Friday, February 29, 2008

கடையநல்லூர் காவல்துறை அராஜகம் MNP கண்டன ஆர்ப்பாட்டம்

அருளான் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

கடையநல்லூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பி. அராஜகம்
முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு தடியடி
தமிழக அரசே நடவடிக்கை எடு.
மதுரையில் MNP கண்டன ஆர்ப்பாட்டம்




2006ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி கோவையை தகர்க்க சதி செய்ததாகவும், வெடிகுண்டு களை வைத்திருந்ததாகவும் 5 முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவுசெய்து கைது செய்தவர் கோவை மாநகர உளவுத்துறை ஏ.சி. ரத்னசபாபதி. இச்சம்பவத்துடன் எம்.என்.பி. யையும் இணைத்து வெடிகுண்டு சதி நாடகத்தையும் அரங்கேற்றினார்.


ஒன்றுபட்ட முஸ்லிம்களின் போராட்டம் மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய குரல்கள், மனித நீதிப் பாசறையின் சட்டரீதியான தொடர் போராட்டங்கள், மதுரை வைகை சட்ட நிறுவனத்தின் உண்மை அறியும் குழு நடத்திய நேரடி கள ஆய்வு, ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், தினமணி ஆகிய பத்திரிகைகள் வெளியிட்ட உண்மைச் செய்தி ஆகியவற்றின் விளைவாக தமிழக அரசு இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக்குழு
(எஸ்.ஐ.டி.) விடம் ஒப்படைத்தது. இரண்டு வருட காலமாக தீவிர புலனாய்வு விசாரனை மேற்கொண்ட எஸ்.ஐ.டி. கடந்த அக்டோபர் மாதம் இவ்வழக்கின் இறுதி அறிக்கையை கோவை ஏழாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்தது.


இதில் இந்த மொத்த வெடிகுண்டு நாடகமும் கோவை உளவுத்துறை ஏ.சி. ரத்னசபாபதி யும் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளாலும் நடத்தப் பட்டதுதான் என்பது நிரூபணமாகியுள்ளது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், வெடிகுண்டுகள் போலீஸாராலேயே தயார் செய்யப்பட்டது என்பதும் எஸ்.ஐ.டி. அறிக்கையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முஸ்லிம்கள் மீதும் எம்.என்.பி. மீதும் பொய் வழக்குப் போட்ட ஏ.சி. ரத்னசபாபதியையும் அவருக்கு உடந்தையாக இருந்த காவல்துறை அதிகாரிகளையும் டிஸ்மிஸ் செய்யக் கோரி நேற்று 27.02.2008 அன்று கோவையில் எம்.என்.பி. யின் மாநிலத் தலைவர் முஹம்மது அலீ ஜின்னா அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக ரத்தினசபாபதியை டிஸ்மிஸ் செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரம் நடத்த எம்.என்.பி. தலைமையகம் முடிவு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று 28.02.2008 அன்று காலை 6.30 மணியளவில் கடையநல்லூரில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த எம்.என்.பி. உறுப்பினர்களான லுக்மான் ஹக்கீம், பள்ளிவாசல் பேஷ்இமாம் அப்துல்காதர் ஆகிய இருவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்துள்ளார் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.கே. ரவி. காவல் நிலையத்தில் வைத்து அவர்களை அடித்துத் துன்புறுத்தி சித்திரவதை செய்துள்ளார். டி.எஸ்.பி. அசோக் குமார்.

சட்டத்திற்குப் புறம்பாக இவர்கள் செய்த இந்த அராஜகச் செயலைக் கண்டித்து நேற்று 28.02.2008 மாலை 4.30 மணிக்கு கடையநல்லூரில் மனித நீதிப் பாசறை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த டி.எஸ்.பி.யும் இன்ஸ்பெக்டரும் தங்கள் போலீஸ் படையின் துணையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி
நடத்தினர். இதில் 10 முஸ்லிம்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த மொத்த மனித உரிமை மீறல்களையும் அராஜகத்தையும் திசை திருப்பும் விதமாக, முஸ்லிம்கள் போலீஸாரைத் தாக்கினர் என்று கதை சொல்ல ஆரம்பித்துள்ளனர் இந்த டி.எஸ். பி.யும் இன்ஸ்பெக்டரும். ஜனநாயக ரீதியில் போஸ்டர் ஒட்டுவதற்கும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கும் கூட அனுமதிக்காத ஒரு சர்வாதிகாரப் போக்கை கடையநல்லூர் டி.எஸ்.பியும் இன்ஸ்பெக்டரும் மேற்கொண்டு முஸ்லிம்கள் மீது வன்முறை ஆயுதத்தைப் பிரயோகித்து வருவது இந்த தேசத்தின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
முஸ்லிம்கள் இந்த தேசத்தின் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.
அரசியலைமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துக்களை வெளிப்படுத்தவும் அடிப்படை உரிமை கூட சிறுபான்மையினரின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கம் அரசு ஆண்டு கொண்டி ருக்கும் இந்தத் தமிழகத்தில் மறுக்கப்படுவது மொத்த முஸ்லிம் சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் சிறுபாண்மையினர் நலன் காக்கும் அரசு என கலைஞர் அரசை தேர்ந்தெடுத்த முஸ்லிம்கள் திகைத்து நிற்கும் அளவிற்கு இந்த அராஜகச் செயல் டி.எஸ்.பி., இன்ஸ்பக்டரால் அரங்கேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசின் மீது முஸ்லிம் சமுதாயத்தின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுக்கும் திருப்பணியை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து கொள்ள வேண்டும்.


கோவை வெடிகுண்டு சதி நாடகத்தின் மூளையாக ரத்னசபாபதிக்கு துணையாக நின்று கடையநல்லூரில் முஸ்லிம்களை நசுக்கிக் கொண்டிருக்கும் டி.எஸ்.பி. அசோக் குமாரையும் இன்ஸ்பெக்டர் பி.கே. ரவியையும் தமிழக அரசு உடனடியாக இடம்மாற்றம் செய்து, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கையாக நிரந்தப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.

No comments: