Monday, November 19, 2007

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)
குடந்தை சயீத் - தாயிஃப்-சவுதி அரேபியா

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஜகாத்துடன் இணைப்பு

எப்படி இந்த கான்செப்ட் ஐ ஜகாத்துடன் இணைக்கின்றார் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்போம். அவரது கான்செப்ட் சரியா? தவறா? என்ற விஷயத்திற்கே நாம் போகவில்லை.அது சரி என்று வைத்துக்கொண்டே பார்ப்போம்.

ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்பவர்கள் ஆதாரம் தரவேண்டுமாம். வேண்டாம் என்பவர்கள் ஆதாரத்தை மறுக்கக்கூடியவர்களாக இருப்பார்களாம். ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று ஒரு சாராரும், கொடுக்க வேண்டும் என்று இன்னொரு சாராரும் சொன்னால், அங்கு தான் பி.ஜே.யின் விளக்கப்படி, வேண்டாம் என்பவர்கள் ஆதாரம் கேட்பவர்கள். கொடுக்க வேண்டும் என்பவர்கள் ஆதாரம் தருபவர்கள். ஆனால் இங்கு இரு சாராருமே ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி என்றால் பி.ஜே.யின் கான்செப்ட் இங்கு செயல்படாது. அவரவர்கள் சொல்கின்ற கருத்துக்கு அவரவர்கள் ஆதாரம் தரவேண்டும்.

ஜகாத் கொடுக்க வேண்டும,; அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை எப்படிக்கொடுக்க வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு. ஜகாத் ஒவ்வொரு பொருளுக்கும் தரவேண்டும், ஆனால் ஒரு தடவை கொடுத்தால் போதும். பொருள் வந்தவுடன் கொடுத்துவிட வேண்டும். இது பி.ஜே. சொல்கின்ற முறை.

மேற்கண்ட பி.ஜே. சொன்ன முறையில் ஜகாத், கொடுக்க வேண்டும் என்பதற்கு பி.ஜே. ஆதாரம் தரவேண்டும். பி.ஜே.யின் கான்செப்ட் படி அவர் இப்பொழுது ஆதாரம் தரக்கூடியவராக இருக்கின்றார். எப்படி என்ற விளக்கத்தை பார்ப்போம்.

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தடவை ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது பி.ஜே.யின் கருத்து. இதற்கு மாற்றமாக உலகம் முழுவதும் பின்பற்றிக்கொண்டிருக்கக்கூடிய மாற்றுக் கருத்தாவது. ஒரு முறை ஜகாத் கொடுத்த பின்பு, அடுத்த வருடம் திரும்பவும் ஜகாத் கொடுக்கும் வரை, இடையில் வருகின்ற பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டாம். இங்கு மாற்றுக் கருத்துடையவர்கள் 'கொடுக்க வேண்டாம்' என்று சொல்லக்கூடிய பொருட்களுக்கு, பி.ஜே. அவர்கள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்கிறார். அவரது கான்செப்ட்படி ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் ஆதாரம் தரவேண்டும். வேண்டாம் என்று சொல்பவர்கள் ஆதாரம் கேட்க வேண்டும். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்கின்ற பி.ஜே. அதற்குன்டான ஆதாரத்தை தரக்கூடியவராக இருக்கிறார்.

மாற்றுக்கருத்துடையவர்கள் ஆதாரம் கேட்பார்கள்.

அப்படியானால் அவரது கான்செப்டை செயல்படுத்தினாலும் அவர் ஆதாரம் தரவேண்டும்.(மேற்கண்டவாறு). அவரது கான்செப்ட் செயல்படாவிட்டாலும் அவர் ஆதாரம் தரக்கூடியவராக இருக்கிறார். ஏனென்றால் முன்பே குறிப்பிட்டபடி ஜகாத் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதில்தான் கருத்து வேறுபாடு. அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று யாரும் மறுக்கவில்லை. ஆகையால் அவரவர் கருத்துக்கு அவரவர் ஆதாரம் தரவேண்டும். இதுதான் உண்மை. இதை நிரூபித்துள்ளோம்.

ஆனால் அவர் சொல்லும் கருத்துக்கு ஆதாரம் தர வேண்டியதில்லை என்று ஒரு கான்செப்ட் ஐ முன் வைக்கிறார். அந்த கான்செப்ட் தவறு என்பது வேறு விஷயம். ஆனால் அவர் உண்டாக்கிய கான்செப்ட் படி அவர் ஆதாரம் கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார், அல்ஹம்துலில்லாஹ்.

இந்த பி.ஜே.யின் கான்செப்ட் வரக்காரணம் என்ன? என்பது எல்லோருக்கும் புரிந்து இருக்கும் என நினைக்கின்றோம். அதாவது பி.ஜே. ஜகாத் விஷயத்திலே ஒரு புதிய கருத்தை பிரச்சாரம் செய்கின்றார். அவர் அந்த முடிவை எடுக்க எதை ஆதாரம் என்று நினைத்தாரோ, அது உண்மையிலே ஆதாரமாக இல்லை. அவர் எடுத்த முடிவு எந்த ஆதாரமும் இல்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. ஆதாரம் இல்லாததனால் இந்த கான்செப்ட் ஐ முன்வைத்து ஏதும் ஆதாரம் இல்லாமலே அந்தக் கருத்தை சொல்வேன் என்கின்றார்.

நிலைமை இப்படி இருக்க......!

குர்ஆன் வசனத்திற்கே (6:141) உண்மையான அர்த்தத்திற்கு மாற்றமாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதை ஆரம்பத்திலே சுட்டிக்காட்டியுள்ளோம். நபி மொழி பலமானதை, பலகீனமாக்குவது அவர்களுக்கு பெரிய விஷயமல்ல. பேச்சாற்றல், விவாதத்திறமை அதற்கு உதவி செய்யும். பி.ஜே. அவர் சொல்கின்ற கருத்திற்கு எந்த ஆதாரமும் வைக்காமல், 'மாற்றுக் கருத்துடையவர்களின் ஆதாரம் எல்லாம் சரியில்லை என்று சொல்லிவிட்டேன்', ஆகவே எனது கருத்துதான் சரி என்கிறார். அது சரிதான் என்று ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களும் பலர் இருக்கின்றனர்.

விவாதம் என்ற பெயரில்

மாற்றுக் கருத்துடைய, உண்மையிலே ஜகாத் விஷயத்தை மற்றவர்களைவிட அதிகமாக ஆய்வு செய்த மௌலவி நூர் முஹம்மது பாகவி அவர்களுடன் மதுரையிலே விவாதம் என்ற பெயரில் மூன்று நாட்கள் மேற்சொன்ன விஷயங்கள்தான் நடந்தேறின. இதை 17 சிடிகளிலே பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர். அவைகளை நடுநிலையோடு பாருங்கள் உண்மை தெரியும் என்று சகோதரர் பி.ஜே. சொல்கின்றார்.

அவைகளை நடுநிலையோடு பார்த்த போது கண்ட உண்மைகளைத்தான் நாம் எடுத்து சொல்லி இருக்கிறோம், அந்த (6:141) விளக்கம் உட்பட.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை. அப்படி ஆதாரம் ஏதும் இல்லாததால்தான் ஜகாத் 'கொடு' என்ற சொல்லை மட்டும் வைத்து, புரிந்து கொண்டு, ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவெடுத்ததாக ஏகத்துவம் கூறுகின்றது. ஏகத்துவம் 2005 செப்டம்பர், பக்கம்: 05. 2006 ஜனவரி, பக்கம்: 40.

அப்படியானால் கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சரியான ஆதாரம் இருந்தால், ஒரு தடவை கொடுத்தால் போதும் என்ற முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சரியான ஆதாரம்

புஹாரியில் இடம்பெறக்கூடிய ஸஹிஹான ஹதீஸ்.

ஒரு மனிதனிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் 01 ஆடு ஆகும். 121 முதல் 200 வரை 02 ஆடுகள் ஆகும். 201 முதல் 300 வரை 03 ஆடுகள் ஆகும். 300க்கு மேல் ஒவ்வொரு 100 ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத்தாகும்.

ஆடுகள் அதிக பட்சம் ஆடுகள் ஜகாத்

முதல் நிலை 40 – 120 வரை 80 01

இரண்டாம் நிலை 121 – 200 வரை 80 02

மூன்றாம் நிலை 201 – 300 வரை 100 03

301ல் இருந்து ஒவ்வொரு 100க்கும் 01


முதல் நிலையில் உள்ள ஒருவன் அதிகபட்சமாக வைத்திருக்கும் 80 ஆடுகளுக்கும் ஜகாத் ஒரு ஆடு என்று அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள். அதன்படி அவன் ஜகாத்தாக ஒரு ஆடு கொடுத்துவிடுவான்.

ஆடுகள் பெருகியதால் அவன் இரண்டாம் நிலையை அடைந்துவிட்டான். (121 – 200)அதிகபட்சமாக இங்கும் 80 ஆடுகளே உள்ளன. இப்பொழுது இவன் இந்த 80 ஆட்டுக்கும் 02 ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் சொல்கின்றார்கள்.

மதிப்பிற்குறிய மௌலவி பி.ஜே. அவர்களின் கருத்துப்படி இரண்டாவது நிலையை அடைந்த அவன் ஒரு ஆடுதான் கொடுக்க வேண்டும். ஏன்என்றால் ஏற்கனவே ஒரு ஆடு ஜகாத் கொடுத்து 120 வரை உள்ளதை தூய்மைப்படுத்திவிட்டான். 121 – 200 வரை உள்ள 80 ஆடுகளுக்கும் ஒரு ஆடுதான் ஜகாத் கொடுக்க வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் முதல் நிலைக்கு உள்ள ஒரு ஆட்டையும் சேர்த்து மொத்தம் இரண்டு ஆடுகள் ஜகாத் கொடுக்கச் சொல்கின்றார்கள். இப்படியாக எந்த நிலையில் எடுத்துப் பார்த்தாலும் கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் ஜகாத் கொடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள்.

ஜகாத் கொடுத்தால் பொருள் தூய்மையாகிவிடுகிறது. ஆகையால் கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வரும் பொருளுக்குத்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றமாக, கொடுத்த பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும், என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருப்பது இங்கு நிரூபிக்கப்பட்டு, எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

ஜகாத் விஷயத்தில் பி.ஜே.யின் நிலைப்பாடு அன்று முதல் இன்று வரை

ஜகாத் விஷயத்தில் ஒரு புதிய கருத்தை பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த அன்று முதல் இன்று வரை அவரது நிலைப்பாட்டை நடுநிலமையோடு கவனிக்கும் யாருமே அவரது நிலைப்பாடு சரி என்று கூறமுடியாது. அதை சுருக்கி எளிதாக்கி கீழே தரப்பட்டுள்ளது.

(1) முதல் நிலைப்பாடு

ஜகாத் கொடுத்தால் பொருள் தூய்மை அடைகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் அப்படி சொல்லி இருக்கும் காரணத்தினால், ஜகாத் கொடுத்து தூய்மையாக்கிவிட்ட பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டாம். அதாவது ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும். இதை ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும் போது கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வந்ததற்கு கொடுக்க வேண்டும். ஆதாரம்: ஜகாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பின் பி.ஜே. பேசியது. இதற்கான VIDEO CLIP தரப்பட்டுள்ளது.

ஆனால் அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறவில்லை. ஆகையால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தவறு என்று நாம் முன்பே கண்டோம். அதை சரி என்று வைத்துக் கொண்டாலும் இரு முரண்பட்ட கருத்துக்களைச் சொல்லி அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பி.ஜே. சொல்கின்றார். அதையும் நம்பி மக்கள் எற்றுக் கொண்டனர்.

முரண்பட்ட இரு அம்சங்கள்

அதாவது ஒன்றை செயல்படுத்தினால் மற்றொன்றை செயல்படுத்தவே முடியாதபடி உள்ள இரண்டு அம்சங்களை ஜகாத் விஷயத்திலே சொல்லி, மக்களை அதன்படி ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆறேழு வருடங்களுக்கு முன்பாக பிரச்சாரம் செய்கின்றார்.

முதல் அம்சம், பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஜகாத் கொடுத்து பொருட்களை தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். புதிதாய் பொருள் வந்தால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளை தவிர்த்துவிட்டு புதிதாய் வந்த பொருளுக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டாவது அம்சம், ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும்.

இவை இரண்டையுமே ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது. அப்படி செயல்படுத்த முடியாததை அல்லாஹ்வின் தூதர் சொல்லி இருக்க மாட்டார்கள்.

விளக்கம்: முதல் அம்சம்:

புதிதாய் பொருள் வந்தால், ஜகாத் கொடுத்து தூய்மையாக்க வேண்டும். இதை செயல்படுத்தினால், பொருள் வரும்போதெல்லாம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அம்சத்தை செயல்படுத்த முடியாது. ஏனென்றால் புதிதாய் பொருள் வந்தவுடன் ஜகாத் கொடுத்து தூய்மையாக்கிவிட வேண்டும். ஒரு வருடம் வரை தாமதிக்க இயலாது. முதல் அம்சத்தை (பொருளைத் தூய்மைப்படுத்துவது) செயல்படுத்தினால், இரண்டாவது அம்சத்தை (வருடா வருடம் ஜகாத் கொடுப்பது) செயல்படுத்த இயலாது.

இரண்டாவது அம்சம்:

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற அம்சத்தை செயல்படுத்தினால் ஜகாத் கொடுத்த நாளிலிருந்து அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் வரை சம்பாதிக்கும் எதையும் செலவு செய்யக்கூடாது. அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் போதுதான் அவை தூய்மையாகும். அதுவரை புதிதாய் வந்த பொருள் ஒரு பைசா கூட செலவு செய்யக்கூடாது. புதிதாய் வந்த பொருட்களையெல்லாம் சேர்த்து, அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும்வரை செலவு செய்யாமல்
பாதுக்காக்க வேண்டும். ஆக இரண்டாவது அம்சத்தை (வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை) செயல்படுத்தினால் முதல் அம்சத்தை (பொருளை தூய்மைப்படுத்துவது) செயல்படுத்த முடியாது.

பி.ஜே.யின் இந்த முதல் நிலைப்பாட்டை எடுத்து காண்பிக்க என்ன காரணம் என்றால், அவர் தவறு செய்துவிட்டார் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதற்கல்ல. செயல்படுத்த முடியாத ஒரு சட்டத்தைச் சொல்கின்றார், அதையும் நாம் ஏற்றுக்கொண்டிருந்தோம். என்பதை நாம் உணர வேண்டும்.

செயல்படுத்த சாத்தியமே இல்லாத இந்தச் சட்டத்தை சொல்லும் போதாவது ஏதோ சான்றுகள் என்று எதையோ கொடுத்தார். அது தவறானது என்பது வேறு விஷயம்.அதாவது தவறான ஆதாரத்தை கொடுத்தார், செயல்படுத்தவே முடியாத சட்டத்தை,அல்லாஹ்வின் தூதர் சொன்னதாகச் சொன்னார். அவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டோம்.

தற்சமயம் ஆதாரம் ஏதும் கொடுக்க மாட்டேன், ஆதாரம் 'கொடு' என்று மாற்றுக்கருத்துடையவர்களை கேட்பேன் என்று சொல்லி, உலகுக்கு மாற்றமான ஒரு கருத்தைச் சொல்கின்றார். இதையும் ஏற்றுக்கொள்ள இலட்சக்கணக்கானவர்கள் இன்று இருக்கிறார்கள்.

அவர் தவறான ஆதாரத்தை கொடுத்து ஒரு சட்டத்தைச் சொன்னாலும், அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அந்த ஆதாரம் தவறாகப் போனதால், எந்த ஆதாரமும் இல்லாமல் அதே சட்டத்தைச் சொல்கிறார், இதையும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். (ஆதாரம் தர வேண்டாம் என்று சொன்னதை மதுரை விவாத சிடிகளில் பார்க்கலாம்)

அப்படி என்றால், ஏதோ ஒரு அம்சம் அல்லாஹ்வின் தூதர் சொல்லாதது. பொருட்களுக்குத் தூய்மையாகத் தான் ஜகாத் என்பது அல்லாஹ்வின் தூதர் சொல்லாததாக இருக்க வேண்டும். இல்லையெனில் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் தூதர் சொல்லாததாக இருக்க வேண்டும். ஆனால் இரண்டுமே அல்லாஹ்வின் தூதர் சொன்னதுதான் என்று பி.ஜே. அவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள் அதையும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

(2) இரண்டாவது நிலைப்பாடு

பின்பு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி அடுத்தகட்ட பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார்.

பொருட்கள் வந்தவுடன் ஜகாத் கொடுத்துவிட வேண்டும். ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது அல்லாஹ்வின் தூதர் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று சொல்கின்றார். அந்த முதல் கருத்து 'பொருட்களுக்குத் தூய்மையாக ஜகாத்' என்பது அல்லாஹ்வின் தூதர் சொன்னது. வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் சொல்லாதது என்ற முடிவுக்கு வந்து பிரச்சாரம் செய்கின்றார். இதையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

(3) மூன்றாவது நிலைப்பாடு

ஆனால் பொருட்களுக்குத் தூய்மையாக ஜகாத் என்ற கருத்து தான் தவறானது என்று மௌலவி நூர் முஹம்மது பாகவி முதலில் அதை அறிவிக்கின்றார்.

இதை ஏன் தவறானது? என்று ஆரம்பத்திலேயே விளக்கியுள்ளோம். அதாவது அல்லாஹ்வின் தூதர் 'பொருட்களுக்கு தூய்மையாக ஜகாத்' என்று கூறியதாக, சகோதரர் பி.ஜே. வைத்த ஆதாரம் (புகாரி: 1404) தவறானது.

இங்கு தான் மக்கள் கவனிக்க வேண்டும். பி.ஜே.யின் ஆதாரம் தவறானது என்று தெரிந்த பின், அவர் சொல்வதாவது, ஒரு வாதத்துக்கு 'பொருள்களுக்கு தூய்மையாக ஜகாத்' என்பது தவறாகப் போனாலும், ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பதில் மாற்றமில்லை என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றார். இது தான் மூன்றாவது நிலைப்பாடாக இருக்கின்றது.

(4) நான்காவது நிலைப்பாடு

'நீங்கள் கூறியபடியான ஆதாரம் புகாரியில் இல்லை. பின்பு எப்படி ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தீர்கள்?' என்ற கேள்விகள் வந்தன. அதை தவறுதலாக சொல்லிவிட்டேன், ஆனால் வேறு ஒரு ஆதாரம் இருக்கின்றது என்று அபு-தாவூதில் இருந்து வேறு ஒரு நபி மொழியைக் காட்டினார். அந்த நபி மொழிக்கும், பொருளை தூய்மைப்படுத்தும் என்பதற்கும் சம்பந்தமில்லை. அதனோடு அது பலகீனமானதும்கூட. இது விஷயமாகத்தான் நூர் முஹம்மது பாகவி அல்-ஜன்னத்தில் எழுதியதும், அதற்கு ஏகத்துவத்தில் இவர்கள் பதில் எழுதியதும். அவைகளை படித்த அதிகமான நபர்களுக்கு ஒன்றும் புரிந்திருக்காது. தனிப்பட்ட நபர்கள் மீதான வசைப்பாடுதல்கள்தான் அவைகளில் அதிகமிருந்தன.

(5) ஐந்தாவது நிலைப்பாடு

'பொருட்களைத் தூய்மைப்படுத்தத்தான் ஜகாத்' என்பதை நாம் முக்கியமான ஆதாரமாக வைத்து அந்த முடிவை எடுக்கவில்லை என்று கூற ஆரம்பித்தார். அது ஒரு துணை சான்றுதான். அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்று கூறினார். ஒரு வாதத்துக்கு அது தவறாகப் போனாலும் ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத் என்றார். இவர் இப்படியெல்லாம் கூறியதை ஏகத்துவம் செப்டம்பர் 2005, மற்றும் ஏகத்துவம் ஜனவரி 2006 அவைகளில் பார்க்கலாம். மதுரையில் நடந்த விவாத சிடிகளிலும் பார்க்கலாம்.

இதைப் போலவே நாம் முன்பே குறிப்பிட்டபடி பொருட்களைத் தூய்மைப்படுத்ததான் ஜகாத் என்ற ஆதாரத்தை அடிப்படையாக வைத்துதான் அந்த முடிவை எடுத்தார் என்பதை 'ஜகாத் ஒரு ஆய்வு' என்ற சிடியை பார்க்கும் யாரும் தெரிந்து கொள்ளலாம். நாமும் Video Clip ல் தந்திருக்கிறோம்.

அப்படியானால் முக்கிய சான்று என்ன? என்ற கேள்விகள் வந்தது. அதற்கு அவர் சொல்வது வருடா வருடம் கொடுப்பதற்கு எந்த சான்றும் இல்லை. அல்லாஹ் (ஸுப்)ஜகாத் கொடு என்று சொல்லி இருக்கின்றான். கொடு என்றால் ஒரு தடவையைத் தான் குறிக்கும். ஆகவே ஒரு தடவை கொடுத்தால் போதும் என்கின்றார்.

இதுவும் தவறு என்று நாம் முன்பே நிரூபித்திருக்கிறோம். அதுமட்டுமல்ல ஒரு தடவை ஒருவன் ஜகாத் கொடுத்து விட்டால் திரும்பவும் வாழ்நாள் முழுவதும் ஜகாத் கொடுக்க வேண்டாம் என்று தான் அவர் சொல்வதற்கு அர்த்தம். ஆனால் புதிதாய் பொருள் வரும் போது மறுபடியும் கொடுக்க வேண்டும் என்று விளக்கம் கொடுக்கிறார். அவர் சொல்கின்ற கருத்துக்கு மாற்றமாக அவரே விளக்கம் கொடுக்கின்றார்.

கொடு என்ற பொதுவான ஒரு கட்டளை வாக்கியத்தை வைத்துக் கொண்டு தான் ஜகாத் விஷயத்திலே இவ்வளவு சட்டங்களையும் வகுத்தாரா? என்ற சந்தேகங்களும், கேள்விகளும் மக்கள் மனதிலே உண்டாகியது. 'கொடு' என்பது ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வார்த்தை. எப்படிக்கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்பதற்கவிளக்கங்கள் அதில் இருந்து எடுக்க முடியாது என்பது சாதாரனமாக யாருக்கும் தெரியக்கூடிய விஷயம். எப்படி கொடுக்க வேண்டும் என்ற மேலதிக விளக்கங்களை நபி மொழியல் இருந்துதான் எடுக்க வேண்டும். எப்போது கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க நபி மொழி ஏதும் இல்லை என்று பி.ஜே. சொல்கிறார். அதாவது எப்போது கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ்வோ, தூதரோ சொல்லவில்லை என்கிறார். ஜகாத் என்ற கட்டாயக் கடமையை எப்போது நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாஹ் சொல்லவில்லை என்கிறார். அவர் சொல்லியது சரிதான் என்று நினைத்திருந்தவர்கள்கூட இந்த விஷயத்தில் பி.ஜே. சொல்லும் கருத்துக்கு ஆதாரம் இல்லையே! என்று யோசிக்க ஆரம்பித்தனர். இப்படி யோசிக்க ஆரம்பித்தவர்கள் குறைவு. ஆனால் அதையும் நம்பக்கூடியவர்கள் அதிகமாக இருக்கின்றார்கள்.

(6) ஆறாவது நிலைப்பாடு, தற்போது உள்ள நிலைப்பாடு

தற்சமயம் அவர் கூறுவது: ஜகாத் விஷயத்தில் நான் கூறும் கருத்துகளுக்கு, ஏதும் ஆதாரங்களை நான் தரவேண்டியதில்லை. மாற்றுக் கருத்துடையவர்கள்தான் ஆதாரம் தரவேண்டும். நான் அவர்களிடம் ஆதாரம் கொடு என்று கேட்பேன்.

அதன் பின்பு அந்த ஆதாரம் சரியாக இருக்கிறது என்று பி.ஜே. ஏற்றுக் கொண்டால், மாற்றுக் கருத்து சரியாம். அவர் ஆதாரம் சரியில்லை என்று ஒதுக்கிவிட்டால் பி.ஜே.யின் கருத்து சரியாம். இப்படி சொன்னதோடு நிற்காமல் அதை செயல்படுத்தியும் காட்டினார். இதைப் பார்க்க விரும்புபவர்கள் மதுரையில் நடந்த ஜகாத் விவாத சிடிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பார்க்கலாம். இப்படி அவர் கூறுவது, அவர் எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு முக்கிய கடமையான ஜகாத் விஷயத்தில் தனது கருத்துக்களை புகுத்தி ஒரு தவறான சட்டத்தை வகுத்துவிட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.

இதுமட்டுமல்ல ஆரம்பத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அதை உறுதிப்படுத்துகிறது. இதையும் நம்பி பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இப்படி இவர் ஆதாரம் தரவேண்டியதில்லை என்பதற்கு அவர் சொல்லும் காரணங்கள் அவருக்கு எதிராகவே உள்ளதை ஏற்கனவே விளக்கியுள்ளோம்.

தமிழக முஸ்லீம்களுக்கு

தமிழக முஸ்லீம் சகோதரர்களுக்கு, நாம் வைக்கும் அன்பான வேண்டுகோள் இது தான். யாரையும் கண்னை மூடிக்கொண்டு ஆதரிக்காதீர்கள், அதைப் போலவே கண்னை மூடிக்கொண்டு எதிர்க்கவும் செய்யாதீர்கள். அப்படி செய்வதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.

குர்ஆன், நபி வழிதான் நம் வழி. அதன்படி யார் சொன்னாலும் கேட்டு நடப்போம். அதற்கு மாற்றமாக யார் சொன்னாலும் தட்டிக்கேட்போம். தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உணர்த்துவோம். அது முடியவில்லை எனின் குறைந்த பட்சம் நம் அளவிலாவது தவறான கருத்துகளில் இருந்து விலகிக்கொள்வோம்.

நாம் இதுவரை பல விஷயங்களை பார்த்தோம். இனி ஒரு சில விஷயங்களையும் பார்க்க இருக்கின்றோம். இதை அனைத்தையும் பார்க்க முடியாதவர்கள், நேரமில்லாதவர்கள் குறைந்த பட்சம் ஜகாத் விஷயத்தில் பி.ஜே.யின் நிலைப்பாடு 'அன்றிலிருந்து இன்றுவரை' என்ற தலைப்பில் ஆறு நிலைப்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இவைகள மட்டுமாவது தயவு செய்து பார்க்கவும். மறுபடியும் அன்போடு நாம் வைக்கும் முக்கியமான வேண்டுகோள். அல்லாஹ்வுக்கும், ரசூலுக்கும் மட்டும் பயந்து, யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு படிக்கிறேன் என்று அல்லாஹ்விடத்தில் உறுதி மொழி எடுத்துக்கொண்டு படியுங்கள். அதில் வரும் விஷயங்களுக்கு மேலதிக விளக்கங்களும் முன்பு தரப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அதைப் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு மேலும் விளக்கங்கள் தேவைப்பட்டால், நம்மை தொடர்பு கொள்ளலாம்.

அதன் பின்பு அவர்களின் முடிவுக்கு அவர்களே பொறுப்பு. ஒருவர் செய்யும் பாவங்களுக்கு, மற்றவர்களை அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான்.

இதுவரை நாம் பகிர்ந்து கொண்டவை:

(1) ஜகாத் விஷயத்தில் மதிப்பிற்குறிய சகோதரர் பி.ஜே. அவர்களின் கருத்து ஏன் எற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது? என்பதை ஆதாரங்களுடன் பார்த்தோம்.

(2) சரியான கருத்து என்ன? என்பதிலே ஒரு பகுதியை பார்த்திருக்கின்றோம். அது கொடுத்த பொருளுக்கும், திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்கான ஆதாரங்களையும் பார்த்தோம்.

(3) இனி நாம் பார்க்க இருப்பது, எப்போது ஜகாத் கொடுக்க வேண்டும்? என்பதை.

ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்?

ஜகாத் எப்போது கொடுக்க வேண்டும்? என்ற கேள்வியே எப்போது வரும் என்றால் கொடுத்த பொருளுக்கும் திரும்ப கொடுக்க வேண்டும் என்று வரும் போதுதான். நன்றாக சிந்திக்கும் போது நாம் இதை எளிதில் விளங்கிக்கொள்ளலாம்.

கொடுத்த பொருளுக்கு திரும்ப தேவையில்லை என்று இருந்தால் புதிதாய் வரும் பொருளுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும். புதிதாய் எப்போது பொருள் வருகின்றதோ அப்போது கொடுக்க வேண்டும். ஒரு வருடம் கழித்து கொடு என்றோ, ஆறு மாதம் கழித்து கொடு என்றோ சொல்ல முடியாது. ஒருவருக்கு இரண்டு நாளில் பொருள் வரலாம், அடுத்தவருக்கு இரண்டு மாதத்தில் வரலாம் இப்படியாக மாறுபடும்.

அதாவது கொடுத்த பொருளுக்கு ஜகாத் இல்லை என்றால், அங்கு காலக்கெடு கிடையாது. இது மேலே விளக்கப்பட்டுள்ளது. அதைப்போலவே காலக்கெடு இருந்தால், கொடுத்த பொருளுக்கு ஜகாத் இல்லை என்பது அடிபட்டுப் போய்விடும். ஏன்னென்றால் கொடுத்த பொருளை தவிர்த்து புதிதாய் வந்த பொருளுக்கு கொடுக்க வேண்டும் என்றால், புதிதாய் வருவதையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான், செலவு செய்ய இயலாது. இதை முன்பே விளக்கியுள்ளோம். தேவைப்பட்டால் அதைப்பார்த்துக் கொள்ளலாம்.

கால இடைவெளியில் அதாவது வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்றால், கொடுக்கின்ற நேரத்தில் கையில் இருப்பவைகளுக்கு கணக்கிட்டு 2.5மூ கொடுக்க வேண்டும். அதில் கொடுத்த பொருளும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், புதிதாய் வந்த பொருளும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பொருளுக்கு முக்கியத்துவம் இல்லை.

ஆனால் பி.ஜே. அவர்கள் பொருளுக்குத் தூய்மை ஜகாத் என்று தவறான ஆதாரத்தின் அடிப்படையில் 'கொடுத்த பொருள்', 'புதிதாய் வந்த பொருள்' என்று பொருளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதினால் வந்த கோளாறுதான் எல்லாம்.

ஆகவே கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் உண்டா? இல்லையா? என்பதைத்தான் முதலில் பி.ஜே. முடிவு செய்ய வேண்டும். திரும்பவும் கொடுக்க வேண்டும் என்று அவர் ஏற்றுக்கொண்டால், பின்பு எப்போது திரும்ப கொடுக்க வேண்டும், வருடா வருடமா? என்ற கேள்வியை எழுப்பலாம். ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறாதா? என்று கேட்டால், 'கொடுத்த பொருளுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டும்' என்பதை அவர் ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அப்பொழுதுதான் அந்த கேள்வியை எழுப்ப முடியும். ஆனால் பி.ஜே. வருடா வருடம் ஜகாத் கொடுக்க சரியான நபி மொழி இருக்கின்றதா? கொடுத்த பொருளுக்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கின்றதா? என்று இரண்டையும் கேட்கின்றார். இரண்டையும் நாம் கொடுக்கின்றோம். ஒரு பொருளுக்கு ஒரு தடவையா? திரும்பவும் கொடுக்க வேண்டுமா? அதை முதலில் முடிவு செய்வோம். அதற்கு ஆதாரத்தை அவரும் கொண்டுவரட்டும், நாமும் தருவோம். அவர் ஆதாரம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை என்கின்றார். ஆனால் நாம் ஆதாரம் கொடுத்திருக்கின்றோம். அவரது கருத்து எந்த ஆதாரமும் இல்லாமல், அவரது கருத்தாக சொல்லப்பட்டவைதான் என்பதை இதில இருந்தே புரிந்து கொள்ளலாம்.

ஏன் என்றால் அல்லாஹ் (ஸுப்) ஜகாத், தர்மம் இவைகளைக் கொடுத்தால், கொடுத்த மனிதன் தூய்மைப்படுத்தப் படுகிறான் என்றும், தர்மம் சில பாவங்களுக்கு பரிகாரம் என்றும் சொல்கின்றான்.

9:103 – ஜகாத் கொடுத்த மனிதன் தூய்மை
அடைகிறான்.


92:18 – தர்மம் கொடுத்த மனிதன் தூய்மை
அடைகிறான்.


2:271 - தர்மம் சில பாவங்களுக்கு
பரிகாரம்.


ஜகாத்துக்கும் தூய்மைக்கும் என்ன உறவு என்பதை அல்லாஹ் 9:103ல் தெளிவாக சொல்லிவிட்டான். அல்லாஹ் சொல்கின்றபடி, ஜகாத் கொடுக்கும் அந்த நேரத்தில் இருக்கின்ற செல்வத்தில் 2.5மூ கொடுத்தால் ஜகாத் கடமையை நிறைவேற்றியவனாவான், அதன் மூலம் தூய்மைப் படுத்தப்படுகிறான்.

ஜகாத் கொடுத்தால் மனிதன் தூய்மைப் படுத்தப்படுவதை;ச் சொன்ன அல்லாஹ் (ஸுப்), பொருள் தூய்மை அடைகிறது என்றால் அதையும் சேர்த்தே சொல்லி இருப்பான். அல்லாஹ் அறிந்தவன். அவன் சொல்லாததை நாமாக தவறான அடிப்படையில் விளங்கிக் கொண்டு, கொடுத்த பொருளுக்கு திரும்பவும் கொடுக்க வேண்டுமா? என்றெல்லாம் கேட்பது சரியான ஒரு நிலைப்பாடில்லை. மக்களிடையே குழப்பம் தான் மிஞ்சும்.

ஆகவே வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று இருந்தாலே, கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது தெளிவு. இதை எதற்கு விளக்குகின்றோம் என்றால் பி.ஜே. அவர்கள் தற்சமயம் கேட்பது என்னவென்றால், வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருந்தால் மட்டும் போதாது, கொடுத்ததற்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் ஹதீஸ் வேண்டும் என்கின்றார். அவர் இப்படிச் சொல்லிவிட்ட ஒரே காரணத்தினால் இலட்சக்கணக்கானோரின் உதடுகளும் இதையே உச்சரிக்கின்றன. இதை எப்படிக் கொடுக்க முடியும்? 'இல்லாத ஊருக்கு வழி' கேட்டால் எப்படி சொல்ல முடியாதோ, இவர்கள் கேட்பதும் நூறு சதம் அதேயே தான்.

நான் சொன்ன ஹதீஸ் தவறு என்று சொன்னீர்கள் அல்லவா? ஆகவே நீங்கள் எதை ஆதாரமாக வைத்தாலும் இல்லை என்போம். பின்பு அதையே இலட்சக்கணக்கானோரும் சொல்வார்கள் என்பது போல் இருக்கின்றது அவர் சொல்வது. விவாதத்திலே 6:141க்கு விளக்கம் சொன்னது போல.

அதைப் போலவே கொடுத்த பொருளுக்கு திரும்ப ஜகாத் கொடுக்க வேண்டும் என்றாலே, அங்கு ஒரு காலக்கெடு இருக்கின்றது என்பதும் தெளிவு. கொடுத்த பொருளுக்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை முன்பே புகாரியில் பதிவு செய்யப்பட்ட ஆடு சம்பந்தமான ஹதீஸில் பார்த்தோம். ஆகவே ஒரு காலக்கெடு இருக்க வேண்டும் என்பதையும் அந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது.

இன்சா அல்லாஹ்...நாளை தொடரும்....

No comments: