Wednesday, November 21, 2007

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-03)

ஜகாத் ஓர் ஆய்வு - பி.ஜே யின் கூற்றுக்கு மறுப்புகள் ஆதாரத்துடன் (PART-02)
குடந்தை சயீத் - தாயிஃப்-சவுதி அரேபியா

ஏக இறைவனின் திருப்பெயரால்...


காலக்கெடு இருக்கிறது

இதை யாவரும் மிக எளிதாக விளங்கிக்கொள்ளலாம். ஒரு காரியத்தை செய்து கொண்டே இருங்கள் என்று சொன்னால், அங்கு கால இடைவெளி இல்லை. அந்த காரியத்தையே திரும்பவும் செய்யுங்கள் என்றால், ஒரு இடைவெளிவிட்டு திரும்பவும் செய்யுங்கள் என்று அர்த்தம். அந்த இடைவெளி ஒரு நாளாக இருக்கலாம், ஒரு மாதமாக இருக்கலாம் அல்லது ஒரு வருடமாக இருக்கலாம். ஒரு காலஇடைவெளியில் அதைச்செய்ய வேண்டும் என்பது தெளிவு. காலஇடைவெளி இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஏன் என்றால் திரும்பவும் செய்யுங்கள் என்று சொன்னாலே ஒரு
இடைவெளிக்கு பிறகு செய்யுங்கள் என்றுதான் அர்த்தம். தொடர்ந்து செய்யுங்கள் என்றால் இடைவெளி கிடையாது தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டியது தான்.

கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புகாரியில் இடம் பெற்ற பலமான நபி மொழி மூலம் முன்பே நிரூபிக்கப்பட்டுள்ளது. கொடுத்த பொருளுக்கும் திரும்பவும் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு இடைவெளி (காலக்கெடு) உண்டு. எத்தனை ஆடுகள் இருந்தால், எத்தனை ஆடுகள் ஜகாத் கொடுக்க வேண்டும், என்பதை விளக்குவது தான் அந்த நபி மொழியின் நோக்கம். கால இடைவெளி நிச்சியமாக உண்டு என்பதை அது நிரூபிக்கிறது.

கால இடைவெளியை அறிவிக்கக்கூடிய வேறு நபி மொழிகள் இருக்கின்றன. அதைப் பின்னால் பார்ப்போம். இங்கு நாம் சொல்ல வருகின்ற விஷயம், கொடுத்த பொருளுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, மாற்றமாக கொடுத்த பொருளுக்கு தேவையில்லை என்று பி.ஜே. சொல்லிக்கொண்டு இருக்கிறார். காலக்கெடு இருக்கிறது என்று நபி மொழி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு மாற்றமாக காலக்கெடு இல்லை என்று பி.ஜே. சொல்லிக் கொண்டிருக்கிறார். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் எந்த ஆதாரமும் தான் கொடுக்க வேண்டியதில்லை என்று சொல்லியே இவைகளைச் சொல்கிறார். (மதுரை விவாத சிடியில் இதைப் பார்க்கலாம்). அதையும் ஏற்றுக்கொள்ள பலர் இருக்கின்றனர். ஆதாரத்தின் அடிப்படையில் சொல்வதை உதாசீனப்படுத்துகின்றனர்.

சுருக்கமாக: கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் அங்கு ஒரு காலக்கெடு உண்டு. அதைப் போலவே கால இடைவெளியில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றாலே கொடுத்த பொருளுக்கும் சேர்த்துதான் கொடுக்க வேண்டும். இதற்கான விளக்கத்தைத்தான் மேலே சில ஆதாரங்களுடன் பார்த்தோம்.

மேலதிக நடைமுறை உதாரணம்.

மேலதிகமாக சில நடைமுறை உதாரணங்களைக் கொண்டும் இவைகளைப் புரியலாம். ஒரு அரசாங்கம் கீழ் கண்ட ஒரு வரியை கட்டச்சொல்லி உத்தரவு இடுகிறது. அதாவது ஒரு இலட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் அதில் இருந்து 2.5% வரியாகக் கட்ட வேண்டும். ஒரு இலட்சத்துக்கு கீழ் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. ஒருவர் பத்து இலட்சம் வைத்திருக்கின்றார். இந்த வருடம் 2.5ம% கட்டிவிட்டார். அடுத்த வருடம் 12 இலட்சம் இருக்கிறது. இப்போது 12 இலட்சத்துக்கு 2.5ம% கட்ட வேண்டுமா? அல்லது 2 இலட்சத்துக்கு 2.5% கட்ட வேண்டுமா? அந்த சட்டத்தின் படி 12 இலட்சத்திற்கு 2.5ம% கட்ட வேண்டும் என்றுதான் யாரும் கூறுவார்கள். அவர் இரண்டு இலட்சத்திற்கு மட்டும் வரி கட்டினால் அது ஏற்றுக்கொள்ளப்படாது.

அவர் இரண்டு இலட்சத்திற்கு வரி கட்டினால் போதும் என்றால், அது சொல்லப்பட்டிருக்க வேண்டும். போன வருடம் கட்டிய பணத்திற்கு இந்த வருடம் கட்டத் தேவையில்லை என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். அப்படிச் சொல்லப்படாவிட்டால் தானாகவே கையில் உள்ள அனைத்துக்கும் கட்ட வேண்டும் என்பது சொல்லாமலே புரியக்கூடியதாக இருக்கிறது. வரி கட்டிய பணத்திற்கே திரும்பத் திரும்ப கட்டு என்று சொல்லப்பட வேண்டியதில்லை, அப்படி யாரும் சொல்வதும் இல்லை, இதுதான் நடை முறை.

ஜகாத் விஷயத்திலும் அது தான் சட்டம்

ஜகாத் விஷயத்தில் மட்டும் வருடா வருடம் 2.5 சதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு வேறு அர்த்தமாம். வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று நிரூபித்தால் மட்டும் போதாது, கொடுத்ததற்கே திரும்பத் திரும்ப கொடு என்று நபி மொழி வேண்டும் என்று பி.ஜே. கேட்கின்றார். அதையே இலட்சக்கணக்கானோரின் உதடுகளும் திருப்பி சொல்கின்றன.

ஆக அவர் கேட்பது எல்லாம் 'இல்லாத ஊருக்கு வழிதான்'. நாம் திருப்பிக் கேட்கின்றோம் கொடுத்ததை விட்டுவிட்டு புதிதாய் வந்ததற்கு மட்டும் கொடு என்று சொல்லப்பட்டிருக்கின்றதா? அதற்கு தான் ஆதாரம் தர வேண்டும். இல்லை என்றால் கொடுத்ததற்கும் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பது தான் அர்த்தம். பி.ஜே. மாற்றி சொல்வதற்கு காரணம் அவர் போட்ட அடிப்படை தான். பொருளுக்கு தூய்மை என்று வைத்து அடித்தளம் போட்டாகிவிட்டது. இப்போது அடித்தளத்தை மாற்ற முடியாது என்று கட்டிடத்தை அடித்தளத்திற்கு தகுந்தாற் போல் கட்டப் பார்க்கிறார். கொடுத்த பொருள்தான் தூய்மையாகிவிட்டதல்லவா? அதற்கே திரும்பத் திரும்ப கொடுக்க வேண்டுமா? இதுதான் அவரின் பிரச்சினை.

ஆனால் பொருளுக்குத் தூய்மை ஜகாத் என்பது ஒரு வாதத்திற்கு தவறாகப் போனாலும் நான் சொன்னது சரி தான் என்று கூறிக்கொள்கிறார். அதை முக்கியமான ஆதராமாக வைக்கவில்லை என்கின்றார். அதையும் பலர் ஆமோதிக்கின்றனர்.

காலக்கெடு (இடைவெளி) என்ன?

காலஇடைவெளியில் தான் ஜகாத் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஜகாத் சட்டத்தில் காலஇடைவெளியும் ஒரு அம்சமாக இருக்கிறது. அதை விட்டுவிட்டு செயல்படுத்தவே முடியாது.

நாம், கால இடைவெளி ஒன்று நிச்சயமாக உண்டு என்று சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்த பின் காலக்கெடு பற்றி அறிவிக்கின்ற ஏராளமான ஹதீஸ்களைப் பார்த்து அவைகளில் பலமான நபி மொழிகளை சுட்டிக்காட்டுகிறோம். மௌலவி பி.ஜே. அவர்களோ காலக்கெடு இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்கின்றார். அது மட்டுமல்ல அதனால் தான் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்ற முடிவை எடுத்தேன் என்கின்றார்.

ஆகவே வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு சரியான நபி மொழி இருக்கின்றது என்று அவர் ஏற்றுக்கொண்டால், அவரது முடிவு தவறு என்று அவரே சொன்னதாக ஆகிவிடும், இந்த நிலையில் தான் அவர் இருந்து கொண்டிருக்கிறார்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு நபி மொழி உட்பட பல ஆதாரங்கள் தரப்படுகின்றன. சகோதரர் பி.ஜே. அவர்கள் இது பலகீனம், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று எல்லாவற்றையும் தட்டி விடுகின்றார்.

நாம் கேட்பது இதுதான், ஒரு காலக்கெடு இருக்கிறது என்று சரியான நபி மொழி சொல்லிக் கொண்டிருக்கிறது, என்பதை நிரூபித்த பின் அந்த காலக்கெடு ஒரு வருடம் என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு அதை ஏற்றுக்கொள்கிறோம்.

காலக்கெடு இருக்கின்றது என்பது உறுதிபடுத்தப்பட்ட ஒன்று. வருடா வருடம் கொடுக்க ஆதாரம் இல்லை என்றால், அந்த காலக்கெடு என்ன? என்று திருப்பிக் கேட்கின்றோம். ஆறு மாதமா? இரண்டு வருடமா? இரண்டு மாதமா? அதற்கு ஏதும் ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும். இல்லை என்றால் இந்த விஷயத்தில் வீண் குழப்பங்கள் செய்யாமல் இருக்கட்டும்.

திருக்குர்ஆனின் 6:141 வசனத்திற்கே, உண்மைக்கு மாற்றமான விளக்கம் கொடுக்கும் போது, சரியான நபி மொழிகளை ஏதேனும் காரணம் காட்டி தட்டி விடுவது அதைவிட இலகுவான காரியம்தான்.

வருடா வருடம் கொடுக்க வேண்டும்

வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பதற்கு பல நபி மொழிகள் இருக்கின்றன. இதில் பலமானதும், பலகீனமானதும் இருக்கின்றன. இவை அணைத்துமே வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதையே அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆறு மாதம் என்றோ, இரண்டு வருடம் என்றோ அறிவிக்கும் ஒரு நபி மொழி கூட இல்லை. நபித் தோழர்களின் செயல்பாடுகளும் கருத்து வேறுபாடில்லாமல் இதையே உறுதி செய்கின்றன.

ஸஹீஹ்கான நபி மொழியாக அபு-தாவூத்தில் வரக்கூடிய ஒரு நபி மொழியை அறிஞர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்:

மூன்று விஷயங்களை செய்யும் ஒருவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார்

(1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை மட்டுமே வணங்குவது. (2) தனது செல்வத்திற்கான ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் மன விருப்பத்துடன் வழங்கி வருவது................ என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காழிரி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த நபி மொழியையும் பல காரணங்களைக் கூறி பலவீனம் என்று ஒதுக்குகிறார். எல்லாவற்றையும் எழுதினால் இன்னும் நீண்டு கொண்டே போகும் என்ற காரணத்தினால் ஒரு காரணத்தை மட்டும் விளங்குவோம்:

இதை அறிவிக்கக் கூடியவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைக் கூறிவிட்டு அவரே சொல்கிறார், இருந்தாலும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறி இருப்பது ஏன் என்று புரியவில்லை என்று.

அறிவிப்பாளர்களின் குறை, நிறைகளை சுட்டிக்காட்ட இவர் மேற்கோள் காட்டும் எல்லா நூல்களிலும் இவரை நபித் தோழர் என்றே கூறப்பட்டுள்ளது.

(01) தக்ரீப் - 226 (02) தஹ்தீபுத் தஹ்தீப் - 2ஃ670 (03) அல் இஸாபா – 2ஃ371 இந்த மூன்று நூல்களும் நபித் தோழருக்கான இலக்கணம் கூறிய இப்னு ஹஜர் அவர்களுக்குரியதாகும். (04) தாரிக்குல் கபீர் – 4ஃ345 இது இமாம் புஹாரிக்குரியது. (05) அல் இஹ்திஆப் - 3ஃ117 (06) அல் ஜரஹ் வத்தஃதீல் - 5ஃ185 (07) தஹ்தீபுல் கமால் - 5ஃ645. (08) ஃதிகாத் - 1ஃ365. (09) தபகாத்துல் குப்ரா – 7ஃ421. (10) உசுல் ஃகாபா – 3ஃ392. (11) அவ்னுல் மஃபூத் 2ஃ324. (12) அல் காஷpஃப் - 1ஃ599. (13) முஃஜமுஸ் ஸஹாபா – 2ஃ37. (14) மஃரிபத்துஸ் ஸஹாபா – 4ஃ178. (15) நைலுல் அவ்தார் – 4ஃ152. (16) தஜ்ரீத் அஸ்மாவுஸ் ஸஹாபா – 1ஃ335.


இவர் நபித் தோழர் இல்லை என்று உலகில் உள்ள எந்த ஒரு நூலிலும் கூறப்படவில்லை. ஹதீஸ் கலை அறிஞர்கள், அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் யாருமே இவரை நபித் தோழர் இல்லை என்று கூறவில்லை.

அது மட்டுமல்ல நபித் தோழர் என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று கூட கூறவில்லை. நாம் இத்தனை நூட்களின் பட்டியலைக் காட்டி அவர் நபித்தோழர் என்று நிரூபிக்கின்றோம். பி.ஜே. ஏதாவது ஒரு நூலில் இருந்தாவது, அவர் நபித் தோழர் இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இவராக ஒர காரணத்தைச் சொல்லி அதனால் அவர் நபித் தோழர் இல்லை என்கின்றார். இதைப் போன்று சில காரணங்களைச் சொல்லி அந்த நபிமொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என்கின்றார்.

ஹதீஸ் கலையின் பொது விதி

இந்த நேரத்தில் ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதியையும் இங்கே குறிப்பிட வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது. மேற்கண்ட ஹதீஸை நாம் முன்பு பார்த்த (நபித் தோழர் இல்லை என்ற) காரணத்தைச் சொல்லி எந்த ஆதாரமும் இல்லாமல், அவர் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னாலும், ஹதீஸ் கலையின் பொதுவான ஒரு விதி அந்த ஹதீஸ் சரிதான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு நபி மொழியை சரி இல்லை என்று சொல்வதற்கு எந்த ஹதீஸ் கலையின் விதியை பயன்படுத்துகிறோமோ, அதே ஹதீஸ் கலையின் பொதுவிதியைத் தான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

அந்த விதியாவது:
'அறிஞர் பெருமக்கள் அணைவரும் ஒரு ஹதீஸை செயல்படுத்தி வர வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தால் அந்த ஹதீஸை ஏற்று செயல்படுத்துவது கட்டாயக் கடமையாகும்' இக்கலையின் சிறந்த அறிஞர்கள் பலரும் இதனைத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (அந்நுகத் - 171)

'ஒரு நபி மொழியை மக்கள் அணைவரும் ஒப்புக்கொண்டுவிட்டால் அதற்கு சரியான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றாலும் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று தீர்மானிக்கப்படும்' (தத்ரீப் - 29)

இவ்வாறு ஒப்புக்கொள்ளப்படுவதற்கு கீழ்கண்ட நிபந்தனைகளும் உண்டு.

* அந்த நபி மொழியின் அறிவிப்பாளர் மீது பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர், என்ற குற்றச்சாட்டு இருக்கக் கூடாது. ஆனால் நினைவாற்றல் குன்றியவர் என்ற குற்றச்சாட்டு இருக்கலாம்.

* மேலும் குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழியுடன் நேரடியாக மோதக்கூடியதாக இருக்கக் கூடாது.

* முக்கியமாக இக்கலையின் அறிஞர் பெருமக்கள் யாவரும் மறுக்காது அந்தக்கருத்தை செயல்படுத்தி வந்திருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையின் படி ஒரு ஹதீஸ் இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஹதீஸ் கலையின் பொது விதியாகும்.

நாம் முன்பு பார்த்த அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும், என்ற நபி மொழி ஆதாரப்பூர்வமானதுதான். அதைப் பி.ஜே. அவர்கள் தான், ஏற்கப்படாத காரணங்களைக் கூறி சரியானது இல்லை என்கின்றார். அவர் சொல்கின்ற காரணங்களில் ஒன்றை ஏற்கனவே பார்த்தோம்.

அபு-தாவூத்தில் பதிவாகியுள்ள அதே ஹதீஸை வேறொரு அறிவிப்பாளராகிய அப்துல் ஹமீத் அபுத்தகி என்பவரும் அறிவிக்கிறார். இது தப்ரானி, முஃஜமுஸ் ஸஹாபா ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது. இதுவும் ஹதீஸ் கலையின் விதியின் படி சரியான ஹதீஸ் ஆகும்.

இந்த அறிவிப்பாளர், பொய் உரைப்பவர், இட்டுக்கட்டுபவர் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாதவர்.

* இந்த ஹதீஸ் குர்ஆனுக்கோ நபி மொழிக்கோ எதிரானது அல்ல. மாறாக, மற்ற நபி மொழிகளோடும், நபித் தோழர்களின் நடவடிக்கையோடும் ஒத்துப் போகக்கூடியது.

* இந்த ஹதீஸ் நபித் தோழர்கள் காலத்தில் இருந்து இன்று வரை எல்லா அறிஞர்களாலும் ஏற்று செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மேற்கண்ட மூன்று நிபந்தனைகள் தான் அந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானதுதான் என்று ஹதீஸ் கலையின் விதிப்படி நிரூபிக்கிறது. அது மட்டுமல்ல அபு-தாவூத்தில் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர் வழியாக பதிவாகியுள்ள இதே ஹதீஸையும் ஆதாரப்பூர்வமானது என்று ஊர்ஜீதப்படுத்துகிறது.

ஆதாரத்தின் அடிப்படையில்

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை எவ்வித சந்தேகங்களுக்கும் இடமில்லாமல், ஆதாரங்களுடன் கூறியுள்ளோம். அது மட்டுமல்ல வருடா வருடம் கொடுக்கும் போது, 'கொடுத்த பொருள்', 'கொடுக்காத பொருள்' என்றெல்லாம் சொல்ல முடியாது. கொடுத்த பொருள் செலவாகியிருக்கலாம். புதிய பொருள் வந்திருக்கலாம். அல்லது கொடுத்த பொருள் கையில் இருக்கவும் செய்யலாம். கையில் இருக்கின்ற மொத்த பொருட்களையும் கணக்கிட்டு 2.5 சதம் ஜகாத் கொடுக்க வேண்டும். இது தான் இஸ்லாமிய நடை முறை. உலகம் முழுவதும், எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படிப் பின் பற்றவில்லை, என்பதற்கான ஆதாரங்களையும் விளக்கங்களையும் தந்துள்ளோம். இதற்கு மாற்றமாக சொல்பவர்களிடம் தான்
ஆதாரம் இல்லை. எந்த ஒரு சரியான ஆதாரத்தைக் காட்டினாலும், 'அந்த அறிஞர் தவறுக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அவர் தவறு செய்துவிட்டார்' என்று சொல்லி, இவர் தனது சொந்த விளக்கத்தை தான் ஆதாரமாக வைக்கின்றார். அவைகள்தான் தவறாக இருக்கின்றன. இவைகளை நாம் ஆதாரத்துடன், சுட்டிக்காட்டியுள்ளோம். ஆகவே அவர் சொல்வது இங்கு அவருக்கே பொருத்தமாக இருக்கிறது. இந்த ஜகாத் விஷயத்தில் பி.ஜே. தவறாக சொல்கின்றார். தவறுக்கு அப்பாற்பட்டவர் அல்ல
பி.ஜே.

மார்க்கத்தில் சொல்லாத புதிய சட்டத்தின் பயங்கர விளைவுகள்

* பி.ஜே. சொல்வது மார்க்கத்தில் உள்ளதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது புதிதாக தினிக்கப்பட்டது. ஆகவே பித்அத்தான விஷயம். பித்அத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றவர், இந்த விஷயத்தில் பித்அத்தை செய்யச்சொல்லி பிரச்சாரம் செய்கின்றார். பித்அத்தான விஷயம் ஒவ்வொன்றும் வழிகேடு, ஒவ்வொரு வழி கேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

* இவரது சட்டம், மக்களுக்கு கூடுதலான சுமை. செயல்படுத்தவே சாத்தியம் இல்லாத ஒரு சட்டம். ஜகாத் கடமையான ஒருவன், அவனுக்கு புதிதாய் வருகின்ற ஒவ்வொரு பொருளுக்கும், (ஒரு பைசாவாக இருந்தாலும்) உடனே ஜகாத் கொடுத்துவிட வேண்டும். கொடுக்காமல் செலவு செய்ய முடியாது. அப்படிச்செய்தால், அந்த பொருளுக்கு ஜகாத் கொடுக்காத குற்றவாளி. அந்த பொருட்கள் எல்லாம் உருக்கப்பட்டு மறுமையில் சூடு போடப்படுவான். உதாரணமாக ஒரு பத்து ரூபாய் பணம் வருகின்றது, உடனே அதற்கு ஜகாத் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நிமிடமே இன்னொரு ஐந்து ரூபாய் வந்தாலும் உடனே கொடுக்க வேண்டும். இப்படியாக வாழ்நாள் முழுவதும் வருகின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

* அல்லாஹ் (ஸுப்) சொன்ன சட்டம் வெகு எளிமையானது. அதன்படி ஜகாத் கடமையான ஒருவன் இந்த வருடம் ஜகாத் கொடுக்கின்றான். பின்பு எவ்வளவு சம்பாதித்தாலும் அவைகளை எல்லாம் ஜகாத் கொடுக்காமலே செலவு செய்து கொள்ளலாம். செலவு போக மிச்சம் உள்ளதை சேமிக்கலாம். இவைகளுக்கெல்லாம் ஜகாத் இல்லை. அடுத்த வருடம் ஜகாத் கொடுக்கும் நேரம் வரும் பொழுது, அவன் செலவு போக அதிகப்படியாக சேமித்து வைத்ததிலிருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அதாவது அவன் ஜகாத் கொடுக்கின்ற நேரத்திலே, கையிலே எவ்வளவு உள்ளதோ அவைகளுக்கு 2.5 சதம் ஜகாத். இடையில் வருகின்ற பொருட்களை அவன்
விரும்பியபடி செலவு செய்து கொள்ளலாம்.

* ஆனால் மார்க்கத்தில் இல்லாத, பி.ஜே. அவர்களின் சட்டத்தை செயல்படுத்தினால் அவன் குற்றவாளியாகிறான். அந்த சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டாலும் குற்றவாளியாகிவிடுவான். ஏன் என்றால் ஜகாத் கடமையான ஒருவன் வாழ் நாள் முழுவதும் சம்பாதிக்கின்ற ஒவ்வொரு பைசாவுக்கும் ஜகாத் கொடுத்தே ஆக வேண்டும். இதை செயல் படுத்த முடியாமல் மறுபடியும் குற்றவாளியாகிறான். ஆக பி.ஜே.யின் சட்டத்தை செயல்படுத்தினால், எப்படியும் அவனக்கு அல்லாஹ்வின் தண்டனை உண்டு என்பதிலே எவ்வித சந்தேகமும் இல்லை.

* பி.ஜே. யின் கருத்துப்படி, ஒரு பொருளுக்கு ஒரு தடவைதான் ஜகாத், ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் அப்படி ஒரு தடவை கொடுத்தே ஆக வேண்டும் என்பதை விளக்கமாகக் கண்டோம். ஆனால் பி.ஜே.யோ, ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத், ஆனால் கொடுத்ததிற்கே திரும்பத் திரும்ப கொடுக்கச் சொல்கின்றார்கள், என்று சொல்லி அவர் சொல்வது எளிமையாக இருப்பது போல் பிரச்சாரம் செய்கிறார். மாற்றுக் கருத்துப்படி ஜகாத் கொடுத்தால் பிச்சைக்காரனாகி விடுவார்கள் என்றெல்லாம் சொன்னார். ஆனால் இவர் சொல்கின்றபடி ஜகாத் கொடுத்தால்தான், ஒருவன் அதிகப்படியான பொருளை செலவிட வேண்டி வரும். ஏன் என்றால் புதிதாய் வரும் அனைத்து பொருட்களுக்கும் ஜகாத் கொடுக்க வேண்டும.

* ஜகாத் கொடுத்த பொருளை அப்படியே வைத்துக் கொண்டு, அதற்கு திரும்பவும கொடுக்க வேண்டும் என்ற யாரும் சொல்லவில்லை. அடுத்த வருடம் திரும்பவும் கொடுக்கின்ற நேரம் வருகின்ற போது, இவர் செலவு எல்லாம் போக அந்த பொருள் கையில் மிச்சம் இருந்தால், அதில் இருந்து 2.5 சதம் கொடுக்க வேண்டும். அந்த பொருளை செலவு செய்து இருந்தால் அதற்கு ஜகாத் கிடையாது. இதை நடை முறை உதாரணத்துடன் முன்பே கண்டோம்.

முடிவுரை

இறுதியில் மறுபடியும் தமிழ் முஸ்லீம்களுக்கு நாம் வைக்கும் அன்பான வேண்டுகோள். எதையும் ஆதாரத்தை வைத்து முடிவெடுங்கள்.

ஜகாத் விஷயத்திலே பல நிலைபாடுகளிலே, பி.ஜே. இருந்து வருகிறார் என்பதை நாம் ஆதாரத்துடன் தந்துள்ளோம். சுருக்கமாக மறுபடியும் கீழே
தரப்பட்டுள்ளது.

* முதலிலே சில ஆதாரங்களை கொடுத்தது.

* அது தவறானதும், அதே கருத்தில் வேறு ஹதீஸைத் தந்தது.

* பின்பு அதையும் விட்டுவிட்டு, வேறு ஆதாரம் இருக்கிறது என்றது.

* ஆதாரம் என்று சொல்லிவிட்டு 'கொடு' என்ற பொதுவான கட்டளையை காண்பித்தது.

* ஆதாரம் கொடுக்க அவசியம் இல்லை என்று தற்சமயம் சொல்வது.

மேற்கண்ட இந்த நிலைப்பாடுகளை ஒருவர் கவனித்தாலே, அவரது கருத்து சரியா? தவறா? என்பது தெளிவாக விளங்கும்.

இப்பொழுது, ஆதாரம் கொடுக்க மாட்டேன், ஆனால் நான் சொன்னதுதான் சரி என்று சொல்கின்றார். அதுவும் முக்கிய கடமையான ஜகாத் விஷயத்திலே
.

விவாதம் என்று அழைத்து, ஆனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்றால், தாம் சொல்வது சரி என்று மக்களுக்கு காட்டும் நிகழ்ச்சிதான் நடைபெறுகிறது. இதற்கு ஆதாரமாக மதுரையிலே நடந்த விவாதத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, ஆதாரத்துடன் தான் சொல்கிறோம். தான் கூறுவதுதான் சரி என்று காண்பிக்க, குர்ஆனின் வசனத்தையே (6:141) மறுக்கும் நிலைக்கு போய் விட்டார், சகோதரர் பி.ஜே.

இவ்வளவுக்கு பின்பும், விவாதத்தின் மூலம்தான் உண்மையை கண்டறிய முடியும் என்று ஒருவர் நினைத்தால், அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்யட்டும். நாம் தயாராக இருக்கின்றோம். ஏற்கனவே அவரோடு இருக்கின்ற மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி உடன், சிறிய அளவிலே ஒரு விவாதம் நடத்தி உள்ளோம். நாம் பின் வாங்க மாட்டோம் என்று இதன் மூலம் மறுபடியும் உறுதி கூறுகின்றோம்.

அடுத்தது இதைவிட, பொதுவாக யாருக்கும் விளங்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தை பார்க்க இருக்கின்றோம் இன்ஷh அல்லாஹ்.

குர்ஆனோடு, பலமான நபி மொழி மோதுமா? என்பதுதான் அது. ஜகாத் விஷயத்தைவிட அது இன்னும் எளிதாக மக்களுக்கு புரியும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

1 comment:

அன்சாரி - தஞ்சை said...

Assalamu Alaikum!

Please do not call somone as a brother (PJ) who is preaching the "BIDH'A" and preaching his own islam? May Allah save our muslim brothers from his wrong (own islam) preaching and give us right guidence.

Wassalam!