஒட்டுமொத்த தமிழக சமுதாயத்துக்கும் தலைவராக திகழ்ந்தார். தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வாதாடிய பெருமை அவரைச் சாரும்.

அப்படிப்பட்ட கண்ணியமிக்க தலைவரை கவுரவிக்கும் வகையில், நமது தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் காயிதெமில்லத் பிறந்து வளர்ந்த திருநெல்வேலி பேட்டை மாநகர் சாலைக்கு காயிதெ மில்லத் சாலை என பெயர் சூட்டியது போல,
அவர் மறைந்து அடக்கமாகியிருக்கும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்கு காயிதெமில்லத் நெடுஞ்சாலை என பெயர் சூட்டி கவுரவப்படுத்தியது போல,
மற்ற தலைவர்களின் அறிஞர்களின் பெயரில் வழங்குவது போல

கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் பெயரில் தமிழக அரசின் சார்பில் விருது ஒன்றினை வழங்க முதலமைச்சர் கலைஞர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

மேலும் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியதுபோல, மத்திய அரசின் கல்வி வேலைவாய்ப்புகளிலும் சிறுபான்மையினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலான முயற்சிகளை முதலமைச்சர் கலைஞர் மேற்கொள்ளவேண்டுமெனவும், அதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.


No comments: