Saturday, June 24, 2006

இந்திய மக்கள் பேரவை அழைக்கிறது !!

அரசியல் பேரியக்கம் இந்திய மக்கள் பேரவை அழைக்கிறது
உறங்கியது போதும் இளைஞனே விழித்தெழு!!

அகண்ட பாரதத்திற்கு அச்சாணி கொடுத்த தோழனே! !

சமுதாயத்தின் வழித் தோன்றலே விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனை எதிர்த்து குருதிப்பனலில் நீந்திய வர்க்கமே!

தசை நார்களை அறுத்தும் விலா எலும்புகளை முறித்தும் கொடுத்தவனே!

நீ திட்டம் இன்றி அயர்ந்து விட்டதால் அடிமை சாயம் பூசப்பட்டாய் அரிவாளுக்கு உள்ள கூர்மை உன் அறிவுக்கு இல்லாத காரணத்தால் எடுப்பார் கைப்பிள்ளையாய் - ஆம் குரங்கின் கையில் சிக்கிய மாலையைப் போன்று சில இயக்கங்களில் சிக்கித் திணறுகிறாய்.

இதயம் விம்மிப் புடைக்கிறது. கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறது. அறுப்பதற்கு ஆடுகள் அல்ல நாங்கள், அரிமாக்கள் என்று ஆர்த்து எழுந்தான் தீரன் திப்பு. வெள்ளையனின் பீரங்கியில் பீறிட்டு எழுந்த குண்டுகள் நெஞ்சை துளைத்து நிலம் கிழித்து ரத்தம் பாய்ந்த போது சிலிர்த்து எழுந்த சிங்கம் போல் செப்பினான் என் ஒவ்வொரு ரத்த துளியும் விழும் இடமெல்லாம் எம் சமூக இளைஞர்கள் ஈட்டி போல் எழுந்து வெள்ளை ஆதிக்கத்திற்கு இறுதி அத்தியாயத்தை எழுதுவார்கள் என்றான் - ஆம் இமயத்தை விஞ்சும் வீரத்தை களத்தினில் விதைத்தார்கள்.

விடுதலை வேல்விக்கு பாய்ச்சிய ரத்தம் இன்னும் காயவில்லை. சோகங்கள் சொல்லி மாளாது. கான்பூர், மீரட், லக்னோ, அகமதாபாத், மண்டைக்காடு, கோவை, குஜராத் என பட்டியல் நீண்டு கொண்டே போகும். சுதந்திர இந்தியாவில் வாழுகிறோமா? அல்லது அடிமை இந்தியாவில் வாழ்கிறோமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. குஜராத்தில் தீக்கு இரையாக்கப்பட்டட மனித உடல்களை அள்ளுகிற போது ஒரு முதியவர் தன் இயலாமையை தன் உள்ளக் குமுறலை இப்படி பதிவு செய்தார் - அஞ்சி அஞ்சி வாழ்வதை விட இந்த பாவப்பட்ட ஜென்மங்கள் செத்து தொலைந்து நிம்மதி பெறட்டும் - என்று கண்ணீர் மல்க வெந்து நொந்து சொன்னார். இதை காட்சிகளாய் செய்திகளாய் வெளியிட்டு சோகங்களை எல்லாம் பட்டியல் இட்டவர்கள் பூனைக்கு தலையாக இருக்க மாட்டார்கள், புலிக்கு வாலாக இருப்போம் என்றவர்கள் தூரநோக்கு வியூகம் திட்டம் செயல் திறன் எதுவும் இல்லாமல் முட்டிவிட்டு குனிந்து இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லிக் காட்டும் உண்மை.

மொத்தத்தில் நம் சமுதாயம் ஏமாற்றப்பட்டு இருக்கிறது. வேதனை ஒரு புறம் சமூகத்திற்கு நாங்கள் தாம் பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் வலிமையான சக்திகள் எங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் தீயில் நிற்கும் சமூகத்தின் சூழ்நிலையை ஒரு கனம் எண்ணிப் பார்த்து இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற கடமை உணர்வு கடுகளவு இருந்து இருக்குமேயானால் பொறுப்பான சமூகத்தின் பிரதிநிதிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து இருக்க மாட்டார்கள். இழப்புகளைக் கூட விட்டுக் கொடுத்து ஒற்றுமை, சகிப்புத் தன்மை, சமூக உணர்வுகளுக்கு ஆம் வடிகால் தேடி இருப்பார்கள்.

மக்களை மந்தைகளாக வைத்துக் கொள்ள தந்திரங்கள் செய்கிறார்கள்.
காற்றுப் போன பந்துகள் குதிப்பதில்லை. சிலர் குதிக்கிறார்கள்.


அன்பர்களே, வேகம் வேண்டாம் விவேகம் வேண்டும். நதி தன் கரையைத் தானே போட்டுக் கொள்ளுமாம். சகோதர்களே, நம்முடைய எதிர்காலத்ததை நாமே தீர்மானிப்போம். தலைவர்களை உதறித் தள்ளுங்கள். மக்களின் சிந்தனை ரேகைகளை தட்டி விடுவோம் வாருங்கள் புதிய அத்தியாயம் படைப்போம். இந்திய மக்கள் பேரவை உங்களை சிந்திக்க அழைக்கிறது.

அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

No comments: