Friday, July 28, 2006

உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேட்டி (கோவை)

உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேட்டி
சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை


செய்தியாளர் சந்திப்பின்போது உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் R.அழகுமணி M.L மற்றும் S.M.A. ஜின்னா B.A.B.L



கடந்த 26.07.2006 புதன் கிழமை அன்று கோவை பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை வெடிகுண்டு சதி என்று கடந்த 21.07.2006 அன்று கைது செய்யப்பட்டவர்களின் வழக்கறிஞர்களான மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் R.அழகுமணி M.L மற்றும் S.M.A. ஜின்னா B.A.B.L ஆகியோர் கூறியதாவது :

கோவையில் கடந்த 22.07.2006 பிற்பகல் 3 மணி முதல் கோவையில் குண்டு வைக்க சதி என்ற பெயரில் கோவை மற்றும் தமிழகத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி பத்திரிக்கையில் செய்திகள் காவல் துறையினரால் பொய்யாக புனையப்பட்டு வெளியாகி வருகின்றன. மேற்படி செய்திகளின்படி ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அந்த நபர்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், காவல்துறையினரால் சிறுபான்மையினருக்கு எதிராக விஷம செய்திகள் பரப்பப்பட்டன.

மேற்கண்ட செய்திகள் குறித்த உண்மை நிலையினை கண்டறியவும்,மேற்கண்ட வழக்கில் எதிரியாக காவல்துறையினரால் பொய்யாக சேர்க்கப்பட்ட ஆரூண்பாட்சாவின் மனைவி திருமதி. நசீமா என்பவர் கடந்த 21.07.2006 நள்ளிரவு சுமார் 3.00 மணியளவில் எங்களது வைகை சட்ட நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமாக தான் கோவை மாவட்டம், என்.பி. இட்டேரி, குறிச்சி பிரிவில் கதவு எண் 20ஃ122-ல் குடியிருப்பதாகவும், தன்னுடைய வீட்டில் தன்னுடைய கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது இரவு 11.30 மணியளவில் போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பால்ராஜ், சார்பு ஆய்வாளர் திருமேனி, உளவு பிரிவு காவலர் கோபாலகிருஷ்ணன், காவல்துறை அதிகாரி அண்ணாதுரை, மற்றும் சில அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத ஆண் காவலர்கள் ஆகியோர் பெண் காவலர் துணையின்றி தனது வீட்டின் கதவை தட்டினார்கள் என்றும், பின்னர் அவர் தனது வீட்டின் கதவை திறந்ததாகவும், அப்பொழுது ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் காவல்துறை அதிகாரி அண்ணாதுரை ஆகியோரிடம் என்ன விஷயம் என்று கேட்ட பொழுது எந்த விளக்கமும் கூறாமல் தனது நெஞ்சை தட்டி தள்ளிவிட்டு வீட்டிற்குள் திபுதிபுவென நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த தனது கணவனை சட்டைக் காலரைப் பிடித்து தூக்கி வெளியே தரதரவென அழுத்து வீட்டு வாசலில் நிப்பாட்டிக்கொண்டு தன் வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் கீழே இழுத்துப் போட்டு தள்ளியதாகவும்,

அப்பொழுது தூங்கிக் கொண்டிருந்த தனது ஒரு வயது குழந்தையை அதிகாரி அண்ணாதுரை காலால் உதைத்து தள்ளிவிட்டு சோதனை என்ற பெயரில் பல்வேறு சித்ரவதைகளை செய்ததாகவும், இதே போன்று தனது வீட்டின் அருகே குடியிருக்கும் ஆரூண்பாட்சாவின் சகோதரர் மாலிக் பாட்சா என்பவரின் வீட்டிற்குள்ளும் அத்து மீறி நுழைந்து அப்துல் பாட்சா மற்றும் மாலிக் பாட்சா இருவரையும் சட்டைக் காலரை பிடித்து வீட்டை விட்டு வெளியே இழுத்து சோதனை என்ற பெயரில் சட்ட ரீதியான நீதிமன்ற அனுமதியில்லாமல் பல்வேறு சித்ரவதைகள் செய்ததாகவும், தான் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள், முஸ்லிம் பர்தா நாசிம் பெண்கள் வசிக்கும் வீட்டில் எதற்கு நள்ளிரவில் இப்படியெல்லாம் செய்கிறீர்கள் என்று கேட்டதாகவும், அதற்கு காவல் அதிகாரி அண்ணாதுரை துலுக்கச்சிகளெல்லாம் சட்டம் பேச கிளம்பிட்டாளுக, இவளுகளை உள்ளே வைத்து துவைத்தால் தான் இவளுக்கெல்லாம் அறிவு வரும் என்று கூறி வீட்டில் காவலர்களால் சிதறியடிக்கப்பட்ட பொருட்களை அடுக்கி வைக்கும்படி கூறியுள்ளார்.

அதற்கு தான் அந்த அதிகாரியிடம் பெண்கள் வசிக்கும் வீட்டிலிருந்து வெளியே செல்லுங்கள் என்று கூறியதற்கு மறுபடியும் துலுக்கச்சிகளெல்லாம் சட்டம் பேச கிளம்பிட்டாளுக என்று தான் வைத்திருந்த லத்தி கம்பால் தன்னை அடிக்க ஓங்கியதாகவும் தான் பயந்து கொண்டு பொருட்களையேல்லாம் அடுக்கி வைத்ததாகவும், மேலும் தன்னுடைய கணவரின் அண்ணன் மாலிக்பாட்சா ஒரு மனநோயாளி என்றும், தற்பொழுது அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், மேலும் அவர் தூங்குவதற்கு மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து சாப்பிட்டு வருகிறார் என்றும், தாங்கள் இது மாதிரி எல்லாம் செய்தால் அவரது மனநிலை மிகவும் பாதிக்கும் என்று கேட்டதற்கு ஆய்வாளர் பால்ராஜ், சார்பு ஆய்வாளர் திருமேனி ஆகியோர்கள் தூங்குவதற்கு மாமியார் வீடு உள்ளது, அங்கு வந்து தூங்கச் சொல் என்று கூறி தன்னுடைய கணவரையும், அவரது அண்ணன் மாலிக் பாட்சா ஆகியோரயும் பிடறியில் ஓங்கி அடித்து மூன்று பேர்களையும் வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி விட்டு வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடுக்கி வைக்கும் வரை மேற்படி காவல் அதிகாரி மற்றும் காவலர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து கிட்டத்தட்ட 3 மணி நேரம் தனது சொந்த வீட்டிலேயே தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் சட்ட விரோத காவலில் வைத்ததாகவும் தற்பொழுது தான் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு எங்களுக்கு தொலைபேசி தகவல் அளிப்பதாகவும் கூறினார்.

மேற்படி தகவலின் அடிப்படையில் கடந்த 22.07.2006 என்று சுமார் 11.00 மணியளவில் கோயமுத்தூர் வந்து மேற்படி எங்களுக்கு தகவல் கொடுத்த நசீமா அவர்களை நேரில் சந்தித்து மேற்படி சம்பவம் பற்றிக் கேட்ட பொழுது அவர் உயரதிகாரிகளுக்கு தந்தி கொடுத்திருப்பதாகவும், அதிகாலையில் போத்தனூர் காவல்நிலையம் சென்று பார்த்த பொழுது தனது கணவர் இல்லை என்றும், தனது கணவரை பற்றி போலீசார் தகவல் தர மறுக்கிறார்கள் என்றும் கூறினார். மேலும் நாங்களும் மேற்படி நபர்கள் குறித்து விபரம் சேகரிக்க காலை சுமார் 11.30 மணியளவில் போத்தனூர் காவல்நிலையம் சென்று விசாரித்த பொழுது அங்கிருந்த காவலர்கள் தாங்கள் காவல்நிலையத்திற்கு யாரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்து வரவில்லை என்று கூறினர்.

ஆதைத் தொடர்ந்து நாங்கள் கோவையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று மேற்கண்ட நபர்கள் குறித்து விசாரித்த பொழுது எந்த தகவலையும் கூற மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து மேற்கண்ட ஆரூண்பாட்சாவின் மனைவி பல்வேறு உயரதிகாரிகளுக்கு தந்திகள் அனுப்பிய வண்ணம் இருந்தார். மேலும் மேற்படி நசீமா அவர்களிடம் ஏன் உங்கள் கணவரை மட்டும் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்கிறார்கள் என்று கேட்டதற்கு தனது கணவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும், நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலுக்கு முன்பு 13.02.2006 அன்று ஜனநாயக ரீதியாக மதவாத சக்திகளுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும், அப்பொழுது போத்தனூர் காவல்நிலைய ஆய்வாளர் தனது கணவரை அடித்து சித்ரவதைகள் செய்து அவரிடமிருந்து துண்டறிக்கைகளை பறித்துக் கொண்டு தனது கணவரின் மீது தமிழ்நாடுழு நகர் காவல் சட்டத்தின் பிரிவு 71-ன் கீழ் வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றப்பிரிவின்படி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டு அபராதம் கட்டச் சொல்லி வற்புறுத்தியதாகவும், அதற்கு தன் கணவர் மறுத்து நான் எந்த குற்றமும் செய்யவில்லை, ஜனநாயக கடமையை தான் செய்தேன் என்று கூறியதற்கு, மேற்கண்ட போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உளவுபிரிவு காவலர்கள் செந்தில், விஜயன், பழனிச்சாமி ஆகியோர் தன்னை அடித்ததாகவும் கூறி அவர்கள் மீது காவல்துறை தலைவரிடம் புகார் அளித்தார் என்றும், மேற்படி போத்தனூர் போலீசாரின் சட்டத்திற்கு புறம்பான செயல்களால் தான் பாதிக்கப்பட்டதற்கு இழப்பீடு வேண்டியும், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த வழக்கை வாபஸ் வாங்கும்படி அடிக்கடி போத்தனூர் காவல்நிலைய மற்றும் உளவுப்பிரிவு போலீஸ் கோபாலகிருஷ்ணன், உளவுப்பிரிவு உதவி ஆணையாளர் இரத்தினசபாபதி, ஆகியோர்கள் தனது கணவரை ஒழுங்கு மரியாதையாக வழக்கை வாபஸ் வாங்கிவிடு, இல்லையென்றால் உனதுர் வாழ்க்கையை சீரழித்து விடுவோம் என்றும் மிரட்டியதாகவும், அது குறித்து எனது கணவர் சட்ட ரீதியாக பார்த்து கொள்வதாக அவர்களிடம் கூறி அது குறித்தும், உயர் அதிகாரிகளுக்குப் புகார் அனுப்பியுள்ளார்.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு கோவை காவல் துறையினர் மேற்படி ஆரூண்பாட்சா, மாலிக் பாட்சா ஆகியோருடன் அப்பாவிகளான 3 நபர்களை பிடித்து பொய்யாக வழக்கினை ஜோடனை செய்து அவர்களை பெரிய தீவிரவாதிகளை போல சித்தரித்து சட்டத்திற்கு புறம்பான காவலில் வைத்து 23.07.2006 அன்று மேற்படி நபர்களின் உறவினர்களுக்கு கைது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்காமல், அதிகாலை 4 மணியளவில் நீதிபதியின் வீட்டில் ஆஜர் செய்துள்ளனர். மேற்படி வழக்கில் கைது செய்யப்பட் நபர்கள் அனைவரும் காவல் துறையினரால் பல்வேறு சித்ரவதைகள் செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பது எங்களது விசாரணையில் தெரிய வருகிறது. மேற்படி நபர்கள் நீதிபதியிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

நாங்கள் இந்த வழக்கு சம்பந்தமாக ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து கடந்த 4 நாட்களாக கோவையில் இவ்வழக்கு தொடர்பான பல்வேறு ஆதாரங்களை திரட்டி வருகின்றோம். அந்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது தற்பொழுது கோவை மாநகரில் காவல்துறை உயரதிகாரிகள் அனைவரும் கடந்த கால ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் என்றும், தற்பொழுது தமிழக பட்ஜெட் வெளிவரும் நாளில் தமிழக அரசின் பட்ஜெட் சாதனைகள் குறித்த மக்களின் கவனத்தை திசை திருப்பி அமைதியாக வாழுமத் தமிழக மக்களிடையே பீதயை உண்டாக்கி, சிறுபான்மையினர் தற்போதைய அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர் குலைத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டு வங்கியை சிதறடித்தும், அமைதியை விரும்பும் மக்களின் மத்தியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை போன்ற ஒரு மாயை தோற்றத்தை ஏற்படுத்து தற்போதைய அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக அரசியல் ரீதியாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று தெரிய வருகிறது.

மேலும் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு இறுதி கட்ட விசாரணையில் உள்ள நிலையில் நீதித்துறையில் ஒரு பதட்டத்தை ஏற்படுத்துவதற்காகவும் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும் தெரிய வருகிறது. மேலும் இது குறித்து விரிவான அறிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வருக்கு சமர்ப்பிக்க உள்ளோம். எனவே, மேற்படி வழக்கின் உண்டை நிலையை மக்கள் மன்றத்தில் தெளிவு படுத்தவும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தேசீய சிறுபான்மையோர் நல ஆணையத்திற்கும், மனித உரிமைம ஆணையத்திற்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அனுப்பியுள்ளோம்.

மேலும், எங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கை மத்திய புலணாய்வு குழு (CBI) விசாரிக்க வேண்டியும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வேண்டியும், மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகவுள்ளோம் என்று தெறிவித்த வழக்கறிஞர்கள் தாங்கள் இது தொடர்பாக இந்த போலி வழக்குகளை சட்டரீதியா சந்தித்து அவற்றை போலியாக ஜோடனை செய்யப்பட் வழக்குகள் என்று நிருபிப்போம் என்றும் கூறினர்.

செய்திகள் உதவி : கோவையிலிருந்தும், மதுரையிலிருந்தும் நமது வாசகர்கள்


No comments: