Monday, April 21, 2008

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

ரஷியாவில் படித்து டாக்டர் பட்டம் பெறுபவர்களுக்காக

தமிழகத்தில் இந்தோ - ரஷிய மருத்துவமனை தொடங்க வேண்டும்

டாக்டர் மீர் முஸ்தபா உசேன் வலியுறுத்தல்

ரஷியாவில் மருத்துவம் படித்து விட்டு தமிழகம் திரும்பும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக இந்தோ - ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று டாக்டர் மீர் முஸ்தபா உசேன் கூறினார்.

கருத்தரங்கு

ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனம் மற்றும் ரஷியாவில் உள்ள ஸ்டவராபோல் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே ரஷியாவில் மருத்துவம் படிக்க மாணவர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நிலையில் ஏ.ஜே. அறக்கட்டளை சார்பில் ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் மருத்துவ கல்வி படிப்பது குறித்து கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அபுபேலஸ் ஓட்டலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவன தலைவர் ஏ. அமீர்ஜஹான் தலைமை தாங்கினார். ரஷிய நாட்டின் ஸ்டவரோபோல் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தின் டீன் பேராசிரியர் ஸ்டோயனா வி சமன்ஸ்கயா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

அங்கீகாரம்

உயர்கல்வி, வேலைவாய்ப்புக்காக மேற்கத்திய நாடுகளையே சார்ந்திருந்த இளைஞர்களின் பார்வை தற்போது ரஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற கிழக்கத்திய நாடுகளின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் ரஷியாவில் உள்ள 3 பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற 10 பல்கலைக்கழகங்கள் தற்போது ரஷியாவில் உள்ளன.

வெளிநாட்டில் சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், அந்த பல்கலைக்கழகம் இந்திய மருத்துவ கவுன்சில், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளதா ? என்பதையும், ஆங்கில வழிக்கல்வியில் கற்றுக்கொடுக்கப்படுகிறதா ? என்பதையும் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். படித்துவிட்டு வருபவர்களுக்கு இங்கு சரியான மரியாதை தரப்படுவதில்லை.

முன் வர வேண்டும்

அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகிறார்கள். இதற்கு ஒரு தீர்வாக இந்தோ - ரஷிய மருத்துவமனையை தொடங்க வேண்டும். அங்கு படிப்பு முடித்து விட்டு வரும் மாணவர்களுக்கு வேலை கொடுப்பதற்கும், பயிற்சி அளிக்கவும் அந்த மருத்துவமனை உபயோகமாக இருக்கும். இதற்கு ரஷியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகங்கள் முன் வரவேண்டும்.

இவ்வாறு டாக்டர் மீர் முஸ்தபா உசேன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.ஜே. அறக்கட்டளை கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் ரஷிய மருத்துவ கல்லூரிகளில் பயிலும் தமிழக மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
A J TRUST EDUCATIONAL CONSULTANCY
Crescent Court Building
No 963 Poonamallee High Road
Chennai 600 084
Tel / Fax : 044 2661 4485 / 3295 9991
Mobile : 93 828 62393 / 98 406 52729 / 93800 05652
ajtrustchennai@yahoo.com
najeerul2003@yahoo.co.in
www.medicaleducationindiarussia.org

No comments: