Monday, April 28, 2008

NCHRO செய்தி அறிக்கை

1. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படையினர் நிகழ்த்திய வன்கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி சதாசிவா கமிஷன் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உத்தரவிட்டது. தமிழக அரசின் சார்பாக நிவாரணத்தொகை அளிக்கப்பட்டதில் குறைவான நபர்களே பயனடைந்துள்ளனர்.

மேலும் அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீட்டு தொகை அளிக்கப்பட வேண்டும் என்றம் வன்கொடுமைகள் செய்த அதிரடிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 20.04.2008 அன்று மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், சோகோ டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மகபூப்பாட்ஷா, மனித உரிமைக் குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சோ. இராசன் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதர மனித உரிமை இயக்கங்களின் சார்பாக சத்தியமங்கலத்திலிருந்து சென்னை வரை நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நடைபயணம் சத்தியமங்கலத்தில் தொடங்கிய உடனேயே தமிழக அரசு அந்தப் போராட்டத்திற்கு தடைவிதித்துள்ளது. மேலும் நடைபயணத்தில் கலந்து கொண்ட மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிபேன், சோக்கோ டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் மகபூப் பாட்ஷா, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.சே. இராசன் உட்பட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் தமிழக அரசின் செயலை NCHRO வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் அனைவருக்கும் இழப்பீடு வழங்கி தவறு செய்த அதிரடிப்படையினர் மீது நடவடிக்கை எடுத்து செயல்பட வேண்டுமென NCHRO தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

2. திருவள்ளூர் மாவட்டத்தில் தட்டம்மைக்கான தடுப்பூசி போடச் சென்ற நான்கு குழந்தைகள் இறந்தது மிகவும் பரிதாபத்திற்குரியது. நோய்வராமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் தடுப்பூசி மருந்துகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இத்தகைய தடுப்பூசிகள் உயிர்க் கொல்லியாக மாறுவது சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கினையும் மக்களின் மீதான அக்கறையின்மையையும் காட்டுகின்றது.காலாவதியான தட்டம்மை தடுப்பூசி மருந்தினைப் போட்ட அரசு மருத்துவர், செவிலியர் மற்றும் அசிரத்தையாக செயல்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல காலாவதியான தடுப்பூசி மருந்துகள் தமிழகத்தின் இதர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ளதா என்பது ஆய்வு செய்யப்பட்டு அவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்பதையும் NCHRO கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
தி. லஜபதிராய். M.L
தலைவர்,
NCHRO தமிழ்நாடு
Mobile 98432 51788

No comments: