துபாயில் திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி வளைகுடா தமிழர் பேரவை சார்பில் சனிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக்கழக புரவலர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.ஆல்பர்ட் வரவேற்புரை நிகழ்த்தினார்.அஷ்ரப் அலி தனது உரையில் இந்திய தூதரக அதிகாரிகள் தமிழர்கள் பிரச்சனைக்காக அணுகும் போது மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். ஒரு தமிழர் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்து வருவதற்கு வருத்தம் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்கள் தனது ஏற்புரையில் சிறுபான்மை மக்களின் ஒரே தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் தான் என்றார். அதனால் தான் பலர் முயற்சி மேற்கொண்டும் கலைஞர் அவர்கள் மட்டுமே சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். அமீரகத்தில் தமிழர்களுக்கு எவ்வித இன்னல்கள் ஏற்பட்டாலும் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் முதல்வர் கலைஞர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து அப்துல் ஜப்பார்,தமிழ்நாடு பண்பாட்டுக் கழக புரவலர் முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். முஹம்மது சபீர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புரவலர் நடராஜன், அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், கவிஞர் இசாக், தொழிலதிபர்கள் முஹம்மது ஃபாரூக், காஜா முகைதீன், முஹம்மது முஸ்லிம், சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன், ஆசியாநெட் வானொலி தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆசிப் மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்வர் பாஷ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment