Saturday, April 19, 2008

மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஷானா நபீக்


<படத்தில் காண்பது றிஷானாவின் வீடும், குடும்பமும்>

சவூதி அரேபியா நீதிமன்றமும் மரணதண்டனை விதிக்கப்பட்ட றிஷானா நபீக்கின் எதிர்காலமும் இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவுக்குப்போய் வேலைக்க மர்த்தப்படுவதால் அல்லற்படும் ஏழைப்பெண்களின் துன்பக் கதைகளில் 19வயதுடைய றிஷானா நபீக்கின் கதை மிகவும் பரிதாபமானது என்று அந்த ஏழைப்பெண்ணுக்கு உதவ வரும் இரக்கநெஞ்சங்களுக்குப் புரியும். உண்மையிலேயே 17வயதுடைய (04.02.88) றிஷானா,23வயது என்று பதிக்கப்பட்ட ( 02.02.1982) அடையாள அட்டை கொடுக்கப்பட்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் ஏஜன்சிமூலம் 2005ம் ஆண்டு அனுப்பப்பட்டார். 04.05.2005ல் வீட்டு வேலைகளுக்காக திரு திருமதி அல்- ஒட்டெபி அவர்களின் வீட்டிற் சேர்ந்தார். 05.22.05ல் அந்த வீட்டின்நான்கு மாதக்குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

றிஷானாவுக்குத் தெரியாத அரேபிய மொழியில் வாக்குமூலம் எடுக்கப்பட்டு றிஷானா அந்த 4 மாதகுழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக ஆவணம் தயாரிக்கப்பட்டது. றிஷானாவுக்காக ஒரு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. றிஷானவுக்குப் புரியும் மொழியில் கேள்விகள் கேட்கப்படவில்லை. மொழிபெயர்ப்பாளரும் கொடுக்கப்படவில்லை. குழந்தையை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதால், றிஷானாவின் கழுத்தை வெட்டிக்கொலை செய்யப்பட்டு மரணதண்டனையை நிறைவேற்றவேண்டும் என்று கோர்ட் தீர்ப்பளித்தது. போனவருடம் இலங்கையைச் சேர்ந்தவர்களான பல இளைஞர்கள் பகிரங்கமாகக் குழுத்து வெட்டப்பட்டு மரணதணடனைக் கொடுமைக்காளானார்கள்.

றிஷானா என்ற ஏழைப்பெண்ணுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட விடயம் உலகிற்குத்தெரிய வந்ததும் அகில உலகம் பரந்த மனித உரிமைவாதிகள் றிஷானாவுக்குக் கொடுக்கப்பட்ட மரணதண்டனை நிறுத்தக்கோரிப்போராட அணிதிரண்டார்கள். அப்பீலுக்கான பணம் பல ஸ்தாபனங்கள், சாதாராண மனிதர்களாற் திரட்டப்பட்டது. றிஷானாவின் வழக்கு மேற்கோர்ட்டுக்கு எடுக்கப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி, அந்த விடயத்தைப் பழையபடி றிஷானாவை விசாரித்த கோர்ட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். றிஷானாவுக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதியின் கையில் பழையபடி அந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டதும் றிஷானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவரைக் கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவர் இன்னும் ஆஜராக வில்லை. இது எப்படியிருந்தாலும், சவூதி அரேபிய சட்டங்களின்படி அங்கு "ஷரியத் சட்டம்" என்ற இஸ்லாமியச் சட்டம்' நடை முறையில் இருக்கிறது. அச்சட்டத்தின்படி இறந்தவிட்ட குழந்தையின் தாயார் மன்னிப்புக் கொடுக்காத வரைக்கும் கோர்ட்டார் எதுவும் செய்து றிஷானாவுக்கு விடுதலை கொடுக்க மாட்டார்கள். வழக்குமன்றத்தால் எடுக்கப்படும் மனித உரிமை விவாதங்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பது தெரியாது. 'பழைய குருடி கதவைத்திறடி' என்ற பழமொழிக்கேற்ப, பழைய நீதிபதி பழையகோர்ட் என்று றிஷானாவின் எதிர்காலம் ஒரு பெரிய சிக்கலுக்குள் மாட்டியிருக்கிறது. அண்மையில் லண்டனுக்கு வந்திருந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், மதிப்புக்குரிய றோஹித பொகலாகமவைச் சந்தித்து, றிஷானாவின் விடயம் பற்றி விசாரித்தபோது, ''இந்த விடயம் பற்றி சவூதி அரேபியாவின் இளவரசருடன் பேசினேன், சவூதி அரேபியாவில் 'ஷரியத் சட்டம்' நடைமுறையிலிருப்பதால், இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காதவரை கோர்ட்டாரால் எதுவும் செய்யமுடியாது. தயவு செய்து, றிஷானாவின் விடுதலைக்காக நீங்கள் செய்யும் பிரசார வேலைகளைத் தொடருங்கள். இறந்த குழந்தையின் தாயிடம் பாவமன்னிப்பைக் கோருங்கள். உலக மயப்படுத்தப்பட்ட உங்கள் பிரசாரம்தான் ஏழைப் பெண்ணான றிஷானாவின் விடுதைக்கு உதவி செய்யும்'' என்று கேட்டுக்கொண்டார். இரக்க மனம் கொண்ட மனிதர்களாகிய நாங்கள் அத்தனைபேரும், ' தாயே, இறந்துவிட்ட உங்கள் குழந்தைக்காக நாங்கள் எங்கள் துக்கத்தைத் தெருவித்துக் கொள்கிறோம், கடவுள் பெயரால் பெரிய மனது கொண்டு றிஷானாவை மன்னித்து விடுங்கள்'' என்று அந்தத் தாயை மன்றாட்டமாய் வேண்டிக் கொள்ளவேண்டும். இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைச் செலுத்தும் அதேநேரம், வறுமையின் காரணமாக இந்தச் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்ட ஏழைப்பெண்ணான றிஷானாவின் விடுதலைக்கும் போராடுவோம். அந்தக் குழந்தைக்குப்பால் கொடுக்கும் போது, தொண்டையில் பால் சிக்கி இறந்ததற்கு றிஷானாதான் பொறுப்பு என்றும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. குழந்தைக்குப்பால் தொண்டையில் சிக்கியதும், றிஷானா குழந்தையின் நிலைகண்டு உதவிக்கு ஆட்களைக் கூப்பிட்டதாகவும் அதற்கிடையில் குழந்தை இறந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைக்கு ஏற்கனெவே பால் குடிக்கமுடியாத பிரச்சினை தொடர்ந்த ஏதும் வைத்தியச்சிக்கல்கள் இருந்ததா என்று ஒன்றும் தெரியாது. குழந்தையை பிரேத விசாரணை (போஸ்ட்மோர்ட்டம்) செய்யவில்லை. அத்துடன், தாய் தகப்பனுக்கு எழுதிய கடிதத்தில், தன்னை வேலைக்கு அமர்த்தியவீட்டார் தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வாக்குமூலம் எடுத்ததாக றிஷானா குறிப்பிட்டிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. காலை மூன்ற்மணியிலிருந்து இரவு பதினொருமணிவரை தான் வேலை வாங்கப்பட்டதாகவும் தனது பெற்றோருக்கு றிஷானா எழுதியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. வீட்டு வேலைக்கு என்றுபேசி ஆள் எடுத்து குழந்தை பார்க்கும் அனுபவமில்லாத இளம் பெண்ணிடம் பலவேலைகளையும் குழந்தைப்பார்க்கும் வேலையும் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். மத்திய தரைக்கடல் நாடுகளில் இப்படி எத்தனையோ இலங்கைப் பெண்கள் மிகவும் பாரிய துன்பங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களில் றிஷானாவின் துயரும் ஒன்று. அனாதாராவாக அல்லற்படும் இப்பெண்ணுக்கு மனித உரிமையில் நம்பிக்கை உள்ளவர்கள் தயவுசெய்து உதவுங்கள். இறந்த குழந்தையின் தாயின் மன்னிப்பைக்கேட்டு ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதுங்கள். இந்தப் பெண்ணுக்கு உதவுவது உங்கள் குழந்தைகளுக்கு இறைவனின் ஆசியைத் தரும். ஒருஉயிரைக் காப்பாற்ற நீங்கள் எழுதும் ஒருகடிதம் ஊன்றுகோலாகவிருந்து இந்தப்பெண் விடுதலையாகும் நற்பணியைச் செய்யுங்கள்.

இறந்த குழந்தையின் தாயிடம் றிஷானாவுக்காக மன்னிப்புக் கேட்கும் கடித்தத்தைப் பின்வரும் விலாசத்துக்கு எழுதவும்.

Clemency for Rizana Nafeek
Mr. Naif Jizijan Khalaf Al-Otebi
c/o Sri Lankan Embassy
PO Box 94360, Riyadh-11693
Saudi Arabia.

No comments: