Sunday, March 04, 2007

1 முறை தலாக் கூறினால் விவாகரத்து ஆகாது-COURT

ஒரு முறை தலாக் கூறியதை விவாகரத்தாக கருத முடியாது * கணவருடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு கோர்ட் உத்தரவு

முசாபர்நகர்: ""ஒரு முறை மட்டும் தலாக் கூறினால் அதை விவாகரத்தாக கருத முடியாது. அதனால், ஒரு முறை தலாக் கூறப்பட்ட பெண் தனது கணவருடன் சேர்ந்து வாழலாம்,'' என ஷரியத் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உத்திர பிரதேசம் முசாபர்நகர் மாவட்டம் பூதானா என்ற ஊரை சேர்ந்தவர் மாரூப் அலி. இவரின் மனைவி வகீலா பேகம். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வகீலா பேகம் தனது சகோதரியின் வீட்டிற்கு போக விருப்பம் தெரிவித்தார். அதற்கு அனுமதி மறுத்த அவரின் கணவர் மாரூப் அலி ஒரு முறை "தலாக்' கூறியுள்ளார். இதன் பின்னரும் தனது சகோதரி வீட்டிற்கு சென்ற வகீலா பேகம், மீண்டும் கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

பிரச்னை தருலும் தியோபந்த் குழுவின் முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, "எனது சகோதரி வீட்டிற்கு செல்லக்கூடாது என கணவர் கூறினார். அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஒரு முறை "தலாக்' கூறினார்,'' என வகீலா தெரிவித்தார். இதையடுத்து தருலும் தியோபந்த் குழு அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், மாரூப் அலி இந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளவில்லை. "மனைவியை செல்லமாக மிரட்டவே ஒரு முறை தலாக் கூறினேன். விவாகரத்து பெற விரும்பவில்லை' என்று தெரிவித்தார். இதையடுத்து இப்பிரச்னை குறித்து ஷரியத் கோர்ட் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தருலும் தியோபந்த் குழு தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஷரியத் கோர்ட் ஒரு முறை மட்டும் தலாக் கூறினால் விவாகரத்து முழுமையடையாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் வகீலா பேகம் தனது கணவர் மாரூப் அலி வீட்டிற்கு திரும்பலாம் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்

No comments: