Saturday, April 12, 2008

கற்றதும் பெற்றதும் (பள்ளி செல்ல மனமில்லையோ?)முன்பெல்லாம் அதிகாலையில் முஸ்லிம் சிறுவர் சிறுமியர் கையில் ஒரு எழுது பலகையையுடன் அல்லது குர்ஆனின் ஆரம்பப்பாடக் குறிப்புடன் (யஸர்னல் குர்ஆன்) தூக்கக் கலக்கத்தில் முஹல்லா பள்ளிவாசல் நோக்கி விரைந்து கொண்டிருப்பர். சிறுவர்கள் தொப்பியும் (பழைய காலத்து கருநீல வண்ண வெல்வெட் தொப்பியில் தண்ணீர்பட்டு சுருங்கியிருந்தால் கன்றுக் குட்டி நக்கியதாகக் கேலி செய்த/செய்யப்பட்ட சிறுவர்களில் அடியேனும் ஒருவன் :-) சிறுமிகள் முக்காட்டுடன் குர்ஆனை நெஞ்சில் சுமந்து செல்லும் அழகே தனிதான்! அது ஒரு காலம்!
.
மேல்நிலைப்பள்ளிப் பாடத்திட்டமும் பகுதி நேரப் படிப்பாக (SHIFT SYSTEM) இருந்ததால் ஆறு முதல் எட்டாம்வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களும் குர்ஆன் பள்ளியைத் தவிர்க்காமல் படித்து வந்தனர். பிற்காலத்தில் இத்தகைய (SHIFT SYSTEM) கைவிடப்பட்டு முழுநேரமாக மாறியது. இதனால் அதிகாலையில் குர்ஆன் பள்ளிக்குச் செல்லும் வழக்கம், வழக்கொழிந்து போனது.
.
இதனை உணர்ந்த சில உலமாக்கள் ஒன்றுகூடி சிறார்களுக்கான குர்ஆன் மதரசாவை புதுப்பொழிவுடன் நவீன கல்விமுறைகளுடன் துவங்கி ஓரிரு ஆண்டுகள் சிறப்பாக நடந்து வந்தது. ஆஸ்பத்திரித் தெருவில் இத்தகைய மதரஸா வெகுசிறப்பாக நடந்து வந்தது.
.
வழக்கமாக அலீஃ,பே, த்தே..ஆகிய அரபி எழுத்துக்களையும் ஸபர்,ஸேர் ஆகிய குறியீடுகளையும் இணைத்துப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதும் குர்ஆன் முடித்து விட்டதாகச் சொல்லி ஒருநாள் 'ஹத்தம்' ஓதி நார்ஸா வழங்கும் முறையை மாற்றியமைத்து, அரபு எழுத்துக்களுடன் இலக்கணம், பேச்சாற்றல் மற்றும் ஃபிக்ஹ் பற்றிய அறிவு, வயது வந்தவர்களுக்கான இஸ்லாமியக் குளிப்புமுறை,இளைஞர்களுக்குத் தாம்பத்ய ஆலோசனை போன்ற அவசிய மார்க்கக் கல்விகளையும் வழங்கி வந்தார்கள்.இதுவும் பிற்காலத்தில் செயலிழந்து போனது.
.
இப்படியாக குர்ஆன் பள்ளிகளிலிருந்து நமது மாணாக்கர்கள் தூரமானது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் குர்ஆன் போதனை செய்துவந்த லெப்பைகள் எனப்படும் உஸ்தாதுகளும் தங்கள் தொழிலை !? மாற்றிக் கொண்டார்கள். காசுக்காக குர்ஆனை விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுடன் குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் மாற்றமானவற்றையும் போதிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு புறந்தள்ளப்பட்டார்கள். (பெரும்பாலோர் வயிற்றுப் பிழைப்புக்காக குர்ஆன் போதனையையே பிரதானத் தொழிலாகச் செய்து வந்ததுடன் ஹத்தம்,பாத்திஹா போன்ற பித்ஹத்களையும் பயிற்றுவித்தும் செயல்படுத்தியும் வந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை).
.
சுயமாக குர்ஆன்-ஹதீஸைக் கற்று விளங்கிக் கொள்ளலாம் என்ற புரட்சி 1980களின் தொடக்கத்தில் வெடித்தது! ஏற்கனவே குர்ஆன் ஹதீஸ்களைக் கற்று அறிஞர்களாக அறியப்பட்ட உலமாக்களும் லெப்பைகளின் லிஸ்டில் சேர்க்கப் பட்டு, மார்க்கத்தைக் கற்றவர்களைவிட மார்க்க விவாதக்கலை உலமாக்கள் பரவலானார்கள்! பண்டைய 7-8 ஆண்டுகள் குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ்களை விளங்கும் முறைமாறி ஒரே ஆண்டில் ஆலிமாகலாம் என்ற நிலை ஏற்பட்டு INSTANT உலமாக்கள் உருவானார்கள்!
.
லெப்பைகளின் புரோகிதம் மற்றும் குர்ஆன் சார்ந்த தொழிலை (ஹத்து, தாயத்து எழுதுதலைக் கிண்டல் செய்தவர்கள் பின்னர் புத்தகங்கள் எழுதியும், மார்க்க சீடிக்கள் விற்றும் தொழில் செய்யலானார்கள்! வசதி வாய்ப்புகள் பெருகியதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் இஸ்லாத்தை எடுத்து வைக்கும் ஹைடெக் இணைய உலமாக்களானர்கள்!
.
பள்ளிகளை மூடச்செய்த பள்ளிக்கூட பாடமுறை,ஆலிம்களை அவமதித்தல் போன்றவற்றால் மாணவர்களுக்கும் இஸ்லாத்திற்கும்/குர்ஆன் கற்றலுக்கும் இடைவெளி அதிகரித்து விட்டது. "குர்ஆனும் நபிமொழியும் மட்டுமே எங்கள் வாழ்க்கை" என்றவர்கள்தான் பின்னர் குர்ஆன் வலியுறுத்தும் ஒற்றுமைக்கும், சகமுஸ்லிம் சகோதரனைக்குறை கூறி இகழ்ந்துரைக்க வேண்டாம் என்ற ஹதீஸுக்கும் மாறாக நடந்து கொண்டிருக்கிறார்கள்!
.
நான் மார்க்கத்தை முற்றிலும் அறிந்தவனல்லன்; பண்டைய உஸ்தாதுகள் மூலமும், பிற்கால ஹஜ்ரத்கள் மூலமும், நவீன புரட்சிகர உலமாக்கள் மூலமும் ஓரளவு மார்க்கத்தை அவ்வப்போது விளங்கியவன். தத்தமது தர்க்கங்களும் போதனைகளும் சரியா என்று சுயபரிசோதனை செய்யும் நிலையில் மேற்சொன்ன உஸ்தாதுகள்,ஹஜ்ரத்கள்,ஆலிம்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துப் பிரிவு முஸ்லிம்களும் உள்ளனர்.
.
இதை சுட்டிக்காட்ட வேண்டும் ஆவலில்தான் இப்பதிவை எழுதியுள்ளேன். யாரையும் புண்படுத்துவதற்காக இப்பதிவு எழுதப்படவில்லை; மாறாக நமது குழந்தைகளுக்கு குர்ஆனுடன் கொஞ்சம் நஞ்சமிருந்த தொடர்பை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் மிகைப்பில் எழுதப்பட்டது.
.
எது சரி? யார் பக்கம் தவறு? என்று பரஸ்பரம் வாதித்து மேலும் தாமதிப்பதை விட, குர்ஆன் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் நமதூர்களில் எப்படிக் கொண்டு வருவது, என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைக்கலாமே!
.
- <அபூஅஸீலா-துபாய்>>
.

No comments: