Saturday, May 06, 2006

கருணாநிதி ஜெயலலிதா - யாருக்கு ஆதரவு?

கருணாநிதி ஜெயலலிதா: யாரை ஆதரிக்கப் போகிறோம்?

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே..

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம் சமுதாயம் திமுக லி காங்கிரஸ் கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்றிருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் வாழுமிடங்களில் அதிமுக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து மக்களும் ஜெயலலிதாவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என்று தீவிரமாகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு ஆட்டம் கண்டிருக்கிறது. அதனால் சிறுபான்மை சமூக மக்களின் ஆதரவைப் பெற நாடகமாடுகிறார்.

தேர்தல் நேரத்தில் மட்டுமே பரபரப்பாய் இயங்கும் ஓரிரு முஸ்லிம் அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மேடைதோறும் 'கச்சேரி' நடத்திக் கொண்டிருக் கிறார்கள். தனியார் டி.வி. மூலமாக போயஸ் தோட்டத்தில் பெற்றுக் கொண்ட 'சூட்கேஸ்'களுக்கு விசுவாசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு திமுக என்ன செய்தது?

சிலர், திமுக ஆட்சியில்தானே கோவைக் கலவரம் நடந்தது என்று குற்றம் சுமத்துகிறார்கள். நாம் அதனை மறுக்கவில்லை. அதேசமயம், திமுக ஆட்சி நடைபெற்ற
1960-1975 1989-1991 1996-2001 ஆகிய காலக்கட்டங்களில் முஸ்லிம் சமூகம் பல நன்மைகளைப் பெற்றுள்ளதை மறந்துவிட முடியாது.

1971லிருந்து 1975 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள், உருது பேசும் முஸ்லிம்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். இதனால்
95 சதவீத தமிழக முஸ்லிம்களுக்கு ஓரளவு சமூக நீதி கிடைத்தது. சென்னை காயிதே மில்லத் கல்லூரி, மதுரை வக்பு வாரியக் கல்லூரி ஆகியவை தொடங்குவதற்கு அரசு சார்பில் நிலங்கள் வழங்கப்பட்டன. உருதுமொழி வளர்ச்சிக்காக உருது அகாடமி தொடங்கப்பட்டது.
ஜெயலலிதாவின் ஆட்சியில் பாபர் மஸ்ஜித் இடிப்பை தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது 'தடா' கறுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. அவர்களையெல்லாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு கலைஞர் அரசு தான் விடுதலை செய்தது. கோவையில் நடைபெற்ற சம்பவங்களில் முஸ்லிம்கள் சாதாரண கிரிமினல் வழக்குகளில் மட்டும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மீது வேறு பயங்கர சட்டங்கள் ஏதும் பதிவு செய்யப்பட வில்லை.. மாறாக 2005ல் ஜெயலலிதாவின் ஆட்சியில் முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலவரத்தில் பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா எப்படிப்பட்ட மதவெறியர் என்பது உலகம் அறிந்த உண்மை

சென்னையில் ஜெ. ஆட்சியில் நடைபெற்ற மீலாது விழா கலவரத்தை முஸ்லிம்கள் யாரும் மறக்க முடியாது. அந்தக் கலவரத்தில் இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண உதவிகள் மறுக்கப்பட்டது.

பாபரி மஸ்ஜித் இடத்தில் கரசேவை நடத்த வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பாஜக அல்லாத ஒரே முதலமைச்சர் என்ற 'விருதை' ஜெயலலிதாவுக்கு சங்பரிவாரங்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது ஜெயலலிதாவின் அரசு கடுமையாக நடந்து கொண்டது. அதிராம்பட்டினம், மேலப்பாளையம். கோவை போன்ற இடங்களில் பாபரி மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து அமைதி வழியில் போராடிய முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஜெயலலிதாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் மீது அடக்குமுறை தடாச் சட்டம் பாய்ச்சப் பட்டது. காயல்பட்டினத்தில் 'எச்சில் துப்பினார்' என்ற காரணத்தை(?) சுமத்தி ஒருவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார்.

14 வயது முஸ்லிம் சிறுவன் மீதெல்லாம் 'தடா' சட்டம் பாய்ச்சப்பட்டது. ஜெயலலிதாவின் 1991 1996 ஆட்சியில் கோவை பள்ளிவாசல் இமாம் ஜியாவுதீனும், திண்டுக்கல்லில் பள்ளிவாசல் இமாம் காஸிமும், இராமநாதபுரத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்த கூரியூர் ஜின்னாவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மீது சாதாரண கிரிமினல் வழக்குகளே பதிவு செய்யப்பட்டன. ஆனால் மதுரையில் ராஜகோபாலனை கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் மீது 'தடா' சட்டத்தைப் பாய்ச்சி அநீதியாக நடந்து கொண்டார் ஜெயலலிதா. அதே வழக்கில் இன்று 'ஜெயா'வின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் பாக்கர் என்பவரும் ஜெயலலிதாவால் 'தடா'வில் கைது செய்யப்பட்டார். அடுத்து ஜெயினுலாபிதீனும் கைது செய்யப்படும் சூழல் வந்தது. அப்போது அவரைக் காப்பாற்றியது த.மு.மு.க. என்ற கேடயம்தான். ஜெயலலிதாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் குற்றப்பரம்பரையாக சித்தரிக்கப்பட்டனர். கோவையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோட்டைமேடு பகுதியில் 'போலீஸ் செக்போஸ்ட்' அமைத்து முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார் ஜெயலலிதா. மீண்டும் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்ற போதுதான் அந்த 'செக்போஸ்ட்'கள் அகற்றப்பட்டன.

இன்றைய ஜெயலலிதா அரசின் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள்

2002ஆம் ஆண்டில் சங்பரிவார் கும்பல் திருப்பூரில் கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசலை தீவைத்துக் கொளுத்தியது. 70 லட்சம் மதிப்புள்ள பனியன் கம்பெனிகளும் கொளுத்தப்பட்டன. 10 அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். 2002லில் அதிராம்பட்டினத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துகளில் முஸ்லிம்கள் மீது பழிபோட்டு, பொய் வழக்கு போட்டது ஜெயலலிதா அரசு. 2003-ல் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவுக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது ஜெயலலிதா அரசின் காவல்துறை அத்துமீறி தாக்குதலை நடத்தியது. அதில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டது. 3,000 முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களையும் வேதனைப்படுத்தினார் ஜெயலலிதா. பிறகு 2004ல், குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த பாஜகவுடன் தேர்தல் கூட்டு வைத்தார். 2002-ல் குஜராத்திற்குச் சென்று நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதா, 2003-ல் நரேந்திர மோடி கோவைக்கு வருகை தந்தபோது, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமுமுக நிர்வாகிகளை சிறைப் பிடித்தது. 2005-ல், முத்துப்பேட்டையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பாஜகவினர் விநாயகர் ஊர்வலம் நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பஷீர் என்பவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்த ஜெயலலிதா அரசு, கலவரத்தில் நேரடியாகப் பங்குகொண்ட பாஜகவின் மாவட்டச் செயலாளர் கறுப்பு (எ) முருகானந்தத்தை அதே சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் பாரபட்சம் காட்டியது. 2005ல் பழனி பாலசமுத்திரம் பகுதியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கவிடாமல் தகராறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம்களைத் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா. இஸ்லாத்தை மனமுவந்து ஏற்கும் மக்களைத் தடுக்கும்விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக 'மதமாற்ற தடைச் சட்டத்தை'க் கொண்டு வந்து சங்பரிவாரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார் ஜெயலலிதா. ஜெயலலிதாவைப் பின்பற்றி பாஜக ஆளும் மாநிலங்களில் தற்போது மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா ஆட்சியில் கோவையில் சுல்தான் மீரான், அப்துல் சத்தார், சர்தார், கவுண்டம்பாளையம் அப்பாஸ் ஆகியோரும், விழுப்புரத்தில் பள்ளிவாசல் இமாம் உசேன் அவர்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். கோவையில் இமாம் ஒருவர் பயங்கரமாக தாக்கப்பட்டார். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்கவில்லை. பழனிபாபாவைக் கொன்றவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட்டவர் ஜெயலலிதா. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை கடுமையாக எதிர்த்தவர்.

ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம் அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். ''அயோத்தியில் பாபர் மஸ்ஜித் இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியே தீரவேண்டும், பொதுசிவில் சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறினார். முஸ்லிம், கிறித்ஸ்வ மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களுக்கு எதிராக திரிசூலம் வழங்கும் நிகழ்ச்சியை பிரவீண் தொகாடியா திருச்சியில் நடத்திட அனுமதி தந்தார் ஜெயலலிதா. மார்ச் 2006ல் ''தமிழ்நாட்டை குஜராத் ஆக்குவோம்'' என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசியதற்கு நடவடிக்கை எடுக்காதவர் ஜெயலலிதா. மார்ச் 2006லில் கடையநல்லூரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைக்கு சட்டரீதியாக தீர்வு காணாமல் அங்கு நிரந்தரமாக தொழுகை நடைபெறுவதைத் தடுக்கும் வண்ணம் ஜெயலலிதா அரசு பூட்டு போட்டது. குஜராத்தில் 3,000 முஸ்லிம்களைப் படுகொலை செய்த மாபாதகர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த ஜெயலலிதாவுக்கு வாக்கு அளிக்கலாமா?

கோவை சம்பவங்களை இப்போது சிலர் நினைவுபடுத்தி, திமுகவிற்கு நாம் வாக்களிக்கலாமா? என்று கேள்வி கேட்கிறார்கள். கோவை சம்பவத்தைத் தொடர்ந்து 1998ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியை ஆதரித்ததை ஜெய்னுலாபுதீன் வட்டாரம் திட்டமிட்டே மறைத்து வருகிறது. அதைத் தொடர்ந்து 2001 சட்டமன்றத் தேர்தலில் கலவரம் நடைபெற்ற கோவை உள்ளிட்ட 100 தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்து திமுகவுக்கு ஆதரவாக வேலை செய்ததையும் 'ஜெய்னுலாபுதீன்' வட்டாரம் வசதியாக மறைக்கிறது! மேலும் 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் திமுகவை ஆதரித்ததையும் அவர்களால் மறைக்க முடியாது.

அப்போதெல்லாம் திமுகவை ஆதரித்தவர்கள், இப்போது திடீரென திமுகவுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் பெற்றுக் கொண்ட 'கமிஷன்'தான். தங்களின் சுயநல வாழ்வுக்காக சமுதாயத்தைக் கூறு போடுபவர்கள், அதற்காக அதிமுக செய்த கொடுமைகளை மறைத்துவிட்டனர்.

1999 ஜூலை 4ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் ஜெயலலிதா இருந்த போது, ''ஜெயலலிதா இருக்கும்வரை அந்த மேடைக்கே வரமாட்டேன்'' என்று கூறிய ஜெய்னுலாபுதீன், இன்று ''அதிமுகவுக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்வேன்'' என்று சபதமெடுத்தது போல் பிரச்சாரம் செய்கிறார், முஸ்லிம்களுக்கு துரோகம் செய்கிறார்.. அவரை அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரங்களில், ''அம்மாவின் போர்ப்படை தளபதி'' என்றே அறிமுகப்படுத்துகின்றனர். இதில் திரைமறைவில் நடந்த 'ரகசியம்' என்ன என்பதை சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

கருணாநிதி ஜெயலலிதாவைப் போல் சங்பரிவார் சிந்தனைக் கொண்டவர் அல்ல என்று கூறியவர்கள், இன்று ஜெயலலிதாவிடம் வாங்கிய கமிஷனுக்காக 'பிரச்சார வேலை' செய்து கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவின் பினாமி ஆட்சியாக நடந்துவரும் ஜெயலலிதா அரசை ஆதரிப்பதற் காக 3,000 முஸ்லிம்களைக் கொன்றொழித்த நரேந்திர மோடியின் செயலைக்கூட ஆதரித்துப் பேச முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் துணிந்து விட்டனர். இதைத்தான் சகிக்க முடியவில்லை.
சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!

கலைஞர் கருணாநிதி மீது நமக்கு விமர்சனங்கள் உண்டு. அதை நியாயப் படுத்தவில்லை. அவற்றை அன்றும் கண்டித்தோம், இன்றும் கண்டிக்கிறோம். அதேசமயம் இன்று கலைஞரின் நிலைப்பாடு மாறியிருக்கிறது. தனது தவறை ஒத்துக்கொள்ளும் விதமாக விருதுநகரில் நடைபெற்ற திமுக மண்டல மாநாட்டில் ''நாம் போகக்கூடாத இடத்திற்குப் போனது தவறுதான்'' என்று பேசினார். அதில் உறுதியாகவும் உள்ளார். அவரது செயல்பாட்டில் பல மாறுதல்கள் உள்ளன. ஆனால் ஜெயலலிதாவோ ''பாஜகவுடன் கூட்டு சேர மாட்டேன்'' என்று கூறிவிட்டு, மீண்டும் கூட்டு சேர்ந்து வாக்குறுதியை மீறி முஸ்லிம்களை வேதனைப்படுத்தினார். ஜெயலலிதா நம்பிக்கைக்குரியவர் அல்ல, அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸ்லின் எண்ணங்களைத்தான் அமல்படுத்துவார் என்பதை சமுதாயம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
ஜெயலலிதா அரசினால் எல்லோருக்கும் துன்பம்!

வெள்ள நிவாரண நிதி என்ற பெயரில் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோகக் காரணமாக இருந்தது ஏழை விவசாயிகளை எலிக்கறி உண்ணும் நிலைக்குத் தள்ளியது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை வஞ்சித்தது போலீஸ் இலாகாவைப் பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டியது என எல்லாத் தரப்பு மக்களையும் துன்பத்தில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா.

எனவே அன்பிற்கினிய சமுதாயமே..
நமது சமுதாயத்திற்கு இடஒதுக்கீடும் தராமல், 8 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஜாமீனும் வழங்காமல் ஆட்சியின் இறுதியில் நாடகமாடும் ஜெயலலிதா அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

மத்திய மாநில அரசுகளில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு சிறைவாசிகளுக்கு ஜாமீனில் விடுதலை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி கொடுத்திருக்கும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு நமது வாக்குகளை அளிப்போம்

No comments: