Tuesday, April 25, 2006

தமிழக அரசியலில் ராஜதந்திரி!!

கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி!!

இந்த தலைப்பிற்கு முழுத் தகுதி வாய்ந்தவர் கருணாநிதி மட்டுமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் தமிழக அரசியல் வரலாற்றில் தனது வாய்ச்சொல் திறமையால் சிறப்பாக கோலோச்சியவர் அவரே.

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முதன் முதலாக சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் உளப்பூர்வமாக பங்கேற்று தமிழகத்திலிருந்து முதன்முதலாக அதற்கு சாமரம் வீசியதும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான். அப்போதைய காலகட்டத்தில் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி அந்த கூட்டணியை சகட்டு மேனிக்கு சாடி விமர்சனம் செய்தார். பத்திரிக்கைகளில் தாரளமான அறிக்கைகளை அள்ளி தெளித்துக் கொண்டும் இருந்தார்.

முரசொலியில் வந்த ஒரு செய்தியிலே..

...பொதுமக்களை ஏமாற்றுவதற்கு வாஜ்பேயி என்கிற முகமூடி அணிவித்து பா.ஜ.க.வை மக்கள் உள்ளத்தில் பதிய வைத்து அறிமுகப்படுத்த எண்ணுகிறார்கள். ...அந்த முகமூடியை அகற்றிவிட்டுப் பார்த்தால் அங்கே என்ன தெரியும் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். என்ற காட்டுமிராண்டித் தனமான வன்முறைக் கும்பல் தெரியும். இந்த முகமூடியை விலக்கிவிட்டுப் பார்த்தால் இந்து முன்னணி என்கிற வக்கிரமான வன்முறைக் கும்பல் அங்கே தெரியும். அந்த முகமூடிகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் பஜ்ரங் தளம் என்ற பயங்கரவாத கூட்டத்தின் உருவம் தெரியும். விசுவ இந்து பரிஷத் என்கிற வன்முறையாளர்களின் கூட்டம் அங்கே தெரியும். (முரசொலி - 26-2-1998)

சங்க்பரிவாரத்தினரை கருணாநிதி அவர்கள் இப்படி அபிசேகம் செய்யும் போது அவர் பா.ஜ.க.விற்கு எதிரணியில் இருந்தார் என்பதை இந்த இடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

06-03-1999 அன்று சென்னை கேரள சமாஜத்தில் ஜி.கே.மூப்பனார், ஆர்.நல்லகண்ணு, என்.வரதராஜன், ஜி.ஏ.வடிவேலு போன்றோர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க.வையும், அதன் ஆட்சியையும் விமர்சித்து நீண்டதொரு உரை நிகழ்த்தினார் கருணாநிதி. அந்த நீண்ட உரையிலே..

அவர்கள் (பா.ஜ.க.வினர்) மனிதாபிமானத்தை மதிக்கக் கூடியவர்கள் இல்லை. மனித நேயத்தை விரும்பக் கூடியவர்கள் இல்லை. எல்லா மதமும் ஒன்றுதான் என்று மத நல்லிணக்கத்தை போற்றக்கூடியவர்கள் இல்லை. நீதியை, நெறியை, நேர்மையை என்றைக்கும் மதிக்கக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்களுடைய கையிலே இன்றைக்கு இருக்கின்ற ஆட்சிப் பொருப்பும் அந்த ஆட்சிப் பொருப்புக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற சில பரிவாரங்கள், சில கணங்களுடைய அக்கிரம அடாவடிச் சேட்டைகளும் இந்தியாவிற்கு ஒரு தலைகுனிவை அகில உலக அரங்கிலே இன்றைக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த ஓராண்டு பி.ஜே.பி. ஆட்சியிலே சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டாங்களை பட்டியலிடுகிறேன் என்று சொன்ன கருணாநிதி 1998 ஏப்ரல் மாதத்தில் குஜராத்தில் பரோடா என்னும் இடத்தில் கிறித்தவ கூட்டத்தின் மீது நடைபெற்ற தாக்குதலிலிருந்து தொடங்கி 1999 ஜனவரி மாதத்தில் ஒரிசா மாநிலத்தில் சொங்காட் என்னும் இடத்தின் அருகே உள்ள தோஸ்வாடா என்ற கிராமத்தில் இரண்டு கிறித்தவ ஜெபகூடங்களை இடித்து தரை மட்டமாக்கியது வரை பட்டியலிட்டு பி.ஜே.பி. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்க்பரிவார கும்பலின் 20 வன்முறை வெறியாட்டங்களை அந்த உரையிலே குறிப்பிட்டார். (முரசொலி 7.3.1999)

இவர் இத்தனை விசயங்களை பட்டியலிடும் போது பா.ஜ.க.விற்கு எதிரணியில் இருந்தார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த இடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பா.ஜ.க.வுடனான தேர்தல் கூட்டணி குறித்து முரசொலியில் முழங்கிய மற்றொரு செய்தி...

ஜெயலலிதா, பா.ஜ.க. என்ற ஒரு பாம்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் அவிழ்த்து விடுகிறார். ஜாக்கிரதை, ஜாக்கிரதை, நச்சுப் பாம்பு, தமிழ்நாட்டிலே இதுவரை நுழையாத பாம்பு, மதவெறி பாம்பு, இந்த பாம்பை அடித்து நொறுக்குங்கள், நொறுக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். (முரசொலி - 16-02-1999)

இப்பொழுதும் அவர் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரணியில் இருந்தார் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி சங்க்பரிவாரத்தினரைப் பற்றி பச்சை, பச்சையாக, மட்டை இரண்டு கீற்றாக அக்குவேர் ஆணிவேராக அலசி எடுத்த கருணாநிதி, பி.ஜே.பி.யுடனான கூட்டணியை ஜெயலலிதா முறித்துக் கொண்டவுடன் பாய்ந்து போய் பிடித்து பி.ஜே.பி. ஆட்சிக்கு முட்டு கொடுத்தார். அது கீழே விழாமல் தாங்கிப் பிடித்தார், தூக்கி நிறுத்தினார். அதற்கு முன்பு பி.ஜே.பி. தீண்டத்தகாத கட்சி அல்ல என்ற முஸ்திபுகளை அழகாக முழங்கினார். அவர் ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி ஆயிற்றே.

திராவிட கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் நடைபாவாடை கட்டி வருக, வருக என வரவேற்கிறது என்று விமர்சித்த கருணாநிதி அதே பி.ஜே.பி.க்கு நடைபாவாடை கட்டி வருக, வருக என தமிழகத்திற்கு தோரணம் கட்டி வரவேற்றார்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்தால் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் இல்லை, அண்ணா இல்லை, அவர்கள் பிறந்த பூமி இது இல்லை என்ற ஒரு சூழ்நிலை உறுவாகும் என்று அண்ணா அறிவாலயத்திலே முழங்கிய கருணாநிதி அதே பி.ஜே.பி. ஆட்சி தொடர அரும்பாடு பட்டார்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்தால், பாபர் மசூதியை இடிப்பதற்கு பண்டாரக் கூட்டம், பரதேசிக் கூட்டம் கையிலே வேலாயும், சூலாயுதம், கோடாரிகள் இவைகளையெல்லாம் ஏந்திக் கொண்டு சென்ற அந்த காட்சி போல் தமிழ்நாட்டிலும் இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நம்முடைய சந்ததியினர், நம்முடைய பிள்ளைக்குட்டிகள் பேரன், பேத்திகள் எல்லாம் அந்த கண்ணறாவிக் காட்சியை காணக்கூடிய நிலை தமிழ்நாட்டிலும் அன்றாட நிகழ்ச்சிகளாக ஆகிவிடக் கூடும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கவலையோடு உறுக்கமாக பேசினார். (முரசொலி - 28-01-1998) அதே கருணாநிதி பி.ஜே.பி.யோடு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்.

சங்க்பரிவார கும்பலின் அராஜகங்களை அன்று பட்டியலிட்ட கருணாநிதி பி.ஜே.பி.யுடனான கூட்டணி ஏற்பட்டவுடன் அதே சங்க்பரிவார கும்பலின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்-ஐ சமுதாய அமைப்பு என்று நற்சான்றிதழ் வழங்கினார்.

நிருபர்கள் வாஜ்பேயி, ஆர்.எஸ்.எஸ் ஒரு சமுதாய இயக்கம் என்று சொல்லியிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று கேட்டதற்கு..

ஏற்றுக் கொள்கிறேன். திராவிடர் கழகம் இங்கே சமுதாய இயக்கமாக இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் திராவிடர் கழகத்திற்கும் கொள்கைகளிலே ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. அது வேறு விசயம். ஆனால், அவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள், இவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இரண்டும் ஒன்றல்ல. நான் திராவிடர் கழகத்திலிருந்து வந்தவன் என்று கருணாநிதி திருவாய் மலர்ந்தார். (முரசொலி - 9-2-2000)

பா.ஜ.க.வுடன் தேர்தலை சந்திக்கவிருக்கும் தி.மு.க. அதன் தொண்டர்களுக்கு சில அறிவுரைகளை அண்ணா அறிவாலயத்தில் வைத்து போதிக்கிறது. என்ன போதித்தது, எப்படி போதித்தது என்பதை பார்ப்போம்.

சிறுபான்மை மக்களிடம் பா.ஜ.க.பற்றி ஒரு சந்தேகத்தை ஒரு சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்கு ஈடு கொடுத்துவிட்டு, அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டு. (முரசொலி - 23-06-1999)

எப்பேர்பட்டவர்களுக்கு கருணாநிதி அவர்கள் சமுதாய அமைப்பினர் என்ற நற்சான்றிதழும், சிறுபான்மை மக்களிடம் பா.ஜ.க.பற்றி ஒரு சிலர் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்று எதுவுமே தெரியாதது போலும் நடித்திருக்கிறார் என்பதை அவருடைய பழைய வாக்குமூலங்களை எடுத்துப் போட்டு ஒருமுறை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் - காட்டுமிராண்டித் தனமான வன்முறைக் கும்பல்,

இந்து முன்னணி - வக்கிரமான வன்முறைக் கும்பல்,

பஜ்ரங் தளம் - பயங்கரவாத கூட்டம்,

விசுவ இந்து பரிஷத் - வன்முறையாளர்களின் கூட்டம்.

அவர்கள் அனைவரும்

மனிதாபிமானத்தை மதிக்காதவர்கள்,

நீதியை, நெறியை என்றைக்கும் மதிக்காதவர்கள்,

மத அடிப்படைவாத அமைப்பினர்,

மத தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தோர்,

விஷமிகள்,

வேலாயும், சூலாயுதம், கோடாரிகள் இவைகளையெல்லாம்

ஏந்திக் கொண்டு சென்ற

பண்டாரக் கூட்டம், பரதேசிக் கூட்டம்,

என்று கருணாநிதி அவர்களாலேயே அபிசேகமும், ஆராதனையும் செய்து பட்டியலிடப்பட்ட சங்க்பரிவார அமைப்பினர் பிற்காலங்களில் அவர்களுடன் கூட்டணி பூண்டவுடன் எப்படி சமுதாய அமைப்பினராக மாறினர்?
அவர்களைப் பற்றி சிறுபான்மை இன மக்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் சாட்சாத் திரு.கருணாநிதி அன்றோ?
கருணாநிதியின் மேற்கண்ட பட்டியலில் உள்ள செயல்பாடுகள் தான் ஒரு சமுதாய அமைப்பிற்கான இலக்கணமாக இருந்தால் தி.மு.க. அந்த சமுதாயப் பனியை பிற்காலங்களில் செய்யும் என்று பொருள் கொள்வதா?

நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்ததிலாவது தெளிவு இருக்கிறதா என்றால் அதிலும் குழப்பமே மிச்சம்.

முதலில் திராவிடர் கழகம் இங்கே சமுதாய இயக்கமாக இருக்கிறது என்கிறார். பிறகு அவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார். கருணாநிதியின் இந்த முரண்பாடான போக்கை கண்டித்து அவர் எந்த இயக்கத்திலிந்து வந்தாரோ அந்த திராவிடர் கழகத்தினரே தங்களுடைய விடுதலை என்னும் பத்திரிக்கையில் சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளியிட்டு கருணாநிதியை கஞ்சி காய்ச்சி காவடி எடுத்தனர். அதை புத்தக வடிவிலும் வெளியிட்டுள்ளனர். அவர்களும் தற்பொழுது கருணாநிதியின் கூட்டணியில் உள்ளனர் என்பதை இந்த இடத்தில் சற்று ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

திராவிடன், தமிழ் மொழி, தமிழன் என்று சொல்லிச், சொல்லியே கருணாநிதி தனது குடும்ப நலன்களை பெருக்கிக் கொண்டாரே தவிர மக்கள் நலனில் அக்கறை காட்டிடவில்லை. குறிப்பாக முஸ்லிம்களுடைய நலனில் அவர் என்றுமே அக்கறை காட்டியது இல்லை. தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை கூட முழங்க முடியாமல் கட்டுண்டு போனது தான் அவருக்கு மிச்சமானது.

ஆகவே, கருணாநிதியின் ஒவ்வோர் சொல்லும், எழுத்தும் நம்பகமானதாக முஸ்லிம் சமுதாயம் இனியும் கருதாமல் இருப்பதுதான் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்று. பி.ஜே.பி.யை ஆதரித்து தனது சந்ததிகளுக்கு, பேரன், பேத்திகளுக்கு கருணாநிதி செய்த துரோகங்களை போல் முஸ்லிம்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு துரோகம் இழைத்து விடமால் கவனமான முடிவு எடுக்கும் சரியான நேரம் இது.

கருணாநிதியுடைய எஞ்சியிருக்கும் வாழ்நாளின் இறுதிக்குள் அவரை ஒருமுறையேனும் தேர்தலில் தோற்கடிப்பது முஸ்லிம்களின் சமுதாய கடமையாக கருதினால் அது தவறுமல்ல, மிகையுமல்ல.
இன்சா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இந்த கட்டுரையை தொடர்கிறேன்.
உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம்! என்ற கட்டுரையை தமிழ் முஸ்லிம் வலைமனையில் பார்வையிடவும்.
நன்றியுடன்
அறிவழகன்.

3 comments:

Anonymous said...

KARUNITHIYAI VIDA SIRANTHA RAAJA THANTHIRI NAMMA P.J ANNAN!

Unknown said...

ஜெ யா? கருணாநிதியா? என்று பார்க்கிற போது - இரண்டு பேருமே நமக்கு துரோகம் இழைத்தவர்கள்தான் என்றாலும் - இருவரில் யார் தேவலாம் என்று பார்க்கிற போது ஜெ அடிபட்டு விடுகிறாரே!

அது சரி. கருணாநிதியைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறீர்களே. ஜெ எந்தத் தவறும் செய்யவில்லை என்று அடுத்துக் கொள்வதா அல்லது இனி எழுத உத்தேசமா?

அல்லது நீங்கள் ஏதாவது ஒரு குரூப்பைச் சார்ந்தவரா?

Unknown said...

"almujahidislaam said...
KARUNANITIYO JAYALALITHAVO NAMBA THAKUNTHAVARKAL KIDAYATHU.... "

இதை நானும் ஒப்புக் கொள்கிறேன், கடைசி வரை பொறுத்திருந்து சரியாகச் சிந்தித்து காரியம் ஆற்ற வேண்டும்.